Thursday, July 28, 2005

ஐந்து டாலரில் ஒரு புன்சிரிப்பு

சில சமயம் சாதாரணமான உரையாடல்கள் கூட சட்டென்று ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இங்கே உள்ளூர் செய்தித்தாளில் ஒரு செய்தி. ஹரித்துவாரில் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவ இங்கிருந்து மூன்று இளைஞர்கள் போகிறார்கள்.

இவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களோடு பகிர்ந்து கொள்ளப்போக இப்போது அந்த அனாதை ஆசிரமக் குழந்தைகளுக்கு அமெரிக்காவிலிருந்து உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்களை இப்படி நெகிழச்செய்தது அந்த உறவினர் சொன்ன விவரங்கள். "குழந்தைகள் இருக்கும் அனாதை ஆஸ்ரமம் என்றவுடன் அங்கே ஒரே சத்தமும். கலாட்டாவாக இருக்கும் என்று உள்ளே நுழைந்த எனக்கு அங்கே இருந்த அமைதியும், குழந்தைகளின் வெறிச்சென்ற பார்வையும் உலுக்கின.." என்று அவர் இவர்களிடம் தன் அனுபவத்தைச் சொன்னது இவர்களை இந்தப் பயணத்துக்கு டிக்கெட் வாங்க வைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் அவர்கள் தோழி ஒருவருமாக மூன்று பேர் அடங்கிய குழு இது.

அந்த அனாதைக் குழந்தைகளைப் பற்றி கேள்விபட்டவுடன் ஏதோ பணம், பொருள் என்று கொடுத்து தங்கள் இரக்கத்தை இவர்கள் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஒரு படி மேலே போய், அந்தக் குழந்தைகளைச் சந்தித்துப் பழகி, தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும், அவர்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து ஆர்வமாகக் கிளம்பும் இவர்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. " பொதுவாக விடுமுரையில் இந்தியா செல்லும்போது நகரங்களையும், உறவினர் நண்பர்களையும் பார்ப்பதோடு நின்றுவிடுவதால் இப்படி இன்னொரு இந்தியா இருப்பதை நாங்கள் உணராமலே இருந்திருக்கிறோம்" என்கிறார்கள் இவர்கள்.

அதோடில்லை. தங்கள் பயணத்துகும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கும் ஆக சேர்த்துத் தேவையான நிதியை அக்கம் பக்கம் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடமிருந்து திரட்டியுள்ளனர். " எந்தவித நிறுவன ஆதரவும் இல்லாமல் நாங்கள் தனியாக நிதி திரட்டுவது சற்று கடினமாகதான் இருந்தது." என்றும் இவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பாவம், இவர்கள் இப்படி தங்கள் கோடை விடுமுறையை இபப்டி ஒரு சேவையில் செலவழிப்பதையும் சில நண்பர்களும், உறவினர்களும் " ஆகா, உங்கள் மேல் படிப்புக்கு அப்ப்ளிகேஷன் போடும்போது உங்களைப் பற்றிய கட்டுரையில் இந்த மாதிரி சேவைகள் எல்லாம் கொஞ்சம் நிறையவே மதிப்பைக் கூட்டும்" என்ற ரீதியில் இவர்களின் உன்னத நோக்கத்திற்கு ஒரு சுய நலப் பூச்சுக் கொடுத்துப் பேசியது இவர்களுக்கு வருத்தம்.

ஆனால் இந்தச் செய்தியில் என்னை யோசிக்க வைத்த விஷயம் - இவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு எடுத்துப் போகும் சாமான்கள் - பிரஷ், சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், வகையறா ! இதையெல்லாம் இந்த இளைஞர்கள் இந்தியாவிலேயே வாங்கிக்கொள்ளக் கூடாதோ? அதிலும், இந்தச் செய்தியில், மூன்று பேரில் ஒருவர் பல்விளக்கும் பிரஷ்களை அழகாக அடுக்குவது பெரிய படமாக க்ளோசபில் பிரசுரித்துள்ளது, பார்க்க என்னவோ போல் இருக்கிறது. இந்த இளைஞர்களின் நோக்கமே என்னவோ இந்தப் பொருட்களை வினியோக்க செல்வதுதான் என்பதுபோல் இதென்ன focus?
இந்தச் செய்தியைப் படிக்கையில் ஆங்கில எழுத்தாளரும், ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அதிகாரியுமான சஷி தாரூர் எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

The Five Dollar Smile என்ற அந்தக் கதை, அமெரிக்காவில் இருக்கும் தன் "தத்து" பெற்றோர்கள் அழைப்பின் பேரில் முதன் முதல் விமானத்தில் பயணப்படும் ஒரு அனாதைச் சிறுவனின் மன ஓட்டம்தான் கதை. எல்லாமேப் புதுசாகத் தெரியும் அந்த அனுபவத்தில், விமானத்தில் உட்கார்ந்து தன் கோட் பாக்கெட்டிலிருந்து ( ஏதோ ஒரு நிவாரணக் கொடைகளில் வந்த கோட். கொஞ்சம் பெரிய சைஸ். ஆனாலும் ஸ்மார்டாகதான் இருந்தது. " நீ ஏழையாக இருக்கலாம் ஜோஸப். ஆனால் ஸ்மார்டாகத் தெரியணும். நாங்கள் உன்னை நன்றாகதான் வளர்த்திருக்கிறோம் என்று அவர்களுக்குப் புரிய வேண்டும்" என்று சிலின் ஸிஸ்டர் சொல்லியிருந்தார், அந்த உடையை அணிவிக்கும்போது.) அந்த விளம்பரம் உள்ளச் சிறுத் துணுக்குப்பேப்பரை நூறாவது தடவை எடுத்துப் பார்த்தான்.

" Make this child smile again. All it takes is five dollars a month".

அந்தப் புகைப்படம் எடுத்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவனுக்கு அப்போது ஏழு வயது. அதையும் அன்றுதான் தெரிந்து கொண்டான். அவனுக்கு நல்ல பசி அன்று. "இவனுக்கு எவ்வளவு வயதிருக்கும்? காமிராவைக் கிளிக்கிக்கொண்டே அந்த ஆள் கேட்டுக் கொண்டிருந்தார். " ஏழுதானா? எதுவானாலும் பரவாயில்லை. எனக்குத் தேவையான சரியான முகம் இவன்தான். ஸிஸ்டர், கொஞ்சம் அந்த சாப்பாட்டுத் தட்டை அவனிடமிருந்து நகர்த்தி வையுங்களேன். நமக்கு வேண்டியது பசியால் வாடிய முகம் ஒன்று. நன்றாக சாப்பிடும் ஒன்றல்ல." சட்டென்று ஒரு கை அவனை சாப்பாடு மேஜையிலிருந்து அகற்றியது. " நீ இங்கே வா ஜோசப். இந்தப் பெரிய மனிதர் உன்னைப் பார்க்க வேண்டும் என்கிறார். ' எனக்குப் பசிக்கிறது ஸிஸ்டர்.' நேரம் ஆனால் சாப்பாடு தீர்ந்து போய்விடுமே என்ற கவலை அவனுக்கு. அதுவும் இன்று கஞ்சியுடன் மொறு மொறுவென்று அப்பளம் வேறு. சமையலறைப் பக்கம் போகும்போது கவனித்திருந்தான்......."
இப்படி நெகிழ்வாக ஆரம்பிக்கும் கதையில் ஒரு அனாதைச் சிறுவனின் உணர்வுகள் தத்ரூபமாக வெளியாகியுள்ளது. விமானத்தின் சாப்பாடு, சொகுசு, எதிரே சீட்டில் சினிமா, என்று எல்லாவற்றிலும் அவனது குழப்பமும் மிரட்சியும். தன் பாகெட்டிலிருந்து இன்னொரு புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு அவனது "வீடு". படம் பள பளவென்று இருந்தது. அதில் இருந்தது அவனது தற்காலிக "அம்மாவும்" அப்பாவும்". அவனுக்கு டிக்கெட்டை அனுப்பிவிட்டு இந்தப் புகைப்படத்தையும் அனுப்பினார்கள். விமான நிலையத்தில் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள வசதியாக. ஆனால் இவன் புகைப்படத்தை அவர்கள் கேட்கவில்லை. " அவனை எங்களுக்கு நிச்சயம் பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அவனை ரொம்ப நாள் தெரியும் போல் எங்களுக்கு ஒரு உணர்வு" என்று அந்த "அம்மா" கடிதத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஜோசப்புக்கு பெருமிதம். ஆனால் ஒரு நாள் அவன் ஏதோ தவறு செய்யப்போக, ஸிஸ்டர் கோபமாக, " உனக்கு பதிலாக அமெரிக்காவுக்கு வேறு ஒருத்தனை அனுப்பிவிடுவோம். அவர்களுக்கு வித்தியாசம் தெரியும் என்றா நினைக்கிறாய்? ஜாக்கிரதை." என்று சொல்லியபோதுதான் தன் உண்மை நிலை உறைத்தது.

இன்று விமானத்தில் அந்தப் பள பள போட்டோவையும் தன் மங்கிய விளம்பரப் போட்டோவையும் அருகருகில் பார்த்தபோது ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. சட்டென்று சொல்ல முடியாத ஒரு சோகம் வந்து உட்கார்ந்துகொண்டது. அன்று கஞ்சி கிடைக்காமல் போனதை விட அதிகமான சோகம். எங்கேயோ தனியாக, பழையப் பத்திரிகை விளம்பர போட்டோவுக்கும், அந்தப் பள பள புகைப்படத்திற்கும் இடையில் புதைந்து காணாமல் போன மாதிரி..........."

என்னைப் பாதித்த கதைகளில் ஒன்று இது. நல்ல நோக்கங்கள் பலதுக்கும் இடையே அவ்வப்போது செயற்கையாக, வறுமையையும் பரிதாபத்தையும், ஏதோ ஒரு ஆதாயத்துக்காக மிகைப்படுத்தலும் இருக்கிறதோ? பல சமயங்களில் விருது பெறும் புகைப்படம் என்று ஈ மொய்க்கும் வெற்று உடம்புடன் தொப்பை தள்ளியக் குழந்தையின் புகைப்படத்தையும், வேறு ஏதோ வகையில் சோகத்தைப் பிரதிபலிக்கும் படங்களையும் பார்க்கும்போது இப்படித் தோன்றும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் விளக்கும் என்பது உண்மை. ஆனால் வறுமையையும் சோகத்தையும் ஆதாய நோக்கில் பார்ப்பதும் ஒரு வழக்கமாகிப் போகிறதோ என்று கவலை எழுகிறது.

அந்தக் கதையில் வரும் சிறுவனுக்கு ஒரு மாதம் அமெரிக்கா செல்வதில் என்ன பாதிப்பு இருக்கும்? இன்றைய செய்தியில் உள்ள இளைஞர்கள் ஒரு சில நாள் அனாதை ஆசிரமத்தில் தங்குவதும், அவர்களுக்குத் தற்காலிகமாக நாகரிக வாழ்க்கையின் சாதனங்களை உபயோகிக்க கொடுப்பதிலும் என்ன விதமான மாற்றங்களைக் கொடுக்கும்? அந்தப் பிரஷ¤ம், கிரீமும் தீர்ந்துபோனபின் அந்தக் குழந்தைகளின் கவலை மறுபடி கஞ்சியிலும் அப்பளத்திலும்தானே திரும்பும் ? இதற்குப் பதிலாக அவர்கள் வாழ்க்கை முறையில் நெடுங்காலப்பலன் அளிக்கும் வகையில் உதவுவது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ?

Saturday, July 23, 2005

"They have great work ethic..."

இங்கே உள்ளூரில் ஒரு செய்தி.

சன்னிவேலில் இருக்கும் Network Appliances என்ற நிறுவனம் புதிதாக 200 contract நபர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டுள்ளது. இவர்களை எங்கள் ஆட்ப்டையில் சேர்த்துக்கொண்டதால் கம்பெனிக்கு 5000 டாலர்கள் வரை செலவுக் குறைச்சல். இவர்கள் அனாவசியமாக உபத்திரவம் கொடுப்பதில்லை. அவர்கள் வேலை சாப்பிடுவது மட்டுமே. வேறு உபரியாக எந்த வசதியோ, அல்லது அந்தப்படி, இந்தப்படி என்று கேட்பதில்லை. இவர்கள் தங்கள் வேலையினை அணுகும் முறையிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது -" they have great work ethic. இவர்கள் செய்வதெல்லாம் சாப்பிடுவதுதான் - ஆமாம் இவர்கள் பிறந்ததே அதற்குதானே?" என்கிறார் இவர்களை வேலைக்கு அமர்த்திய contract நிறுவனத்தின் சொந்தக்காரர்.

தங்கள் நிறுவனத்தில் இருக்கும் தோட்டத்தில் உள்ள ஐந்தேகால் ஏக்கர் புல்வெளியில் புல்லை அகற்ற இயந்திரங்களை உபயோக்கிக்காமல் இந்த நிறுவனம் இவர்களை அமர்த்தியுள்ளது.

இவர்கள்?

200 ஆடுகள் !! :-)

Disclaimer: இந்தப் பதிவில் இருந்த ஒரு வரி தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயத்தை உணர்ந்ததால் அந்த வரியை நீக்கியுள்ளேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

Tuesday, July 19, 2005

Murphy's Law and Public Transport

இங்கே கலிபோர்னியா வந்து இரண்டு மாதம் ஆகப்போகிறது. இங்கே வலது பக்கம் சாலைமுறை இன்னும் மூளையில் பிடிபடாததால் நம் ஊரில் செய்வது மாதிரி நினைத்தவுடன் காரைக் கிளப்பிக்கொண்டு போக தைரியம் வரவில்லை. ஆனால் வெளியில் போக முழுவதும் மகன்களை எதிர்பார்ப்பதும் சரியாகப்படவில்லை. முதல் வேலையாக பஸ், ரயில் என்று பொது வாகனங்கள் பயன்படுத்தொடங்கிவிட்டேன். சிங்கப்பூர் அல்லது நம் நகரங்கள் போல இங்கே அமெரிக்காவில் பொது வாகனங்கள் சரியாக இருக்காது என்று எல்லோரும் பயமுறுத்தினார்கள். அதெப்படி என்று நானும் சவாலாக எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். முதல் நாள் Vally Transport Authority என்ப்படும் பொது வாகன மையத்தின் வலைப்பக்கத்திலிருந்து எங்கள் தெருப் பக்கம் என்ன பஸ் எப்போ வரும் என்று பார்த்து வைத்துக் கொண்டேன். நான் செல்ல வேண்டிய இடம் பல வகை டிபார்ட்மெண்டல் கடைகள் இருக்கும் கடைத்தெரு. வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப் என் நடையில் பத்து நிமிடம். 12. 50க்கு ஒரு பஸ் என்று அட்டவணை சொல்லிற்று - என் அதிருஷ்டம் அல்லது துரதிருஷ்டம் என் வீட்டுக்கு அருகாமையில் - நான் நடக்கும் தூரத்தில் ஒரு நம்பர் பஸ்தான். ( துரதிருஷ்டம் என்று ஏன் சொன்னேன் என்றால் ஒரு பஸ்தான் இந்தப் பக்கம் வருகிறது என்பதால். அதிருஷ்டம் - ஏனென்றால், நாளடைவில் இந்த ஊரைப் புரிந்து கொண்ட நிலையில் இந்த ஒரு பஸ்ஸாவது இருக்கே....என்ற திரில்.... சில குடியிருப்புப் பகுதிகளில் இதுவும் கிடையாது. )

12. 50க்கு பஸ் "டாண்" என்று வந்து விடும் என்று அலறி அடித்துக் கொண்டு 12. 30க்கு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். பஸ் ஸ்டாப்பில் என்னைத் தவிர ஒரு காக்கை மட்டும் தான். ஈ கூட கிடையாது. மணி 1.15 - இன்னும் பஸ் அடையாளத்தையே காணோம். சர் சர்ரென்று சாலையில் போகும் வாகனங்களில் இருப்பவர்களெல்லாம் என்னையே ஏதோ வேற்று கிரக மனுஷி மாதிரி பார்ப்பதுபோல் எனக்கு எண்ணம். மணி 1.30.... ஹ¤ம்ம்.. எதிர் பக்கம் நிறுத்தத்தில் ஒரு பஸ் வந்து நின்றது. ஒரு வேளை இதுதான் போய்த் திரும்பி வர வேண்டுமோ? என்று இன்னும் பத்து நிமிஷம் நின்றேன். ஹ்ம்ம்... சான்ஸே இல்லை. ஏமாந்து, சோர்ந்து வீட்டுக்குத் திரும்பி நடக்க ஆரம்பித்தவுடன் ஒரு பஸ் என் பின்னால் போயிற்று. - ஹ்ம்... Murphy's Law.

ஒரு முறை கடைக்குப் போய்விட்டு நிறுத்தத்தில் ரொம்ப நேரம் நின்றும் பஸ் வரவில்லை. வெகு நேரம் கழித்து வந்த பஸ் வேறு தடம். ஒரு வேளை நான் செல்லும் பஸ் தடம் / எண் / நேரம் மாறியிருக்குமோ என்ற எண்ணத்தில் வண்டியைவிட்டு இறங்கிய டிரைவரை "32" க்காக அரை மணி காத்துக்கொண்டுள்ளேன். இங்கே 32 வருமா என்று கேட்டேன். அவர் ரொம்ப ஸீரியஸாக " ஓ... அப்படியா அரை மணி நேரம் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? oh, that is great " என்று சொல்லிவிட்டு ( பஸ்ஸ¤க்குக் காத்துக்கொண்டிருப்பதில் என்ன Great" என்று இன்னும் எனக்குப் புரியவில்லை.) இஞ்சினை அணைத்துவிட்டு என்னிடம் "கவலைப் படாதீர்கள். 32 வரும் நேரம்தான். இதோ எந்த நிமிடமும் வந்துவிடும் என்று சொல்லி வண்டியைவிட்டு இறங்கி நின்று பாண்டிலிருந்து ஒரு சாண்ட்விட்ச் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அவர் கொடுத்தா நம்பிக்கையில் நான் மறுபடி "தேவுடா" என்று சாலையைப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். என் அருகில் நின்றிருந்த ஒரு பெண் சட்டென்று "இதோ பார், 32" என்று கை காண்பித்தார். நான் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர் மறுபடி இந்த பஸ்ஸின் தடப் பலகையைக் காண்பித்தார். அதில் அழகாக 32 என்று இருந்தது. அந்தப் பெண் பிறகு சிரித்துக் கொண்டே சொன்னார். "டிரைவர் இறங்கும்போதே தடத்தை 32 என்று மாற்றிவிட்டுதான் இறங்கியுள்ளார். சும்மா உன்னை சதாய்த்திருக்கிரார் போல.." என்றாள். ஹ்ம்ம்ம்... அவரும் அவரது தமாஷ¤ம்.... ஆரம்பத்திலேயே அம்மா தாயே நீ காத்திருந்த 32 - என் வண்டிதான் ஏறி உட்காருங்கள் என்று சொல்லியிருக்கக்கூடாதோ...?
இதெல்லாம் ஆரம்ப கால கடுப்புகள். பிறகு ஒருவாறாக தேறிவிட்டேன். இப்போது சான்பிரான்ஸிச்கோ நகரில் - அல்லது நான் இருக்கும் சூரிய நகரில் ( sunnyvale??) பஸ், ரயில், மினி ரயில் என்று அத்துபடி. என்ன இப்போ? காரில் இரண்டு நிமிடத்தில் போகும் தெருமுனை கடைக்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு இரண்டு பஸ் மாறி இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். பரவாயில்லை. I have the luxury of time :-) யாரெல்லாம் பொறாமைப்படுகிறீர்கள்? :-)

ஆனால் சான்பிரான்ஸிஸ்கோ நகரின் ரயில் போக்குவரத்து எனக்குப் பிடிச்சிருக்கு. சுமராக 5 வழிப்பயணம். ஒன்றுக்குள் ஒன்றாக பெரிய பொம்மை, அதற்குள் அடுத்த சைஸ் என்று ரஷ்ய பொம்மை செட் ஒன்று விற்குமே ஞாபகம் இருக்கா? அதுபோல், நகருக்குள் downtown என்று சுற்ற முனி என்று ஒரு ரயில். அடுத்த வட்டம் Bart ( Bay Area Rapid Transport) அதற்கடுத்த பெரிய வட்டம் CalTrain - நான் இருக்கும் சன்னிவேல் மாதிரி இடங்களுக்கு. அப்புறம் இன்னும் பெரிய வட்டம் மாகாணங்களுக்கிடையே Amtrak. இதைத் தவிர டிராம், பஸ், ரகங்கள். சன்னிவேல், சான் ஹோஸே போன்ற நகரங்களில் மினி ரயில், சாதா ரயில், பஸ் என்று ஒரு தனி செட்.

இத்தனை இருந்தாலும் எங்கேயோ, ஏதோ சரியாக இல்லை. சட்டென்று நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு எளிதாக போக முடியவில்லை. பாதி சமயம் ரயில் பெட்டிகள், பஸ்கள் எல்லாம் காலியாகப் போவதையும், சாலைகளில் கார்கள் நெரிசலையும் பார்த்தால் - எங்கேயோ தவறு என்று தோன்றுகிறது.

Friday, July 15, 2005

அமெரிக்க ஊடகங்களில் மன் மோஹன் சிங் ?

இந்தியாவிலிருந்து வரும் தலைவர்கள் அமெரிக்காவில் பெரிதாக செய்திகளில் இடம் பெற மாட்டார்கள். ( பொதுவாகவே தங்கள் சுற்றம் / ஊர் இவைத் தவிர அக்கம்பக்கம் என்ன நடந்தாலும் even if something happens under their nose - தங்களுக்கு நேரடியாக தொடர்பு இல்லாத விஷயங்களை உள்ளூர் ஊடகங்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே? )

நடுவே சந்திரசேகர், நரசிம்ம ராவ், வாஜ்பாய் என்று இந்தியப் பிரதமர்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும் 8ம் பக்கத்தில் ஒரு மூலையில் in brief செய்தியில் இடம் பெறலாம். வாஜ்பாய் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், கேள்விகள் முன்னமேயே தெரிவிக்கப்பட்டு -பதில்கள் தயார் செய்துகொண்டு வந்தது இங்கே அவ்வளவாக எடுபடவில்லை, சப்பென்று போய்விட்டது என்று பத்திரிகையாளர்கள் அபிப்பிராயப்பட்டனர் என்கிறார்கள்.

தவிரவும் வாஜ்பாயின் பேச்சுத் திறமை இந்தியர்களைக் கவர்ந்த மாதிரி மற்றவர்களைக் கவரவில்லை போலும். அல்லது அவர் அவ்வப்போது ஒரு effect க்காக ஒவ்வொரு வரிக்கும் நடுவேமிடைவெளி கொடுப்பது மற்றவர்களுக்கு புரியவில்லையாயிருக்கும். ( அவர் பேசும்போது கையாளும் இந்த நீ..............ண்ட இடைவெளியை "சற்று இடைவேளைக்குப் பிறகு....." என்று நாமே கிண்டலடிப்போமே :-) )

குஜ்ராலின் பேச்சில் பாதி காற்று ஆக்ரமித்துக்கொள்ளும். இதெல்லாம் நாம் நமக்குள்ளே நம் தலைவர்களை சும்மா அன்போடு (!!) கிண்டல் செய்யலாம். ஆனால் வெளி நாடுகளில் நம் தலைவர்களுக்கு / பிரதமர்களுக்குச் சரியான கவனம் தரப்படாவிட்டால் கோபம் வராதா? அதுவும் பாகிஸ்தானின் முன்னாள் / இந்நாள் தலைவர்களெல்லாம் பிரமாதமாக ஊடகங்களில் இடம் பெறும்போது? ( சரி..சரி.... இஸ்லாமாபாதும், டில்லியும் வாஷிங்டனுக்கு வேறு வேறு தூரத்தில் இருக்கின்றன என்பது தெரிந்ததுதானே?)


ஆனால் இந்த வார இறுதியில் இங்கே வரும் மன்மோஹன் சிங் சற்று அழுத்தமாகவே ஊடகங்களில் இடம் பெறுவார் என்று Telegraph செய்தியொன்று கூறுகிறது. அடுத்த புதனன்று அவரது நிகழ்ச்சி நிரலில் வரிசையாக ஊடகங்கள் சந்திப்பு இருக்கிறதாம். காலையில் வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழுவுடன் சந்திப்பு - பிரதம நிருபர்கள்/ பத்தியாளர்கள் உள்பட, பிறகு பொதுவாக பிரஸ் மீட், அப்புறம் CNN பேட்டி. Fox சானலும் நேரம் கேட்டிருக்கிறதாம்.

என்ன திடீரென்று இந்தியா பக்கம் கவனம் அமெரிக்க ஊடகங்களுக்கு? மன் மோஹன் சிங் என்ற மனிதர் மேலுள்ள சுவாரசியமா, அல்லது புதிதாக இந்தியா பற்றி ஏதோ ஞானோதயம் ஏற்பட்டுள்ளதா? தெரியவில்லை. அடுத்த வாரம் வரட்டும் - பார்க்கலாம். அப்படி என்ன அலசுகிறார்கள் என்று.

ஆனால் நம் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள். அமெரிக்கா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்த war on terror அவர்கள் வீட்டில்/ அவர்கள் நண்பர்கள் வீட்டில் எப்படி கடும் விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று ஒரு வார்த்தை அழுத்தமாகப் பேசிவிட்டு போவாரா?

Monday, July 11, 2005

வலைப்பதிவில் அவதூறு - தொடர்ச்சி...

தமிழ்மணத்தில் பின்னூட்டப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கும் அதே சமயத்தில் தமிழ்மணத்தை உருவாக்கி தன் நேரம், ஆர்வம் அத்தனையையும் செலவழிக்கும் நிர்வாகிகள் / ஆலோசகர்கள், காசி, மதி, பத்ரி, அன்பு, செல்வராஜ், பரி, சந்திரவதனா, மீனாக்ஸ், இவர்கள் அனைவரின் உழைப்பில் நான் குறை காண்பதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். நான் மிகவும் மதிக்கும் சிலருள் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்று வந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதும் தீ£ர்வைத் தேடுவதும் கடமை என்று நினைக்கிறேன்.

ஒருவர் பதிவில் இன்னொருவர் இடும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகிகள் என்ன செய்வார்கள் என்பது ஒரு கேள்வி. நியாயமானதுதான். ஆனால் என் கேள்வி என்னவென்றால், குறைந்தபட்சம், அப்படி பின்னூட்டத்தில் அவதூறு கையாளுபவர்களின் பதிவுகளுக்குக் குறைந்த பட்சம் தடை போடலாமே?
இதில் பதிவாளர்களுக்கும் பங்கு உண்டு. எப்படி என்று மறந்து போயிருந்தால் நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணத்தில் உதவி / தகவல் என்று இருக்கும் இந்தச் சுட்டியின் கீழ்

உள்ள இந்தத் தகவலை இப்போது இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

" REPORTING ABUSES

If you have reason to believe that this site may be hosting content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting sex, terror and violence, or in violation of copyright law, kindly contact e-mailing to .( காசியின் ஈமெயில் கொடுக்கப்பட்டுள்ளது ) Alternativley you may click the icon wherever displayed, and send the form shown there mentioning the reasons for the request. This will alert the administartors so that a quicker review is possible on such requests."

இந்த abuse விஷயங்களை நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கும்படி இந்த அறிவிப்பு சொல்கிறது. தமிழ்மணத்தை உருவாக்கிய காசி முன்யோசனையுடன் இப்படி ஒரு வசதியும் கொடுத்துள்ளார். ஆனால் இதில் பிரச்சனையிருக்கிறது.
இப்படி விரும்பத்தகாத பதிவுகள் வருவதைத் தடுக்க இருக்கும் "ban" முறை சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க, சில மாதங்கள் முன்பு என் பதிவு ஒன்றை நானே தடுத்துப் பார்த்தேன்.


என் வேண்டுகோள் நிர்வாகத்திற்குப் போய்ச் சேர்ந்து அந்த தடுக்கப்பட்ட என் பதிவு தமிழ்மணத்திலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டிருந்தது - தமிழ்மணத்திலிருந்துதான் - என் தளத்திலிருந்தல்ல.

இந்த தடை நன்றாக வேலை செய்கிறது என்றாலும் ஏன் யாரும் இதை உபயோகிக்கவில்லை என்று அன்று எழுதியிருந்தேன். ஒருவர் கூட அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இதில் ஒரு குறைபாடு. அல்லது எனக்குப் புரியவில்லை. இந்தத் தடுப்பு வசதி, முகப்பில் தெரியும் அந்தப் பத்து ஆக்கங்களுக்குதான். எண்ணிக்கை பத்தைத் தாண்டி தேதிவாரியான நிலைக்குப் போகும்போது அதில் இந்தத் தடுப்பு வசதி இல்லை. - அல்லது எனக்குத் தெரியவில்லை.

இன்றைக்கு ஒரு பதிவைப் பின்னோக்கி படித்தபோது அதில் வெளிப்பட்ட வார்த்தை வன்முறையைப் பார்த்து, இந்த "ban" அடையாளத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதாவது ஒரு பதிவு abuse என்று தோன்றினால் அது தோன்றியவுடனே தடுக்கப்பட்டால் உண்டு. தேதிவாரி வரிசைக்குப் போய்விட்டால் முடியாது. என் முயற்சியில் தவறு இருந்தால் யாராவது முயன்று பார்த்து சொல்லுங்கள். Abuse என்று தோன்றும் ஒரு பதிவில் நீங்கள் இந்தத் தடையை உபயோத்துப் பாருங்களேன். இந்த என் பதிவையே கூட நீங்கள் "தடை" செய்யலாம். ஆனால் உங்கள் தடைக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதை தமிழ்மண நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும்!

மறுபடியும் ஒருமுறை....

வலைப்பதிவுகளில் வாரியிறைக்கப்படும் தவிர்க்கப்படவேண்டிய மொழி வன்முறைகளைப் பற்றி என் கருத்து.

மறுபடியும் ஒருமுறை:

மாலன் பதிவில் நடந்த விவாதங்களை, மற்றும் சென்னையில் சமீபத்தில் நடந்த பதிவாளர்கள் சந்திப்பில் நடந்த கருத்துப் பரிமாற்றம், இவற்றைப் படித்ததில் எனக்கு - தொழில் நுட்பம் தெரியாத, ஆனால் பொதுவாக சமூக அக்கறை உள்ள - எனக்குத் தோன்றியது:
இது கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். ஏதோ ஒருமுறை இருமுறை எப்போதோ என்றால் அசிங்கம் என்று தூக்கிப்போட்டுவிட்டுப் போகலாம். ( சென்ற வாரம் கூட என் பதிவில் நிகழ்ந்தது.) ஆனால் ஒரு தெரு முழுக்க ஆங்காங்கே தினம் தினம் யாரோ வந்து அசிங்கம் செய்து கொண்டிருந்தால், தெருவாசிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் என்று யோசிக்க மாட்டார்களா? இதில் என்ன தவறு? இணையத்தில் குப்பைகள் வருவதை அலட்சியம் செய்ய வேண்டுமென்றால் கூகிள்/ யாஹ¥, ஹாட்மெயில் போன்ற ஈமெயில் சாதனங்கள் ஏன் விதம் விதமாக எரிதம் வருவதைத் தடுக்க ஏதேதோ உபாயங்களை நமக்குத் தருகின்றன?
தமிழ்மணம், வெறும் பட்டியலிடும் இயந்திரம் அதனால் பலர் பலவிதமாக பின்னூட்டங்களைக் கையாளுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்று பலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெறும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடும் இயந்திரம் என்றாலும் இதை எப்போது உருவாக்கி அமைத்தோமோ, ஏற்றுக்கொண்டோமோ, அப்போதே இது சரி/தவறு/ நல்லது/ கெட்டது என்று பாகுபடுத்தும் judgemental mode க்கு வந்துவிட்டது. இதன் பின்விளைவுகள் /இந்த judgements பதிவாளர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் இதெல்லாம் தமிழ்மணத்துக்கு ஒரு கூடாரம் போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டது.
நான் இதை ஒரு கூடாரம் என்ற அமைப்பாகதான் இப்போதைக்கு பார்க்கிறேன். ஆங்கில பதிவுகள் போல் பரந்துவிரிந்து அதிக அளவில் என்ணிக்கை இல்லாததால். என் ஆங்கில வலைப்பதிவிற்கு விஜயம் செய்பவர்கள் யார் யாரோ எப்போதோ. அதில் எல்லோருமே வழிப்போக்கர்கள் - பதிவுகளின் இயல்பான குணாதிசியப்படி.
எத்தனையோ ஆங்கிலப் பதிவுகளில் படு மோசமாக இருக்கிறது. ஆனால் அது என்னை இப்படி உறுத்தவில்லை. ஒரு வேளை அவற்றில் sense of belonging இல்லாமல் வழிப்போக்கராக, சம்பந்தம் இன்றி பார்ப்பதால் இருக்கலாம். ஆனால் தமிழ் மணத்தில் ஒரு நட்பு வட்டம் - சிறிய கூட்டமாக இருப்பதால் - உருவாகிறது. நிறைய புதியவர்களை எழுத ஊக்குவிக்க இப்போதைக்கு இது ஒரு சிறந்த முறையும்கூட. ஆங்கிலப் பதிவுகளின் குணதிசியங்களோடு இப்போதைக்கு ஒப்பிட முடியாது என்பதுதான் என் கருத்து. கூடாரம் என்ற அமைப்பாக நான் பார்ப்பதால்தான் கூடாரத்தை நிர்வகிப்பவர்கள் என்ற முறையில் நிர்வாகிகள் குறிக்கிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
சத்திரத்தில் இடம் கொடுத்து, தண்ணீர் வசதி இருக்கா, பல்பு எரிகிறதா என்று பார்ப்பது மட்டுமே நிர்வாகிகள் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சத்திரத்தை உபயோகத்துக்கு எடுத்தவர்கள் என்ன செய்தாலும் சும்மா இருக்க முடியுமா? கல்யாணச் சத்திரத்திலே / ஹால்களிலே கூட நீங்கள் என்ன கூட்டம் Rules & Regulations என்று ஒரு போர்ட் தொங்க விடுவார்களே?
தமிழ்மணம் வெறும் பட்டியலிடுவதோடு நின்றிருந்தால் பிரச்சனையில்லை. ஒப்பீடு / மதிப்பீடு சாதனங்களை அகற்றினால் இது வெறும் இயந்திரம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். பதிவாளர்களை ஊக்குவிக்க வேண்டுமானால் சிறந்த 10 பதிவுகள் என்று குறிப்பிட்ட இடைவெளியில் நிர்வாகிகள் / அல்லது ஓட்டு முறையில் தேர்ந்தெடுத்துப் போடலாம். ( பின்னூட்ட அடிப்படையில் / மதிப்பீட்டில் அல்ல - பிளாக்கர் தளத்தில் செய்வதுபோல். இதனால் பின்னூட்ட என்ணிக்கையை அதிகரிக்க என்றே எழுதப்படுவதை தவிர்க்கலாம். பள்ளிக்கூடம் போல் உணர்வைத் தோற்றுவிக்கும் எண்ணிக்கை/ மதிப்பீடு இவற்றை நீக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

any takers?

Tuesday, July 05, 2005

ஒரு நடனக்கச்சேரி - வானில் !


வாய்ப்பு கிடைத்தால் சில விஷயங்களை நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் இருக்கும் இல்லையா? - தாஜ்மஹால், இமயமலைப் பகுதிகள், லே, (Leh), லடாக் போன்ற பகுதிகள், எகிப்தின் பிரமிட், டில்லியில் குடியரசு அணிவகுப்பு/ Beating the retreat என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அமெரிக்காவின் ஜூலை 4ந்தேதி பட்டாசு வாண வேடிக்கை ஏனோ என்னைப் பொறுத்தவரையில் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் இன்று San Jose நகரில் நேரில் பார்த்துவிட்டு வந்ததும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் லிஸ்டில் சேர்க்க வேண்டிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன். இங்கே மக்களின் வெளிப்படையான, இயல்பான தேச பக்தியும் ஆரவாரமும் ஒரு பக்கம் இருக்கட்டும். ( கூட்டமோ கூட்டம்.... மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவ சூழல்தான்..... பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் வண்டி உட்பட. வாண வேடிக்கை நடக்கும் மைதானத்தில் அவரவர் மடக்கு நாற்காலி, ஜமக்காளம் சகிதம் - சாலையோரத்தில்- உட்கார்ந்து விட்டார்கள்.

இரவு 9.30க் நிகழ்ச்சி என்று போட்டிருந்தது. 9. 12க்கு போயாச்சு. வானத்தையே பார்த்தபடி இருக்கையில் வாணவேடிக்கை வித்வான் மெல்ல சுரம் போட ஆரம்பித்தார். ஓரிரண்டு மேலே போய் வெடித்தது - கைதட்டல் தொடர.
கொஞ்ச நேரத்தில் இன்னும் ஓரிரண்டு வெடித்து சுருதி சரிபார்க்கப்பட்டது. சரியாக 9.30க்கு தேசிய கீதம் தொடங்கி முடிந்து உடனேயே வானத்தில் நடனக் கச்சேரி களைகட்டத் தொடங்கிவிட்டது. இங்கொன்றும் அங்கொன்றுமாக, சிதறும் வண்ண ஒளிக் கீற்றுக்கள் ஆரம்பித்தன. பல்லவி, அனுபல்லவி என்று படிப்படியாக வானத்தில் கச்சேரி நிஜமாகவே வர்ண ஜாலம் நடந்தது. அவ்வப்போது நடனமாடும் வர்ணக் கீற்றுக்களில் சிலவற்றுடன் ஒலியும் சேர்ந்து கொண்டது. 20 நிமிடம் கழித்து கடைசியில் கிளைமாக்ஸாக மள மளவென்று மேலே ஒளிர்ந்து வெடித்து ஒரு "தில்லானா" செய்தது பாருங்கள் - மனசில் மூச்சு முட்டும் குதூகலம் - breath taking. ஒரு வழியாக படிப்படியாக குறைந்து மங்களம் பாடி கச்சேரி முடிந்தது.

இந்த வாணவேடிக்கையின் பின் ஜம்பேலி என்ற பட்டாசு நிறுவனத்தின் உழைப்பு இருக்கிறது. ஜூலை 4 க்கு தேவையான பட்டாசுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் இது முதன்மையானது. இடம்: பென்சில்வேனியா மாகாணத்தில் நியூ கேசில்.

இந்த வாண வேடிக்கை எல்லாமே கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு நடன அமைப்புதான். ( choreography) மேலே சென்று வெடிக்கும் பட்டாசு எல்லாமே கணினி மூலம் நிரல் ( programme) செய்தபடி இயங்குகிறது. இவற்றில் இயங்கும் இசையும் இவ்வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாமே கணினி மூலம் தானே இயங்கும்படி அமைக்கப்பட்டவை. ( fly by ராக்கெட் விட்டு, பல மில்லியன் வருஷங்களாக இருக்கும் வால் நட்சத்திரத்தை சைடில் நம்ம ஊர் தண்ணி லாரி மாதிரி வேண்டுமென்றே மெனக்கெட்டு மோதி இடித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு - நேற்று நாசா, டெம்பிள் 1 என்ற வால் நட்சத்திரத்தை இடித்து நடத்திய அந்த மற்றொரு வாண வேடிக்கையைதான் குறிப்பிடுகிறேன் - இந்த கம்ப்யூடர் வாண வேடிக்கையெல்லாம் ஜூஜுபி இல்லையா?)

அந்டோனியோ ஜம்பேலி என்ற இதாலி நாட்டுக்காரர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று வருடாவருடம் ஜூலை 4 அன்று 3500க்கும் மேற்பட்ட வாணவேடிக்கை நடத்துகிறது இந்த நிறுவனம். வெடி மருந்துகள் தயாரிப்பதிலிருந்து, பின்னர் வெடி மருந்து அடைக்கப்பட்ட பெரிய பெரிய குழாய்களை வரிசையாக மைதானத்தில் நிறுத்திவைத்து அவற்றை இயக்கி, மேற்பார்வைப் பார்த்து, கடைசியில் அவற்றை திரும்ப எடுத்து அடுக்கி அடுத்த வருடத்துக்குப் பத்திரப்படுத்துவது வரையில் சுமார் 3000 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக உயரம் சென்று வெடிக்கும் பட்டாசு தயாரித்து கின்னஸ் புத்தக்த்திலும் இந்த நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த "Thunder over Louisville" என்ற வாண வேடிக்கை கெண்டகி திருவிழாவில் ( kentucky Derby festival) பத்து கணினி மூலம், 3200 அடி பாலத்தின் மீதிருந்து இயக்கப்பட்டதாம்.

இவர்கள் தளத்தில் சென்று பாருங்கள். ஹ்ம்ம்.... சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நினைவு வருகிறது.
அதுசரி. சுற்றுச் சூழல் - அது இதுவென்று ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா எப்படி இவ்வளவு பெரிய சுற்றுச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு கொண்டாட்டத்தை தொடருகிறார்கள்?சுதந்திர தின பட்டாசு வெடிப்பது அவர்கள் பாரம்பரியம்; ஐதீகம். அதெல்லாம் விடக்கூடாது என்று இருக்குமோ? இருக்கலாம் எற்கனவே இங்கே கொழுந்துவிட்டு எரியும் தேசபக்தி இப்போ outsourcing மற்றும் உலகமயமாக்கல் சவால்களில் இன்னும் அதிகமாகவே உள்ளது. எக்கசக்க jingoism. தேசீயக் கொடியை மற்ற நாடுகளும் தயாரித்து அனுப்புகின்றனவாம். ஆனால் உள்ளூரில் தயாரித்த கொடிகளையே பயன்படுத்த வேண்டும் என்று பலர் விரும்புகிறார்களாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

"Be American Buy American" இந்த வாசகத்தை ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்தேன் !!!!