Thursday, June 30, 2005

"புஷ்ஷிஸம்" !!

நேற்று புஷ் பேசுவதை டிவியில் பார்க்கும்போது ஒன்று நிச்சயம் புரிந்தது. அவருக்குப் பொய் பேசத் தெரியவில்லை.

ஆமாம். செப்டம்பர் பதினொன்று நிகழ்வுக்கு பழி என்று தொடங்கப்பட்ட ஈராக் போர் அதர்மமானது என்று புரிந்தும், அது இன்று எங்கேயோ போய்க்கொண்டிருப்பது தெரிந்தும், தன் நிலையை எப்படியாவது நியாயப்படுத்துவதற்காக மறுபடி இன்றையப் பேச்சில் பல முறை இந்த செப்டம்பர் 11 என்ற அஸ்திர வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவரே நம்பவில்லை என்பதுபோல்தான் அவரது முகபாவம் இருந்தது. He never sounded so unconvincing or unsure of himself ever before - பலமுறை அழுத்தி உணர்ச்சிப் பூர்வமாகப் பேச "முயன்றதை" எளிதாக நம்மால் உணர முடிந்தது.

பேச்சு முடிந்ததும் டிவியில் ஜால்ரா ஓசை நிறையவே கேட்டது. சொல்லிவைத்தாற்போல் பலர்- குறிப்பாக ஈராக்கில் இருக்கும் போர்வீரர்களின் மனைவி, குடும்பங்கள் - புஷ் சொல்வது ரொம்ப சரி என்றனர். ஒரு பெண், ஒரு தந்தை சொல்வதுபோல் புஷ் சொல்கிறார் என்றார். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு இருக்கும் தன் கணவனின் போட்டோவை ஒரு பெண் காண்பித்தார். இவர்களுக்கெல்லாம் புஷ் வேறு எப்படி சொல்லி தன் செயலை நியாயப்படுத்தமுடியும்? அதான் "செப்டம்பர் 11" வரப்பிரசாதம் போல் இருக்கே? ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி "ராப்பிச்சை" / பூம் பூம் மாடு என்று பயம் காட்டிக் கொண்டு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துக் கொண்டிருப்பார்? தெரியவில்லை. பல டிவி தொகுப்பாளர்களுக்கும் இது ஒரு உறுத்தலாகத் தெரிந்தது. இதென்ன இப்படி செப்டம்பர் 11 ஐ தொடர்பு சொல்லி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு சங்கடத்தை வெளியிட்டனர்.

புஷ் பேச்சைப் பற்றி யார் யார் என்ன சொன்னார்கள் என்று இணையத்தில் இன்று ஒரு ரவுண்ட் வரும்போது கிடைத்ததில் குறிப்பிடத்தகுந்த சில தளங்கள் கிடைத்தன.

அதிலும் துணை ஜனாதிபதி "இதோ ஈராக் போர் கடைசி நாட்களில் இருக்கிறது என்று ஒரு புறமும், அமெரிக்கப் படைத் தளபதியோ இந்தப் போர் இன்னும் 12 வருஷம் நீடிக்ககூடியது என்றும் ஒருவருக்கொருவர் முரணாக கூறிகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் புஷ் எழுந்து நின்று ஒரு "Status Quo" பேச்சு கொடுத்ததில் சலசலப்பும் விமர்சனமும் இன்னும் நிறையவே அதிகரித்துள்ளது என்று தோன்றுகிறது.

இருந்தாலும் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்க இதோ இங்கே கொஞ்சம் "புஷ்ஷிஸம்" மற்றும் "புஷ் ஸ்பீக்". இங்கே புஷ் க்விஸ் -( Quiz) கூட உண்டு :-)

4 comments:

இராதாகிருஷ்ணன் said...

அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக ஈராக் போர் என்று கோமாளித்தனமாகக் கூறினால் சிரிக்காமல் என்ன செய்யமுடியும். இதையும் கேட்டு நம்பிக் கொண்டிருக்கிறது ஒரு பெருங்கூட்டம். பாவம்!

Aruna Srinivasan said...

இராதாகிருஷ்ணன், ஒரு பக்கம் அந்த மாதிரி நம்புவர்கள் இருந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய விமர்சனங்களும் இருக்கதான் இருக்கின்றன. புஷின் மதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனாலும் என்ன பிரயோஜனம்? போன தேர்தலுக்கு சிலமாதங்கள் முன் கூட இப்படிதான் புஷ் மதிப்பு இழந்து வருகிறார் என்று சொல்லிகொண்டிருந்தார்கள். அப்புறம் என்ன ஆச்சு ?!கருத்துக்கு நன்றி இராதாகிருஷ்ணன்.

Anonymous said...

புஷ்ஷின் கோமாளித்தனங்களைப் பற்றிய வண்ணப் படங்களுடன் கிண்டலடிக்கும் வலைத்தளம் http://www.bushspeaks.com/

வயிறு குலுங்க சிரிக்கலாம் :-)

Anonymous said...

புஷ் இப்போ கடப்பாறையை முழுங்கி விட்டார்னு சொல்லுங்கோ.... சரியா..
http://www.geocities.com/sahfihitayetullah/a1.html