Friday, July 15, 2005

அமெரிக்க ஊடகங்களில் மன் மோஹன் சிங் ?

இந்தியாவிலிருந்து வரும் தலைவர்கள் அமெரிக்காவில் பெரிதாக செய்திகளில் இடம் பெற மாட்டார்கள். ( பொதுவாகவே தங்கள் சுற்றம் / ஊர் இவைத் தவிர அக்கம்பக்கம் என்ன நடந்தாலும் even if something happens under their nose - தங்களுக்கு நேரடியாக தொடர்பு இல்லாத விஷயங்களை உள்ளூர் ஊடகங்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே? )

நடுவே சந்திரசேகர், நரசிம்ம ராவ், வாஜ்பாய் என்று இந்தியப் பிரதமர்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும் 8ம் பக்கத்தில் ஒரு மூலையில் in brief செய்தியில் இடம் பெறலாம். வாஜ்பாய் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், கேள்விகள் முன்னமேயே தெரிவிக்கப்பட்டு -பதில்கள் தயார் செய்துகொண்டு வந்தது இங்கே அவ்வளவாக எடுபடவில்லை, சப்பென்று போய்விட்டது என்று பத்திரிகையாளர்கள் அபிப்பிராயப்பட்டனர் என்கிறார்கள்.

தவிரவும் வாஜ்பாயின் பேச்சுத் திறமை இந்தியர்களைக் கவர்ந்த மாதிரி மற்றவர்களைக் கவரவில்லை போலும். அல்லது அவர் அவ்வப்போது ஒரு effect க்காக ஒவ்வொரு வரிக்கும் நடுவேமிடைவெளி கொடுப்பது மற்றவர்களுக்கு புரியவில்லையாயிருக்கும். ( அவர் பேசும்போது கையாளும் இந்த நீ..............ண்ட இடைவெளியை "சற்று இடைவேளைக்குப் பிறகு....." என்று நாமே கிண்டலடிப்போமே :-) )

குஜ்ராலின் பேச்சில் பாதி காற்று ஆக்ரமித்துக்கொள்ளும். இதெல்லாம் நாம் நமக்குள்ளே நம் தலைவர்களை சும்மா அன்போடு (!!) கிண்டல் செய்யலாம். ஆனால் வெளி நாடுகளில் நம் தலைவர்களுக்கு / பிரதமர்களுக்குச் சரியான கவனம் தரப்படாவிட்டால் கோபம் வராதா? அதுவும் பாகிஸ்தானின் முன்னாள் / இந்நாள் தலைவர்களெல்லாம் பிரமாதமாக ஊடகங்களில் இடம் பெறும்போது? ( சரி..சரி.... இஸ்லாமாபாதும், டில்லியும் வாஷிங்டனுக்கு வேறு வேறு தூரத்தில் இருக்கின்றன என்பது தெரிந்ததுதானே?)


ஆனால் இந்த வார இறுதியில் இங்கே வரும் மன்மோஹன் சிங் சற்று அழுத்தமாகவே ஊடகங்களில் இடம் பெறுவார் என்று Telegraph செய்தியொன்று கூறுகிறது. அடுத்த புதனன்று அவரது நிகழ்ச்சி நிரலில் வரிசையாக ஊடகங்கள் சந்திப்பு இருக்கிறதாம். காலையில் வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழுவுடன் சந்திப்பு - பிரதம நிருபர்கள்/ பத்தியாளர்கள் உள்பட, பிறகு பொதுவாக பிரஸ் மீட், அப்புறம் CNN பேட்டி. Fox சானலும் நேரம் கேட்டிருக்கிறதாம்.

என்ன திடீரென்று இந்தியா பக்கம் கவனம் அமெரிக்க ஊடகங்களுக்கு? மன் மோஹன் சிங் என்ற மனிதர் மேலுள்ள சுவாரசியமா, அல்லது புதிதாக இந்தியா பற்றி ஏதோ ஞானோதயம் ஏற்பட்டுள்ளதா? தெரியவில்லை. அடுத்த வாரம் வரட்டும் - பார்க்கலாம். அப்படி என்ன அலசுகிறார்கள் என்று.

ஆனால் நம் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள். அமெரிக்கா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்த war on terror அவர்கள் வீட்டில்/ அவர்கள் நண்பர்கள் வீட்டில் எப்படி கடும் விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று ஒரு வார்த்தை அழுத்தமாகப் பேசிவிட்டு போவாரா?

4 comments:

Yagna said...

சரியா சொன்னீங்க. இந்த தடவை மன் மோஹன் கண்டிப்பா கலக்குவார்னு நினைக்கிறேன். G8-கூட்டம் முடிந்தபிறகு தெளிவாக அதிருப்தியை வெளிப்படுத்தினாரே. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சரியா சொன்னிங்க.. பொருத்து இருந்து பார்ப்போம்

இராதாகிருஷ்ணன் said...

//இந்தியாவிலிருந்து வரும் தலைவர்கள் அமெரிக்காவில் பெரிதாக செய்திகளில் இடம் பெற மாட்டார்கள்.// பெரும்பாலான நாடுகளில் நிலைமை இப்படித்தானோ? சமீபத்தில் குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணமாக இங்கு (ஸ்விஸ்) வந்திருந்தார். அதைப் பற்றி பெரிய அளவில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

Aruna Srinivasan said...

யக்ஞா, கங்கா, இராதாகிருஷ்ணன், கருத்துக்களுக்கு நன்றி. இப்போதைக்கு இவர்களுக்கு நம் மேல் இரண்டு விஷயத்தில் காய்ச்சல். ஒன்று 1998ல் நாம் சோதித்த அணு. இதுவும் அரசியல் தலைவர்கள் அளவில்தான். இரண்டாவதாக ஏற்பட்ட மாற்றம் உள்ளூர் வேலைவாய்ப்பில் விழுந்த அடி. சமூக அளவில் graasroot மக்கள் மத்தியில் இது பாதிப்பதால், இந்தியா என்ற நாடு திடீரென்று பூதமாக எழுந்துள்ளது என்று உணருகிறார்கள்.இந்தியா உலக அரங்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நாம் கனவு காணவில்லையானாலும் அமெரிக்கா கவனிக்க ஆரம்பித்தால் மற்றவர்களும் எழுந்து உட்கார்ந்து கவனிக்கத் தொடங்குவார்கள்.

உலக நாடுகள் கவனம் முழுவதுமாக நம் பக்கம் திரும்பும்போது we should be able to deliever the expectations. அதற்கு நம் வரையில் ஓரளவு வாழ்க்கைத்தரம் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.