Thursday, July 28, 2005

ஐந்து டாலரில் ஒரு புன்சிரிப்பு

சில சமயம் சாதாரணமான உரையாடல்கள் கூட சட்டென்று ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இங்கே உள்ளூர் செய்தித்தாளில் ஒரு செய்தி. ஹரித்துவாரில் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவ இங்கிருந்து மூன்று இளைஞர்கள் போகிறார்கள்.

இவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களோடு பகிர்ந்து கொள்ளப்போக இப்போது அந்த அனாதை ஆசிரமக் குழந்தைகளுக்கு அமெரிக்காவிலிருந்து உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்களை இப்படி நெகிழச்செய்தது அந்த உறவினர் சொன்ன விவரங்கள். "குழந்தைகள் இருக்கும் அனாதை ஆஸ்ரமம் என்றவுடன் அங்கே ஒரே சத்தமும். கலாட்டாவாக இருக்கும் என்று உள்ளே நுழைந்த எனக்கு அங்கே இருந்த அமைதியும், குழந்தைகளின் வெறிச்சென்ற பார்வையும் உலுக்கின.." என்று அவர் இவர்களிடம் தன் அனுபவத்தைச் சொன்னது இவர்களை இந்தப் பயணத்துக்கு டிக்கெட் வாங்க வைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் அவர்கள் தோழி ஒருவருமாக மூன்று பேர் அடங்கிய குழு இது.

அந்த அனாதைக் குழந்தைகளைப் பற்றி கேள்விபட்டவுடன் ஏதோ பணம், பொருள் என்று கொடுத்து தங்கள் இரக்கத்தை இவர்கள் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஒரு படி மேலே போய், அந்தக் குழந்தைகளைச் சந்தித்துப் பழகி, தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும், அவர்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து ஆர்வமாகக் கிளம்பும் இவர்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. " பொதுவாக விடுமுரையில் இந்தியா செல்லும்போது நகரங்களையும், உறவினர் நண்பர்களையும் பார்ப்பதோடு நின்றுவிடுவதால் இப்படி இன்னொரு இந்தியா இருப்பதை நாங்கள் உணராமலே இருந்திருக்கிறோம்" என்கிறார்கள் இவர்கள்.

அதோடில்லை. தங்கள் பயணத்துகும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கும் ஆக சேர்த்துத் தேவையான நிதியை அக்கம் பக்கம் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடமிருந்து திரட்டியுள்ளனர். " எந்தவித நிறுவன ஆதரவும் இல்லாமல் நாங்கள் தனியாக நிதி திரட்டுவது சற்று கடினமாகதான் இருந்தது." என்றும் இவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பாவம், இவர்கள் இப்படி தங்கள் கோடை விடுமுறையை இபப்டி ஒரு சேவையில் செலவழிப்பதையும் சில நண்பர்களும், உறவினர்களும் " ஆகா, உங்கள் மேல் படிப்புக்கு அப்ப்ளிகேஷன் போடும்போது உங்களைப் பற்றிய கட்டுரையில் இந்த மாதிரி சேவைகள் எல்லாம் கொஞ்சம் நிறையவே மதிப்பைக் கூட்டும்" என்ற ரீதியில் இவர்களின் உன்னத நோக்கத்திற்கு ஒரு சுய நலப் பூச்சுக் கொடுத்துப் பேசியது இவர்களுக்கு வருத்தம்.

ஆனால் இந்தச் செய்தியில் என்னை யோசிக்க வைத்த விஷயம் - இவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு எடுத்துப் போகும் சாமான்கள் - பிரஷ், சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், வகையறா ! இதையெல்லாம் இந்த இளைஞர்கள் இந்தியாவிலேயே வாங்கிக்கொள்ளக் கூடாதோ? அதிலும், இந்தச் செய்தியில், மூன்று பேரில் ஒருவர் பல்விளக்கும் பிரஷ்களை அழகாக அடுக்குவது பெரிய படமாக க்ளோசபில் பிரசுரித்துள்ளது, பார்க்க என்னவோ போல் இருக்கிறது. இந்த இளைஞர்களின் நோக்கமே என்னவோ இந்தப் பொருட்களை வினியோக்க செல்வதுதான் என்பதுபோல் இதென்ன focus?
இந்தச் செய்தியைப் படிக்கையில் ஆங்கில எழுத்தாளரும், ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அதிகாரியுமான சஷி தாரூர் எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

The Five Dollar Smile என்ற அந்தக் கதை, அமெரிக்காவில் இருக்கும் தன் "தத்து" பெற்றோர்கள் அழைப்பின் பேரில் முதன் முதல் விமானத்தில் பயணப்படும் ஒரு அனாதைச் சிறுவனின் மன ஓட்டம்தான் கதை. எல்லாமேப் புதுசாகத் தெரியும் அந்த அனுபவத்தில், விமானத்தில் உட்கார்ந்து தன் கோட் பாக்கெட்டிலிருந்து ( ஏதோ ஒரு நிவாரணக் கொடைகளில் வந்த கோட். கொஞ்சம் பெரிய சைஸ். ஆனாலும் ஸ்மார்டாகதான் இருந்தது. " நீ ஏழையாக இருக்கலாம் ஜோஸப். ஆனால் ஸ்மார்டாகத் தெரியணும். நாங்கள் உன்னை நன்றாகதான் வளர்த்திருக்கிறோம் என்று அவர்களுக்குப் புரிய வேண்டும்" என்று சிலின் ஸிஸ்டர் சொல்லியிருந்தார், அந்த உடையை அணிவிக்கும்போது.) அந்த விளம்பரம் உள்ளச் சிறுத் துணுக்குப்பேப்பரை நூறாவது தடவை எடுத்துப் பார்த்தான்.

" Make this child smile again. All it takes is five dollars a month".

அந்தப் புகைப்படம் எடுத்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவனுக்கு அப்போது ஏழு வயது. அதையும் அன்றுதான் தெரிந்து கொண்டான். அவனுக்கு நல்ல பசி அன்று. "இவனுக்கு எவ்வளவு வயதிருக்கும்? காமிராவைக் கிளிக்கிக்கொண்டே அந்த ஆள் கேட்டுக் கொண்டிருந்தார். " ஏழுதானா? எதுவானாலும் பரவாயில்லை. எனக்குத் தேவையான சரியான முகம் இவன்தான். ஸிஸ்டர், கொஞ்சம் அந்த சாப்பாட்டுத் தட்டை அவனிடமிருந்து நகர்த்தி வையுங்களேன். நமக்கு வேண்டியது பசியால் வாடிய முகம் ஒன்று. நன்றாக சாப்பிடும் ஒன்றல்ல." சட்டென்று ஒரு கை அவனை சாப்பாடு மேஜையிலிருந்து அகற்றியது. " நீ இங்கே வா ஜோசப். இந்தப் பெரிய மனிதர் உன்னைப் பார்க்க வேண்டும் என்கிறார். ' எனக்குப் பசிக்கிறது ஸிஸ்டர்.' நேரம் ஆனால் சாப்பாடு தீர்ந்து போய்விடுமே என்ற கவலை அவனுக்கு. அதுவும் இன்று கஞ்சியுடன் மொறு மொறுவென்று அப்பளம் வேறு. சமையலறைப் பக்கம் போகும்போது கவனித்திருந்தான்......."
இப்படி நெகிழ்வாக ஆரம்பிக்கும் கதையில் ஒரு அனாதைச் சிறுவனின் உணர்வுகள் தத்ரூபமாக வெளியாகியுள்ளது. விமானத்தின் சாப்பாடு, சொகுசு, எதிரே சீட்டில் சினிமா, என்று எல்லாவற்றிலும் அவனது குழப்பமும் மிரட்சியும். தன் பாகெட்டிலிருந்து இன்னொரு புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு அவனது "வீடு". படம் பள பளவென்று இருந்தது. அதில் இருந்தது அவனது தற்காலிக "அம்மாவும்" அப்பாவும்". அவனுக்கு டிக்கெட்டை அனுப்பிவிட்டு இந்தப் புகைப்படத்தையும் அனுப்பினார்கள். விமான நிலையத்தில் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள வசதியாக. ஆனால் இவன் புகைப்படத்தை அவர்கள் கேட்கவில்லை. " அவனை எங்களுக்கு நிச்சயம் பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அவனை ரொம்ப நாள் தெரியும் போல் எங்களுக்கு ஒரு உணர்வு" என்று அந்த "அம்மா" கடிதத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஜோசப்புக்கு பெருமிதம். ஆனால் ஒரு நாள் அவன் ஏதோ தவறு செய்யப்போக, ஸிஸ்டர் கோபமாக, " உனக்கு பதிலாக அமெரிக்காவுக்கு வேறு ஒருத்தனை அனுப்பிவிடுவோம். அவர்களுக்கு வித்தியாசம் தெரியும் என்றா நினைக்கிறாய்? ஜாக்கிரதை." என்று சொல்லியபோதுதான் தன் உண்மை நிலை உறைத்தது.

இன்று விமானத்தில் அந்தப் பள பள போட்டோவையும் தன் மங்கிய விளம்பரப் போட்டோவையும் அருகருகில் பார்த்தபோது ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. சட்டென்று சொல்ல முடியாத ஒரு சோகம் வந்து உட்கார்ந்துகொண்டது. அன்று கஞ்சி கிடைக்காமல் போனதை விட அதிகமான சோகம். எங்கேயோ தனியாக, பழையப் பத்திரிகை விளம்பர போட்டோவுக்கும், அந்தப் பள பள புகைப்படத்திற்கும் இடையில் புதைந்து காணாமல் போன மாதிரி..........."

என்னைப் பாதித்த கதைகளில் ஒன்று இது. நல்ல நோக்கங்கள் பலதுக்கும் இடையே அவ்வப்போது செயற்கையாக, வறுமையையும் பரிதாபத்தையும், ஏதோ ஒரு ஆதாயத்துக்காக மிகைப்படுத்தலும் இருக்கிறதோ? பல சமயங்களில் விருது பெறும் புகைப்படம் என்று ஈ மொய்க்கும் வெற்று உடம்புடன் தொப்பை தள்ளியக் குழந்தையின் புகைப்படத்தையும், வேறு ஏதோ வகையில் சோகத்தைப் பிரதிபலிக்கும் படங்களையும் பார்க்கும்போது இப்படித் தோன்றும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் விளக்கும் என்பது உண்மை. ஆனால் வறுமையையும் சோகத்தையும் ஆதாய நோக்கில் பார்ப்பதும் ஒரு வழக்கமாகிப் போகிறதோ என்று கவலை எழுகிறது.

அந்தக் கதையில் வரும் சிறுவனுக்கு ஒரு மாதம் அமெரிக்கா செல்வதில் என்ன பாதிப்பு இருக்கும்? இன்றைய செய்தியில் உள்ள இளைஞர்கள் ஒரு சில நாள் அனாதை ஆசிரமத்தில் தங்குவதும், அவர்களுக்குத் தற்காலிகமாக நாகரிக வாழ்க்கையின் சாதனங்களை உபயோகிக்க கொடுப்பதிலும் என்ன விதமான மாற்றங்களைக் கொடுக்கும்? அந்தப் பிரஷ¤ம், கிரீமும் தீர்ந்துபோனபின் அந்தக் குழந்தைகளின் கவலை மறுபடி கஞ்சியிலும் அப்பளத்திலும்தானே திரும்பும் ? இதற்குப் பதிலாக அவர்கள் வாழ்க்கை முறையில் நெடுங்காலப்பலன் அளிக்கும் வகையில் உதவுவது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ?

4 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

என்னைப் பொறுத்தவரையில் இச்சிறார்களுக்குப் பணமோ, "பார்! உனக்காக என் வேலையெல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறேன்.." என்கிற பெருமையடிப்புகளோ இல்லாத உண்மையான கரிசனமே தேவை.

தொலைக்காட்சியில் விளம்பரத்தில் காணும் வயிறு உப்பின ஆபிரிக்கக் குழந்தைக்கு ஒரு மாத உணவுக்காய் ஒரு தரம் 10 டொலர் கொடுத்து விட்டு, உலகத்தையே பசியின் பிடியிலிருந்து மீட்டது போன்று தம் செயலைப் பறைசாற்றுபவர்களைக் காட்டிலும் இந்த இளைஞர்கள் செய்வது பரவாயில்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது போல் தூரிகையும் களிம்பும் முடிந்த பின் கஞ்சிதான் எஞ்சும். இதை விட இருக்குமிடத்திலிருந்து கொண்டே சத்தமில்லாமல் தொடர்ந்து உதவி வழங்குதல் நலம்.

வீ. எம் said...

பிரஷ¤ம், கிரீமும் தீர்ந்துபோனபின் அந்தக் குழந்தைகளின் கவலை மறுபடி கஞ்சியிலும் அப்பளத்திலும்தானே திரும்பும் ? இதற்குப் பதிலாக அவர்கள் வாழ்க்கை முறையில் நெடுங்காலப்பலன் அளிக்கும் வகையில் உதவுவது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ?

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அருணா! பலரும் ஏதோ ஒரு நாள் சென்று அவர்களுடன் இருந்து விட்டு வருவதையே பெரிய விஷயமாக நினைத்துக்கொள்கிறார்கள்.. !அதை விடுத்து ..ஒரு குழந்தைக்கான மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்ளலாம், குறைந்தது ஒரு 5 வருடமாவது

ஒரு சின்ன கோரிக்கை : அனாதை என்ற வார்த்தைக்கு பதில் ஆதரவற்றவர்கள் என்று சொல்லாமே !

வீ எம்

Ramya Nageswaran said...

அன்புள்ள அருணா, நீங்கள் சொல்லியுள்ள சஷி தாரூரின் கதையை படிக்க ஆர்வமாக இருக்கிறது.

CRYஐ பொறுத்த வரை ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு குழந்தக்கான படிப்பு செலவு மற்றும் உடல் நல செலவை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எந்த குழந்தை நம்மால் பயன் பெறுகிறது என்பதற்கான photo போன்ற விஷயங்களை எல்லாம் அனுப்பமாட்டார்கள். பொதுவாக எவ்வளவு குழந்தைகள் பயன் அடைந்தார்கள் என்று தான் சொல்வார்கள். இதற்கான காரணத்தை கேட்டேன். "ஒரு குழந்தைக்கு படிப்பும், சுகாதாரமான சூழ்நிலையும், அடிப்படை உடல் நலமும் fundamental rights. As a nation, society, நாம இதைக் கொடுக்க தவறிட்டோம். அந்த தவற்றை சரி பண்ணுகிறோம். அப்படி இருக்கும் பொழுது why should that child feel obligated to send you his/her photo, progress report?" என்று கேட்டார்கள். நியாயம் தானே?

Aruna Srinivasan said...

ஷ்ரேயா, வீ.எம், ரம்யா, பிரசன்னா, உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். நன்றி.
ரம்யா, CRY ன் அணுகுமுறை மிகச் சரியானது; ஆரோக்கியமானதும்கூட.
வீ.எம்., அனாதை என்பதற்கு நீங்கள் சொல்லும் "ஆதரவற்றவர்கள்" என்ற வார்த்தையை நான் உபயோகித்து இருக்கலாம்.