Friday, November 18, 2005

தகவல் திருவிழா

திசைகள் நவம்பர் இதழில் எழுதியது.

துனிசியாவில் தகவல் தொழில் நுட்பத்திருவிழா.

இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இரண்டு நாள் ஒரு தகவல் திருவிழா நடக்கப்போகிறது. அதென்ன தகவல் திருவிழா?

தகவல் தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் அபரிதமானத் தகவல்கள் சில சமயம் நம்மைக் குழப்புகின்றன. அல்லது சில சமயம் சரியானத் தகவல்கள் சரியான முறையில் தேவையானவர்களுக்கு சென்றடைவதில்லை. உலகில் ஒரு பக்கம் சிலர் தகவல் வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறார்கள்; வேறு சிலரோ அடிப்படைத் தகவல் சாதனத்துக்கூட வசதி இல்லாமல் தகவல் வரட்சியில் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்குப் பாலம் கட்டுவதுதான் இந்தத் திருவிழாவின் - ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.நோக்கம்.

சமீபத்தில் இந்திய வலைப்பதிவுலகில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கல்வி நிறுவனம் பற்றி ஒரு இளைஞர் பத்திரிகையில் வந்தத் தகவல்களை வைத்து ஒரு ஆங்கில வலைப்பதிவாளர் தன் வலைப்பதிவில் அந்தக் கல்வி நிறுவனம் பற்றி கேள்விகளை எழுப்பினார். அந்த நிறுவனம் தன்னிடம் இருப்பதாக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் சிறப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குற்றம் சாட்டி அடுத்தடுத்துக் கருத்துகள் வலையுலகில் வர ஆரம்பித்தன. அதே சமயம், இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தை வேண்டுமென்றே அபாண்டமாகத் தாக்குவதாக பதில் வாதங்கள் அந்த நிறுவனத்தின் மாணவர்கள் / ஆதரவாளர்கள் சொல்வதாக வெளியாயின.

அவ்வளவுதான்; புகைப் பெரும் நெருப்பாகப் பற்றிக் கொண்டது. அவர் எழுதியதைக் கண்டித்தும் ஆதரித்தும் சரமாரியாக ஆங்கில வலைப் பதிவுலகில் விவாதங்கள் நடந்தன. பாதிக்கப்பட்ட நிறுவனம் அந்த வலைப்பதிவாளர் மீது அவதூறு வழக்குப் போட்டது. அவர் வேலை செய்துகொண்டிரூந்த நிறுவனத்தையும் அது விடவில்லை. அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் அந்த அலுவலகம் முன்பு மறியல் செய்யப்போவதாக சொன்னவுடன், அந்த வலைப்பதிவாளர், தன் நிறுவனத்தின் மீது பழி வராமல் இருக்கத் தன் வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஊடகங்களில் அந்த நிறுவனம், வணிக நிறுவனம்போல் பெருமளவு செலவழித்து விளம்பரம் செய்து தங்கள் நிறுவனத்திற்கு மாணவர்களைக் கவர முயற்சித்ததோ அல்லது அந்த நிறுவனத்தின் தரம் பற்றி சர்ச்சைகள் கிளம்பியதோ, அல்லது யார் தரப்பு வாதம் சரி என்பதோ இப்போது கேள்வியல்ல. கல்வியும் இன்று ஒரு லாபகரமான வணிகங்களில் ஒன்று என்பதைப் புற்றீசல் போல் பெருகி வரும் வணிக ரீதியிலான கல்வி நிறுவனங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த வகையில் நிறையவே உள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடும் குறியீடுகளைக் கொண்டும், அந்த நிறுவனத்திற்குத் தொழிலுலகில் இருக்கும் மதிப்பையும் ஆராய்ந்துப் பார்த்து, தேர்ந்து எடுத்துச் சேருவது இன்று பயனீட்டாளர்களின் பொறுப்பாகிவிடுகிறது.

ஆனால் பேச்சு /எழுத்து சுதந்திரம் பற்றி பல கேள்விகளை இந்தப் பிரச்சனை எழுப்புகிறது. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ கருத்தைச் சொல்வதற்கு ஏதும் வரம்பு / வரைமுறை இருக்க வேண்டுமா? குற்றம் / குறை தென்படில், அதைச் சுட்டிக்காட்ட ஏதும் நியதிகள் உள்ளதா? பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தனி மனிதரையோ அல்லது நிறுவனத்தையோத் தாக்குவது சரியா? அப்படியே தாக்கிக் கருத்து வெளி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் பாதித்தவர்களைக் கடுமையாக தண்டிக்க விழைவது சரியா? மேலே கண்டப் பிரச்சனையில் அந்த நிறுவனம் விமரிசனம் வாழ்வில் ஒரு அம்சம் என்று பேசாமல் இருந்திருக்கலாம். ( ஒரு பத்திரிகைப் பேட்டியில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவர் கூறினார் - வலைப்பதிவுகளில் எழுதப்படுவதைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று. அப்படியானால், அந்த வலைப்பதிவாளர் மீது வழக்கேத் தொடர்ந்திருக்க வேண்டாமே என்ற கேள்வி எழுகிறது.) அல்லது தங்கள் நிலையை விளக்கி ஊடகங்களில் இன்னொரு முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கலாம். இப்படி செய்யாமல், எழுதியவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்ததோ அல்லது கருத்துக் கூறியவர்களில் ஒருவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வைத்ததோ சரியா?

இதேபோல் சில மாதங்கள் முன்பு, ஒரு பெரிய இந்தியப் பத்திரிகை நிறுவனம் வேறொரு வலைப் பதிவாளர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இன்னும் உலகளவில் சொல்லப்போனால், கைதான அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூயார்க் டைம்ஸ் ஜூடித் மில்லர் மீதானக் குற்றச்சாட்டு, ( தனக்குத் தகவல் கொடுத்தவர் பெயர் சொல்ல மறுத்தக் குற்றம் - பின்னால் மனம் மாறி அல்லது குற்றச்சாட்டிலிருந்து விடுபட, மசிந்தார் என்பது வேறு விஷயம் ) மற்றும் சீனாவில் தினாமன் சதுக்க 15 வது ஆண்டு நிறைவு நினைவு கூர்தல் விஷயங்களை ஊடகங்கள் "கண்டுகொள்ள வேண்டாம்" என்று சீன அரசாங்கம் எச்சரித்ததைப் பற்றி வெளியிடவேண்டாம் என்ற ஆணை இருந்தும் மீறி, இந்தத் தகவலை மின் அஞ்சல் மூலம் வெளியுலகுக்குத் தெரியபப்டுத்தி, அதனால் கைதான சீன நிருபர் ஷி தவோ, என்று தகவல் பரிமாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்தித்தவர்கள் பலர்.

இந்த நிலையில் மேலே உள்ளக் கேள்விகள் அவசியமாகின்றன. கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட வேண்டுமா? வலிமையுள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கினால் உண்மைகள் எப்படி வெளியே வரும்? ஆனால் தனி மனிதர் அவதூறாக மாறாமல் கருத்துச் சுதந்திரத்தின் கண்ணியம் கடைப்பிடிக்க முடியுமா? இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? யார் நிர்ணயிப்பது?

கேள்விகளும் பதில்களும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் இப்படி பல விஷயங்களில் எது சரி எது சரியல்ல என்ற பாகுபாடு இன்று மங்கலாக உள்ளது. நிஜம் எங்கேயோ நடுவேப் பொதிந்துள்ளது. தகவல் வெள்ளத்தின் விளைவுகள் இவை.

இன்னொரு பக்கம், தகவல் வெள்ளத்தினால் - தகவல் தொழில் நுட்ப மேன்மையால் கிடைக்கும் அனுகூலங்களும் ஏராளம். 2000 ம் ஆண்டு அகமாதாபத் பூகம்பத்தின் போது உடனுக்குடன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், காணாமல் போனவர்கள் உறவினர்கள், நண்பர்கள் சேரவும் காரணமாக இருந்தது தகவல் தொடர்பு சாதனங்கள். 2004 சுனாமியின் போதும் இதே நடந்தது. அதே சுனாமியின்போது இந்தோனேஷியாவில் பாதிப்பு வந்ததுமே ஒரு எச்சரிக்கைத் தகவல் உடனுக்குடனே இதர ஆசிய நாடுகளை வந்து சேர்ந்திருந்தால் ஓரளவேனும் பாதிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இப்படி ஆக்கலும் அழித்தலும் என்று பலவித பரிமாணங்கள் கொண்டுள்ளது இன்றையத் தகவல் பரிமாற்றம்.

ஒரு சமுதாயத்தில் பலவித நல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்றம், ஒரு சமுதாயத்தின் பார்வையையும் மாற்றக்கூடிய சக்தி படைத்ததாகும்.

கணினி, இணையம், செயற்கைக்கோள் தொலைக்காட்சித் தொடர்புகள் என்று பலவிதத் தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியால் பலவிதங்களிலும் பல திசைகளிலிருந்தும் வினாடிக்கு வினாடி செய்திகள் / தகவல்கள், அவை உருவாகும் நேரத்திலேயே, பூகோள ரீதியான தடங்கல் ஏதுமின்றி நம்மை வந்தடைகின்றன. இவை, நம் அன்றாட வாழ்க்கையில், நாம் செய்யும் வேலைகளில், நம் எண்ணங்களில் என்று பலவிதங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கணிசமானது.

அதேபோல், சுனாமி, சூறாவளி, பூகம்பம் அல்லது பஞ்சம், போர் என்று உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் உலக மக்கள் பலவித உதவிகளை வாரி வழங்க உதவுகின்றன. மருத்துவம், பொருளாதாரம், தொழில் நுட்பம், மற்றும் கலை வளர்ச்சி என்று பல விதங்களில் பரிமாறிக்கொள்ளப்டும் தகவல்கள் மனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட உதவுகின்றன.

ஆனால் இதே தகவல் பரிமாற்றங்கள், அனாவசிய வதந்திகளும் ஆதாரமில்லாத செய்திகளும், தனி நபர் தாக்குதல்களும் உருவாகவும் காரணமாகின்றன. இப்படி நல்லதும் பொல்லாததுமாகக் கலந்து தகவல் உலகம் இன்று உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செய்தி அல்லது தகவல் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத அம்சமாகிவிட்ட நிலையில் எவ்வளவு தூரம் நமக்கு வந்து சேரும் தகவல்கள் உண்மையானவை/ நம்பத்தகிந்தவை? யார் எந்த செய்திகளை வெளியிடுகிறார்கள்? ஒரு செய்தியின் பின்புலம் என்ன? எவ்வளவு தூரம் இந்தத் தகவல் பரிமாற்றங்கள் சாதரண மக்களைப் பாதிக்கின்றன? பொருளாதார லாபங்கள் எவ்வளவு தூரம் தகவல்கள் பரிமாற்றங்களை உருவாக்குகின்றன?

இப்படி ஆயிரம் கேள்விகள் இன்று தோன்றுகின்றன. பலவிதமான ஊடகங்களின் மூலம் ஏற்படும் பிரமாண்டமான தகவல் வெடிச்சிதறலின் ஒவ்வொரு துணுக்கும் நம்மை வந்து சேரும்போது அதனூடே பலவித பரிமானங்கள் அடங்கியுள்ளது. இதில் உண்மை எங்கே என்று தேடுவது சாமான்யமான காரியம் அல்ல. பல சமயங்களில் ஒன்றுமில்லாத சமாசாரங்கள் ஊடங்களிடையே பெரிதாக சித்திரம் தீட்டப்படும். சாதாரண மக்களின் வாழ்க்கையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்கள் இந்த அதீதத் தகவல் வெள்ளத்தில் எங்கோ அடிபட்டுக் காணாமல் போய்விடும். வெள்ளமாகக் கொட்டும் தகவல் காட்டாற்றில், உண்மை என்பதை, பல சமயங்களில் வைக்கோல் போரில் ஊசித் தேடும் வேலையாகதான் ஆகிவிடுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்தத் தகவல் வெள்ளம் சமாசாரங்களெல்லாம் உலகெங்கிலும் தொழில் நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சமுதாயத்தினரிடையேதான். கணிசமான அளவு உலக மக்கள் இன்னும் இந்தத் தகவல் மழையின் பயனை அடையாமல் இருக்கிறார்கள். இந்த தொழில் நுட்ப இடைவெளியைக் ( Digital Divide ) குறைக்கவும், தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களின் ஆதாயங்கள் உலகில் எல்லா மக்களையும் சென்றடையவும் உலக நாடுகள் உட்கார்ந்து திட்டமிடுவது அவசியம் என்று தொடங்கியதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.
1998 ல் நடைபெற்ற உலகத் தொலைத் தொடர்பு சங்கத்தின் ( International Telecommunication Union - ITU) மாநாடு ஒன்றில், வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாடு பரிந்துரைத்ததின் பேரில் இப்படி ஒரு உலகத் தகவல் சமுக உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐ. நா சபையிடம் கோர வேண்டும் என்று ஆரம்ப வித்திடப்பட்டது. உலகத் தொலைத் தொடர்பு சங்கம் இந்த உச்சி மாநாட்டை இரண்டு பகுதிகளாக நடத்தத் தீர்மானித்தது. ஐ நா சபையின் ஜெனரல் அசெம்பளியின் ஒப்புதலும் கிடைத்தது.

இப்படியாகதானே கடந்த டிசம்பர், 2003ல் உச்சி மாநாட்டின் முதல் கட்டம் ஜெனிவாவில் நடந்தேறியது. இப்போது இரண்டாம் கட்டம், துனிசியாவில், இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை இரண்டு நாள் நடக்கப்போகிறது. " மற்ற உச்சி மாநாடுகளிலிருந்து இந்த மாநாடு சற்றே வேறுபடுகிறது - பொதுவாக உலகில் இருக்கும் பலவித அபாயங்கள் பற்றிதான் மாநாடுகளில் அலசுவார்கள். இங்கோ, தகவல் பரிமாற்றத்தை எப்படி உலகைற்கு ஆதாயமான வழிகளில் உபயோகித்துக்கொள்ளலாம் என்று திட்டமிடப்படுகிறது. " என்று ஐ நா சபையின் தலைவர் கோபி அனான் கூறியுள்ளார். ஐ நா சபையின் Millennium Development Goals என்ற திட்டம் நிறைவேறவும் இந்த உச்சி மாநாட்டில் தகவல் தொடர்புகள் மூலம் வழிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி மனிதர் வாழ்க்கை முன்னேற, அறிவு சார்ந்த வளர்ச்சி பெற, உலகில் ஜனநாயகம் தளர, பரஸ்பரம் நட்பு விரிய, என்று சுமார் 67 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டு வரையரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோள்கள் ஜெனிவாவில் 2003 ல் நடந்த முதல் கட்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. (Declaration of Principles)

அடுத்து எப்படி குறிக்கோள்களை அடையப்பபோகிறார்கள் என்பது Plan of Action அறிக்கையில் உள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்: உலகில் அரசாங்கங்களுக்கு எத்தனை முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு / சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே - உலக மக்களுக்குத் தகவல்கள் சரியான முறையில் சென்றடையச் செய்வதில் தனியார் நிறுவனங்களுக்குப் பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி தகவல்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில் பொது மக்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை உபயோகித்து அறிவுசார் வளர்ச்சி, சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதும், எந்த ஒரு தகவலும் தங்குத் தடையில்லாமல் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வழி வகைகள் செய்வதும், இந்த திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒரு பகுதி. உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கு இந்தத் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் ஆதாயங்கள் முழுமையாகப் போய்ச்சேரவும் பிரத்தேயக வழி செய்யப்படும். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.ஆனால் பக்கம் பக்கமாக உள்ள குறிக்கோள்கள் பகுதியிலாகட்டும், செயல் திட்டம் வரையறுத்துள்ள பகுதியிலாகட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடினாலும் ஆரம்பத்தில் குறிப்பிட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில், சரியான தகவல்கள் பொதுமக்களைப் போய்ச் சேர திட்டவட்டமான வழிகள் ஏதும் அடையாளம் காணப்பட்டாற்போல் தெரியவில்லை. அதேபோல் சமுத்திரம் போல் தகவல்கள் வந்து விழுந்த வண்ணம் இருக்கும் இணையத்தை ஏதாவது ஒரு நெறி முறைக்குள் கொண்டுவரப்படுமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.இன்று பெரும்பாலும் இணையத் தளங்களின் சேவை மையங்கள் ( Servers) அமெரிக்காவில் இருப்பதாலும், இணையம் முதன் முதலில் வேரூன்றியது அங்கேதான் என்பதாலும், இன்றும் இணையத் தள முகவரிகள் அளிக்கும் மையம் அமெரிக்காவில் இருப்பதாலும் இன்று அமெரிக்கா ஒரு மையக்கட்டுப்பாட்டகம் போல் இயங்குகிறது. இந்த நிலை மாறி, இணையத்தின் கட்டுபாடுகள் இதர உலக நாடுகளிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய, ஆசிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படி செய்தால், இணையத்தின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடும் என்று அமெரிக்கா சொல்கிறது. இப்படி பல விவாதங்கள் இருந்தாலும், இணைய ஆளுமைக்கு ( Internet Governance) ஒரு வரைபடம் தயாரிப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய அமசம்.சரி. இப்படி எல்லாம் பல திட்டங்கள் ஜெனிவாவில் முன் வைக்கப்பட்டது. இப்போது துனிசியாவில் என்ன செய்யப்போகிறார்கள்? அந்த செயல் திட்டங்களை ஒவ்வொரு நாட்டிலும், உறுப்பினர் நாடுகளின் மூலை முடுக்கெல்லாம், நடைமுறையில் செயலாக்க என்ன முறைகள் கையாளப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்படும்.

இதில் சுவாரசியமான விஷயம், ஐ நா தலைவர் கோபி அனான், இந்தத் தகவல் தொடர்பு உலகின் சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிரது என்று அறிவித்துள்ளது. காரணம் இணையத்தில், மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சென்ற தலைமுறையினரைவிடவும், அதிக அளவு ஆர்வமும், திறமையும் உடையவர்களாக இன்றைய இளையத் தலைமுறை இருப்பதுதான். அப்படியென்றல், வரும் நவம்பர் 16 - 18 தேதிகளில் துனிசியா மாநாட்டில் நடக்க இருக்கும் மாநாட்டில் இளம் காற்று நிறையவே வீச வாய்ப்புண்டோ? இருக்கலாம் !

நன்றி: திசைகள்

பின் குறிப்பு: இந்த மாநாட்டில் அமெரிக்காதான் இணையத்தின் மகாராஜாவாக இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இணையத்தின் கட்டுப்பாடு பரவலாக உலக நாடுகளிடையே பகிரப்பட வேண்டும் என்றும், உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெறும் ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் இணைய மேற்பார்வை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டில் ஏன் தங்கள் குறிக்கோளை அழுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர முயலவில்லை என்று இணையத்தையும் இந்த மாநாட்டையும் கவனித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஊடகங்களில் இதுவும் ஆராயப்படலாம்.

14 comments:

Anonymous said...

The week in technology: Musical mayhem
The clash between the music and technology industries was underlined painfully this week for Sony BMG, which continued to suffer headaches over its controversial CD copy-protection software.
Great blog. You may want to check out my day trading education web page day trading education Keep up the good work.

Jayaprakash Sampath said...

//சமீபத்தில் இந்திய வலைப்பதிவுலகில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கல்வி நிறுவனம் பற்றி ஒரு இளைஞர் பத்திரிகையில் வந்தத் தகவல்களை வைத்து ஒரு ஆங்கில வலைப்பதிவாளர் தன் வலைப்பதிவில் அந்தக் கல்வி நிறுவனம் பற்றி கேள்விகளை எழுப்பினார்//

அருணா, அறியாமையினால் தான் கேட்கிறேன். தயவு செஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க..

ரொம்ப காலமாகவே, வெகுஜன ஊடகங்களில், பொதுவிலே அறியப்பட்ட விஷயங்களைப் பற்றி குறிப்பிடும் போது, பெயரில்லாமல் குறிப்பிடுவதை நான் பார்த்து வந்திருக்கிறேன். அதிலும் பிற ஊடகங்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை எழுதும் போது, அது பொதுவில் பரவலாக அறியப்பட்ட விவகாரமாக இருந்தால் கூட, பொதுப்படையாக எழுதுவதில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் குடும்பத்துக்குள் சண்டை என்றால், அதை ஹிந்து, ' ஒரு பிரபல பத்திரிக்கை குடும்பத்துக்குள் சண்டை' என்று தான் எழுதும்..

அச்சு ஊடகங்களுக்குள் தான் இத்தனை ரிசர்வேஷன்ஸ் என்றால், திசைகள் போன்ற இணையப்பத்திரிக்கைகளில் கூட இது போல மூடி மறைத்து எழுத வேண்டுமா என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் குறிப்பிடுகிற IIPM விவகாரம், இந்திய வலைப்பதிவாளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக 90 சதவீத வலைப்பதிவாளர்கள், இது குறித்த தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். அச்சு ஊடகங்கள், இந்த விவகாரத்தை, விளம்பர வருமானத்துக்காகவோ அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ, சுத்தமாகக் கண்டு கொள்ளாமல் விட்ட இந்த விஷயத்தை, சுதந்திரமான இணைய ஊடகங்களில் எழுதும் போதாவது, பெயர் குறிப்பிட்டு, தகுந்த சுட்டிகள் கொடுத்து, நேர்மறையான/ எதிர்மறையான அபிப்ராயங்களை வைக்கலாம். அதுவல்லாமல், 'ஒரு கல்விக் கூடம்', 'இளைஞர் பத்திரிக்கை', 'ஒரு வலைப்பதிவாளர்' என்று எழுதும் போது, நடந்த விவகாரம், ஒரு கிசுகிசு நிலைக்கு கீழிறக்கப்படுகிறது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஒருக்கால், நான் சொல்வது, இதழியல் தர்மங்களுக்கு ஒத்துவராததாக இருக்கலாம். ஆமெனில், எச்சூஸ்மீ ப்ளீஸ்...

Aruna Srinivasan said...

பிரகாஷ்,

வலைப்பதிவுகளுக்கும், இதர ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் வலைப் பதிவுகள் தனிமனிதர் அபிப்பிராயங்கள் - விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடு - வெளிப்படுகின்றன. தனி மனிதர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கொண்டு, பொது நிலையிலிருந்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்கும் இடம் கொடுத்து செய்தியை முன் வைக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு பத்திரிகையாளரின் கடமை. என் செய்திக் கட்டுரைகளில், என்னால் இயன்றவரை என் தனிப்பட்டக் கருத்துகளுக்கு அப்பால் நின்று கொண்டு எழுதுவது என் தொழில் தர்மம் - எந்த ஊடகமாக இருந்தாலும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட உதாரனங்கள், வெறும் உதாரணங்கள்தாம். கட்டுரை அந்தச் சர்ச்சைக்குரிய நிறுவனங்களைப் பற்றியதல்ல. அதனால் விலாவாரியாக விவரிக்கத் தேவையில்லை.

விளக்கம் உங்களுக்கு திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் இதுதான் நிஜம்.

Unknown said...

அருணா,
//வலைப்பதிவுகளுக்கும், இதர ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் வலைப் பதிவுகள் தனிமனிதர் அபிப்பிராயங்கள் - விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடு - வெளிப்படுகின்றன.//

உங்களின் கருத்துகளில் நான் மாறுபடிகிறேன்.
அனைத்து ஊடகங்களுமே(செய்தித்தாள், தொலைக்காட்சி...) அவற்றுக்கென்று உள்ள "தனி" அபிப்பிராயங்கள் விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடுதான் செய்திகளை வெளியிடுகின்றன.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வலைப்பதிவு தவிர அனைத்து ஊடகங்களும் உண்மையை உண்மையாக அபிப்பிராயங்கள் விருப்பு / வெறுப்புகளின் நிறங்கள் இல்லாமல் வெளியிடுகின்றன என்று தோன்றுகிறது.

"செயல்கள்" செய்தியாக வரும்போது அதனை வெளியிடுபவரின் விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடுதான் வருகின்றன. இது உங்களுக்குத் தெரியாதது அல்ல. மிகச் சுலபமான உதாரணம்.

சன் -ஜெயா
தினகரன் -தினமலர்

//விளக்கம் உங்களுக்கு திருப்தியளிக்காமல் போகலாம்.//
விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. மேலும் வலைப்பதிவு மட்டும் அபிப்பிராயங்கள் விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடுதான் செய்திகளை வெளியிடுகின்றன என்று புதிய கருத்தையும் கூறியுள்ளீர்கள்.

//ஆனால் இதுதான் நிஜம்.//

இது நிஜம் அல்ல :-)
அனைத்து ஊடகங்களுக்கும் இதில் அடங்கும். வலைப்பதிவு மட்டும் அல்ல.

Aruna Srinivasan said...

கல்வெட்டு,

//.தனி மனிதர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கொண்டு, பொது நிலையிலிருந்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்கும் இடம் கொடுத்து செய்தியை முன் வைக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு பத்திரிகையாளரின் கடமை..//

இதை மற்றவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை நான் இங்கே விவாதிக்கவில்லை. நான் என்னைப் பற்றி மட்டுமே நிச்சயமாகக் கூற முடியும்.

Jayaprakash Sampath said...

நீங்க சொல்றது எனக்குப் புரியுது... இருந்தாலும்...... எனக்கு இதைப் பத்தி எனக்கு வேற சில கருத்துக்கள் இருக்கு... நேரம் கிடைக்கிறப்போ, என் வலைப்பதிவிலே விரிவா எழுத முயற்சி செய்யறேன்.. மறுமொழிக்கு நன்றி அருணா..

Unknown said...

அருணா,
//வலைப்பதிவுகளுக்கும், இதர ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் வலைப் பதிவுகள் தனிமனிதர் அபிப்பிராயங்கள் - விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடு - வெளிப்படுகின்றன.//
என்று நீங்கள் பொதுவாக சொன்னபடியால்தான் நான் கருத்துக்கூறினேன். நீங்கள் //வலைப் பதிவுகள் தனிமனிதர் அபிப்பிராயங்கள் - விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடு - வெளிப்படுகின்றன.// என்று பொதுவாகக் கூறிவிட்டு இப்போது //நான் என்னைப் பற்றி மட்டுமே நிச்சயமாகக் கூற முடியும்.// என்று சொல்கிறீர்கள்.

பதிலுக்கு நன்றி அருணா.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

When newspapers like IHT write about controversies over blogs they do mention names of the persons, institutions etc.No harm
is done when the names are mentioned if the issue is well known.

Aruna Srinivasan said...

Ravi,

//No harm
is done when the names are mentioned if the issue is well known.
//

no harm done either, by not giving specific names in a general story where the subjects are mentioned just to illustrate a point.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்னால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை அருணா.

அனைத்துப் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் இதைப் பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் அகில உலக (அல்லது இந்தியப் பத்திரிகைகள்) ரீதியில் காட்டுங்கள். என்னுடைய தினசரி மேய்தலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

-மதி

Aruna Srinivasan said...

மதி,

என் பதிலில் வெகுக் குறிப்பாக / தெளிவாக, என்னைப் பற்றி மட்டும்தான் சொல்லுகிறேன் என்று கூறியுள்ளேன். பிறர் எப்படி செய்கிறார்கள் என்பது பற்றி கருத்துக் கூற எனக்கு விருப்பமில்லை.

Having said that, பொதுவாகவே ஒரு விஷயத்தைப் பற்றி படிக்கும்போது ஒரு ஊடகத்தில் biased ஆகத் தகவல் வரும் என்று தோன்றினால், வேறு ஊடகங்களில் மாற்றுக் கோணங்களின் சார்பில் வெளியிடப்படும் கருத்துக்களையும் படிக்க சிரமம் எடுத்துக் கொள்ளலாமே? நியூயார்க் டைம்ஸ் சொல்வதை நம்பவில்லையானல், வாஷிங்டன் போஸ்ட் படிக்கலாம். இரண்டும் சரியில்லையென்றால், IHT. இல்லை ஊடகங்கள் எல்லாமே தங்கள் நிறத்திற்கு ஏற்ப சாயம் பூசுகின்றன என்று ஒட்டு மொத்தமாகத் தோன்றினால் எதையுமே நம்ப வேண்டாம். நமக்கு எது மனசுக்கு சரி / எது தர்மம் என்று தோன்றுகிறதோ - நம் பலவித நம்பிக்கைகள்/ எண்ணங்கள் அடிப்படையில் - அதைச் சொல்லும் ஊடகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க / பார்க்க வேண்டியதுதான்.

வேறு என்னதான் வழி என்கிறீர்கள்? ஊடகங்கள் அத்தனையுமே சரியில்லை என்கிறீர்களா? எந்த அடிப்படையில் இப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?

நம்பகத் தன்மை என்பதே இன்று அவரவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்து அமைகிறதோ என்று தோன்றுகிறது.

மதுமிதா said...

அருணா

உங்கள் பதிவினை முழுமையாக வாசித்தேன்.
பின்னூட்டத்தையும்.

இணைய,தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, வலைப்பதிவர் மாநாடு,நிறுவனம் வலைப்பதிவர் வழக்கு என அனைத்தையும் பத்திரிக்கையாளருக்கேயுரிய தனித்தன்மையோடு அளித்துள்ளீர்கள்.
மற்ற ஊடகங்களின் நிலை,பத்திரிக்கையாளரின் கடமை என்பதில் உங்கள் நிலைப்பாடை உறுதியாகவும்,தெளிவாகவும் அளித்துள்ளீர்கள்.
அனைத்தோடும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் பின்னூட்டத்தில்
///வலைப்பதிவுகளுக்கும், இதர ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் வலைப் பதிவுகள் தனிமனிதர் அபிப்பிராயங்கள் - விருப்பு / வெறுப்புகளின் நிறங்களோடு - வெளிப்படுகின்றன.///
இதில் மட்டும் வேறுபடுகிறேன்.
மற்ற ஊடகங்கள் இப்படித்தான் உள்ளன.பத்திரிக்கைகளோ,ஊடகங்களோ திரித்து அளிக்கும் பிழையான செய்திகள் ஏராளம்.

இதற்கு நீங்கள் உங்கள் நிலைப்பாடு குறித்து எழுதியது சரியே.

\\\சமுத்திரம் போல்தகவல் வந்து விழுந்த வண்ணம் இருக்கும்\\\
இதனை அடிக்கோடிடுகிறேன்.
கம்யூனிகேஷன் கேப் இதனாலேயே நிகழ்கிறது.

இன்று பதவியில் இருப்பவர் பதிவில் எழுதிவிட்டு திரும்புகையில் இல்லாது போய்விடுகிறார் என்கையில் இது தவறு ஆகி விடுகிறது.

எழுதுகையில் சிறு கவனக் குறைவிருந்தாலும் இந்த தகவல் பிறழ்வு நிகழ்வது சாத்தியமே.

ஒருமுறை வலைப்பதிவரிடம் எழுதிய பதிவின் தகவல் பிழை குறித்து கேட்பதே நியாயமானது.கருத்து சுதந்திரத்திற்கு ஏற்புமுடையது.

நல்ல வேளையாக இ.இசாக் ஒரு இக்கட்டிலிருந்து என்னை தப்ப வைத்து விட்டார்.

வலைப்பதிவில் எழுதவும் அஞ்சவேண்டுமோ என்றிருக்கிறது.

எதுக்கும் முன்னேற்பாடாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறேன்.

ஏதாவது பிரச்சினை என்றால்
அருணா தான் தமிழ்மண வலைப்பதிவில் தாதா வாக என்னை நியமிக்க பிள்ளையார் சுழி போட்டார் என்று போட்டுக் குடுத்து தப்பிச்சுடலாமா:-)

Aruna Srinivasan said...

மதுமிதா,

நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள் என்று புரியவில்லை. வலைப் பதிவுகளில் தனி மனிதர்களின் சார்புகள் வெளிப்படுவது இயல்பு. ஒரு வலைப் பதிவு ஒரு தனி மனிதரின் personality யைக் கொண்டு அமைகிறது. என் தனிப்பட்டக் கருத்துக்களை / எண்ணங்களை/ ஏமாற்றங்களை /குழப்பங்களை/ எதிர்பார்ப்புகளை / கிண்டல்களை என்று என் பலவித உணர்ச்சிகளை ( expressions) வெளிப்படுத்த என் பதிவை உபயோகப்படுத்துகிறேன். ஆனால் செய்திக் கட்டுரையாக ஒரு பொது ஊடகத்தில் எழுதும்போது அனைத்துத் தரப்பு வாதத்தையும் / கோணங்களையும் முன் வைக்கிறேனா என்று பார்க்கிறேன். இதுதான் என் நிலைப்பாடு. வலைப்பதிவுகளில் நிறங்கள் - இதில் என் பதிவும் அடக்கம்.

இரண்டாவதாக நீங்கள் எழுதியிருக்கும் விஷயம் சற்று புரியவில்லை. தகவல் பிழையிருந்தால் சுட்டிக் காட்டுவதில் தவறில்லையே. எழுதியவர் தன் கருத்தை நிலை நாட்டுவார் அல்லது திருத்தத்தை ஏற்றுக்கொள்வார். இதுதான் நாகரிகமாக நடக்க வேண்டியது. ஆனால் சில சமயம், இது நடக்காமல், தேவையில்லாத வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்படும்போது அநாவசியமாக கசப்பும் / கோபமும் எழுகின்றன. ஆனால் சமீப காலமாக பதிவுகளில் ஒரு சினேகம் தெரிகிறார்போல் இருக்கே மதுமிதா. உங்கள் பயத்துக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் :-)

மதுமிதா said...

அருணா

1.///
மற்ற ஊடகங்கள் இப்படித்தான் உள்ளன.பத்திரிக்கைகளோ,ஊடகங்களோ திரித்து அளிக்கும் பிழையான செய்திகள் ஏராளம்.

இதற்கு நீங்கள் உங்கள் நிலைப்பாடு குறித்து எழுதியது சரியே.///

இது தான் வேறுபாடு.
ஆனால் கீழேயே உங்கள் பின்னூட்ட பதிலில் உங்கள்
நிலைப்பாடு சரி என்றே சொல்லியிருக்கிறேன்.

2.///தகவல் பிழையிருந்தால் சுட்டிக் காட்டுவதில் தவறில்லையே. எழுதியவர் தன் கருத்தை நிலை நாட்டுவார் அல்லது திருத்தத்தை ஏற்றுக்கொள்வார்///

இதையே தான் நானும் குறிப்பிடுகிறேன் அருணா.

3.///சமீப காலமாக பதிவுகளில் ஒரு சினேகம் தெரிகிறார்போல் இருக்கே ///
அப்ப முதலிலிருந்து சிநேகம் தெரியவில்லையா:-):-);-)

குருவே சரணம்.
சிஷ்யை சரியாக கத்துண்டிருக்கேனா சொல்லுங்க