Sunday, October 30, 2005

தீபாவெடி??

டில்லியில் யார் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஸ்ரீகாந்த் தன் வலைப்பதிவில் பட்டியலிட்டுக் கூறியுள்ளதுபோல், காரணம் எதுவும் நிஜமாகவே தென்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் உறவு - பூமாதேவிக்கு நன்றி - இதைவிட சுமூகமாக இருக்க முடியாது. சொல்லப்போனால், பூகம்பத்தால் குலைந்து போன trenches ( போர் வீரர்கள் பதுங்கும் குழிகள்?) இவற்றை மீண்டும் கட்ட உதவி செய்யவும் இந்தியா முன்வந்தது. பாகிஸ்தானின் trenches உபயோகம், இந்தியாவுடன் போரிடுவதற்குதான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் !
இப்படி இரு நாடுகளுக்குமிடையே ஒரு அமைதி நிலவும்போது பாகிஸ்தான் தூண்டிவிட்ட காஷ்மீர் தீவிரவாதிகள் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புயல், பூகம்பம் என்று இயற்கைதான் சீற்றமாக இருக்கிறாள். அரசியல் மந்தமாகதானே இருக்கிறது? - ஈராக் எண்ணை விற்ற சமாசாரத்தில் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கிற்குப் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்லும் Volcker Report தவிர வேறு பெரிய அரசியல் நிகழ்வு எதுவும் இருக்கவில்லை.

டில்லியில் பல காரணங்கள் / ஊகங்கள் பேசிக்கொள்கிறார்கள். அவற்றில் ஓரளவு உண்மை இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், மொத்தத்தில் யாருக்கு இவ்வளவு கோபம் என்று இன்னும் திட்டவட்டமாகப் புரியவில்லை.

இத்தனை கோரமான சம்பவத்திலும் ஒருவரைக் கட்டாயம் பாராட்டத் தோன்றியது. கோவிந்தபுரியில் இருந்த அந்த டெல்லி டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவர். பயணிகள் உட்கார்ந்து பஸ் கிளம்பும் முன்பு ஆளில்லாமல் ஒரு பை பஸ்ஸில் கிடப்பதைக் கவனித்து எச்சரிக்கையடைந்து அவர் உடனே எல்லோரையும் கீழே இறங்க சொல்லிய அடுத்த சில வினாடிகளில் பஸ் வெடித்தது. டிவியில் பயணிகள் ஒவ்வொருவரும் நன்றியுடன் அந்தப் பஸ் டிரைவரைப் பற்றி பேசினார்கள்.

இருந்தாலும் டில்லி முதலமைச்சர் சொல்லியதுபோல், இது மிகவும் ஜாக்கிரதையாக முன்கூட்டியே திட்டமிட்ட செயல் - பண்டிகைக் காலம் - எல்லோரும் மும்முரமாக கடைகளைச் சுற்றும் சமயம் - அதுவும் சரோஜினி நகர், பஹார்கஞ்ச் என்று மத்தியதர மக்கள் அதிகம் வலம் வரும் சந்தைகளைக் குறிபார்த்துத் தாக்கியிருக்கிறார்கள்.

என்று விடுதலை ? - ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதத்திலிருந்து?

இதன் நடுவே நாளை மறு நாள் தீபாவளி. பல இல்லங்கள் புயலாலும், பூகம்பத்தாலும், குண்டு வெடிப்பினாலும் கலங்கியிருக்கும் இந்த வேளையில் மகிழ்ச்சியான தீபாவளி என்று சொல்லத் தோன்றவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒளிக் கீற்றுக்கள் நம் மனங்களில் ஒளிரட்டும். நம்பிக்கை வளரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

No comments: