Saturday, April 30, 2005

மரங்களும் விழுதுகளும்

பத்மா, துளசி மற்றும் தாரா இவர்கள் பதிவுகளில் வயதானவர்கள் - முதியோர் இல்லத்தின் அவசியம் என்ற பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். அவர்கள் சொல்வது எல்லாமே ஓரளவு யதார்த்தம். இருந்தாலும் மயிலாடுதுறை சிவா பாட்டிக்கு எழுதிய பதிவைப் படித்தீர்களா? மூன்றாவது தலைமுறைக்கு இருக்கும் இந்தப் பிரியமும் பிணைப்பும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாத்தா / பாட்டி - அதுவும் மூன்று வாரங்கள் - பிக்னிக், கல்யாணம், கோவில் இதெல்லாம் போய் பாக்கி மிஞ்சும் ஓரிரண்டு நாள் பழக்கம் மட்டுமே - என்று சந்திக்கும்போது இருக்குமா?

பெற்றோர்கள் சேர்ந்து வாழ வேண்டுமா இல்லை சுதந்திரமாக அவர்கள் / நாம் இருக்க வேண்டுமா என்பதற்கு என்னைப் பொறுத்தவரை இன்னும் சமாதானமாக பதில் கிடைக்கவில்லை. எல்லாவிதமான விவாதங்களிலும் ஓரளவு உண்மை இருக்கதான் செய்கிறது.

என் கேள்வி இதுதான் :

நன்றாக இருக்கும்போது சுதந்திரமாக இருந்துவிட்டு பின்னர் வயோதிகத்தினால் உடம்பு முடியாமல் மகன் அல்லது மகள் வீட்டில் வந்து உட்காரும்போது அவர்களிடம் பேரன் பேத்திகளுக்கு / மருமகன் அல்லது மருமகளுக்கு / மூன்றாம் தலைமுறையினருக்கு, திடீரென்று பிணைப்பு / கரிசனம் / ஒட்டுதல் எல்லாம் இயல்பாக வருமா? கடமை என்று பொறுத்துப் போவதை நான் இங்கே சொல்லவில்லை.

இயல்பாக பாசம் என்று ஒன்று பொங்குமே? அதைப் பற்றி சொல்கிறேன். தினம், தினம் பள்ளியிலிருந்து ஓடி வந்து "பாட்டி இன்னிக்கு ஸ்கூல்லே என்ன ஆச்சு தெரியுமா" என்பதில் ஆரம்பித்து குழந்தைகளோடு சேர்ந்து வளரும் பாட்டி தாத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பல வருடங்கள் தனியாக சுதந்திரமாக இருந்துவிட்டு முடியாமையால். இயலாமையால், ஓரிடத்தில் அண்டி வாழும்போது அங்கே இயல்பான ஒட்டுதலும் புரிந்துணர்வும் இருக்குமா? வந்தவர்களுக்கும் எங்கேயோ வந்தாற்போல் நிலத்தில் விழுந்த மீனாக தவிப்பு. இருப்பவர்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறையில் யாரோ நுழைந்தாற்போல் ஒரு சங்கடம். சேர்ந்தே இருந்திருந்தால் இப்படி இருக்காதோ? மன வித்தியாசங்கள் இருந்தாலும் வெளிப்படையாக பேசி தெளிவு படுத்திக் கொண்டு திட்டினால் திட்டி, சிரித்தால் சேர்ந்து சிரித்து.... நல்லது கெட்டது பகிர்ந்து, இணைந்து வாழ மனம் பண்பட்டுப் போகுமோ?

சேர்ந்து இருந்தாலே மனக்கசப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறோம். உண்மையில்லாமல் இல்லை. ஆனால் நான், என்னுடையது, நான்தான் அல்லது என்னுடையதுதான் சிறந்தது - one upmanship போன்றவற்றை தவிர்த்து சேர்ந்து வாழ பழகிக் கொண்டால் குடும்பம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி சேர்ந்து வாழும் என் உறவினர் ஒருவர் சொல்லுவார்: மருமகள் அவள் வழி அவளுக்கு. என் வழி எனக்கு. முடிந்தவரை நாங்கள் (பெற்றோர்கள்) அவர்கள் வாழ்க்கை முறையில் அனாவசியமாக தலையிடுவதில்லை. அவர்களும் எங்கள் சௌகரிய / அசௌகரியங்களை விமரிசிப்பதில்லை. இணைகோடுகளாக செல்லும் தண்டவாளம் மாதிரி அவரவர் பாதையில் அவரவருக்கு Space கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்பார். இப்போது பேரன்கள் பேத்திகள் என்று துபாய், அமெரிக்கா, நியூசிலாந்து என்று அவரவர் பிரியமாக அழைக்க இவர்கள் அவ்வப்போது பயணம் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் பார்க்கும்போது மனசில் நிறைய நம்பிக்கை வருகிறது. வயதான காலத்தில் நிச்சயம் விழுதுகளைச் சார்ந்து இருக்கவே விழைவார்கள். பணத்தால் / உடலால் அல்ல - மனசில் விழும் சொல்லத்தெரியாத ஒரு பயத்தினால்..... நம்முடையது என்று இருக்கும் பந்தத்தின் அருகில் இருக்கவே விரும்புவார்கள். தைரியமாக, அமைதியாக இருக்கும் விதிவிலக்கான பெரியவர்கள் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலோர் தன் விழுதுகளுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஒரே ஊரில் இருக்கும்போது அதிகம் பிர்ச்சனையில்லை. பெரியவர்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பிள்ளைகள் /பெண்களும் ஜாகை அமைத்துக் கொண்டால் சுதந்திரத்திற்கு சுதந்திரம் ஆயிற்று. தினம் சந்திக்க முடிவதால் ஒட்டுதலுக்கு ஒட்டுதலும் ஆயிற்று. பேரன் பேத்திகள் பாட்டி / தாத்தா வீட்டுக்கும் தங்கள் வீட்டுக்குமாக பாலம் அமைத்துக் கொண்டிருப்பார்கள்.

சிங்கப்பூரில் இப்படி பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடு அமைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு வீடு வாங்குவதில் சலுகையும் உண்டு. என்னைக் கேட்டால் இப்படி அமைந்தால் இது உன்னதம். ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பிள்ளைகள் செல்லும்போது பல பெற்றோருக்கு கூட இருப்பது முடியாத நிலை. அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே டில்லி / கல்கத்தா என்று பிள்ளைகள் சென்று விடும்போது சென்னைப் பெற்றோர் சென்னையிலேயே இருக்கதான் பிரியப்படுகிறார்கள். "என் பூஜை, கோயில், நண்பர்கள் இதெல்லாம் விட்டுவிட்டு அங்கே தூர தேசத்தில் என்னால் எப்படி இருக்க முடியும்? " என்பது கேட்டுக் கேட்டு, பழகிப்போன விளக்கம். அமெரிக்காவாகட்டும், டில்லி கல்கத்தாவாகட்டும், வெளியூர் சென்றுவிட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் என்பவர்கள் வருடம் ஒரு முறை சந்திக்கும் - பிக்னிக், கல்யாணம், கோவில்கள், நண்பர்கள் என்று போன நேரம் போக பாக்கி நேரத்தில் சந்திக்கும் உறவுகளாகதான் ஆகிவிடும்.

வெளியூர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு வாழ பெரியவர்கள் கற்றுக் கொள்ளாத பட்சத்தில், பிள்ளை / மகள் ஊருக்கு செய்யும் ஆறு மாத விஜயங்களும் விரைவில் அலுத்துவிடும். " ஊரில் என் குடிசையே எனக்கு வசதி" என்று கிளம்பி விடுவார்கள். எல்லாம் உடம்பில் தென்பு இருக்கும் வரையில். பிறகு உடல் உபாதைகளுக்கு பணம் கொடுத்து உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டாலும், மனம் விழுதுகளின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்துவிடும்.

இந்த நிலையில்தான் பல வயதானவர்கள் முதியோர் இல்லங்களுக்கு போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. "இல்லம்" Home என்றாலே மனதில் ஏதோ நெருடுகிறது இல்லையா? இதைத் தவிர்க்க இன்று பல கட்டிட அமைப்பாளர்கள் முதியோர்களுக்கான எல்லா வசதிகளும் நிறைந்த "அபார்ட்மெண்ட்கள்" என்று விளம்பரப்படுத்தி விற்க ஆரம்பித்துள்ளார்கள். டாக்டர், ஆஸ்பத்திரி, என்று பல வசதிகளும் எளிதாக கிடைக்கும் வகையில் இருக்கும் இந்த அபார்ட்மெண்டுகள் இன்று பிரபலமாகி வருகின்றன.

டில்லியில் இப்படிதான் ஹிமான்ஷ¤ ரத் என்பவர் 8 வருடங்கள் முன்பு " AgeWell" என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். தங்களிடம் பண வசதி நிறைய இருந்தும் இப்படி பிள்ளைகள் வெளியூர்களில் இருக்கும் நிலையில் தனிமையில் சிரமப்படும் முதியவர்களுக்காக என்றே ஆரம்பித்தார். " Helpage போன்ற அமைப்புகளில் இந்த மாதிரி வசதி உள்ள முதியோர்கள் இருக்க விருப்பபட மாட்டார்கள். முதியோர் இல்லம் என்ற சொல்லே நம் சமூகத்தில் ஏதோ, ஏழ்மை /ஒதுக்கப்படவர்கள் என்று ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெளியூர்களுக்கு சென்று வாழப் பிரியப்படாமலும், அதே சம்யம் வெளியூர்களில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை தங்களுக்கு அருகே வந்துவிடும்படி வற்புறுத்தாமலும் அமைதியாக காலத்தைக் கழிக்க நினைக்கும் இவர்களுக்கு பல சம்யம் துணையும் தேவைப்படுகிறது. இந்த மாதிரி சமயங்களில் துணைக்குப் போக என்றே நாங்கள் எங்கள் மெம்பர்களுக்கு பழக்குகிறோம். -சினிமா, பாட்டு கச்சேரி, டாக்டர் என்று இபப்டி வயதானவர்களுடன் துணைக்கு போக நாங்கள் பீஸ் (Fees) வசூலிக்கிறோம் - தேவையின் நேரத்தைப் பொறுத்து. பணம் கொடுத்து இபப்டி பல சேவைகளைப் பெற்றூகொள்ள இன்றைய வசதியான முதியோர்கள் தயங்குவதில்லை." என்று என் அன்றைய பேட்டியில் கூறியிருந்தார். இன்று அவர் அமைப்பு எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி இப்போது தேடியபோது இந்தத் தளம் கிடைத்தது. குடைந்து பாருங்கள்.

நானும் என் நண்பர்கள் சிலரும் கூட இப்படி ஒரு யோசனையை பலமாக சிந்திப்பதுண்டு. Old Age Home என்றால்தான் ஏதோ போல் இருக்கிறது. ஓர் பல அடுக்கு கட்டிடத்தில் பல முதியோர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்கலாம். அங்கே இப்படி AgeWell போன்ற பணம் அளித்து பெறப்படும் சேவைகள் - வெளியே செல்ல துணை, பேச்சுதுணை, கச்சேரிக்கு துணை, டிரைவர், வாகனம், Indoor விளையாட்டு கூடங்கள், இணையான நண்பர்கள், தினம் வந்து போகும் மருத்துவர்கள், அருகிலேயே ஆஸ்பத்திரி, 24 மணி நேரமும் வளாகத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ், காலாற நடக்க தோட்டம், ஜிம், தினம் வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் குடும்பத்துடன் அரட்டை அடிக்க வசதியாக இணைய வசதிகள், இப்படி எங்கள் கனவு கட்டிடம் இருக்கிறது. இங்கே வயதானவர்கள் மட்டும் என்றில்லை. மற்ற குடும்பங்களும் இருக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீசுக்கு ஓடும் இளைஞர்கள் என்ற சாதாரண குடும்ப சூழலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ முதியோர்கள் Reservation வனம் மாதிரி தனிமையுணர்வு வந்து விடும்.

இப்படி யோசனை செய்யும்போதே திடீரென்று ஒரு யதார்த்தம் மனசில் வந்து போயிற்று. இன்று சென்னையே இப்படி ஒரு பெரிய முதியோர்கள் அபார்ட்மெண்ட் போல் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. நடுத்தர குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் குழந்தைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் பல முதியோர்கள் தனியாகதான் இருக்கிறார்கள். ஆனால், அக்கம் பக்கம் இருப்பவர்கள், தூரத்து சொந்தம் எல்லாம் அவசரத்துக்கு ஓடி வந்து கைகொடுக்கும் மனம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். சென்னையின் மகத்துவம் இது என்றும் தோன்றிற்று.

இருந்தாலும் AgeWell போன்ற அமைப்பும் என் கனவு கட்டிடமும் இன்று இங்கே ரொம்ப அவசியம்.

9 comments:

Anonymous said...

அன்பின் அருணா, மொத்தமாய் எல்லோருமாய்ச் சேர்ந்து முக்கியமான விஷயத்தைப் பேசி உணர்ச்சிகளைத் தொடுகிறீர்கள். மூன்றாம் தலைமுறைப் பிணைப்புப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மை. அதோடு நன்றாய் இருக்கும்போது தனியே இருந்து முடியாத போது அருகே வைத்துக் கொள்வது என்பது குழந்தைகளின் பிணைப்பிற்கு நடைமுறையில் ஒவ்வாதாதது.

Anonymous said...

மேற்சொன்ன கருத்து என்னுடையது.

-செல்வராஜ்
http://selvaraj.weblogs.us

Anonymous said...

அருணா
நன்றாக இருக்கும் போது கூட இருந்தால் சந்தோஷம். என் பெற்றோர் வந்துவிட்டு போகும் போதெல்லாம் என் மகனுக்கு வருத்தம் அதிகம். அவர்களோடு வாரம் ஒருமுறை தொலைபேசுகிறான். அவர்களும் எல்லா பிள்ளைகள் வீடிலும் சந்தோஷமாய் இருக்கிறார்கள். நான் வருத்தப்படுவதெல்லாம் முடியாத வயோதிக பெற்றோரை எண்ணி. அதுவும் முதியோர் விடுதியின் நிலையை நேரில் பார்த்து, பிரச்சினைகள் தீர்த்து பிள்ளைகளின் வருத்தம் தெரிந்து முடிவு எதுவுமின்றி குழம்பிய நிலையில். அரசு திட்டம் தீட்ட, மருத்துவம் வாழ்நாளை கூட்டிகொண்டே போக, காப்பீடு செலவு அதிகரித்து கொண்டே இருக்க என்ன செய்வது என்று அரசின் நிலையிலும் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் வருந்துகிறேன் கூட இருக்கும் பாட்டிகளின் முடியாத நிலை தெரிந்து வருந்துகிறேன்.
அன்புடன்
பத்மா

Aruna Srinivasan said...

உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வராஜ்.

பத்மா, எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் பல உதாரணங்கள் இருக்ககூடிய, உலகெங்கும் எல்லா சமூகங்களிடையேயும் இருக்கும் ஒரு பிரச்ச்னை இது. நீங்கள் சொல்லியிருப்பதுபோல், தள்ளி இருந்தாலும் பிணைப்பு இறுக்கமாக இருக்கும் குடும்பங்களும் இருக்கலாம்; நான் சொல்லியிருந்த குடும்பம் போல் ஒன்றாக இருந்தாலும் கசப்பு அண்டாமல் இணைந்து சுமூகமாக இருக்கும் குடும்பங்களும் இருக்கலாம். மொத்தமாக இப்படி என்று generalise செய்ய முடியாத ஒரு விஷ்யம் இது. உங்கள் அனுபவம் கேட்க நிறைவாக, நம்பிக்கையாக இருக்கிறது. நன்றி.

அதுசரி; கட்டுரையின் கடைசியில் என் கனவு கட்டிடம் மற்றும் பொருளாதார வசதியுள்ள முதியோர்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்டு துணை, என்று யோசனைகள் வைத்திருந்தேனே? முதியோர் இல்லம் என்று இல்லாமல் இப்படியும் செய்யலாம் இல்லையா? தனியார் துறை இதில் ஈடுபட்டால் அரசுக்கு செலவு குறையும். உங்கள் கருத்து என்ன? சமூக சேவையாக இல்லாமல் இது ஒரு வணிக நோக்காக தோன்றலாம். ஆனால் வசதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாமே?

Anonymous said...

அருணா
ஊதியம் பெற்ற்க்கொண்டு நடைபெறு சில இடங்களில் தேவையே இல்லாமல் மருத்துவம் செய்வதாகவும், அத்ற்கான கட்டணம் எகிறுவதாகவும் படித்தேன். இஅமெரிக்காவில், கட்டணம் பெற்று நடைபெறும் இடத்திலும் கவனக்குறைவு அதிகம்.அடிக்கடி பேய் பார்த்துக்கொண்டால் கவனம், அனுசரணை அதிகம் என்று டெகான் கெரால்ட் ஆய்வு கூறுகிறது.
பத்மா

dondu(#11168674346665545885) said...

அருணா அவர்களே, இவ்வாரக் கல்கி இதழில் முடிவடைந்த "மாம் ஃப்ரம் இன்டியா" என்றத் தொடர்கதையில் அனுராதா ரமணன் அவர்கள் பிரசவத்தின்போது பென்ணின் அன்னை அருகில் இருப்பதின் அவசியத்தை அழகாக வர்ணித்திருக்கிறார். சென்னையில் இருக்கும் தாங்கள் அதை நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் வாங்கிப்படியுங்கள். படிக்க வேண்டியக் கதை அது.
உங்கள் பின்னூட்ட வசதி அனாமதேயப் பதிவுக்கே முன்னுரிமை தருகிறது. மாற்றிக் கொள்ளப் பாருங்கள். "டெஸ்ட்" என்ற வெட்டிப் பின்னூட்டம் இட்டால்தான் தேவையானப் பெட்டி திறக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Aruna Srinivasan said...

கருத்துக்களுக்கு நன்றி பத்மா, ராகவன்.

கருத்துப் பெட்டி சுரதா அமைத்தது. இதில் நேரடியாக தமிழில் உள்ளிடும் வசதி இருப்பதால் இதை இங்கு வைத்துள்ளேன். கருத்துப் பதிபவர்களுக்கு ஒரு சின்ன வேலை. கடைசியில் தங்கள் பெயரையும் எழுத வேண்டும் இல்லாவிட்டால் அனாமதேயமாக இது பதிந்து கொள்ளும். ஒரு வேளை உங்கள் பதிவின் முகவரி தெரியும் வண்ணம் கருத்துப் பதிய வேண்டுமென்றால், இந்த தமிழ் பெட்டியை ஒரு முறை காலியாக தட்டிவிட்டு, பின் திறக்கும் பிளாக்கரின் கருத்துப் பெட்டியில் வழக்கம்போல் சுரதாவின் பொங்குதமிழில் யூனிகோடில் மாற்றப்பட்ட எழுத்தைப் பதியுங்கள். இப்படி செய்தால் அனாவசியமாக இருமுறை பதிக்க வேண்டியிருக்காது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

துளசி கோபால் said...

அருணா,

உங்கக் கனவு கட்டிடம்தான் இப்ப இங்கே நியூஸியில் ரொம்ப பேமஸ்.
இதுக்குப்பேர் ரிட்டயர்மெண்ட் வில்லா. 60 வயசுக்கு மேலே இருக்கறவங்களுக்கு மட்டுமே
இங்கே வீட்டை வாங்கிக்க முடியும். நாமும் வீடு வாங்கிக்கலாம். ஆனால் 60 ஆனபிறகுதான்
அங்கே குடிபோக முடியும். அதுவரை வாடகைக்கு விடலாமா? ஓஓஓஓ விடலாமே! 60 வயசு
ஆட்களைத் தேடி வாடகைக்கு விட்டாப்போச்சு:-)))))

ஆனா ஒவ்வொரு வீடும்/ டவுன் ஹவுஸ் ரொம்பக் கச்சிதமா இருக்கு. தாத்தா & பாட்டிக்குத்
தாராளம். ஒரு ரெண்டாவது படுக்கை அறையும் இருக்கு. பேரக்குழந்தை வந்தாத் தூங்கறதுக்கு.
அநேகமா ஒரே வயசுக்காரங்க இருக்கறதாலே நல்ல கம்பெனி. இப்பெல்லாம்
குடும்ப நண்பர்கள் சிலர் சேர்ந்து பக்கத்துலே பக்கத்துலே ஒரே காம்பவுண்ட்லே வாங்கிக்கறாங்க.

கார்டனிங், புல் வெட்டுதல் எல்லாம் (கூட)செய்ய வேணாம். மொத்த காம்ப்ளெக்ஸ்க்கும்
இதெல்லாம் செஞ்சுதர ஆள் இருக்கு.

இந்த நாட்டுலேயும் வயசானவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. 'பேபி பூமர்ஸ்'

அதுக்குப்போகுமுன்னே முதல்லே ஒரு 'கராஜ் சேல்' போட்டு நம்ம வீட்டுச் சாமான்களை
ஒழிச்சுக் கட்டணும்:-)))))

என்றும் அன்புடன் இதை எழுதுனது ,
துளசி.

Aruna Srinivasan said...

அன்பு துளசி,

என் கனவு ஆயிரம் மைல்களுக்கப்பால் உங்க ஊரில் நிஜமாய் இருப்பது பற்றிக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனால், இந்தப் பதிவிலேயே இதையும் எழுதியுள்ளேன் - //இங்கே வயதானவர்கள் மட்டும் என்றில்லை. மற்ற குடும்பங்களும் இருக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீசுக்கு ஓடும் இளைஞர்கள் என்ற சாதாரண குடும்ப சூழலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ முதியோர்கள் Reservation வனம் மாதிரி தனிமையுணர்வு வந்து விடும்.// இப்படி எல்லா வயதினரும் ஒன்றாக இருக்கும்போது வயதானவர்களுக்கு சுவாரசியமாகவும், வாழ்க்கை நார்மலாகவும் இருக்கும். சிங்கப்பூர் உதாரணம் இன்னும் மிகச் சிறந்தது என்று நினைக்கிறேன். குடும்பம் அருகாமையிலும் இருக்கும். வயதானவர் மற்று இளையவர்கள் - அவரவர் சுதந்திரமும் தாராளமாக இருக்கும். நீங்க என்ன சொல்றீங்க !