Tuesday, August 02, 2005

"தலைவலியும் காய்ச்சலும்...."

எல்லாப் பிரச்சனைகளுக்கும் " தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் " என்று சொல்வது மிகக் குழந்தைத் தனமாக தெரிந்தாலும் சில சமயம் அமெரிக்காவின் சமீபத்திய நாஸா / டிஸ்கவரி - முயற்சியிலும், ஈராக் போரிலும் சொதப்பிக் கொண்டிருக்கும் சொதப்பல்களைப் பார்த்தால் இப்படி நினைக்கதான் தோன்றுகிறது. இந்த இரு சமாசாரங்களிலும் உள்ளடங்கியிருக்கும் கோடிக்கணக்கான செலவினங்களை விடுங்கள். பணயமாக வைக்கப்பட்டிருக்கும் உயிர்கள்?

முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தால் இன்னும் அக்கறையாக செயல்படுவார்களோ?

ஈராக் போருக்கு முடிவு கட்ட ஒரு வழி, புஷ்ஷின் இரண்டு மகள்களையும் போருக்கு அனுப்புவதுதான் என்று இங்கே பாதி சீரியஸாகவும், பாதி கிண்டலாகவும் ஊடகங்களில் அலசப்படுகிறது.

கிண்டல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். CNN சில நாள் முன்பு ஒரு செய்தித் துணுக்கு ஒளிபரப்பியது. ஈராக்கில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கப் படைவீரர் எப்படி இரண்டு ஈராக்கி புரட்சிக்காரர்களின் துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிய அனுபவம் அப்படியே வீடியோவில் படமாக்கப்பட்டிருந்தது. புரட்சிக்காரர்கள் அந்த அமெரிக்க வீரரைக் குறிவைப்பதும், ஒருவர் மற்றொருவருக்கு "ம்... சுட்டுத்தள்ளு" என்று கூறி தைரியம் கொடுப்பதையும் படங்கள் தெளிவாக திரையில் தெரிய, செய்தித் தொகுப்பாளர் படிப்படியாக பிண்ணனியில் விவரித்துக் கொண்டிருந்தார். தப்பி வந்த அமெரிக்க வீரரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்கள் மகன் தப்பியதை விவரித்தனர். கிட்டதட்ட 5 நிமிடம் இந்தச் செய்தி காண்பிக்கப்பட்டது. ஈராக் போரில் சுமார் 1700 அமெரிக்க வீரர்கள் மாண்டதாக அவ்வப்போது வெளியாகும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே CNN. இன்னொரு செய்திக் குறிப்பு. ஈராக் போரில் சுமார் 25000 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படும் ஒரு ஆய்வு. இந்தச் செய்தி திரையில் வாசிக்கப்பட்ட நேரம் - சுமார் ஒரு நிமிடத்துள். அதுவும் படங்கள் எதுவும் கிடையாது. போகிற போக்கில் வாசிக்கப்பட்டது.

இதன் நடுவே புஷ், ஆஸ்திரிலேயா பிரதமருடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறுவதும் அதே நாள் ஒளிபரப்பாகியது.

"..... இது ஒரு போர். போரில் வெல்லும் வரை போர் நிற்காது."

which victory you are talking about Mr. President? over a ghost town ? என்று கேட்கத் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், நாஸா சொதப்பல்கள்.

நேற்று நியூயார்க் டைம்ஸில், டிஸ்கவரியின் பிரச்சனைகளையும், பலவித ஆபத்துக்களைக் கணக்கில் எடுக்காமல் முடிவுகள் எப்படியெடுக்கப்பட்டன என்று விவரமாக உள்ள இந்தச் செய்தியைப் படிக்கும்போது - ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் - வயிற்றில் பகீரென்று இருந்தது / இருக்கிறது. இந்த விண்கலத்திலிருந்து பிய்ந்து தூக்கியெறியப்பட்ட ஒரு நுரைப்பொதியும் ( Foam ) அதனால் கலத்தின் அடிப்பக்கத்தில் ஏற்பட்ட இடைவெளியும் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் தெளிவாகவில்லை. இப்போது கலத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் விண்வெளியிலேயே அந்த இடத்தை ரிப்பேர் செய்ய முனைகிறார்கள்.

இந்தச் செய்தியின்படி, டிஸ்கவரியின் முன்னேற்பாடுகளில், இந்தப் பிரச்ச்னை - பறக்கும் வேகத்தில் ஒரு நுரைத் துண்டு பிய்ந்து போகும் பிரச்சனை - ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லையாம். அப்படியே விழுந்தாலும், இந்த நிகழ்வால் 2003 ஆம் ஆண்டு சிதறி விழுந்த - இதேப் பிரச்சனையால் சிதறி விழுந்த - கொலம்பியாவின் நிலை டிஸ்கவரிக்கு ஏற்படும் சாத்தியக் கூறுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன - reduced to "acceptable levels" - என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

"acceptable levels" ?? என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எனக்கு விஞ்ஞான ரீதியாக / தொழில் நுட்ப ரீதியாக புரியாமல் இருக்கலாம். ஆனால் மனிதாபிமான ரீதியில் சிந்திக்கும்போது, ஒருவித மிகையான தன்னம்பிக்கையுடன் எதையோ அவசியமில்லாத சுய பிம்பத்தை நிலை நாட்டவதற்காக அக்கறையும் நிதானமும் காட்ட வேண்டிய விஷயங்களில் கோட்டை விட்டு, பல உயிர்களுடன் விளையாடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது, இந்த விண்கல ஏற்பாட்டின் தலைவர், பில் பார்ஸன்ஸ், இப்படி ஒரு "பிரமாதமான" ஸ்டேட்மெண்டை சொல்லியுள்ளார். " You have to admit when you're wrong. We were wrong. We're telling you right now, it should not have come off." !!
பிய்ந்தத் துண்டு இன்னும் ஒரு நிமிடம் முன்னாடி விழுந்திருந்தால் கொலம்பியாவின் கதிதான் ஆகியிருக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படி இப்படி ஒரு கவனமின்மை நுழைந்தது? பல வருடங்களாகவே நிறைய விஷயங்களில்போதிய கவனம் செல்லவில்லை என்கிறது இந்தச் செய்தி. "போகிற வரைப் போகட்டும்" என்ற மனோபாவத்தில், " இதுவரைப் பழுதாகாவிட்டால் நோண்டிப்பார்க்க வேண்டாம்; அப்படியே விட்டுவிடு" என்ற ரீதியில் விடப்பட்டுள்ளது என்று இந்தச் செய்தி கூறுகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால் கொலம்பியா சிதறலுக்குக் காரணத்தை ஆராய்ந்த குழு, நாஸாவின் கவனக்குறைவும், அக்கறையின்மையும்தான் காரணம் என்று கூறியபின், வேறொரு குழு அமைக்கப்பட்டு நாஸாவின் வாதங்கள் சரிதான் - இந்த ·போர்ம் பிரச்சனையைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் - என்ற வாதம் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டது.

இப்படியெல்லாம் யோசனை செய்யும்போதே, பொதுவாக சின்ன விஷயங்களைக் கூட அக்கறையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுவது போன்ற ஒரு நிர்வாக அமைப்பு உள்ளவர்கள், இப்படிபட்ட ராக்ஷஸ சைஸ் வேலையில் அலட்சியமாக இருப்பார்களா என்று மனசில் ஒரு கீற்று சந்தேகம் வந்துதான் போகிறது. ஆனாலும் நடப்பதைப் பார்த்தால் ஆச்சரியமும், ஆதங்கமும், கோபமும் ஒன்றாக ஒரு கலவை மனசுக்குள் உருவாகிறது. விண்கலத்தில் இருக்கும் "பயணிகளின்" குடும்பங்கள் இந்தச் செய்தியெல்லாம் படித்து எப்படி உணருவார்கள்?

3 comments:

பத்மா அர்விந்த் said...

challenger 1986இல் வெடித்து சிதற அவற்றின் O வளையத்தின் கசிவு காரணம் என்றும், தட்ப வெப்ப நிலை சாதகமாக இல்லை, கசிவு ஏற்படக்கூடும் என்று சொன்னதையும் மீறி வெளியிட்டதும் உண்டு.வெடித்து சிதறி இறந்தவர்களுக்கு யார் பொறுப்பு? இது போல எல்லா நாடுகளிலும் சில உயிர்கள் விலைமதிக்க முடியாததாகவும் சில உயிர்கள் மதிக்கப்படாமலும் இருக்கிறது. என்ன தீர்ப்பு என்றுதான் தெரியவில்லை.

Aruna Srinivasan said...

நன்றி பத்மா.

Aruna Srinivasan said...

ஒரு வழியாக அந்தப்படத்தை இந்த வார இறுதியில் பார்த்துவிட்டேன் பிரசன்னா :-) அதைப் பார்த்தப்புறம் டிஸ்கவரி ஒழுங்கா தரைக்கு வந்து சேரவேண்டுமே என்று கவலை இன்னும் ஜாஸ்தியாகி, இன்று நல்லபடியாக அது வந்துவிட்டது என்று தெரிந்தபின்தான் நிம்மதி. :-) அபோலோ 13 ன் நிகழ்ச்சி நடந்தபோது அன்று செய்தியாக மாட்டுமே இருந்தது. நீங்கள் படம் பற்றி சொன்ன பிறகு நிஜம் அப்போலோ 13 ன் சரித்திரத்தையும் இணையத்தில் படித்தேன் - particulaalry verbatim transcripts. படத்தையும் அப்படியே முழுக்க நிஜத்தின் நகலாகவே எடுத்திருக்கிறார்கள்.