Monday, May 23, 2005

வலைப்பதிவாளர்களுக்கு அங்கீகாரம்; அரசு வேலை!! ??

அமெரிக்காவில் மழை, இடியென்றால், இங்கேயும் மேக மூட்டம், மழை, இடி, என்று வர வேண்டாமா?

வந்துவிட்டது. இணையப் பத்திரிகையாளர்களுக்கும், வலைப் பதிவாளர்களுக்கும் இந்திய அரசு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இப்போதான் அங்கே அமெரிக்காவில் வலைப் பதிவாளர்களெல்லாம் ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருக்கிறார்களே. அதுபோல் இங்கும் பதிவாளர்கள் பலம் பெறுவதாக அரசு நினைக்க ஆரம்பித்துவிட்டது. ஜன நாயகத்தின் குரல் கேட்க இன்னொரு முழங்கி.

என் முந்தைய மார்ச் மாத பதிவொன்றில் எழுதியது போல், செல்வநாயகி தன் தோழியர் பதிவொன்றில் எழுதியதுபோல், உண்மையாகவே கூடிய விரைவில் நடக்கலாம். ஆனாலும் இவ்வலவு சீக்கிரம் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை. அதுசரி; சீக்கிரம் நடந்துவிடும் என்று நான் கனவு காண்பதும் கொஞ்சம் மிகைதான். இப்போதான் இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இது எப்படி, எப்போது, எந்த விதத்தில் செயலாக்கப்படும் என்பது பெரிய கேள்வி. அப்படி வலைப் பதிவாளர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது என்று ஆரம்பித்தால் என்ன மாதிரியான அடிப்படையில் தேர்வு செய்வார்கள்? மொழி? ஆங்கிலம் மட்டுமா? மாநில மொழிகள் உண்டா?

ஹ்ம்ம்.. என் கேள்விகளுக்கும் விரைவில் விளக்கம் வரும் என்று நம்புகிறேன்.
ஆனால் எவ்வளவு தூரம் இங்கேயுள்ள பதிவாளர்கள் பொதுப் பிரச்சனைகளில் அக்கறை காண்பிக்கிறார்கள் என்று இன்னும் தெளிவாகவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் மோதிய "Mediah!" பதிவு சற்று கவனத்தை ஈர்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த மோதலுக்குப் பின், இப்போது அந்த சூடு காணாமல் போய்விட்டது.

இங்கே சுட்டி கொடுக்கப்பட்ட செய்தியின் படி, இந்திய அரசு வலைப் பதிவாளர்களுக்கும் இணையச் செய்தியாளர்களுக்கும் Press information Bureau வின் அங்கீகாரம் வழங்குவதுடன், அரசு வேலைகளும் கொடுக்கப்போகிறார்களாம்.
எங்கே, நம் பதிவாளர்களெல்லாம் ரெடியா? மாற்று ஊடகத்தன்மை தமிழ் மணத்தில் இன்னும் நிறையப் பிரதிபலிக்கலாம் என்பது என் என்ணம். அந்தந்த ஊர்களில் நடக்கும் சம்பவங்கள், சமூக இயல்புகள், போன்றவை இன்னும் வரலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பதிவாளர்கள் இருந்தால் ஆங்காங்கே நடக்கும், கவனிக்கும் செய்திகளை/ ஊர் நடப்புகளை பதியும்போது கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, இணையம் /பதிவுகள், பூகோளக் கட்டுப்பாடுகள் இன்றி, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுக்கும்.

20 comments:

Anonymous said...

great news!! thanks for sharing it aruna... - prakash

Narain Rajagopalan said...

இதை நான் கொஞ்ச நாட்களாகவே எதிர்ப்பார்த்திருந்தேன். இங்கிலாந்து தேர்தலில் டோனி ப்ளேயர் கடும் எதிர்ப்புகளையும் மீறி வெல்ல உதவியது வலைப்பதிவுகள் தான். ஆனால், தொழில்முறை பத்திரிக்கையாளனுக்கு இருக்கும் அலுவலக சிக்கல்கள் வலைப்பதிவாளனுக்கு இருக்குமா என்று சொல்ல முடியவில்லை. அப்படி வகைப்படுத்தப்பட்டால், யார் என்ன எழுத வேண்டும் என்கிற வரைமுறை வருமில்லையா [நீங்க ஸ்போர்ட்ஸ் ரைட்டர், இவரு பாலிடிக்ஸ் எழுதுவாரு, அவரு ஆன்மீக ஸ்பெஷலிஸ்ட்) இதை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இனி, வலைப்பதிவாளன் வீட்டு வாசலுக்கும் ஆட்டோ வரலாம் இல்லையா ;-)

Badri Seshadri said...

அரசு வேலைகள்? அப்படியெல்லாம் வேஅலி கொடுத்து வலைப்பதிவாளர்களைக் கெடுக்க வேண்டாம்.

அரசு நிகழ்ச்சிகளுக்கு சில இணைய நிருபர்களை அழைத்தால் அதுவே இப்பொழுதைக்குப் போதும் என்று தோன்றுகிறது.

வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை credibility முக்கியம். அரசு வேலை கொடுக்கும் என்றால் அந்த வேலையை எடுத்துக்கொள்பவர் நியாயமான முறையில் தன் பதிவை எழுதுவாரா என்று சொல்லமுடியாது.

அங்கீகாரம் அவசியம்.

Anonymous said...

அருணா
வேலை ஒன்று கிடைக்குமாயின் அந்த அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள போலித்தனமாக எழுதுவதும், போட்டி மனப்பான்மையும் வளரும் என்று நினைக்கிறேன். நன்றி
பத்மா அர்விந்த்

Anonymous said...

//இனி, வலைப்பதிவாளன் வீட்டு வாசலுக்கும் ஆட்டோ வரலாம் இல்லையா ;-)
//

வராமலிருக்க 'முகமூடி நெ#2" என்று வலைப்பதிவுக்கு பெயர் கொடுங்கள்

Anonymous said...

ஆட்டோ மட்டுமா? இல்லை உள்ளே ஆட்கள், உருட்டு கட்டைகளுடன் இருப்பார்களா?

வீ. எம்
http://arataiarangam.blogspot.com/

வீ. எம் said...

ஆட்டோ மட்டுமா? இல்லை உள்ளே ஆட்கள், உருட்டு கட்டைகளுடன் இருப்பார்களா?

வீ. எம்
http://arataiarangam.blogspot.com/

Anonymous said...

the title is misleading.

Anonymous said...

the title is misleading.accrediation may not come so easily.they may insist on affiliation or experience as blogger

SnackDragon said...

அருணா,
ஒரு அவசர பின்னூட்டம். நீங்கள் , பிரகாஷ் சொல்வது போல் இது சந்தோஷமான விசயமாக என்னால் பார்க்க முடியவில்லை. :-( அரசு அங்கீகாரம் எதற்கு தேவை? என்றும் கூட என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உங்கள் சந்தோஷத்தைப்பார்த்து எனக்கு வருத்தம்தான் வருகிறது.
இது ஒரு சதியாகிவிடலாம் என்று தோன்றுகிறது, அங்கீகாரம் அது இது வேண்டும் என்று சொன்னால் , நான் வலைப்பதிவதை விட்டு விடுவேன் . நிச்சயமாக.

Anonymous said...

கார்த்திக் ராமாஸ் : ஒலி/ஓளி/அச்சு ஊடகங்களுக்கும் இத்தகைய அரசு அங்கீகாரம் உண்டு. அதனால், அவர்கள் அரசாங்கத்துக்குச் சார்பான செய்திகளையே தான் தருவார்கள் என்று நினைக்க முடியுமா? செய்திகளைச் சேகரிப்பதற்காக போனால், " சார் எந்தப் பத்திரிக்கை ? " என்பார்கள். முன்பு ·ப்ரீலான்ஸர் என்று சொல்வேன். இனிமே ப்ளாகர் என்று சொல்லிக் கொள்ளலாம் இல்லையா? அதுக்காகத்தான் மகிழ்ச்சி என்று சொன்னேன். - prakash

SnackDragon said...

பிரகாஷ் நன்றி.
அங்கீகாரம் அங்கீகாரம் என்ற அளவிலேயே நிற்காது என்பதுதான் எனது தெளிவு. நாளைக்கு
"எந்த ப்ளாக்கரும் (;-)) முதலமைச்சரைப் பற்றி "மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கெட" ஏதுவாக பேசினால் பொடா பாயலாம்" என்ற ஒரு சட்டம் வந்தால் என்ன செய்வீர்கள். (பாசி.கொம் கதை ஞாபகத்து வருது)

ஒலி ஒளி அச்சு ஊடகங்கங்களுக்கு , மின் வெளிக்கும் நாம் வேறுபாட்டை வரையறுத்துவிட்டோமா என்ன? மின் வெளி காற்று போலதான், சுவாசிப்பது போலத்தான் ப்ளாக்குவதும் :-). எல்லாமே இலவசமாய் நடக்கும்போது, அரசு முடிந்தால் உதவலாம், இல்லெஇயெண்ரால் சும்ம இருக்கலாம். தாம் அனுமதிக்கும் கருத்து மட்டுமே உலவ ஒரு "இம்போஸிங்" செய்ய ஏதுவாகலாம் என்பதால் இப்போதே எதிர்க்கிறேன்.

அடையாளம் ஓகே தான். அதுவே நாளைக்கு அரெஸ்ட் பண்ண ஏதுவாகலாம் இல்லையா?
புலிகள் பற்றி கருத்து சொண்ணீர்கள் என்று உங்களி தூக்கி ஒரு 1௧/2 வருசம் உள்ளெ போடால், புலிகளைப் பத்தி யார்தான் எங்குதான் பேசுவது? ;-) (பத்ரி தன் எல்லாப் புலிப்பதிவையும் மறைக்கபோகிறார் ;-))

SnackDragon said...

//"எந்த ப்ளாக்கரும் (;-)) முதலமைச்சரைப் பற்றி "மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கெட" ஏதுவாக பேசினால் பொடா பாயலாம்" என்ற ஒரு சட்டம் வந்தால் என்ன செய்வீர்கள். (பாசி.கொம் கதை ஞாபகத்து வருது)//

இதோ இன்று வந்து விட்டதே, எல்லா இலவச மின்வெளி பயனாளர்களுக்கும்
அரசு (இலவச) அங்கீகாரம் அளிக்கப்போகிறது என்று.

Aruna Srinivasan said...

பிரகாஷ், கொஞ்சம் பொறுங்கள். பதிவாளர்களுக்கு அங்கீகாரம் என்பதை ஏதாவது சொதப்பாமல் உருப்படியாக செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். நாரயணன், வீ.எம், கார்த்திக்ராம்ஸ், ஆட்டோவோ பொடாவோ என்றெல்லாம் சொல்லி பயம் காட்டாதீர்கள். நாராயணன், தொழில்முறை பதிவாளர்கள் என்று ஒரு "புதிய" தொழில் கூட ஆரம்பிக்கலாம் - ஊடகங்கள் உங்களிடமிரூந்து செய்திகள் வாங்கத் தொடங்கும்போது !! :-) அப்போது நீங்கள் சொல்வதுபோல் அவரவர் துறையில் விற்பன்னராக இருப்பதும் அவசியம். பொறுப்போடு செய்லபடுவதும் அதைவிட அவசியம். இதெல்லாம் இன்னும் எங்கேயோ எதிர்காலத்தில்...

Aruna Srinivasan said...

கார்திக்ராம்ஸ், உங்கள் கவலைக்கு அவசியமில்லை. அங்கீகாரம் என்ற accreditation தொழில் முறை பத்திரிகையாளருக்கு மிக முக்கியமான கேடயம் / ஆயுதம். அங்கீகாரம் இல்லாமல் செய்தி சேகரிப்பது பல சமயங்களில் கடினம். accredited journalist என்றாலே பத்திரிகையுலகில் நம்பகத்தன்மை அதிகம். அரசு அங்கீகாரம் கொடுப்பதனாலேயே அரசுக்கு சாதகமாகதான் தொழில் செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அரசாங்கத்தை எதிர்த்து செய்திகள் /கட்டுரைகள் பிரசுரிக்கும் பத்திரிகையாளருக்கும் accreditation உண்டு. தெஹல்காவுக்கும் உண்டு. எல்லா இடங்களிலும் ஒரு தொழில்முறை தார்மீகத்தோடு, அதிகாரபூர்வமாக நுழைந்து செய்தி சேகரிக்க இது ஒரு பாஸ். பிரதமர் அடுத்த முறை அலாஸ்கா செல்லும்போது பிரதமர் விமானத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா, NDTV பத்திரிகையாளர்களுடன் நம்ம வலைப் பதிவாளரும் ( அது யாருங்க??!!) இருப்பார். அங்கீகாரம் பெற்ற சுயேச்சை செய்தியாளர்களும் நிறைய உண்டு. அவர்களில் அரசாங்கத்தை பலமாக விமரிசித்து எழுதுபவர்களும் நிறைய உண்டு.

பத்ரி, பத்மா, அரசு வேலை என்று இந்தச் செய்தியில் உள்ள விஷயம் எனக்கும் புரியவில்லை. accreditation அவசியம். ஆனால் அரசு வேலை? இதென்ன சம்பந்தமேயில்லாமல் முழங்காலுக்கு முடிச்சுப் போடுகிறார்கள் என்று புரியவில்லை.

அப்படியே கொடுத்தாலும் இதில் பெரிதாக கவலைப் படத் தேவையில்லை. PTI போன்ற அரசு ஸ்தாபனங்களில் அப்படி எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியும்? வழக்கமாக இந்த நிறுவனங்களில் வேலை செய்யத் தேர்வு செய்யும் முறைகளில் ஒன்றாக, பதிவாளர்களிலிருந்தும் சிலரைத் தேர்வு செய்யும் முறையும் இருக்கும். பாக்கி பெரும்பான்மையினர் சுயேச்சையாகதானே இருப்பார்கள்?

என் கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் எவ்வளவு தூரம் பதிவாளர்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செய்திகளைப் பிரசுரிக்கும் அளவு வளர்ந்துள்ளார்கள் என்பதுதான். அப்படி பார்க்கையில் இப்போது இதர ஊடகங்களில் மட்டும் ரொம்பப் பொறுப்போடுதான் பணியாற்றுகிறார்களா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. அது வேறு விஷயம். அதே போல் பதிவுகளின் தனித்தன்மையையும் - சாதாரணவர்களின் உண்மையான எண்ணங்களை - கலப்படமில்லாத கருத்துக்களை - உடனுக்குடன் பரிமாற்றங்கள் செய்யும் - தனித்தன்மையை இழந்து விடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

எந்த அடிப்படையில் அங்கீகாரம் அளிக்கப்படும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். சுயேச்சைப் பத்திரிகையாளருக்கு 15 வருட அனுபவம் இருந்தால் "அங்கீகாரத்துக்கு" விண்ணப்பிக்கத் தகுதி உண்டு. ஆனால் இங்கு பதிவாளர்களின் மொத்த அனுபவமே 5 வருடங்களுக்குள்தான் இருக்கும். பின்னூட்ட அடிப்படையில் என்றால், கேட்கவே வேண்டாம்... நான் என்னத்தை சொல்ல...:-)

SnackDragon said...

வேலை வாய்ப்பு என்பதை வரவேற்கிறேன். கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன் அவ்வளவுதான். நன்றி அருணா.

Anonymous said...

சில நன்மைகளும், சில கேள்விகளும் இருக்கின்ற செய்திதான் இதுவும். ஆனாலும், வலைப்பதிவுகளும் ஒரு பொறுப்பான ஊடகமாக அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சி தரக்கூடியது. நன்றி அருணா தகவலுக்கு.

selvanayaki.

Aruna Srinivasan said...

நன்றி செல்வா. அதுசரி. அப்படி ஒரு வேளை பதிவாளர்களெல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கப்போகிறார்களே என்று யாரோ வேலை மெனக்கிட்டு பதிவுகளின் தாக்கத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தார்களாம். இதைப் படியுங்கள். சப்பென்று ஆகிவிடும் :-)
http://www.nytimes.com/2005/05/23/technology/23blog.html

Muthu said...

///என் கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் எவ்வளவு தூரம் பதிவாளர்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செய்திகளைப் பிரசுரிக்கும் அளவு வளர்ந்துள்ளார்கள் என்பதுதான்.///
அருணா,
வயதுக்கும், முதிர்ச்சிக்கும் ஒரு நேரடித்தொடர்பு இருக்க வாய்ப்புண்டு என்று பெரும்பாலான சமயங்களில் நம்பலாம். அச்சு ஊடகங்களின் வயதுடன் ஒப்பிடும்போது வலைப்பதிவுகள் தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைதான். ஆனால் அவை செய்ய ஆர்ம்பித்திருக்கும் வேலைகள் பிரமிக்கும் அளவுக்கு உள்ளன. இன்னும் கொஞ்ச நாள் ஆனால் இதன் உண்மையான பரிமாணம் நிச்சயம் தெரியவரும் என்று நம்புகிறேன்.

Muthu said...

/// வேலை வாய்ப்பு என்பதை வரவேற்கிறேன். கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன் அவ்வளவுதான். நன்றி அருணா.///

கார்த்திக் ரமாஸ்,
அந்தளவுக்கு கவலைப்படத் தேவையில்லை. முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டாலும் அரசு அங்கீகாரத்தை ஒரு பொருட்டாய் நினையாத வலைப்பதிவுகளும் பெருமளவில் இருக்கும், தான் யாரென்று காட்டிக்கொள்ள விரும்பாத பதிவுகளும் இருக்கும்.