Saturday, December 24, 2005

தும்பா ? வாலா?

"...ஒரு கல்லூரியை இடிக்கக்கூடாது என அதன் 100 வருஷப் பாரம்பரியத்தைச் சொல்லிப் போராடித் தடுத்த தமிழ்நாடு, ஆயிரம் வருஷப் பாரம்பரியம் கொண்ட நீர் நிலைகளை, நம் சொத்தாக உணரவில்லை என்பதுதான் பெரிய சோகம் !...."

மண்டையில் அடித்தால்போல் ஆணித்திரமாக உறைக்கும் வரிகள். இந்த வார விகடனில் ஒரு கட்டுரை.

" கடந்த நூறு வருடங்களில் ஆயிரம் மில்லி மீட்டருக்கு அதிகமான மழை தமிழகத்தில் ஏறக்குறைய 10 முறையாவது பெய்திருக்கிறது. 1903ம் ஆண்டு....60'ல் 1227 மி.மி; 69'ல் 1032 மி.மி; 85ல் 1275மி.மீ;" எனப் பட்டியலிட்டு, அப்போதெல்லாம் மழை இப்படி மக்கள் வசிக்கும் வீடுகளில் அத்துமீறி நுழையவில்லை; ஆறுகளின் கரைகள் காணாமல் போகவில்லை. ஏரிகள் உடையவில்லை. குளங்கள் வழியவில்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய இழப்புகள்? என்று கட்டபொம்மன் கணக்கில் கேள்விகளை எடுத்துக்கொண்டு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜனகராஜனின் கதவைத் தட்டியுள்ளார்கள்.

விளைவு, அருமையாக ecology ( தமிழில் என்ன என்று யாராவது கூறி உதவ முடியுமா?) ரீதியில் விளக்கம். ஜனகராஜன், எப்படி இயற்கை நமக்களித்திருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என விளக்குகிறார். ஆனால் இந்தியா உணவுத் தேவையில் தன்னிறைவு அடையக் காரணமான பசுமைப் புரட்சியும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் என்று கூறுவதுதான் ஆச்சரியமாகவும் புரியாமலும் இருக்கிறது. கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முற்பட்டதால் விவசாயிகள் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது இவர் சொல்லும் ஒரு கோணம். நீர்ப் பாசனத்துக்கு இந்த இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால் இவைத் தூர்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள் என்கிறார். என் மூளைக்கு எட்டியவரையில் இது எப்படி என்று புரியவில்லை. பாசனத்திற்கு, நீர் நிலைகளின் நீர் போதாமல்தானே நிலத்தடி நீருக்குத் தாவினார்கள்?

ஆனால் மொத்தத்தில் கவனம் பெற வேண்டியக் கட்டுரை.

இதேபோல் NDTV யில் 24 hours என்ற நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் தேநீர் கடை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தியபடி ஆதிவாசிகளின் குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே ஒரு சுயேச்சைப் பத்திரிகையாளராக பணி செய்யும் தயாமணி பர்லாவுடன் 24 மணி நேரம் சுற்றுகிறார் என்டிடிவியின் ராதிகா போர்டியா. தயாமணி ஒரு ஆதிவாசி; குழந்தைப்பருவத்தில் கொத்தடிமை நிலையில் இருந்துவிட்டுப் பின்னர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கி, கிடைத்த நல்ல வேலையை உதறிவிட்டு ஆதிவாசிகளின் குரல்களுக்கு ஒரு பிரதிநிதியாக பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தவர்.

இவருடைய தேநீர் கடையில் பல பத்திரிகையாளர்கள் கூடி செய்திகள் / நாட்டு நிலவரங்கள் அலசுவதும் வழக்கமாம். எண்டிடிவியின் இந்த நிகழ்ச்சிக்கான சுட்டி இல்லை. ஆனால் தயாமணியைப் பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கலாம்.

நாம் பெரும்பாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக முக்கியமாக எந்த விஷயங்களில் அக்கறை காட்டி போராட்டம் நடத்த வேண்டுமோ, அதைச் செய்யாமல் மேம்போக்காக எதெதெற்கோப் போராடிக்கொண்டிருக்கிறோம். பாரம்பரிய மிக்க கட்டிடத்திற்கு நடத்திய ( குவீன் மேரீஸ் கல்லூரி) போராட்டம் தேவைதான். அதில் சந்தேகமில்லை - பழைய மாணவி என்ற முறையில் நானும் அதில் பங்கேற்றேனே! ) ஆனால் இன்னும் பல முக்கிய விஷயங்களை நாம் போராடிப் பெற தவறுகிறோம்.

தெருவில் நடந்தால் சுற்றுப்புற அசுத்தமும், சுகாதாரக்கேடுகளும், பசியும், பட்டினியும், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, என்று ஆரம்பித்து எத்தனையோ "எரியும்" விஷயங்கள் மனசை உலுக்குகின்றன; எப்போது விழித்துக்கொள்வோம் ? சினிமா நடிகர்கள் பேசுவதும், அரசியல் பேரங்களும், விளையாட்டு வீரர்களும் மகக்ள் கவனத்தையும் நியூஸ்பிரிண்ட் பக்கங்களையும் தொலைக்காட்சி நேரங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் அதே அளவு நம் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சனைகள் நமக்கு உறைக்க வேண்டாமா?

ஆனாலும் அசாத்திய சகிப்பு தன்மைதான் நமக்கு !! அல்லது "கண்டும் காணாமல்" போகும் அளவு நாம் ஊறி விட்டோமோ?

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் குணம் மட்டும் இருந்துகொண்டேதான் இருக்குமோ? ஊடகங்களும் பெரும்பாலும் இப்படி தும்பு - வால் ரீதியில்தானே இயங்குகின்றன?

மேலே குறிப்பிட்ட இரண்டு ஊடகங்களிலும் அவ்வப்போது அபத்தமாக வரும் செய்திகள் /கட்டுரைகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற செய்திகள் / நிகழ்ச்சிகள் ஈடுகட்டுகின்றன என்பது என் எண்ணம்.

17 comments:

Thangamani said...

நீராதாரங்களைப் பாதுகாப்பதும், அவைகளை பேணுவது ஒரு சமூக ஆரோக்கியத்தின் குறியீடு. ஆழ்குழாய்க் கிணறுகளை அரசு விவசாய உபயோகத்துக்குத் தடுத்திருந்தால் தஞ்சைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் காவிரி பிரச்சனை வேறுவகையான தீவிரம் பெற்றிருக்கும்; அது நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, முறையான நீர்ப்பாசன முறைகள், காவிரி நீரை பங்கிட்டுக்கொள்வதில் தீவிர முனைப்பு இப்படி பல தளங்களில் தீவிரமடைந்திருக்கும். கண்டிப்பாக மழைநீரைச் சேமிப்பது என்பதும், ஏரிகளை, கால்வாய்களைச் சீரமைப்பது என்று திட்டங்கள் துவங்கப்பட்டிருக்கும்.

கர்நாடக அரசு உலக வங்கியுடன் இணைந்து செயற்கைக்கொள் தகவல்களைக் கொண்டு ஏரிகள், குளங்கள் இவற்றை சீரமைப்பதற்கும், பராமரிக்கவும், அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்கவுமான ஒரு பெரிய திட்டத்தை மாநில அளவில் செய்து வருக்கிறது. அதன் பயனை அது விரைவில் அனுபவிக்கும். அது போன்ற ஒரு திட்டம் இங்கு முன்னெடுக்கப்படவேண்டியது மிகமிக அவசியம். மழை பெய்வது குறைவு, நீர்வரத்து குறைவு என்பது சரியான காரணங்கள் அல்ல.

பத்மா அர்விந்த் said...

நீர்நிலைகளை பராமரிப்ப்தும், சுற்றுப்புர சூழலை பாதுகாப்பதும் மிக முக்கியம் என்பதை நாம் உணரவே இல்லை. இன்னும் சொல்ல போனால் ஒருபுறம் கழிவுகளை நீக்குவதும் இன்னொருபுரம் குளிப்பதும் குடிப்பதும் செய்வது நம் கலாச்சாரம், இத்தனை நாள் பலர் வாழவில்லையா, 90 வயதுவரை கூட வாழ்பவர்களை பார்த்ததில்லையா என்றெல்லாம் பேசுவதை கண்கூடாக பார்த்தும் அலுத்தும் போனேன்போன முறை இந்தியா வந்த போது.
கர்னாடக அரசு GIS மற்றும் செயற்கை கோள் மூலம் வெள்ள நிலை அபாயம் பற்றி விவசாயிகளுக்கு சொல்லவதையும், நீர்ப்ப்டிப்பை பாதுகாப்பபதையும் தமிழகத்திற்கு எடுத்துவர முயண்றதையும் அதற்கு பெரிய தொகை கை மாற வேண்டிய நிலையில் பணி விடப்பட்டதும் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
இத விட பரபரப்பு விஷ்யங்களே அதிகம் வலை உள்பட பிற இடங்களில் பேசப்படும் போது, ஒரு நிலையின்றி போராடுபவர்கள் வேறென்ன செய்வார்கள்? கட்டுரையை சுட்டியமைக்கு நன்றி. படிக்கிறேன்.

இராம.கி said...

ecology = சூழியல் (இதைச் சிலர் சூழலியல் என்றும் எழுதுவார்கள். என்னுடைய பரிந்துரை சூழியல் தான்.) நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கை பற்றிப் படிக்கும் இயல். "ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள" என்ற கம்பன் வாக்கை ஓர்ந்து பாருங்கள். சூழ் என்னும் சொல்லாட்சி புரியும். சூழல் என்பது environment என்பதைக் குறிக்கும் சொல் தான்.

நீராதார அழிவுகள், சூழியல், மாசுபடுத்தல் பற்றிய என் கருத்துக்களை இன்னொரு நாள் பதிகிறேன். அவக்கரமாய் ஓடிக்கொண்டு இருக்கிற நிலையில் இதை எழுதுவது மிகச் சரவல் (சிரமம்).

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//மேலே குறிப்பிட்ட இரண்டு ஊடகங்களிலும் அவ்வப்போது அபத்தமாக வரும் செய்திகள் /கட்டுரைகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற செய்திகள் / நிகழ்ச்சிகள் ஈடுகட்டுகின்றன என்பது என் எண்ணம்.//

உங்கள் பதிவில் அவ்வப்போது அபத்தமாக வரும் பதிவுகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற பதிவுகள் ஈடுகட்டுகின்றன என்பது எல்லாருடைய எண்ணமும்!

Aruna Srinivasan said...

தங்கமணி, தேன்துளி, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் கர்நாடக மாநில உதாரணத்தைக் காட்டியதுபோல்தான் ஜனகராஜும் அண்டை மாநிலங்களில் நடக்கும் உதாரணங்களைக் காட்டியுள்ளார். பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். "ஆங்...அதெப்படி எங்களுக்கு எல்லாமே தெரியுமில்லையா? அதெல்லாம் காப்பியடிக்கத்தேவையில்லை. இதைவிட பிரமாதமாக நாங்கள் செய்வோம்......" போன்ற மனோபாவங்கள் மட்டும் குறுக்கே நிற்காமலிருந்தால்....

கிருஷ்ணன், உங்கள் வார்த்தைப் பரிந்துரைக்கு மிக்க நன்றி. " சூழியல்" - பொருத்தமாகதான் இருக்கு. ஆனாலும் ecology - environment வித்தியாசத்தை இன்னும் சிறப்பாகக் காண்பிக்க வேறு வார்த்தை ஏதேனும் உள்ளதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...

//நீர்ப் பாசனத்துக்கு இந்த இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால் இவைத் தூர்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள் என்கிறார். என் மூளைக்கு எட்டியவரையில் இது எப்படி என்று புரியவில்லை.//

வெரி சிம்பிள். மக்கள் இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால், அவைகள் தூர்ந்துவிடாதபடிக்கு தூரெடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

இலவச மின்சாரம் என்றென்றும் நடைமுறையில் இருக்கக் கூடாது. அதனால் பலவீனமான குறு விவசாயிகளை விட, பலம் பொருந்திய நிலச்சுவாந்தார்களுக்கே பயன். எனவே இலவசமாக வழங்குவதன் நோக்கமே பலனற்றதாக ஆகிவிடுகிறது.

அணைக் கட்டுகளாலும் சூழல் பாதிக்கப்படுகிறது. (மேகாங் எனும் ஆற்றில் கட்டப்பட்டுள்ள 12 அணைகளினால் சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா வியட்நாம் ஆகிய 5 நாடுகளில் சுற்று புற சூழ்னிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் எங்கோ படித்தேன்.)

(ஒரு செய்தி: தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் மட்டம் இந்த வருடத்திய மழையில் சராசரியாக 10 அடி உயர்ந்துள்ளதாம். இரண்டு வருடத்திற்கு இது போதுமாம்.)

இராம.கி said...

சுற்றுப்புறம் = surrounding
சூழமை(வு) = environment
சூழியல் = ecology

அன்புடன்,
இராம.கி.

மதுமிதா said...

போஸ்ட் செஞ்சது கிடைத்ததா சொல்லுங்க அருணா

Aruna Srinivasan said...

மாலிக் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. நிலத்தடி நீர் மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதும் மிக நல்ல சேதி. இலவச மின்சாரம் விவசாயிகளுக்குப் பயனடைய வேண்டும் என்பது சிறந்தக் குறிக்கோளாக இருந்தாலும், ஏழை விவசாயிகளைவிட பெரிய நிலச்சுவான்தாரர்களுக்குதான் அதிகம் போய்ச் சேருகிறது என்பதுதான் இன்றைய யதார்த்தம். அணைக்கட்டுகளால் சூழியல் பாதிக்கப்படுவது பற்றி நிறைய படிக்கிறோம். உண்மைதான். ஆனால் பாசனத்திற்கும் மின்சாரத்திற்கும் அணைக்கட்டு நீர் சேமிப்பும் அவசியம். ஒரு வேளை மிகப்பெரிய ராக்ஷச அணைத் திட்டங்களைவிட நிறையச் சிறிய அணைத் திட்டங்களும், நிறைய ஏரிகளும் கால்வாய்களும் சரியான முறையாக இருக்கலாம். சென்ற ஞாயிற்றுக்கிழமை சரித்திர எழுத்தாளர் ராமச்சந்திரன் குஹா "ஹிந்துவில்" ஒரு அருமையானக் கட்டுரை எழுதியுள்ளார். பெரிய அணைத்திடங்களை இந்தியாவின் கோவில்கள் என்று வர்ணித்த நேருஜியே பிற்காலத்தில் மனம் மாறி சிறியத் திட்டங்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் என்று இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

கிருஷ்ணன், தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி. சில சமயங்களில் சுற்றுப்புறச் சூழல் - environment - என்று வார்த்தை உபயோக்கிறோம். அதனால்தான் குழம்பினேன் :-)

எந்தப் போஸ்ட் மதுமிதா?இங்கே ஏதும் காணோமே?!

இராம.கி said...

நாம் தமிழில் பயன்படுத்தும் சொற்களில் துல்லியம் பார்க்காமல், பொத்தாம் பொதுவாய் சில சொற்களைப் பயனாக்கி ஒப்பேற்றி வருகிறோம் என்று பலகாலம் சொல்லி வந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் போது இவ்வளவு கவனமின்மையை யாரும் காட்டுவது இல்லை.

சுற்றுப்புறச் சூழல் என்று கிட்டத்தட்ட இரு பொருளை ஒரே சொற்றொடரில் அடுத்தடுத்து வைத்துக் கூறுவதை தமிழிலக்கணத்தில் "கூறியது கூறல்" என்னும் குறைபாடாகச் சொல்லுவார்கள். உரையாடல், பேச்சு, எழுத்து போன்றவற்றில் கூறியது கூறல் என்னும் குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும்.

சூழல் என்ற சொல்லை சூழமைக்குப் பகரியாய் (substitute)ச் சிலர் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். நான் சூழமை என்பதைக் கூறியது அதன் இயற்கை/செயற்கை ஆகிய இரண்டின் காரணம் பற்றியே. சூழல் என்பதும் ஓரளவு பொருந்தும் தான்; சூழல் என்னும் போது நாம் அதைப் பெறுபவர் ஆகிறோம். உருவாக்குபவர் என்று உணர்வதில்லை. அதே பொழுது சூழமை என்னும் போது தன்வினை, பிறவினைப் பொருள்களும் உள்ளமைந்து வரும். [சூழமைவில் நாம் என்ன பட்டுவப் பங்காளியா? (Are we a passive partaker in the environment?) சூழமை உருவாக்குதலில் ஆற்றுவ ஆளில்லையா? (Are we not active in creating the environment?)]

சுற்றுப்புறச் சூழல் என்னும் போது அது surrounding environment என்பதைக் குறிக்கிறது. இது போன்ற சுற்றிவளைத்த சொல்லாட்சிகள் மூக்கை நேரே தொடாமல் தலையைச் சுற்றிவந்து தொடுவது போன்றதாய் அமையும். தமிழைக் கண்டு சில தமிழரே மருளுவது இது போன்ற சுற்றிவளைத்த சொல்லாட்சிகளால் தான்.

அன்புடன்,
இராம.கி

மதுமிதா said...

நானே பார்த்துவிட்டேன் அருணா
உங்க பதிவில கீழ கமெண்ட்டில் இருக்கு.அப்பாடா

Narain Rajagopalan said...

சென்ற மாத புதிய பார்வை வாங்கிப் பாருங்கள் அருணா. ஜனகராஜனின் கருத்துக்களோடு சேர்த்து விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

ramachandranusha(உஷா) said...

//உங்கள் பதிவில் அவ்வப்போது அபத்தமாக வரும் பதிவுகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற பதிவுகள் ஈடுகட்டுகின்றன என்பது எல்லாருடைய எண்ணமும்!//

என்னங்க இது? உருப்படியாக எழுதுகிற வெகு சிலரில் அருணாவும் ஒருவர். அவரைப் போய்????.
அவரோட பழைய பதிவுகளசி ஒரு தடவைப் பாருங்க அனானி!

Aruna Srinivasan said...

மதுமிதா, நீங்கள் இந்தப் பதிவின் ஹாலோஸ்கேன் பெட்டியில் போட்டக் கருத்தை இங்கு மறுபதிவு செய்கிறேன். ஹாலோஸ்கேனில் அதிக நாள் வைத்திருக்க மாட்டார்கள். இங்கே இருந்தால் பத்திரமாக இருக்கும் :-) ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களுக்கு நன்றி.

மதுமிதா,:

// அசாத்திய சகிப்புத்தன்மையல்ல அருணா.அதெல்லாம் சுத்தமா நம்ம ஜனங்களுக்கு கிடையாது

///"கண்டும் காணாமல்" போகும் அளவு நாம் ஊறி விட்டோமோ?///
வேறுவழியின்றி
இது தான் உண்மை.

///கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முற்பட்டதால் விவசாயிகள் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது இவர் சொல்லும் ஒரு கோணம்
///

சரிதானே
நீர் போதவில்லை என நிலத்தடி நீரை தோண்டி உபயோகித்தாலும்,நீர் சேமிக்கும் இடங்களை காத்திருக்க வேண்டும்.அப்போது தான் அதிக நீர் மழையால் கிடைக்கையில் சேமிக்க இயலும்.
அங்கே தவற விட்டவர்கள் நாம்.
தவறு செய்தவர்கள் நாம்.


லண்டன் ராம் ஐந்தாறு கிராமங்களில் நீர்நிலை ஆதாரங்களில் நீர் சேமிப்பு கருதி கிராமத்து மக்களின் துணையுடன்தூர் எடுத்து செப்பனிடுவதாகக் குறிப்பிட்டார்.ரம்யாவும் சில கிராமங்களுக்கு உதவியுள்ளார்.
தூர்வாருதல் அவசியம் செய்யப் படவேண்டும்.

ஏரியைத்திறந்து விட்ட நீரின் வேகத்தை இங்கே தாங்க முடியவில்லை.நதி இணைப்பு எப்படி சாத்தியப்படுமோ தெரியவில்லை.//

Aruna Srinivasan said...

நாராயண், சில சமயம் நல்ல விஷயங்களைத் தேடிப் படிக்க வேண்டும். சில சமயம் சில நல்ல விஷய்ங்கள் நம்மைத் தேடி வரும் விகடன் கட்டுரை அந்த ரகம் :-) நீங்கள் குறிப்பிட்டப் புதிய பார்வையையும் தேடுகிறேன் :-)

கிருஷ்ணன் -
//தமிழைக் கண்டு சில தமிழரே மருளுவது இது போன்ற சுற்றிவளைத்த சொல்லாட்சிகளால் தான்.
//
இது என்னவோ நிஜம்தான். என் சொல்லாட்சி எல்லாம் பழக்க தோஷம் - இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் :-)

உஷா, மிக்க நன்றி :-)

துளசி கோபால் said...

நீரின்றி அமையாது உலகம்.

அருமையான பதிவு அருணா.