Saturday, August 20, 2005

தம்படிக் காசுப் பெயராத ஒரு "தொழில்"... :-)

ஒரு ஆங்கில வலைப்பதிவாளருக்கு டெல் கணினியில் ஏதோ பிரச்சனை. அந்த நிறுவனத்தின் நுகர்வோர் உதவி ஆட்கள் யாரும் சரியாக உதவுவதாகத் தெரியவில்லை. அவ்வளவுதான். தன் வலைப்பதிவில் அவர்களைப் போட்டுத் தாக்க, உடனேயே அவர் பதிவில் பின்னூட்டம் இட்டவர்களும் தங்கள் பதிவிலும் டெல் நிறுவனத்தைக் கிழி, கிழியென்று கிழிக்கத் தொடங்க, டெல் கம்பெனி தலையில் கைவைத்துக் கவலைப் பட ஆரம்பித்துவிட்டது. இந்த மாதிரி பதிவாளர்களின் தர்ம அடிதானா என்று தெரியாது, ஆனால், கடந்த புதன் கிழமையன்று, டெல் கணினிக்கு நுகர்வோர் திருப்தி மதிப்பீடு கணிசமாகக் குறைந்துள்ளது என்று மிச்சிகன் பல்கலைக்கழகம் வெளியிடும் சர்வே குறிப்பிட்டுள்ளது.

இப்படி பொதுவாக இங்கே சிலிகான் பள்ளத்தாக்கில்¢ருக்கும் நிர்வாகங்கள் பலவும் இன்று வலைப்பதிவுகளை எப்படியாவது புரிந்து கொள்ளவும் அங்கே என்னதான் நிகழ்கிறது என்று தெரிந்து கொள்ளவும் முயல்கிறார்கள். அதிலும், இவர்களுக்கு மிகப்பெரியப் புரியாத புதிர் என்னவென்றால், ஒரு தம்படிக் காசுப் பெயராத ஒரு "தொழில்" ( மாய்ந்து, மாய்ந்து அவரவர் நேரத்தையும் ஆர்வத்தையும் செலவழிக்கும் இதை வேறு எப்படி குறிப்பிடுவதாம்?!!) எப்படி பல ஆயிரம் பேரைக் கவர்ந்து இழுக்கிறது என்ற மாயைதான் ! பெரிய பெரிய நிறுவனங்கள் இதைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றன. காரணம் வேறொன்றுமில்லை. டெல் மாதிரி, தங்கள் நிறுவனம் தாக்கப்படும்போது தன் தரப்பு வாதங்களை ( சப்பைக்கட்டுக்களை) வைத்து சமன் செய்யவும், முள்ளை முள்ளால் எடுக்கிற கதையாக, தேவையானால் எதிர் தாக்குதல் நடத்தவும் தங்கள் நிறுவனத்தின் ஆதரவிலேயே வலைப்பதிவு தளம் தொடங்கித் தங்கள் ஊழியர்களையும் வலைப் பதிய அனுமதித்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாமோ என்ற யோசனைதான் இந்தப் பெரிய நிறுவனங்களின் வலைப்பதிவு ஆர்வத்திற்குக் காரணம்.

விளைவு? நேற்றும் இன்றும் சான்பிரான்ஸிஸ்கோவில், வலைப்பதிவாளர்களின் பெரிய உச்ச மாநாடு நடந்து கொண்டுள்ளது. பெரிய பெரிய தொழிலுலக வஸ்தாதுகளெல்லாம் 20, 21 வயது இளைஞர்களிடம் " கொஞ்சம் சொல்லிகொடுப்பா..." என்று தாடையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று "மெர்குரி நியூஸ்" தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இந்த மாநாட்டில் ஹீரோ, 21 வயதான Matt Mullenweg என்ற இளைஞர். வேர்ட் பிரஸ் உபயோகித்து நிறுவனங்களுக்குத் தோதாக வலைப்பதிவு உருவாக்கும் ஒரு புது மென்பொருள் சாதனம் செய்துள்ளார். மாநாட்டுக்கு வெளியேத் தன் புதிய சாதனத்தைப் பெருமையாக பறைசாற்றிக்கொண்டிருக்கும்போது அங்கே அரட்டையில் கலந்து கொள்ள Robert Scoble, என்ற இன்னொரு பதிவாளர் வந்து சேருகிறார். ``Scobleizer'' என்ற பதிவை எழுதும் இவர் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர். ஆனால் தன் நிறுவனத்தையும் விட்டு வைக்காமல் விமரிசனம் செய்கிறாராம் தன் பதிவில். இருந்தாலும் மைக்ரோசாப்ட் இவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்துள்ளது என்று குறிப்பிடும் முல்லன்வெக், "இவர் இப்படி உள்ளது உள்ளபடி எழுதுவதால் இவரது பதிவுக்கு ஒரு நம்பகத்தன்மை உள்ளது; அதோடல்லாமல் இவரது வெளிப்ப்டையான கருத்துக்களினாலும் இவரது நம்பகத்தன்மையினாலும் மைக்ரோசாப்டின் இமேஜும் உயர்ந்துள்ளது. முன்போல் நம்மால் மைக்ரோசாப்டை வெறுத்தொதுக்க இயலவில்லை." என்கிறார். நிறுவனங்களுக்கு வலைப்பதிவுகள் புது தற்காப்பு சாதனம் ! இன்னொரு பதிவாளர், வலைப்பதிவுகள் பிரமாதமான Public Relations சாதனம் என்கிறார். அடுத்து என்ன அவதாரமாகப் பதிவுகள் உருவெடுக்குமோ தெரியவில்லையே !!

3 comments:

Thangamani said...

//தம்படிக் காசுப் பெயராத ஒரு "தொழில்"//

Exactly!

Aruna Srinivasan said...

thanks for droping by Thangamani

மாதங்கி said...

நல்ல பதிவு

மாதங்கி

திசைகள் மின்னிதழைப் பார்க்கமுடிவதில்லையே