Saturday, September 10, 2005

காற்றீனாவின் தொடரும் பின்விளைவுகள்.

ஒரு வழியாக 11 நாட்களுக்கு பின் முதல் பலியாடைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அமெரிக்காவின் FEMA ( Federal Emergency Management Agency) ( முதலில் இந்த இடத்தில் "முன்னாள் தலைவர்" என்று தவறுதலாக உபயோகித்திருந்த வார்த்தையை நீக்கியுள்ளேன். விளக்கம் - பின்னூட்டத்தில் ) நன்றி பெயரிலி.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களின் நேரடி வேலையிலிருந்து தூக்கி அவரைத் தலைமையகத்திற்கு, வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார்கள்.
ஆரம்பத்திலிருந்தே பல திசைகளிலிருந்தும் இவர் மீது எக்கச்சக்கமாக கணைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அதுவும் புயல் அடித்த முதல் இரண்டு நாள் நிவாரண வேலைகள் சரியாக ஆரம்பிக்கப்படாமல் இருந்த நிலையில், கன்வென்ஷன் செண்டரில் அடைக்கலம் புகுந்த மக்கள் திணறிக்கொண்டிருந்ததும் தனக்குத் தெரியாது என்று இவர் சொன்னது உச்சக்கட்டம். பத்திரிகைகள், டிவி, பொது மக்கள், என்று மொத்தமாக அனைவருக்கும் அதிர்ச்சி - என்ன சொல்கிறார் இவர் என்று. டிவியில், பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்கள் உதவி கிடைக்காமல் இந்த கன்வென்ஷன் செண்டரில் தவிப்பது எல்லாம் தொடர்ந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. இவர் என்னடாவென்றால், நிதானமாக தனக்குத் தெரியவேயில்லை என்று ஒரே போடாகப் போடுகிறாரே என்று எல்லா திசைகளிலிருந்தும் அதிர்ச்சிகள் வெளிப்பட்டன. ஒரு பத்தியாளர் எழுதினார் - இவருக்கு அப்படி டிவி செய்திப் பார்க்க நேரமில்லையென்றால் FEMA பணத்தில் டிவி பார்த்து இவருக்கு செய்திகள் சொல்வதற்கு என்றே பிரத்தியேகமாக இரண்டு ஆளையாவது போட்டுக்கொள்ள வேண்டியதுதானே என்று நக்கலாக.

அதே சமயம், எல்லா திசைகளிலிருந்தும் தவறுகள் இருந்திருக்கும்போது, யாரையாவது பலி கொடுத்தால்தான் மக்கள் ஓரளாவது சமாதானாமாவார்கள் என்றுதான் இவர் ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கியுள்ளார்களோ என்று தோன்றுகிறது. தவிர, புயல் அடித்த மறு நாள் புஷ் அந்தப் பகுதிகளில் பார்வையிட வந்தபோது தன்னிடம் நிவாரணப் பணிகளின் நிலையை விவரித்தபோது புஷ் இவரையும் மற்றவர்களையும் முதுகில் தட்டிக் கொடுத்து " நல்லா செய்யறீங்க" என்று பாராட்ட்விவிட்டுப் போனார். CNN ல் இந்த பிரௌண் அகற்றப்பட்ட செய்தியை ஒலி பரப்பி, அங்கே பாதிக்கப்பட்டப் பகுதியில் மக்களிடம் அதுபற்றி கருத்தும் கேட்டனர். நல்ல காரியம்; இப்போதாவது செய்தார்களே என்ற ரீதியில் கருத்து கூறியவர்கள் உடனேயே நினைவு கூர்ந்தது சென்ற வார வருகையின் போது புஷ் இவர்களை வெகுவாகப் பாராட்டிவிட்டு சென்ற காட்சிதான். "அன்று பிரஸிடெண்ட் அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியபோது நாங்கள் இங்கே யாரிடம் போவது, உதவி எங்கே கிடைக்கும் என்று அல்லாடிக்கொண்டிருந்தோம்" என்றார். " பிரௌண் மேல் அநாவசியமாகப் பழி சொல்வதில் அநியாயமானது. காற்றீனா, அமெரிக்கா கண்டறியாத பெரும் அளவில் இயற்கையின் பாதிப்பு; ஏஜன்ஸிகள் முடிந்ததை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்" - என்ற ரீதியில் சில இடங்களிலிருந்து குரல்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பற்றி CNN நிருபர் கேட்டுவிட்டு, " இயற்கையின் சீற்றத்துக்கு ஒரு அதிகாரி எப்படி பொறுப்பாக முடியும்" என்றபோது கேட்கப்பட்டவருக்கு பெரும் கோபமே வந்துவிட்டது. "முதல் இரண்டு நாள் அவர்கள் யாருமே கண்ணில் படக்கூட இல்லை. என்ன வேலை செய்தார்கள் என்கிறீர்கள்". என்று ஒரு போடு போட்டார்.

பிரௌணக்கு நியூ ஆர்லின்ஸ் மக்கள் புயல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஊரை விட்டு வெளியேறாமல் தங்கியிருந்ததுதான் அவர்களின் இமாலயத் தவறு என்ற கருத்து இருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை. வெளியேற நினைத்தாலும் இரண்டு முக்கியத் தடைகள் இருந்தன என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒன்று வேகமாக வெளியேற முடியாமல் சாலைகளில் நெரிசல்; இரண்டு , பலருக்கு வாகனத்துக்கான பொருளாதர வசதி கிடையாது. இப்படிபட்டவர்களையும் எதிர்பார்த்துதானே திட்டங்கள் தயாராக இருந்திருக்க வேண்டும். அடிப்படைத் தயார் நிலையே இன்று கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவு தூரம் சிந்தித்திருக்க எங்கே வாய்ப்பு ?


குழப்பங்கள் காற்றீனா பாதிப்பில் மட்டும் இல்லை என்று தோன்றுகிறது. இயற்கையாலோ அல்லது தீவிரவாதத்தாலோ - அழிவு என்பது ஒருபக்கம் இருக்க, நிர்வாகத் தவறுகளும் சேதங்களை /பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்குகின்றன.

இன்றைய தினசரியில் ஈராக் போர், மற்றும் 9/11 தாக்குதல் இவைகளைப் பற்றி படித்த சில விஷயங்கள் இங்கேயுள்ள நிர்வாக அமைப்பில் ஓட்டைகள் உள்ளன என்று வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

முதல் செய்தி

- 9 /11 தாக்குதலில் மாட்டிக்கொண்டு இறந்த 343 தீயடைப்பு வீரர்களுக்கும் தாங்கள் பணியிலிருந்த வடக்குக் கட்டிடம் இன்னும் சற்று நேரத்தில் விழுந்துவிடும் என்று தெரியாமல் போனதாலேயே அவர்களால் தப்பிக்க முடியாமல் போயிற்று என்று தப்பிப்பிழைத்தவர்கள் விவரித்த அந்தக் கடைசி 29 நிமிடங்களின் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஒலி நாடாவின் மூலம் தெரிய வந்துள்ளது. தெற்குக் கட்டிடம் கீழே விழுந்த பின்னரும் அதைப் பற்றியோ அல்லது இன்னும் சற்று நேரத்தில் தாங்கள் இருக்கும் வடக்குக் கட்டிடமும் விழுந்து விடும் என்பது போன்ற செய்திகள் அவர்களைப் போய்ச் சேரவில்லை. 9/11 கமிஷனின் முன்புத் தாக்குதல் விவரங்களைப் பதிவு செய்த முன்னாள் நியூயார்க் மேயர் ருடால்ப் கிலானி சொன்னது, "மற்றவர்களைக் காப்பாற்றும் பணியில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் வெளியேற முடியவில்லை" என்பதாகும். இது உண்மையில் சரிதான் என்றாலும், ஒரு வேளை அந்த வீரர்களுக்கு, தெற்குக் கட்டிடம் விழுந்த விஷயமும், இன்னும் 29 நிமிடங்களில் தாங்கள் இருந்த கட்டிடமும் விழும் என்ற விவரமும் தெளிவாகத் தெரிந்திருந்தால் ஒரு வேளை உடனேயே வெளியேறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்களோ என்ற கேள்வி எழுகிறது.

இங்கே முக்கியமானத் தடங்கல் - செய்திப் பரிவர்த்தனை முறை சரியாக இல்லை. Communication failure. பிழைத்த வீரர் ஒருவர் குறிப்பாகத் தங்களிடமிருந்த தொடர்பு சாதனங்கள் சிறப்பானவை அல்ல என்கிற மாதிரி குறிப்பிட்டிருந்தார். இவர்களிடம் இன்னும் சக்தி வாய்ந்த தொடர்பு சாதனங்கள் இருந்திருந்தாலோ அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளப்பட்டிருந்தாலோ இவர்கள் பிழைத்திருப்பார்களோ?

இரண்டாவது செய்தி:

ஈராக், "பேரழிவு ஆயுதங்கள் திட்டம்" வைத்துள்ளது என்று கூறி விவரமாக ஐ. நா சபையில் தான் எடுத்துரைத்த ஆதாரங்கள் கடைசியில் மிகப்பெரிய பொய்யாகிவிட்டது - ஈராக்கிடம் அப்படி ஒரு திட்டமே இல்லாத நிலையில், என்று முன்னாள் Secretary of State - Colin Powell ஒரு தொலைக்காட்சி சானலின் பேட்டியில் ஏகமாக வருத்தப்பட்டுள்ளார். " என் வாழ்க்கையில் இது ஒரு அகலாதக் கரும்புள்ளியாகிவிட்டது " என்று கூறியுள்ளார். இதற்குக் காரணமாக இவர் பல முறை சுட்டுவது - Intelligence Failure. ஈராக்கின் " பேரழிவு ஆயுதங்கள் திட்டம்" பற்றி உளவு துறையினரிடம் இருந்த விவரங்களை ஒரு வாரம் கூடவே இருந்து அலசிய போவெல், உளவுத் துறையின் தலைமை அதிகாரியின் மீது ஏதும் குறை சொல்லவில்லை. ஆனால் இவர் கடைசியில் வருந்திக் கூறும் வரிகளில் அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இன்று உருவெடுத்துள்ள ஒரு போரின் ஆரம்பம் இருக்கிறது.

இந்த வரிகள் இன்று பெரும் இரைச்சலாகக் கேட்கிறது.

" என்னிடம் விவரிக்கப்பட்ட விவரங்கள் அத்தனையும் உண்மையல்ல; அவர்களுக்கு தகவல்கள் கொடுத்தவர்கள் அத்தனை நம்பகமானவர்கள் அல்ல; அவர்கள் சொல்வதை நம்புவது சரியல்ல என்று உணர்ந்த உளவுத் துறை அதிகாரிகள் சிலர் அன்று அங்கே இருந்தனர். ஆனால் அவர்கள் வாயைத் திறக்கவில்லை. அதுதான் என்ன மிகவும் ஆழமாக பாதித்தது." என்கிறார்.

உங்களை மட்டுமல்ல மிஸ்டர் போவெல். பல ஆயிரம் உயிர்களையும் கூட - அமெரிக்க வீரர்கள் மற்றும் ஈராக் மக்கள் / போர் வீரர்கள்.

ஆனாலும் ஈராக் மீது போர் தொடுத்ததில் இவருக்கு வருத்தமில்லையாம். " நல்ல வேளை; சதாம் தொலைந்தான்." என்கிறார்.

மொத்தத்தில், ஓட்டைகள் இங்கொன்றும் அங்கொன்றும் தெரிய ஆரம்பிக்கின்றன. அவை ஒன்று சேர்ந்து பெரிதாகிக் கப்பல் மூழ்காமல் சட்டென்று விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்.

2 comments:

-/பெயரிலி. said...

/அமெரிக்காவின் FEMA ( Federal Emergency Management Agency) முன்னாள் தலைவர் - மைக் பிரௌண். ஆமாம் "முன்னாள்" ஆகிவிட்டார்./
நியூ ஓர்லியன்ஸ் நிவாரண நடவடிக்கை(யின் தாமதம்) குறித்து முன்னால் தலையுருட்டப்பட்டிருக்கிறாரேயொழிய, FEMA இன் முன்னாள்_தலைவர் ஆகவில்லை.

Aruna Srinivasan said...

பெயரிலி,அது slip of the key board - என்று பின்னால் வரும்
// தூக்கி அவரைத் தலைமையகத்திற்கு, வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார்கள்.//

வார்த்தைகளில் புரிந்துபோயிருக்குமே? :-)