Friday, November 11, 2005

எல்லாம் ஒரு காலம் !

சில சமயம் சில விஷயங்களைக் கேட்கும்போது வாயடைத்துப் போய்விட்டது என்போம் அல்லவா? அந்த அனுபவம் எனக்கு சமீபத்தில் ஏற்பட்டது. என் உறவினர் பெண் ஒருவர் - நன்குப் படித்து, அரசாங்கத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருப்பவர் - கூறிய ஒரு கருத்தைக் கேட்டபோது.

சம்பாஷணையின் ஒரு பகுதியை மட்டும் - எனக்கு அதிர்ச்சியைத் தந்தப் பகுதியை - இங்கே தருகிறேன்.

" என் பெண் வெளி நாட்டில் சென்று படிப்பதையோ /வாழ்வதையோ நான் நிச்சயம் விரும்பவில்லை. "

"ஏன்??!!"

" அங்கேயெல்லாம் பெண்கள் தாங்களே வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு / வேலைக்கும் போய்க் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இங்கேயென்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தில், தாராளமாக, சமையலுக்கு, மேல் வேலைக்கு, வண்டி ஓட்ட, தோட்டக்காரன் என்று நாலு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு சுகமாக இருக்கலாம். அங்கே போய் ஏன் என் பெண் கஷ்டப்பட வேண்டும் ? " !!!!

"அது சரி. இதே வாதம் உன் பிள்ளைக்குப் பொருந்தாதா?அவன் வெளி நாட்டில் சென்று வாழ்வதில் உனக்கு ஒன்றும் பிரச்சனையில்லையா? "

" அவன் ஆண். அவன் வீட்டு வேலைகளை அவன் மனைவிப் பார்த்துக்கொள்வாள்." !!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த அரை மணி நேரம் நடந்த மீதி சம்பாஷணை /விவாதம் இவற்றை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன் !!

கூடவே, நேற்று இந்துப் பத்திரிகையின் சென்னை - மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்தக் கட்டுரை ஒன்றையும் தமிழ்படுத்தி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அவன் - அவள்.

"அவன் சொல்கிறான்: " ஹ்ம்ம்... இங்கே நாம ஆம்பிளங்கதான் எப்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கு. பெண்கள்பாடு தேவலை. ஒரு வேளை அதான் அவங்க இப்படி சோம்பேறித்தனமாக இருக்காங்களோ என்னவோ? இங்கே ஒரு "ப்ளீஸ்"; அங்கே ஒரு புன்சிரிப்பு; என்று இப்படியே அவங்க சாமர்த்தியமா சாதிச்சுக்குவாங்க. ஒரு "சாரி" என்ற வார்த்தை; கொஞ்சம் முறைப்பு காண்பிச்சாப் போதுமே; கொலைப்பழியிலிருந்து கூட தப்பிச்சுக்குவாங்க.

அவங்களுக்கென்ன? எப்ப வேணுமானாலும் கையை மடக்கினா ஓசி சவாரி கிடைச்சிடும். எப்பவும் உலகம் கண்களிலே அவங்கதான் படுவாங்க. ஆம்பிளைங்களும் அவங்களுக்கு "இல்லை"னு சொல்லத் தயங்குவாங்க.
ஆனாலும் இது ரொம்ப பாரபட்சமான உலகம்டா சாமி; உலகமே ரொம்ப மோசமா தாறுமாறாப் போய்கிட்டு இருக்கு. எல்லாத்துலேயும் பெண்களுக்குதான் இப்ப காலம். ஆம்பிளைங்கபாடு திண்டாட்டம்தான். எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு? ராப்பகலா உழைச்சாலும், ஓவர் டைம் வேலை செய்தாலும் அது யாருக்குப் புரியுது? ஆனா அதே ஒரு பெண் ஒரு நாள் செஞ்சாக் கூட 'நான் செஞ்சேன்' என்று தான் வேலை செஞ்சது உலகத்துக்கே கேட்கிறார்ப்போல தண்டோராப் போட்டு அறிவிச்சுடுவாங்க.

......... இன்னும் கொஞ்சம் இந்த ரீதியிலே ஆண் புலம்பல்.

அடுத்துப் பெண் சொல்கிறாள்: " ஆமாங்க. அதிர்ச்சியாதான் இருக்கு. ஐயோ பாவம் . ஆண்கள் எப்படி உழைக்கிறாங்க!! பெண்கள் என்ன கிழிச்சிட்டாங்க இன்னிக்கெல்லாம் இருந்தா, ஆபீஸ்லேர்ந்து வீட்டுகு வந்தப்புறம், என்னப் பெரிய வேலை? ராத்திரி சமையல் செஞ்சுட்டு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு, நாய்க்குட்டிக்குச் சாப்பாடுபோட்டுட்டு, டேபிளைத் துடைத்து, பாத்திரம் ஒழிச்சுப்போட்டுத் தேய்த்து வைத்துவிட்டு, சமையல் அறையைத் துடைத்துச் சுத்தம் செஞ்சுட்டு, மறு நாளைக்கு சாமான் எல்லாம் இருக்கான்னு பாத்துட்டு, கணவன் துணியை இஸ்திரிப் போட்டு, ( ஐயோ பாவம், அவன் நாளைக்கு ஆபீஸ் போகணுமே) .... அவ்வளவுதான் செய்யணும். என்ன..? இரண்டு பேருக்கும் ஒரே சம்பளம்தானே என்கிறீங்களா? அட என்ன இருந்தாலும் அவுங்க ஆண்பிள்ளையாச்சே?

இந்தப் பெண்களுக்கு நல்லா வேணும். அவங்கதானே பெண் சுதந்திரம்; சமத்துவம் என்றெல்லாம் கூவினாங்க? சரிதான்; சமமா ஆபீஸ¤லே வேலைப் பாருங்க. ஆண் மாதிரியே சம்பாதிங்க. நல்லது. ஆனா வீட்டு நிர்வாகம் பெண்களுது ஆச்சுங்களே? நீங்கதான் செய்யணும் - அடிப்புடிச்ச வாணலியைத் தேய்ச்சுக் கழுவுற "சுகமான" வேலை உள்பட.. இதெல்லாம் தவிர ஆபீஸ¤லே உங்கத் திறமையைக் கண்டுக்காம சேர வேண்டிய சம்பளமோ பதவியுயர்வோ தராம இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காதீங்க.
அப்புறம் பாருங்க; ஒரு குழந்தைப் பிறந்துச்சுன்னு வையுங்க. அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் கவலை வந்து உட்கார்ந்துக்கும். குழந்தையை யார் பார்த்துப்பாங்க?எப்படி சமாளிக்கிறது? இப்படி யோசிச்சு யோசிச்சே வேலை மற்றும் குழந்தை இரண்டையும் ஜால வித்தை செஞ்சு சமாளிக்க ஆரம்பிப்பாள். அதே ஆண் என்ன செய்வாரு? குழந்தை பிறந்தவுடனே "பாட்டில்" உடைத்துக் கொண்டாட ஆரம்பிப்பாரு.

அதெல்லாம் சரி. இப்பதான் புது யுக ஆண்; இந்தக் காலத்துலே ரொம்ப அனுசரணையாக இருக்கார்னு கேள்விப்படறோமே? ( ஆதர்ச ஆண் விளம்பரம்? மற்றும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பனித்த கண்களுடன் - எல்லா விளம்பரத்துலேயும் சிரிப்பாரே - அந்த ஆண்??) அதுக்கென்ன? ஏதோ வாஷிங் மெஷின்லே இரண்டு பட்டனை அமுக்கி வீட்டு துணிகளைத் தோய்க்க நம்மளுக்கு " உதவி" செய்யறாரு இல்லே... அதாலே, இப்படி எல்லா சீரியல் விளம்பரத்துலேயும் ஆதர்ச ஆண் என்று தலையைக் காண்பிச்சிட்டுப் போவாரு. அதோட இல்லே; இப்படி வீட்டு வேலையிலே " உதவி" செய்யறதக் காரணம் காட்டியே, நம்கிட்ட பேங்க் போறது, வரி கட்ட இன்கம்டாக்ஸ் ஆபீஸ் போறது, இல்லேனா கம்யூடர்லே வேலை என்று அவங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் நம்ம பக்கம் தள்ளி விடுவாங்க.

இருந்தாலும் ஆதர்ச ஆண்கள் இருக்கதான் செய்யறாங்க. காபி ஷாப்லே கொஞ்சம் புன்னகை செஞ்சா, நம்ம ஐஸ் காபிலே கூடக் கொஞ்சம் ஐஸ் போட்டுத் தரவாங்க; சினிமாத் தியேட்டர்லே கும்பல்லே அடிச்சுப் பிடிச்சு பாப்கார்ன் வாங்கத் திண்டாடும்போது இன்னும் பாக்கி இருக்கிற காலே அரைக்கால் ஆதர்ச ஆண்கள் நமக்காக கியூலே நின்னு வாங்கித் தருவாங்க - அவங்க சகாக்களாலே நாம் கும்பலிலே நசுங்கி அவதிப்பட வேண்டாமே என்ற கரிசனத்துலே.

ஏதோ இப்படி சில சௌகரியங்களும் இன்னும் நமக்கு பாக்கி இருக்கேன்னு சந்தோஷப்படுவோம். போற வரைக்கும் போகட்டும். அதுவரைக்கும் தயவு செஞ்சு சந்தோஷப்பட்டுக்குவமே? என்ன பெண்களே, புரியுதா?

இந்தக் கட்டுரையை அப்படியே சென்னைத் தமிழில் எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் :-) இந்தச் சுட்டியில் இருப்பதைப் படித்துவிட்டு, சென்னைத் தமிழில் இன்னும் இதற்கு மெருகேற்ற விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம்.

7 comments:

NambikkaiRAMA said...

தினமலரில் உங்கள வலைப்பூ பற்றிய செய்தி வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

Aruna Srinivasan said...

அடடே, கோயிந்சாமி 8 ஏ, ( இது எந்த ரூட் பஸ்ங்க? :-) சங்கத் தமிழ் எல்லாம் கூட தெரியுமா? பல மொழி வல்லுனர் போல :-)

பாஸிட்டிவ் ராமா, தினமலர் தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மதுமிதா said...

அருணா

வாழ்த்துகள்
வீட்டு வேலைகளை ஒரு நாள் செஞ்சு பாத்தா,அது கூட வேணாம்
செஞ்சுட்டிருக்கிறத பாத்தாலே பாவம் னு கரிசனை வந்தா நல்லது.

இல்லன்னா ஆஷாதேவியோட காலாட்படையாவது வாசிக்க சொல்லுங்க.

rnatesan said...

very good presentation ,i came to know thro' dinamalar and expect similar articles.
i am also beginnerjust opened a blog
thillaiyadiyan.blogspot.

Suka said...

நல்லா எழுதறீங்க அருணா !

ஆதர்ஷ ஆண்களையும், புலம்பல் பெண்களையும் ஒரு புடி புடிச்சுருக்கீங்க..

என்னை கேட்டா.. கஷ்ட்டப் படுரது ஆணோ பெண்ணோ.. அதுக்கு காரணகர்த்தா அவங்களே தான் ..அதில இருந்து வெளிய வர்றது அவங்க கையில தான் இருக்கு..

நான் எல்லா கஷ்ட்டத்தையும் அனுபவிச்சுட்டே (புலம்பிக்கிட்டே) தான் இருப்பேன்னு அடம்பிடிக்கற பெண்ணை எந்த ஆதர்ஷ ஆணாலயும் திருப்திப்படுத்த முடியாது :)

வாழ்த்துக்கள்,
சுகா

துளசி கோபால் said...

அருணா,

'சூஊஊஊஊஊஊஊஊஊப்பர்'!!!!

Aruna Srinivasan said...

மதுமிதா, வீட்டு வேலைன்னு பெரிசா சொல்றதுலேயும் அர்த்தம் இல்லேங்க. வேலை எதுவானாலும் - அது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ - "இது நமது ஸ்தாபனம் /வீடு - என்ற பொறுப்போட செய்யும்போது நீயா நானா என்ற போட்டிக்கே இடம் இல்லை. அவங்கவங்க, தங்கள் நேரப்படி / சௌகரியப்படி எளிதாக, செஞ்சுக்க முடியும். நிறையப் பேரிடம் இந்த அணுகுமுறை இருக்கறதில்ல. அதான் பிரச்சனை.

நன்றி நடேஷ், சுகா, துளசி.