Thursday, November 03, 2005

தொடரும் கேள்விகள்.......

(தமிழோவியம் தீபாவளி மலருக்காக எழுதியது.)

சமீப காலமாக ஒரு கேள்வி என் மனதில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு இன்னும் சரியான பதில் புலப்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்களேன்.

ஊர்ப்பாசம் என்பது எப்படி வருகிறது? ஒரு இடத்தில் பிறந்ததால் வருகிறதா? வளர்ந்ததால்? குடிபெயர்ந்து ஓரிடத்தில் பழகிப்போனதால்? இல்லை, ஒரு ஊரின் - நமக்குப் பிடித்தமான பிரத்யேகமான சிறப்புகளால்?

நியூ ஆர்லின்ஸில் காற்றீனா தாக்கியபோது நிறைய பேர் ஊர்ப்பாசத்தால் வெளியேறவில்லையாம். உயிருக்கும் மேலாக நேசிக்கும் அளவு தங்கள் ஊரின் மேல் பிடிமானம் இருப்பது எதனால்? அப்படியே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நியூஆர்லின்சைவிட்டு ஓடி வேற்று நகரத்துக்கு வந்த சிலரால் அங்கே ஒட்ட முடியவில்லை. தங்கள் ஊரின் அருமை பெருமைகளை நினைத்து மாய்ந்து போனார்கள். சான் ஹோசே மெர்குரி நியூஸ் பத்திரிகையின் பழைய நிருபர் ஒருவர் நியூ ஆர்லின்ஸைத் தன் ஊராகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிட்டு இப்போது புயலிலிருந்து தப்பிக்க வேறு மாநிலத்துக்கு வந்தபின் தன் ஊரைவிட்டு வர வேண்டிய சோகத்தைப் பற்றி எழுதினார். அடைக்கலம் புகுந்த இடத்தில் யாரோ நியூ ஆர்லின்ஸ் மடி கிராஸ் மணிகளை இவருக்குக் கொடுத்தபோது, அது சரியான நியூ ஆர்லின்ஸ் மணிகளல்ல என்று வாங்க மறுத்துவிட்டு மனசுக்குள் பொருமுகிறார். " நம்ம ஊர் மணிகளின் பாரம்பரியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். பிப்ரவரி மாதம் வந்தவுடனே தெருவிலே குழந்தைக் குட்டிகளோட வரிசையாக நின்று கொண்டு நியூ ஆர்லின்ஸ் திருவிழா ஊர்வலம் வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நம்ம இங்க இப்படி கொண்டாட்டமா இருக்கிறப்போ மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்னதான் செய்யறாங்க என்று நம்ம ஊர்க்காரங்க ஒவ்வொத்தரும் தங்கள் மனசுக்குள் ஒரு நமுட்டு சிரிப்போட நினைச்சுப்போமே; அந்த நம்ம ஊர் ஆளுங்க இல்லையே இவங்க? இவங்களுக்கு நம்ம மணிகளின் அருமை எப்படி புரியும்?"

எப்படி ஒரு ஊர்ப்பாசம்? இத்தனைக்கும் இவர் பிறந்து வளர்ந்த ஊர் நியூ ஆர்லின்ஸ் அல்ல. இப்படி நமக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கலாம். பிறந்ததனால் மட்டுமே ஒரு ஊரின் மேல் பாசம் வருவதில்லை என்று நினைக்கிறேன். பிறந்த ஊர்ப்பாசம் போல பிறந்த நாட்டுப் பாசமும் வளர்ந்த / பழகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து ஆழமில்லாமல் போகுமோ? அப்படி போனால் அது தவறென்று சொல்ல முடியுமா? இந்தியாவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க வெளி நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நாட்டின் மேல் பாசம் இருக்கும்? தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் வெளி மாநிலங்களில் வளர்ந்தத் தமிழர்களுக்குத் தமிழ் நாட்டின் மேல் பாசம் இல்லாமல் போய்விடுமோ?

எந்த ஊரிலிலுமே 3 அல்லது 4 அதிக பட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திராத என் வாழ்க்கையை ஒரு நாடோடி வாழ்க்கை என்று நான் சொல்வதுண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் வகை.
"உங்க சொந்த ஊர்?" - "Where do you come from?" "where do you belong?" போன்ற அறிமுகக் கேள்விகளுக்கு இப்போதும் நான் ஒரு கணம் யோசித்துவிட்டுதான் பதில் சொல்கிறேன். Where do I belong?
பொதுவாக சென்னை என்று முன்பெல்லாம் குறிப்பிடும்போது என்ன சொல்கிறோம் என்று தோன்றும். சென்னையில் வாழ்ந்ததேயில்லை. எதை வைத்து சென்னை என் ஊர் என்று சொல்ல முடியும் என்று தோன்றும். பிறந்த ஊர் முசிறி என்று பெயர்தான் தெரியும். என் மூன்று வயதில் குடும்பம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அங்கிருந்த வாழ்க்கை பற்றி என் சகோதரியும் பெற்றோர்களும் சொல்லிதான் கேள்வி. அப்பாவின் ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு சிற்றூர் என்பதும் அம்மா ஊர் திருச்சி பக்கத்தில் இன்னொரு சிற்றூர் என்பது குடும்ப சரித்திரத்தில் ஒரு அடிக்குறிப்பு. ஆனால் இந்த ஊர்களைப் பற்றி கேள்வி ஞானம்தான். மற்றபடி பரிச்சயமில்லை. யாராவது வயதானவர்கள் அந்தக் கால வழக்கப்படி, "உங்களுக்கு எந்தப் பக்கம்" என்று கேட்டால், என் கணவர் சட்டென்று " என் மனைவி, தஞ்சாவூர் பக்கம்" என்று சொல்லும்போது எனக்கு தூக்கிவாரிப்போடும். தஞ்சாவூரா? நானா? அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாதே, என்று நினைப்பேன். என் சகோதரி பத்மினி சொல்லிதான் நிறைய என் பெற்றோர்களின் ஊர் விஷயங்கள் தெரிந்து கொண்டேன். என்னிடம் அவர் சொன்ன கதைகள் சுவாரசியமாக இருக்கவே அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி அவரிடம் கட்டுரைகள் வாங்கிப் போட்டு வருகிறேன்.

இந்த ஊர்களுக்கு எப்போதாவது சிறு வயதில் திருவிழா, கல்யாணம் என்று செல்வதோடு சரி. இந்த நிலையில் எந்த முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என் ஊர் என்று சொல்வேன்? பிறகு, நான் வளரும் காலத்தில் அப்பா அவ்வப்போது மாற்றலாகி சென்று கொண்டிருந்த தமிழ் நாட்டு ஊர்களையெல்லாம் சொன்னால் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்குப் புரியுமோ என்று தோன்றும். பொத்தாம் பொதுவாக சென்னை என்று சொல்லிவிட்டால் நிம்மதி. ஆக மொத்தம் எனக்குப் பிறந்த / வளர்ந்த ஊர்ப்பாசம் என்று ஒன்று ஒட்டாமலேயே போயிற்று. ஆனால் பிறந்த பகுதி, வளர்ந்த நாடு என்று பொதுவாக தமிழ் நாட்டின் மீதும், இந்தியா மேலும் பாசம் இருக்கிறதே? இதுதான் ஒவ்வொரு முறையும் வெளி நாட்டு வாழ்க்கையிலிருந்து அவ்வப்போது பிடித்து இழுத்து வந்துள்ளது. இந்த சொல்லத் தெரியாத பற்றுதல்தான், தான்சானியா, பூடான் மற்றும் சிங்கப்பூர் என்று சுற்றிய நாடுகளிலிருந்து வேலை ஒப்பந்தத்தைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு - சொந்தக் காரணங்களால் - வரத் தூண்டியுள்ளது. எந்த ஊர் என்று இல்லை; இந்தியாவில் இருந்தால் போதும் என்ற நினைப்புதான் அப்போது. இதன் பெயர் ஊர்ப்பாசம் என்று சொல்வதா என்று புரியவில்லை. சிங்கப்பூரைவிட்டு வரும்போது, பல நண்பர்கள் மாய்ந்து போய்விட்டார்கள். இந்தியாவில் அப்படி என்ன இருக்கிறது என்று இப்படி ஓடி ஓடிப் போகிறர்£கள் என்று. அதுதானே எனக்கும் புரியவில்லை.

எழுபதுகளில் கிழக்காப்பிரிக்காவில் தன்சானியாவில் குடியிருந்தபோது இந்தியக் குடும்பங்களிடையே - இந்தியர்கள் என்ற ஒரு "ஊர்ப்பிணைப்பு" இருந்தது. தினம் சந்திப்பு, விழாக்கள், பண்டிகைகள் என்று கலகலவென்று இருக்கும் ( அதுவே இந்தியாவில் ஒரே ஊரில் இருந்தாலும் அப்படி இருந்திருப்போமா என்பது சந்தேகம் - வெளி நாட்டில் / வெளி மாநிலங்களில் இருக்கும் பலரும் இதை உணர்ந்திருப்பார்கள் ) அப்போது எங்களிடையே அடிக்கடி அடிபடும் ஒரு பேச்சு - "எப்போது இந்தியா திரும்பலாம்? வேலை செய்யும் ஒப்பந்தக் காலத்தை இந்த வருடத்தோடு முடித்துக்கொள்ளலாமா? அடுத்த வருடம் நிச்சயமாக இந்தியா போய்விடப்போகிறோம் " என்ற ரீதியிலேயே பேச்சு இருக்கும். இந்த "going for good" சம்பாஷணை இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பத்து வருடம் கொட்டைப் போட்ட குப்தாஜி, அடுத்த வருடம் நிச்சயம் போகிறேன் என்பார். " டில்லி, கனாட் பிளேஸில் இன்னும் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" அதை வாங்கிவிட்டால், நிச்சயம் என் லட்சியம் பூர்த்தியாகிவிடும். திரும்ப வேண்டியதுதான்" என்று ஒரு கமாவுடன் அவரது " going for good " பேச்சு முடியும். இப்படியே அவர் இன்னும் பதினைந்து வருடம் சொல்லிவிட்டு ஒரு வழியாக ரிடையர் ஆகிவிட்டுதான் இந்தியா வந்தார். இப்படி "Pushing the bars for ever" என்ற ஒரு மனோபாவத்துடனும் ஊர்ப் பாசமும் சேர்ந்து பலருக்கு வாழ்க்கையின் பெரும் பகுதி கேள்வியிலேயே நிற்கும். இன்னும் சிலர் இந்தக் கேள்விக்கணைகளை லட்சியம் செய்யாமல் அடுத்த தலைமுறைக்கு வேரூன்ற முயலுவார்கள்.

இப்படி வேரூன்றியத் தலைமுறைகள்தாம் சேர்ந்து இன்று அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் வளப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆமாம், அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் " குடியேறியவர்கள் நாடு" ( country of immigrants) என்று சொல்வதுண்டு இல்லையா?

இப்படிப் புலம் பெயர்ந்தோர் என்பது ஒரு நாட்டைவிட்டு நாடு சென்று குடியேறுபவர்களுக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து வேறு ஊரில் வாழ்பவர்களுக்கும் பொருந்தும். இன்று இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளில் குடியேறி வாழ்பவர்களின் பிரச்சனைகள் / குழப்பங்கள், பல வருடங்கள் முன்பு கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் பிழைப்புத் தேடி சென்றவர்களுக்கும் பொருந்தும். இன்று Indian Diaspora / Chinese Diaspora என்பதுபோல் திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி அல்லது இன்னும் பல குட்டிக் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களும் ஒரு விதத்தில் அந்தந்தப் பகுதிகளின் Diaspora தான் - திருச்சிக்காரர்கள், தஞ்சாவூர்க்காரர்கள் என்று diaspora வட்டம் சுழலும்.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் மாநகரங்களான - மும்பாய், டில்லி போன்றவைகளும் " புலம் பெயர்ந்தோர்" நகரங்கள்தாம். தமிழர்கள் அன்று கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறினார்கள். பிறகு வெளி மாநிலங்களுக்கு; பிறகு அயல் நாடுகளுக்கு என்று "புலம் பெயர்" வட்டம் விரிந்து கொண்டு போயிற்று.

பல வருடங்கள் முன்பு என் அம்மா வழி தாத்தா தன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் திருச்சி பக்கத்தில் தன் கிராமத்த்தில் வீடு கட்டிக்கொண்டு "செட்டில்" ஆனார். அவருடைய சகோதர்களும் அவ்வண்ணமே செய்தார்கள். ஊர்ப்பாசம் அவ்வளவு இருந்தது அவர்களுக்கு.
அன்று ஊர்ப்பாசம் என்று ஊர் திரும்பிய அந்த சகோதரர்களின் நிலையை இன்று வெளி நாடுகள் / ஊர்களிலிருந்து தமிழ் நாட்டில் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் இந்தியப் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ஊர்ப்பாசம் என்று ஒரு தலைமுறையினர் திரும்பி வந்தாலும் அவர்களின் அடுத்தத் தலைமுறையினருக்கு அந்த அளவு ஊர்ப்பாசம் இருப்பதில்லை. அதுவும் வளர்ந்தப் பிள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களால் பெற்றோரின் ஊர்ப்பாசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் வளர்ந்த ஊருக்கும் பெற்றோரின் ஊருக்கும் இடையே உள்ள வாழ்க்கை முறை வித்தியாசங்களும் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மொழிப் பிரச்சனையும் அவர்களைத் தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் குஞ்சுகளாகத் திணறச்செய்யும். இந்த வாழ்க்கை முறை சங்கடங்களுக்குப் பயந்து பலர் ஊர் திரும்ப யோசனை செய்வார்கள்.

அந்தக் காலத்தில் என் மூதாதையர் - மூத்த தலைமுறையினர் - ஓய்வு பெற்று கிராமம் திரும்பியபோது என் மாமாக்கள் - தாத்தாக்களின் மகன்கள் - பம்பாய், சென்னை என்று நகரங்களில் நல்ல வேலைகளில் - குடும்பம் / வேலை என்று வாழ்க்கையின் பளு /அழுத்தம் நிரம்பிய Prime Time வயதுகளில் இருந்தார்கள். அவர்களால் எப்படி கிராமத்தில் வாழ முடியும்? கடைசியில், தாத்தாக்கள், பிள்ளைகள் வந்து இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து கிராமத்தில் கட்டியப் பெரிய வீடுகளில் தனியாக - தாத்தா/ பாட்டி - வாழ்ந்தனர்.

வெளி நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவிட்டு "வயோதிகர்கள் ஊராக" மாறிக்கொண்டிருக்கும் இன்றையச் சென்னையைப் போல அன்றைய கிராமம் இருந்தது.

இன்றும் இந்த ஊருக்குத் திரும்பலமா கேள்வி பலப் புலம் பெயர்ந்தோரை - அது டில்லித் தமிழரோ அல்லது அமெரிக்கத் தமிழரோ - ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. திரும்பும் சிலரின் அடுத்த தலைமுறையினருக்கு பெற்றோரின் "ஊர்" ஒட்டாது. ஊர்ப்பக்கம் மீண்டும் குடியேறுவதற்கு முன்னோடியாகப் பலர் வருடாந்திர / அல்லது அவ்வப்போது, ஊருக்கு விஜயங்கள் பல செய்திருப்பார்கள் - அவர்கள் பெற்றோரையும் சுற்றோரையும் பார்க்க, குலதெய்வத்துக் கோவிலில் மொட்டையடித்து காதுகுத்த, பெரியப்பா / ம்மா/ மாமா /மி இவர்களுடைய பிள்ளைகள் கல்யாணம், என்று ஏதேதோ காரணம் சொல்லிக்கொண்டு ஊருக்கு ஒரு பத்து நாள் / இரண்டு வாரம் என்று பெட்டி நிறைய எல்லோருக்கும் ஏதேதோ வாங்கிக்கொண்டு சிரித்து, வம்பு பேசி என்று ஆடிவிட்டு மறுபடி தங்கள் தங்கள் பொந்துகளில் போய் அடைந்து கொண்டு, என்று வாழ்க்கை ஓடியிருக்கும். ஆரம்ப காலங்களில் குழந்தைகள் இவர்களைப் போலவே ஆசையுடன் ஊர்ப்பக்கம் வருவார்கள். எல்லோரும் நகரத்திலிருந்து / வெளி நாட்டிலிருந்து வந்திருக்காங்க என்று கொண்டாடுவது குழந்தைகளுக்குப் பிடித்துப்போயிருக்கும்.

ஆனால் சற்று வளர்ந்து பள்ளி, காலேஜ், தங்கள் அலைவரிசைக்கு நண்பர்கள், மற்றும் நீச்சல், டென்னிஸ், பாட்டு நடனம், என்று சிறப்பு பயிற்சிகளில் கவனங்கள், நண்பர்கள் வட்டம், என்ற ரீதியில் அவர்கள் வாழ்க்கை முறை மாறிப்போவதில், ஊரில் இருக்கும் உறவினரோ, வாழ்க்கை முறையோ அத்தனைதூரம் ஈர்க்காது. இந்த இரண்டுகெட்டான் வயது சமயத்தில்தான் பெற்றோருடன் விடுமுறையில் ஊர்ப்பக்கம் போவதற்கு பிள்ளைகள் சங்கடப்படத்தொடங்குவார்கள். எண்ணையும் தண்ணீரும் போல பெற்றோரின் வேருடன் ஒட்ட முடியாமல் ஒரு தர்ம சங்கடம். "ஊருக்கா? நாங்க வந்து என்ன செய்யப்போகிறோம்? நீங்க போயிட்டு வாங்க. நாங்க இங்கே பாத்துக்குறோம்" என்பது போன்ற பதில்கள் வர ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு வந்து செட்டில் ஆக நினைப்பது மகாக் கடினமான வேலை. இதற்கெல்லாம் பயந்து பலர் இருக்கும் ஊரிலியே முடிந்த வரை இருந்து விடலாம் என்று பார்ப்பார்கள். அது இன்னும் புதைகுழி போல் ஆக ஆரம்பிக்கும். ஒரு பக்கம் தாங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பெற்றோர் தேட ஆரம்பிக்க, பிள்ளைகள் தாங்கள் வளர்ந்த/ வளரும் சூழ்நிலையைவிட்டு வெளியேறத் தயங்க, அது ஒரு தர்ம சங்கடமான நிலை.

என்னைப் பொறுத்த வரையில் என் பெற்றோர் வளர்ந்த தஞ்சாவூர், அல்லது திருச்சி அருகே உள்ள கிராமங்கள் என் ஊர் அல்ல. எங்கேயும் அடர்ந்து பல வருடங்கள் இருந்திராக்காததால், வளர்ந்த எந்த ஊரிலும் ஆழமான ஊர்ப்பாசம் வரவில்லை. என் மகன்களின் கதையும் கிட்டதட்ட இதேதான் - நாங்களும் மாற்றலாகிச் சென்று கொண்டிருந்ததால். ஆனாலும் அவர்களின் பெரும்பாலான வருடங்கள் இந்தியாவில் டில்லியில் கழிந்ததால் அவர்களைப் பொறுத்தவரையில் டில்லிதான் சொந்த ஊர். தமிழ் நாடு அவர்களைப் பொறுத்த வரையில் பெற்றோர் ஊர் மட்டுமே. எனக்கு எப்படி என் பெற்றோரின் கிராமங்கள் ஆனவோ அதுபோல்.

இதேபோல் வெளி நாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களில் அங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் ஊர்தான் அவர்களுக்கு சொந்த ஊர். இந்தியா / தமிழ் நாடு, அயல் நாடாக ஆவதில் ஆச்சரியம் இல்லை. யாராக இருந்தாலுமே பொதுவாக ஒரு மனிதனின் ஐந்து வயதிலிருந்து 20 வயது வரை வளரும் சூழ்நிலையும், ஊரும்தான் அவன் / அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கும். அந்த சூழ்நிலை மற்றும் ஊரும்தான் அவனைப் பொறுத்தவரையில் "சொந்த ஊர்" - Home. அதற்குப் பின் வாழும் இடங்களெல்லாம் வசதிக்காக, வேலைக்காக, மற்ற ஏதோ வாழ்க்கை சௌகரியங்களுக்காக என்ற ரீதியில்தான் இருக்கும். ஆனால் உள் மனதில் ஒரு பிணைப்பு என்பதும் " feeling at home" உணர்வும் எழுவது இந்த 5 -20 வயதுகளில் வளர்ந்த ஊர்தான்.

இந்த மாதிரியான இரு நாட்டு - சில சமயம் பன்னாட்டு - சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த ஊரின் மீது தேச பக்தி இருக்கும் என்பது விடைத் தெரியாத கேள்விதான். அதுபோல் சௌகரியத்துக்காகவோ அல்லது பல நாள் வாழ்ந்த ஒட்டுதலாலோ வேற்று நாடுகளின் குடிமக்களாக மாறுபவர்களின் ஊர்ப்பாசமும் அடி மனதில் அந்த 5லிருந்து 20 வயது வரை வளர்ந்த ஊரில்தான் இருக்கும். ஆனால் இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு.

எப்படியென்றால், " சொந்த ஊரை / நாட்டை" விட்டு வெளியே வாழ்ந்தாலும் சில குடும்பங்களில் வீட்டுக்குள்ளே தங்களின் ஊர்ப்பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையயும் துளிக்கூட மாற்றிக்கொள்ளாமல், புலம் பெயர்ந்த ஊரின் தாக்கங்கள் தங்கள் வீட்டுக்குள்ளே அண்டாமலும் சிலர் இருப்பார்கள். இந்தக் குடும்பங்களில் இளையத் தலைமுறையினருக்கு இரட்டை வாழ்க்கை முறை பழகிப்போயிருக்கும் - அல்லது இந்த தர்ம சங்கட நிலையை இயல்பாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் வந்தால் இந்தியா/தமிழ்நாடு/ கிராமம் என்றும், வெளியே போனால் வேறு ஒரு நாடு / மாநிலம் / ஊர் என்றும் வாழக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆங்கில நாவலாசிரியை ஜும்பா லஹரியின் கதைகளில் இந்த Jekyll and Hyde மாதிரியான வாழ்க்கையைப் பற்றி நிறைய வரும். ஆங்கில சினிமா Bend it Like Beckham, ஹிந்தி சினிமா Dil Wallen Dhuniya Leh Jaayenge போன்றவற்றின் கதைக் களன்கள், இப்படிபட்ட இரட்டை வாழ்க்கை முறையில் தர்ம சங்கடமாக வாழும் தலைமுறையினரைச் சுற்றிதான் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பிரச்சனை ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கும் "சாண்ட்விச்" பெற்றோர்கள் - ஒரு பக்கம் பெற்றோர், மறுபக்கம் பிள்ளைகள் - இருவரையுமே திருப்தி படுத்த வேண்டும். ஊரில் இருக்கும் அவர்களுடைய பெற்றோரைத் திருப்தி படுத்துவதற்காகவோ அல்லது இன்னும் தங்கள் ஊர்ப்பாசத்தையும் அங்குள்ள வாழ்க்கை முறையை விட முடியாமலும் இருக்கும் இவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அந்த வாழ்க்கை முறையைத் திணிக்கப்பார்ப்பார்கள். வேற்றூரின் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளுக்கோ இவர்களது பிடிவாதம் புரிவதில்லை. In Rome, live like Romans என்பது பெற்றோர்களுக்கு ஏன் புரிவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கும் வெளியில் மற்ற கலாசாரப் பழக்கங்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள சொல்லிகொடுத்து வளர்க்கும்போது இரண்டு விதமான - இன்னும் பலவிதமான வாழக்கை முறைகளையும் புரிந்துகொண்டு, அவற்றை மதித்து வளரும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வந்துவிடும். இது கொஞ்சம் கழைக்கூத்தாடி வேலை போன்றதேயானாலும், எங்கே இருந்தாலும் வாழ்க்கையை இயல்பாக வாழக்கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும் என்பதால் வளர்ப்பில் இந்த அளவு சிரமமும் சிரத்தையும் காட்டுவது நல்லதே.

இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சிலர் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே " ஊர்ப்பக்கம்" திரும்பி விடுவார்கள்.
என் தாத்தாக்கள் ஓய்வு பெற்று கிராமத்தில் மீண்டும் குடியேறியதைப் போல் நாங்களும் நான்கு வருடம் முன்பு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக "என் ஊரில்" கால் ஊன்றத் தொடங்கினேன். பல தலைமுறைகளாக அல்லது பல வருடங்களாக சென்னையை / தமிழ் நாட்டை விட்டு வெளியில் வட இந்தியாக்களில் வாழும் தமிழ் புலம் பெயர்ந்தோர் பலர் சென்னைக்கும் தமிழுக்கும் அந்நியப்பட்டுவிட்டது போல் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். வட இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த பலர் சென்னைக்கு / தமிழ் நாட்டுக்குத் திரும்ப ஏனோ அஞ்சுவதையும் பார்த்துள்ளேன். சென்னைக்காப் போகிறீர்கள்? உங்களால் சென்னை வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்கள். அன்றும் சரி. இன்றும் சரி. என் வேருக்குத் திரும்புவது எனக்கு பெரிய விஷயமாகப் பட்டதில்லை. சென்னையில் வாழ்ந்திராவிட்டாலும் நான் அந்நியமாக மட்டும் உணர்ந்ததேயில்லை. மாறாக இது/ தமிழ் நாடு என் இடம் என்ற நினைப்பு என்றுமே இருந்தது.

என் நினைப்பு என்னை ஏமாற்றவில்லை. இந்த நான்கு வருடங்களில் சென்னை நன்றாகவே பழகியும் பிடித்தும் விட்டது. நிறைய விஷயங்களில் என் வாழ்க்கை முறை சென்னை வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போவதால் இயல்பாக இருக்கிறது. வீட்டிலும் வெளியிலும் ஒரே மொழி என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.

இரவு 10 மணிக்குமேல் மரங்கள் அடர்ந்த ராஜா அண்ணாமலை வீதிகளில் செல்லும்போது அந்த அமைதியான நேரத்தில் சென்னையின் அமரிக்கையான அழகு புரிகிறது. பெற்றோரும் உற்றோரும் இருந்த, /இருக்கும் ஊர் என்று சென்னைக்கு வந்துவிட்டாலும், தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் இப்படி சௌகரியமாகவே உணர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் டில்லி வாழ்க்கைப் பழகிப்போனதில் டில்லியும் இன்னொரு "என் ஊர்" என்ற நினைப்பு மட்டும் மாறவில்லை.

ஆனால் நான் இருந்த எந்த வெளி நாட்டிலும் அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியதேயில்லை - எத்தனைதான் வாழ்க்கை சௌகரியமாக இருந்தபோதும். இது தற்காலிக வீடு /ஊர் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. home is home. என்கிற உணர்வு "நம் வீட்டில்தான்" வரும் - எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும். பல வருடம் புழங்கியக் காரணத்தால் டில்லியும் " என் ஊர்" என்று ஆகிவிட்டிருந்தது.
சமீபத்தில் எழுத்தாளர் C.S Lakshmi (அம்பை) தொகுத்த "The Unhurried City" என்ற புத்தகம் சில நாட்கள் முன்பு படித்துக்கொண்டிருந்தேன். அருமையான பழையப் படங்களுடன், சென்னையைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பல்துறையிலும் வித்தகர்கள் என்று பலர் அவரவர் கோணத்திலிருந்து எழுதியக் கட்டுரை, கதை, கவிதைகள் என்று இந்தத் தொகுப்பு இருந்தது. தொகுப்பில் இருந்த கருத்துகள் பல்வித பார்வையில் இருந்தன. ஆனால் இந்தப் புத்தகத்தை என்னைப் படிக்கத் தூண்டியது, லஷ்மி எழுதிய முன்னுரை. முன்னுரை எழுதுவதே ஒரு கலை. தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு ஒரு ஆர்வத்துடனும் அந்தப் பொருளில் ஒரு பிடிமானத்துடனும் ( involvement) சரியான முறையில் ஆராய்ச்சி செய்து எழுதப்படும் சில முன்னுரைகள், புத்தகத்தைவிட அருமையாக, ஜனரஞ்சகமாக அல்லது ஆழமாக அமைந்துவிடும். அம்பை எழுதிய " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்ற கதையில் ஒரு ராஜஸ்தான் குடும்பத்தில் வீட்டு மருமகள்கள் - நன்கு படித்த பெண்களும் கூட - எப்படி சமைப்பதும், வீட்டு வேலையுமே வாழ்வு என்று வாழ்கிறார்கள்; முடக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞைக் கூட இல்லாமல், என்று விவரித்திருப்பார். வீட்டில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு ஒரு மாறுதல் என்று குடும்பம் பிக்னிக் போவார்கள். அங்கும் இவர்கள் நேரம் சாப்பாட்டுக்கடையிலேயே கழியும். இந்தக் குடும்பத்து ஆண்கள் " மணமகள் தேவை" என்று விளம்பரம் கொடுக்கும்போது " நன்குப் படித்த, ஆனால் எதிர்த்துப் பேசாத, நல்ல அழகுள்ள ஆனால் கீழ்ப்படிதல் குணமுள்ள....." என்ற ரீதியில் தேடுவார்களாம். ( செய்தித்தாள்களைப் புரட்டினால் இன்றைக்கும் இதில் மாற்றம் இருக்கிறார்போல் இல்லையே?!!) இன்னொரு கதையில் பிரசவ வலி வரும் வரையில் வயலில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருப்பார்.

அம்பையின் அவதானிப்புகளையும் அவருடைய எழுத்தில் இருக்கும் கூர்மையையும் ரசித்திருக்கிறேன். இந்த முன்னுரையும் அப்படியே. இந்தத் தொகுப்பில் சென்னைக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்த, வாழ்க்கையில் பிரகாசித்த பிரபலங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறார் - உ.வே.சா முதல், பாரதியார், புதுமைப்பித்தன், மற்றும் மருத்துவம் படிக்க வந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி, சென்னைக்கு வந்து பல அரசியல் கலந்துரையாடல்கள் நடத்திய காந்திஜி, என்று பட்டியலும் இவர்கள் சென்னை வந்தக் கதையும் என்று விவரங்களைத் தூவியிருக்கிறார்.

கிராமங்களிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்தலின் ஆரம்பக்காலங்களைப் பற்றி விவரிக்கையில் அந்தக் காலத்தில் சென்னைப் பற்றி பிற ஊர்க்காரர்களின் கவலைகளையும், சென்னைக்கு புதிதாகக் குடியேறியவர்களின் பயங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார். 1925ல் வெளி வந்த " சென்னை நாகரீக காளி விந்தை" என்ற புத்தகத்தில் சென்னைப் பெண்கள் எப்படி கலாசாரம் இல்லாமல் - " நெற்றியில் குங்குமமில்லாமல் சாந்துப்பொட்டு இட்டுக்கொண்டு, உரக்கப்பேசி சிரித்துக்கொண்டு, என்று நவீனப் பெண்களைக் கிண்டல் செய்யும் அந்தக் காலக் கவிதையைச் சுட்டிக்காட்டுகிறார். பத்திரிகைகளிலும் இந்த " நவீன" பெண்கள் பற்றிய கேலிச் சித்திரங்கள் வந்ததையும் எடுத்துக்காட்டுகிறார்.

அந்தக் காலத்து சென்னையின் பூங்காக்களில் மாலையில் ரேடியோ பாடுமே அதைக்கூட குறிப்பிட்டுள்ளார். இசை மற்றும் கலாசார மையமாக சென்னை இருந்ததை விவரிக்கும்போது மியூஸிக் அகாடமி பற்றியின் ஆரம்பம் பற்றி எழுதுகிறார். 1928ல் ஆரம்பிக்கப்பட்டபோது இசைக் கச்சேரிகள் தவிர அங்கே இசை சம்பந்தமான பல சொற்பொழிவுகளுக்கும், கலந்துரையாடலுக்கும், பகிர்தலுக்கும் இடம் இருந்தது. ஆனால் இசையை இப்படி எந்தவிதமான "அமைப்புக்குள்ளும்" - institutionalization of music - கட்டுபடுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்த வீணை தனம்மாள் கிண்டலாகக் கேட்பாராம்: : " ஓ, அங்கே இசையைப் பற்றிப் " பேசுகிறார்கள்" என்று கேள்விப்பட்டேனே?" என்பாராம். இப்படி சுவாரசியமாகப் பல விஷயங்கள் ஆங்காங்கே தாளித்துக் கொட்டப்பட்டு அக்கறையாக எழுதப்பட்ட ஒரு முன்னுரை.

நிறையக் கருப்பு வெள்ளைப் படங்கள் - பழைய சென்னையைக் காண்பிக்க. என் கவனத்தை ஈர்த்த ஒன்று: குண்டும் குழியுமான ஒரு சாலையின் குறுக்கேக் கொட்டை எழுத்தில் துணியில் எழுதிய ஒரு பெரிய அறிவிப்பு: " காணவில்லை; பெயர் - தார் ரோடு. நிறம் - கருப்பு; அளவு - 75 அடி அகலம், ஒரு கிலோமீட்டர் தூரம்; தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - சென்னை மாநகராட்சி."

ஹ்ம்ம்.....இப்போதெல்லாம் இப்படிபட்ட நகைச்சுவையுணர்வுக்கே
" காணவில்லை" அறிவிப்புப் போட வேண்டியதாகிவிட்டது.

அம்பைக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. என்னைப்போலவே இவரும் பளிச்சென்று சொல்கிறார். " நான் சென்னையைச் சேர்ந்தவள் அல்ல. ( I did not belong to Chennai.), நான் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்" என்று. சென்னைக்கு வெளியே வளர்ந்திருந்தாலும் சென்னை என் வாழ்க்கையில் ஊடுருவியிருந்தைப் போல இவருக்கும் இருந்திருக்கிறது. லஷ்மி சொல்கிறார்: " சென்னையில் வாழவில்லையே தவிர சென்னை வாழ்க்கையில் ஒரு அங்கம். காலையில் ஹிந்து பேப்பர்; காபி; ஆனந்தவிகடன், கல்கி.... அப்புறம் பண்டிகைகள் ; தீபாவளி பண்டிகை ரொம்ப முக்கியம். முதலில் விடிகாலையில் இருட்டில் எண்ணைக் குளியல் - பிறகு எங்கள் பங்கு பட்டாசுகள்; அதன் பிறகு சுடச்சுட இட்லி; பச்சைமிளகாயும் தேங்காயும் பொட்டுக்கடலையும் வைத்து அரைத்த சட்னியுடன் - கொஞ்சம் தாராளமாகவே - மொளகாப்பொடி எண்ணெய்; கமகமவென்று வறுத்த எள்ளு வாசனை ஆளைத்தூக்க. இதெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டபின் எனக்கும் என் தம்பிக்கும் முக்கியமாக ஒரு வேலை காத்திருக்கும். எங்களுடைய உண்டியைக் குலுக்கி ஐந்தோ அல்லது ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு மல்லேசுவரம் மார்க்கெட்டை நோக்கி நடைபோடுவோம் - பள பளவென்ற அட்டையுடன் வரும் ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வாங்க...."

இப்படி போகிறது அவர் பெங்களூரில், சென்னைப் பெண்ணாக வளர்ந்த விவரங்கள். வெளி நாடுகளில் / மாநிலங்களில் இருக்கும் பல குடும்பங்களில் இதே கதைதான்.

என் மகன்களிடமும் இந்த " தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் வாழ்க்கை முறை" பழகிவிட்டது. இன்று அமெரிக்காவில் இருந்தாலும், இப்போதே " ஊர்" திரும்பும் கேள்விகள் அவர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் "ஊர்" டில்லி. சென்னையல்ல. வீட்டில் தமிழ், வெளியில் ஹிந்தி என்ற வாழ்க்கை முறையில் ஊறியவர்கள். அவர்களுக்கு சென்னையில் பிடிமானம் இல்லை - எனக்கு என் தந்தையின் ஊரான தஞ்சாவூர் அந்நியமாகிப் போனது போல.
நான் பல வருடங்களுக்கு முன்னமேயே "ஊர்" திரும்பியிருக்க வேண்டுமோ? ஒரு வேளை என் மகன்கள் அமெரிக்காவிலேயேத் தொடர்ந்து இருக்க நேரிட்டால் அடுத்தத் தலைமுறையினருக்கு இந்தியாவே அந்நியமாகிப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களிடம் தமிழர் வாழ்க்கை முறை இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை வேறு. ஊர்ப்பாசம் வேறு. வாழ்க்கை முறை / கலாசாரம் என்பதெல்லாம் பூகோள எல்லைகளைக் கடந்தவை.

அப்படி என்றால், ஊர்ப்பாசம் என்பது பூகோள எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதோ?

இன்னும் புரியவில்லை. ஊர்ப்பாசம் எப்படி வருகிறது? பிறந்ததாலா? வளர்ந்ததாலா? பழகிப்போனதாலா? நம் ரசனைக்கு ஏற்றதாக ஒரு ஊர் இருப்பதாலா? வளர்ந்தப் பாசமா?, பிறந்தப் பாசமா? அல்லது பிழைப்புப் பாசமா? எந்த ஈர்ப்பு அதிகம்?

இதுபோல், இந்தியப் பெற்றோர்களுக்கு வெளி நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தேச பக்தி எந்த இடத்தில் இருக்கும்? பெற்றோர்களின் தேசத்திலிருந்து அவர்கள் தேச பக்தி வித்தியாசமாக இருக்கும்போது அன்பினால் பிணைக்கப்பட்ட அவர்கள் உறவில் அரசியலால் விரிசல் வர வாய்ப்பு உள்ளதோ? இரு வேற்று நாட்டு மனிதர்களின் திருமண பந்தத்திலும் இதே கேள்விகள்.

சுருக்கமாகச் சொன்னால் பூகோள எல்லைகளைத் தாண்டி எழுந்த /வளர்ந்த உறவுகள், மனிதன் வகுத்த பூகோள / அரசியலின் எல்லைகளின் பாசத்தில் ( ஊர்ப்பாசம் / தேசப்பாசம்) கட்டுப்பட வேண்டுமா? இந்தக் கட்டுப்படலின் எல்லை எங்கே நிற்கிறது?

தொடரும் கேள்விகள்.......

நன்றி: தமிழோவியம்.

18 comments:

dondu(#4800161) said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். சாதாரணமாக வெளியூரில் வசிப்பவரின் பிள்ளைகள் வளர்ந்ததும் இம்மாதிரித் தலைமுறை இடைவெளி ஊர்ப்பாச விஷயத்தில் சர்வ சாதாரணமாக வந்து விடுகிறது. அதுவும் 15-20 வருடங்களுக்குள்.

ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த ஊர்க்கனவை மனதில் வழையடிவாழையாகச் சுமந்த யூதர்களை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலர்களை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அது வேறு விஷயம். இந்த சொந்த ஊர்ப்பற்றில் மட்டும் அவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

அருணா,

அருமை அருமை. என் மனசுக்குள்ளே எப்போதும் ஓடிக்கிட்டு இருக்கும் விஷயத்தை
இப்படிக் கச்சிதமா எழுதிட்டீங்க.

நானும் பிறப்பால் தமிழ்நாடு/இந்தியன் என்று சொல்லலாமே தவிர சுருக்கமாச் சொன்னா
ஒரு நாடோடிதான்.

வாழ்க்கையில் ரொம்ப வருஷம் இருந்த ஊர் எதுன்னா இங்கேதான். ஆனாலும் இந்தியா
வந்துரணுமுன்னு முடிவு செஞ்சுட்டா எங்கே போய் இருக்கறதுன்றது இன்னும் குழப்பமாவே இருக்கு.
நானே இப்படின்னா இந்தியாவை நாலேமுறை பார்த்த என் பொண்ணுக்கு எப்படி இருக்கும்?

ஒ(ன்னு)ண்ணும் புரியலையே(-:

பத்மா அர்விந்த் said...

அருணா
நல்ல விளக்கம். நான் சில சமயம் உலகமயமாதம் தொழில்களுக்கு மட்டும் இல்லை என்றூ நினைத்து கொள்வது உண்டு. ஒருமுறை அக்காவை யாரோ ஒரு அறிவியல் கூட்டத்தில் நீங்கள் எந்த ஊர் என்றபோது அவரிடம்தன் விவரங்களை சொல்ல, வர நாமெல்லாரும் global citizen என்றாராம்.

Aruna Srinivasan said...

ராகவன்,

//ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த ஊர்க்கனவை மனதில் வழையடிவாழையாகச்//
இந்த மாதிரி எல்லா இனத்தவரிடையேயும் இருக்கலாம் - தனிப்பட்ட மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் என்ற கோணத்தில் இறங்க எனக்கு விருப்பம் இல்லை.

துளசி.

//ஒ(ன்னு)ண்ணும் புரியலையே(-: //

அதனால்தான் " தொடரும் கேள்விகள்" என்றேன். எது உண்மையான சந்தோஷம் என்பதுபோல் இதுவும் நிறைய விதங்களில் அவரவர் பார்க்கும் பார்வையைப் பொருத்ததாக இருக்கலாம்.

பத்மா,

//நாமெல்லாரும் global citizen என்றாராம்.
//
இப்படிதான் இன்றைய இளையத் தலைமுறையினர் நிறையப் பேர் சொல்லுகிறார்கள். ஓரளவு அதில் உண்மையிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு பறவைக் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எல்லைகளற்ற உலகளாவிய " ஊர்ப்பாசம்" ஒரு ideal கனவுபோலவும் - கனவாக மட்டுமேவோ(???) தோன்றுகிறது. கற்பனையிலிருந்து இறங்கி கொஞ்சம் யதார்த்தத்துக்கு வாருங்கள் என்று அவ்வப்போது குண்டுகள் வெடித்து தீவிரவாதிகள் நினைவூட்டிவிடுகிறார்கள்.

Anonymous said...

Enna me koovikinekeera , Chumma onnu theriyada pola keera , Adhu oor pasam illa me , Pal payasam ..Apprikavile karuppuku ellam apprika pasam , singukku singu pasam unnaku enna me vandhdhu , summa gommunu kada

Dharumi said...

எனக்கு ஒரு ஐயம்.உங்களைப்போல், துளசியைப் போல் உள்ளவர்கள் தீர்த்து வைக்கவேண்டிய ஒன்று. நம் மக்கள் வெளிநாடுகளில் அங்கங்குள்ள மக்களோடு ஒன்றாது, தங்களுக்குள்ளே மட்டும் ஒரு வட்டம் போட்டுக்கோண்டு வாழ்வதாக ஒரு எண்ணம் எனக்கு. 3 ஆண்டுகள் U.S.-ல் தங்கி வந்த தங்கை கொண்டு வந்த நூற்றுக்கணக்கான் போட்டோக்களிலோ, வீடியோக்களிலோ மற்ற 'கலர்' ஏதும் வந்ததில்லை. எல்லோரும் நம் மக்களே.அந்நியப்படுத்தியே வாழ்வதால் அந்நியப் பட்டே இருப்பதால் இந்த் 'ஊர்ப்பாசம்' கொஞ்சம் அதிகமாகவே இருக்கக் கூடுமா?

Aruna Srinivasan said...

தருமி, ஓரளவு நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். வாழும் சூழ்நிலையில் கலக்காமல் வேரின் சூழ்நிலையிலேயே வாழும்போது "ஊர்ப்பாசம்" மிகுந்து இருக்க வாய்ப்பு உண்டு. இந்தியர்கள் வெளி நாடுகளில் வாழும்போதும் பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்று முன்பெல்லாம் ஒரு குற்றச்சாட்டு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காலப்போக்கில் இது மாறி வருகின்றது என்றே நினைக்கிறேன். பொதுவாக ஒரு தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் இடையே இந்த வேறுபாட்டை அதிகம் காணலாம்.

அதேபோல் இந்த விஷயம், இருக்கும் இடம், தோழமைக்கான அவசியம் என்று பல சூழ்நிலைகளைப் பொறுத்து இருக்கிறது. இடத்திற்கு இடமும் இது மாறுபடுகிறதோ என்னவோ. என் மகன் ஜெர்மனியில் இருந்தபோது அவனுக்குப் பன்னாட்டு நண்பர்கள்தாம் அதிகம். இந்திய நண்பர்கள் இருக்கவே இல்லை. காரணம் அவன் இருந்த இடத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை. அதுவே, இன்று அமெரிக்காவில் அவன் வீட்டில் நிறைய இந்திய நண்பர்கள் வந்து போகிறார்கள். பெரும்பாலும் சூழ்நிலையைப் பொறுத்தும், தனிப்பட்டவர்களின் பழகும் தன்மையைப் பொறுத்தேயும் இது அமைகிறது என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த சில இந்தியர்கள் இந்திய சமூகத்தில் பழகுவதைவிட உள்ளூர்வாசிகளுடன் பழகுவதையே விரும்புகிறார்கள். " கலிபோர்னியாவில் " தேசி" கூட்டம் அதிகம். எனக்கு அங்கே வரப்பிடிக்கவில்லை," என்று அமெரிக்காவில் "கண்காணாத" ஊர்களில் வேலை வாய்ப்புத் தேடி செல்லும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல், உள்ளூர்வாசிகள் எவ்வளவுதூரம் வெளியாட்கள் கூட பழக விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இது அமைகிறது.

மேலும் நமக்கு ஒரு குணம் - இரண்டு நிமிடம் பேசியவுடனேயே "வீட்டிற்கு வாருங்களேன்" என்று எளிதாக அழைப்பு விட்டுவிடுவோம். ஆனால் வெளிநாட்டவர்கள் பலர் வெளியில் எவ்வளவுதான் சிரித்து, தோழமையாகப் பேசினாலும் மனப்பூர்வமாக நம்முடன் அப்படி "வீட்டுக்கு அழைக்கும்" அளவுக்கு நெருங்க யோசிப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் "சொந்த ஊரில்" அவர்கள் களத்தில் - வெளியாட்களின் தோழமைக்கு அவசியம் இல்லாமல் - இருப்பதால் இருக்கலாம். கொக்கும் நரியும் விருந்துக் கொடுத்துக்கொண்ட கதை ஞாபகம் வருகிறதா? :-) அல்லது யானைக்கு நிலத்தில் பலம்; முதலைக்கு நீரில் பலம் என்றும் சொல்லலாம்.

அதேபோல், இன்று இங்கு இந்தியாவில் பல வெளி நாட்டவர்கள் வந்து வேலைப் பார்க்கிரார்கள். அப்படி எவ்வளவு பேர் நம்முடன் கலந்து பழகுகிறார்கள்? டில்லியில், தற்போது குண்டு வெடித்த சரோஜினி நகர் மார்கெட் பக்கம் போனீர்களானால், கடைக்காரர்கள் பலர் பல மொழி பேசுவார்கள். பல தேசத்து வாடிக்கையாளர்கள் வருவதால். ஆனால் அந்த வெளிநாட்டவர்களும் பொதுவாக தமக்குள்ளேயேதான் பழகிக்கொள்கிறார்கள். அந்நிய தேசத்தில் ஒட்ட கொஞ்சம் நாள் பிடிக்கதான் செய்யும்.

இருந்தாலும் பொதுவாக முன்பு போல் நம் மனிதர்கள் நமக்குள்ளேயே மட்டுமே சுழலும் மனப்பான்மை மாறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். ஒரு தலைமுறைக்கு மேல் அந்நிய தேசம் மற்றும் வாழ்வைப் பற்றி ஒரு புரிந்துணர்வு இருப்பது ஒரு காரணம் என்றால், ஊடகங்கள், வெளி நாட்டுப் பயணங்கள் வாயிலாக, பல அந்நிய தேசங்கள் இன்று பழகின இடங்கள் போல ஆகி வருகின்றன என்பதும் காரணம்.

துளசி, மற்றும் வெளியில் பல வருடங்கள் வாழும் இதர வலைப் பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கே பகிர்ந்து கொண்டால் சுவாரசியமாக இருக்குமே? :-)

அன்பு said...

நிறைய தகவல்கள், அனுபவங்கள் பகிர்ந்திருக்கின்றீர்கள். நன்றி.

ஆம் முதல் தலைமுறையை விட, அடுத்த தலைமுறை வேறுபாடில்லாமல் பழகுகின்றார்கள் - முந்தியதலைமுறை தலையிடாதவரை!

Aruna Srinivasan said...

அன்பு ,

// முந்தியதலைமுறை தலையிடாதவரை! //

:-) :-) Well said !

Dharumi said...

நன்றி, அருணா.
நீங்கள் சொன்னதுபோல 'பழம் பெருச்சாளிகள்' (well experienced -என்ற பொருளில்தான்) என்ன சொல்லப் போகிறார்கள்என்று பார்க்கக் காத்திருக்கிறேன். உங்கள் 'இருபக்கப் பார்வை' நன்றாகவே உள்ளது. மீண்டும் நன்றி.

ramachandranusha said...

இங்கத்து கதை கொஞ்சம் வித்தியாசமானது. என் மகன் சிறு குழந்தையாய் இருக்கும்பொழுது துபாய்க்கு வந்தாச்சு. மகள் என்றால்
கல்யாணம் ஆகும்வரை தந்தை விசாவில் இருக்கலாம். படித்து வேலைக்குப் போய் சொந்தமாகவும் விசா வாங்கலாம்.
ஆனால் மகன்கள் பதினெட்டு வயதுக்கு பிறகு இங்கு படிக்க வேண்டும், அல்லது வேலைக்குப் போய் சொந்த விசா வாங்கினால்
தான் இருக்க முடியும். இந்தியாவுக்கு வருடாவருடம் போனாலும் அவன், துபாய்தான் தன்னுடைய நாடு என்ற தொனியில் பேச ஆரம்பித்தால், இல்லையாடா சாமி என்று அறிவுரை சொல்ல ஆரம்பிப்போம்.
இப்பொழுது அப்பார்ட்மெண்ட் வாங்கினால், விசா தருவதாய் சொல்கிறார்கள். அந்த காசில் சென்னையில் போயஸ்கார்டனிலேயே
வீடு வாங்கிடலாம் :-)

theevu said...

நல்லதொரு பதிவு .ஏன் ஒரே ஒரு பரிந்துரை என்பது மட்டும் புரியவில்லை.நல்ல கட்டுரைகளை தமிழ்மணத்தில் நீண்டகாலம் தக்கவைக்க இந்த நட்சத்திரங்கள் உதவும்.எனவே சோம்பல் தவிர்க்க..

Aruna Srinivasan said...

உஷா, துபாய்லே சொந்த ஊர்ப்பாசம் ஒட்டிக்குமா என்று தெரியலே. இரண்டு தலைமுறையாக அந்தப் பக்கம் செட்டில் ஆனவங்க என் கண்ணில் படவில்லை இன்னும். - நீங்கள் விசா என்று சொல்வது நிரந்தர குடியிருக்க ( Permanent Resident) அனுமதிதானே? அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் போல், அங்கும் குடியுரிமைப் பெற்ற இரண்டோ அல்லது மேற்பட்ட தலைமுறையினர் இருக்காங்களா?

//போயஸ்கார்டனிலேயே
வீடு வாங்கிடலாம்// -

:-) :-)


தருமி, தீவு, நன்றி.

மதுமிதா said...

அருணா இப்ப எங்க இருக்கீங்க?
+ போட்டிருக்கிறேன்.

ஊர்ப்பாசங்கறது உசுரோடு கலந்ததுங்க.
\\\ஹ்ம்ம்.....இப்போதெல்லாம் இப்படிபட்ட நகைச்சுவையுணர்வுக்கே
" காணவில்லை" அறிவிப்புப் போட வேண்டியதாகிவிட்டது\\\

ஆமாங்க ஆமாம்

ஊரு விட்டு ஊரு வந்த கதை மட்டும் தான் இங்க நான் சொல்ல முடியும்.
தென்காசி,புளியங்குடி,அம்பாசமுத்திரம்,செங்கோட்டை,ஸ்ரீவில்லிபுத்தூர்,மதுரை,சென்னை,தமிழ்மணம்
எதுங்க என் ஊர்

தேசம் விட்டு தேசம் -னா
கேள்விப்பட்ட பல கதைங்க இருக்கு.

வேலைக்காக வெளிநாடு போறவங்கள விட்டு,
அகதியா புலம் பெயர்ந்து போறவங்கள நினைச்சா நம்ம நிலை எவ்வளவு மேல்.

பர்மா,இப்ப மியான்மார் லயிருந்து நடந்தே இங்க வந்தவங்க,இலங்கையிலிருந்து உலகம் பூராவும் போனவங்க....
போதுமடா சாமின்னு இருக்கு.

Go.Ganesh said...

அருணா மக்களின் மனதை பதிவு பிரதிபலிக்கிறது.
இப்படிக்கு
கோவில்பட்டி கோ.கணேஷ்

ramachandranusha said...

இல்லை அருணா. இங்கு குடியுரிமை பெற முடியாது. விட்டிருந்தால் கேரளமே இங்கு குடிபெயர்ந்திருக்கும். ஆனால் இப்பொழுது
அபார்ட்மெண்டட் வாங்கினால் விசா தருவதாய் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்திய சட்டம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் ஷாரூக், ஐஸ் போன்றோர்களும், பெரிய வியாபாரிகளை மட்டுமே ஈர்த்துள்ளது.
அதனால் இது நம் ஊர் இல்லை என்ற மந்திரத்தை பிள்ளைகளிடம் ஓதிக் கொண்டே இருப்போம். ஆனால் போன தலை முறையில் பலர் இங்கு வந்து குழந்தையும் பெற்று ஊர் பக்கமே போகாதவர்களும் உண்டு.. நம் ஊரை நினைப்பதும் இல்லை. அந்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் ஒரு அறுபது வயதுவரை ஓட்டலாம். பிறகு....?

துளசி கோபால் said...

தருமி,

அருணா சொன்னதேதான். நாம் மத்தவங்களை உடனே வீடுவரைக்கும் கூப்புட்டுக் கொண்டாடறதுபோல
வெள்ளைக்காரர்கள் கூப்புடறது இல்லை.

ஆனாலும் விதிவிலக்காவும் ஆட்கள் இருக்காங்க. எனக்கு இங்கே வெள்ளைக்காரநண்பர்களும் எக்கச்சக்கம்.
அவுங்க ஒரு பத்துமுறை நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனா நான் ஒருமுறை அங்கெ போவேன்.

என் மகளொட பாய்ஃப்ரண்டு ஒரு வெள்ளைக்காரந்தான். நண்பர்கள் கிடக்கட்டும், இப்ப வெள்ளைக்கார
சம்பந்திகளே கிடைச்சிருக்காங்க:-)

என்னோட மலேசியத்தோழியின் கணவர் ஒரு வெள்ளைக்காரர்தான். ஜோக் சொல்றதுலே மன்னன்.
நாங்க ரெண்டுபேரும் இருக்கற இடம் யானை புகுந்த வெங்கலக்கடைதான்!


ஆனா ஒரு பூஜை, மதசம்பந்தமான விசேஷம்ன்னா இந்தியர்களைத்தானே கூப்பிடமுடியும்.
அவுங்களுக்குத்தானே புரியும்.

இப்ப இருக்கற வீட்டுக்கு ரெண்டுபக்கமும் வெள்ளைக்காரக்குடும்பம்தான். வரப்போகத்தான் இருக்காங்க.

அருணா,

வாழ்த்துக்கள். இன்னிக்கு தினமலர்லெ நீங்க இருக்கீங்க.

பி.கு: எனக்கு இங்கே குடியுரிமை கிடைச்சு 15 வருசமாச்சு.

Aruna Srinivasan said...

மதுமிதா, சென்னை வந்து ஒரு மாதம் ஆச்சு :-) ஊரு விட்டு ஊரு வந்தாலும் நீங்கப் "புலம்" பெயர்ந்தவர் வரிசையிலே / திண்டாட்டத்துலே சேர வேண்டியதுதான் :-)

உஷா, விளக்கத்திற்கு மிக்க நன்றி.
//அதனால் இது நம் ஊர் இல்லை என்ற மந்திரத்தை பிள்ளைகளிடம் ஓதிக் கொண்டே இருப்போம். // இது யாதார்த்தம் :-)

கணேஷ், மிக்க நன்றி.

துளசி,

//இப்ப வெள்ளைக்கார
சம்பந்திகளே கிடைச்சிருக்காங்க:-)//

கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எப்போ திருமணம் செய்து வைக்கப்போகிறீங்க? அங்கேயேவா? இல்ல இங்க சென்னையிலா? நாங்க எல்லாம் கட்டாயம் வரணுமே? ! :-)