Wednesday, April 13, 2005

சார்.... தபால்...

சில நாள் முன்பு பாலாஜி -பாரி தபால்காரர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவு ஏற்படுத்திய நினைவோட்டம் இது.

கொரியர் சேவைகள், கணினி, செல்போன் என்று மாறிவரும் தொழில் நுட்ப யுகத்தில் தபால் துறை எப்படி சமாளிக்கிறது என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு - என் சகோதரியிடமிருந்து சில மாதங்கள் முன்பு ஒரு கடிதம் வரும் வரையில்! தொலைபேசியிலேயே எல்லா விஷய்ங்களும் பேசிவிடுவதால் கடிதம் என்ற பழக்கமே எங்களிடையே விட்டுப் போயிருந்தது. ஆனால் ஒரு முறை கணினி உபயோகிக்க முடியாமல், ஆனாலும் போனில் பேசிய சமாசாரங்கள் தவிர எழுத வேண்டிய விஷயங்கள் இருந்ததால் அவள் ஒரு தபால் துறை கவரில் - பழுப்பு நிறத்தில் ஓரத்தில் ஸ்டாம்பு பதிந்து இருக்குமே, ஞாபகம் இருக்கா? - நாலு பக்கம் எழுதி அனுப்பினாள். அந்தக் கவரைப் பார்த்தபோதே எனக்கு வினோதமாக இருந்தது. எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு கவரைப் பார்த்து ! சில சமயம் வயதான வீட்டுப் பெரியவர்களிடமிரூந்து இப்போதும் நாலு வரி எழுதி கார்டு வரும். தபால் துறை வாழ்க என்று சொல்ல வைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள். சில வயதானவர்களுடன் கடிதம்தான் சரியான தொடர்பு கொள்ள சௌகரியமான சாதனம். தொலைபேசியில் பேச அவர்களுக்கு அவ்வளவு வசதியாக ( Comfortable) இருப்பதில்லை. தொலைபேசி என்பது ஏதோ தந்திபோல் அவசரத்திற்குதான் என்ற எண்ணம் பலருக்கு இன்னும் இருக்கிறது. ( டெலிபோன் பில்லைப் பார்த்தால் இவர்கள் எண்ணமே தேவலாம் !)

வெளியூர்களிலிருந்தபோது எழுபதுகளில் ஆப்பிரிகாவில் நாங்கள் இருந்த சர்க்கரை ஆலை குடியிருப்பில் வெளி நாட்டுக்குப் பேச வேண்டுமென்றால் தொழிற்சாலையில் அலுவலகத்துக்குள் போய்தான் டிரங்க் கால் போட வேண்டும். சென்னை நம்பரைக் கொடுத்து தொடர்புக்கு " விண்ணப்பித்துவிட்டு" காத்திருப்போம். சில சமயம் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகும் - call materialise ஆவதற்கு. சில சமயம் கிடைக்காமலும் ஏமாற்றத்தோடு திரும்புவோம். அப்படியே கால் கிடைத்தாலும், சத்தம் தெளிவாக இருக்காது - ஹலோ / ஹலோ என்று கூவுவதிலேயே பாதி நேரம் ஓடிவிடும். அப்போதெல்லாம் - ஏதோ குரல் கேட்கதான் தோலைபேசியே தவிர, மற்றபடி விஷயங்கள் கடிதங்கள் மூலம்தான் பரிமாறிகொள்ளப்படும். எனக்கு கடிதம் எழுத என்றே, தேசீய பறவை படம் போட்ட வெளிர் நீல வெளி நாட்டு கவர்களை அப்பா சென்னையில் நிறைய வாங்கி தயாராக வைத்திருப்பார். குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு பக்கமிருந்தும் கடிதங்கள் போய்க் கொண்டிருக்க வேண்டும் - அதுவும் உங்கள் "......" தேதியிட்ட கடிதம் கிடைத்தது என்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதே போல் நாங்கள் எழுதும் கடிதங்களிலும் கட்டாயம் தேதி இருக்க வேண்டும். ஒரு முறை தேதி போடாமல் கடிதம் எழுதிவிட்டு அப்பாவிடமிருந்து பதில் கடிதத்தில் - உன் தேதி போடாத கடிதம் கிடைத்தது என்று பதில் வரும். கடிதம் வந்தவுடன் முதலில் எழுதிய தேதியைப் பார்ப்பார். தாமதமாக வந்ததோ, தபால்துறை அன்றைக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளும். இங்க பார், அருணா "..........." தேதியில் எழுதின கடிதம் இப்போதான் சாவகாசமாக இன்று வந்திருக்கு என்று அம்மாவிடம் அங்கலாய்ப்பார்.

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோதெல்லாம்கூட இதே கதைதான். அம்மாவிடமிருந்து வாரம் தவறாமல் எண்ணி பத்தே வரிகளில் கடிதம் / போஸ்ட் கார்ட், வந்துவிடும் - ".....கட்டாயம் வாரா வாரம் கடிதம் எழுத மறக்காதே" என்ற பின்குறிப்புடன். ( கூடவே மறக்காதே லிஸ்டில் டானிக் சாப்பிடு, எண்ணெய் தேய்த்துக்கொள்; ஒழுங்காக பாடத்தில் கவனம் செலுத்து; போன்ற அறிவுரைகள் தவறாமல் இருக்கும். அம்மா, அப்பா மாதிரி இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் வெகு நாள் எனக்கும் இருந்தது. படிக்கும் காலங்களில் யார் யாருக்கு எப்போ எழுதினேன் / பதில் எழுதிவிட்டேனா என்று ஒரு அட்டவணையே போட்டு வைத்திருப்பேன். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

என் தாத்தா ஒருவர் இப்படிதான் நிறைய கடிதங்கள் எழுதுவார். ஒரு போஸ்ட் கார்டில் ( கட்டாயம் போஸ்ட்கார்டுதான். இன்லாண்ட் கவரெல்லாம் நினைக்ககூட மாட்டார் "எதுக்கு வேஸ்ட்? ஒரு கார்டு போட்டால் போறாதா?" அந்தக் கார்டிலேயே அத்தனை குடும்ப விஷயமும் அடங்கிவிடும். நுணுக்கி நுணுக்கி சின்ன எழுத்தில்.

அப்பாவுக்கு கடைசி வரை தொலைபேசியில் பேசுவது சௌகரியமாகவே இல்லை. டில்லியிலிருந்து சென்னைக்கு பேசும்போது அம்மாவிடம் கதையளந்துவிட்டு, அப்பாவிடம் கொடுங்கள் என்றால், போனை வாங்கி எண்ணி இரண்டு வார்த்தைதான் பேசுவார். " பேசாமல் கடிதம் எழுதேம்மா... நானும் நிதானமாக படிப்பேன் இல்லையா?" என்பார். என் சோம்பேறித்தனம் அவருக்கு சற்று அலுப்பாக இருந்ததோ என்னவோ; ஒரு முறை சிரித்துக் கொண்டே சொன்னார் - "பக்கம் பக்கமாக பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுகிறாய். உட்கார்ந்து கடிதம் எழுத முடியவில்லையே உனக்கு" ! அவ்வளவுதான். எனக்கு நன்றாகவே உறைத்தது. அதானே, போனில்தான் பேசுகிறோமே என்று நினைத்துக் கொண்டு என்ன மடத்தனம் செய்கிறோம்? கடிதம் எழுதினால் வைத்துக் கொண்டு நிதானமாக படிப்பார் இல்லையா? அதன் பிறகு மீண்டும் அவ்வப்போது கடிதம் எழுத ஆரம்பித்தபின்தான் எனக்கும் நிம்மதியாக இருந்தது.

இன்று தபால் துறையின் பெரிய வருமானம், அச்சு மற்றும் எலக்டிரானிக் ஊடகங்களின் "உங்கள் கேள்விகளை/ பதில்களை / விடைகளை ஒரு கார்டில் எழுதிப்போடுங்கள்" என்று வரும் அறிவிப்புகள், மற்றும் பெருவாரியான Junk Mail என்று நாம் குறிப்பிடும் விளம்பர வகை தபால்கள் போன்றவைதான். இந்த தொழில் நுட்ப காலத்தில் தபால் துறை ஒன்றும் பின் தங்கிவிடவில்லை என்பதே ஒரு மகிழ்ச்சி தரும் அம்சம். நிறைய தொழில் நுட்பம் புகுத்தியிருக்கிறார்கள். ஈ போஸ்ட் - கணினி /இணைய வசதி இல்லாதவர்கள் கூட ஈ மெயில் எழுத பெற்றுக்கொல்ள வசதியாக ஆரம்பிக்கப்பட்ட சேவை - போன்ற சேவைகள் மூலம் தபால் துறையை நவீனப்படுத்தல் வேகமாக நடந்து கொண்டுள்ளது. பெரும்பாலும் சார்டிங் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டன. ஒரு திறமையான சார்ட்டர் ஒரு மணி நேரத்தில் 1000 கடிதங்கள் பிரித்து தொகுப்பார் என்றால் பிரிக்கும் இயந்திரங்கள் 30,000 கடிதங்களை அதே நேரத்தில் செய்யும். ஆனால் இதற்காக அதிகம் ஆட்குறைப்பு செய்யப்படவில்லை. பதிலாக வேறு பிரிவுகளில் அவர்கள் இயங்க பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

India Post இந்தியா முழுவதும் ஒரு வருடத்தில் 1575 கோடி தபால்கள் அனுப்புகிறது. 155,618 போஸ்ட் ஆபீஸ்கள் இயங்குகின்றன - அண்டார்டிகாவில் உள்பட. அண்டார்டிகாவில் முதன் முதலில் "மைத்திரி" என்ற இந்திய ஆராய்ச்சி நிலையம் அமைத்தவர்களுள் ஒருவரை டில்லியில் பேட்டி காண சென்றபோது அவர் முதலில் எனக்கு கொடுத்தது அந்த ஆராய்ச்சி நிலையம் போஸ்ட் ஆபீஸ் முத்திரை தாங்கிய முதல் நாள் கவர். கிராமப்புறங்களில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் எண்ணிக்கை 139,081. மூலை முடுக்கெல்லாம் இருக்கும் தபால் பெட்டிகள் எண்ணிக்கை 564,701. மொத்தம் 4.2 லட்சம் பேர் தபால் துறையில் வேலை செய்கிறார்கள். இன்னும் 3 லட்சம் பேர் உபரியாக ( extra departmental ) வேலை செய்கிறார்கள். ராணுவம், ரயில் நிர்வாகம், இவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய படியளப்பவர் / எஜமானர் தபால்துறைதான்.

அதுசரி, கடிதங்கள் / கடிதம் எழுதும் பழக்கம் இன்று மியூஸியத்தில் வைக்கும் நிலையில் தபால் துறை எப்படி உயிர் வாழுகிறது? வணிகத் துறை இன்று தபால் துறைக்கு பெருமளவில் உதவுகிறது. வீட்டு வாசலில் தொங்கும் நம் தபால்பெட்டியை நிரப்புவது எல்லாவிதமான வணிக சம்பந்தமான விளம்பர உத்திகள். விதம் விதமாக பத்திரிகைகள் இன்று சந்தாவை அதிகரிக்க சலுகைகள் பல்விதங்களில் கொடுக்க, இங்கே தபால்காரர் நம் வீட்டுக்கு பல முறை வருகிறார். கடையில் வாங்குவதைவிட வருடச் சந்தாவில் பல பத்திரிகைகள் லாபமாக இருக்கே ! தவிர, டன் டன்னாக அச்சில் வெளியாவது எல்லாம் எப்படியோ எங்கேயோ நம்மை வந்து அடைய வேண்டுமில்லையா? இதில் தபால் துறை பெரும்பங்கு வகிக்கிறது. தவிர இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி / பத்த்ரிகைகள், ரேடியோ போன்ற ஊடகங்களின் போட்டிகள் வகையறா. இதிலும் கணிசமான போக்குவரத்து தபால் துறைக்கு கிடைக்கிறது.

இதெல்லாம் போக இன்று தபால் துறை ஒரு வங்கி மாதிரி இயங்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் தளத்தில் போய்ப் பாருங்கள். ஒரு நிதி நிர்வாகத்தின் அத்தனை பிரிவுகளும் உள்ளன. இன்சுரன்ஸ் உள்பட. போதாதற்கு இப்போதெல்லாம் மிகப் பாதுகாப்பான, வங்கிகளைவிடவும் அதிக வட்டி கிடைக்கும் முதலீட்டு அமைப்பாக இருப்பது போஸ்ட் ஆபீஸ் பத்திரங்கள்தாம். நிறைய பென்ஷன்காரர்கள் தங்கள் ரிடையர்மெண்ட் பணத்தை கண்ணை மூடிக்கொண்டு போஸ்ட் ஆபீஸில் போட்டு விடுகிறார்கள்.

தவிர, வருமானத்தை உயர்த்த, மூலை முடுக்கில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்களில் வணிகக் கடைகளை கூட அமைக்கலாமா என்ற யோசனையும் இருப்பதாக எங்கோ படித்தேன். ஆனால் அதற்கு முதலில் போஸ்ட் ஆபீஸ் கட்டிடங்களை கவனிக்க வேண்டும் இன்றும் பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்கள் படு பழசான விக்டோரியா காலத்து கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. சமீபத்தில் அதிசயமாக எப்போதோ சென்னையில் பொழியும் மழையில், பூக்கடை போஸ்ட் ஆபீஸின் கோலத்தை ஹிந்து வெளியிட்டு இருந்தது. ஒழுகும் கூரை, சிதிலமாகிப்போன சுவர், சேறும் சக்தியுமாக நுழைவாயில் - வாடிக்கையாளர்களும், போஸ்ட் ஆபீஸில் வேலைசெய்பவர்களும் படும் கஷ்டத்தைப் படம் போட்டுக் காட்டிய மறு நாள் போஸ்ட் ஆபீஸ்கள் கட்டிடங்களை புதுப்பிக்க பணம் ஒதுக்கப்பட்ட செய்தி வந்தது. இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் Flowers Road போஸ்ட் ஆபீஸ¤க்கு சமீபத்தில் போனபோது பல கணினிகள் ஒரு மூலையில் பெட்டிகள் கூட பிரிக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரித்ததில் போஸ்ட் ஆபீஸ் கணினி மயமாக்கல் முயற்சியின் முதல் அத்தியாயம் என்று புரிந்தது. " கட்டிடம் மிகப் பழசுங்க. இந்த மாடர்ன் சாமான்களெல்லாம் வைக்க ஏத்தாற்போல் புதுப்பிக்கணும் அல்லது இடம் மாற வேண்டும். அந்தக் காலத்தில் வாடகைக்கு எடுத்த இடம் இது. புது இடம் மாறலாம் என்றால் அதிகம் வாடகை ஆகிறது. எப்போ இடம் மாற்றம் வருமோ அல்லது கட்டிடம்தான் புதுப்பிக்க படுமோ தெரியவில்லை," என்று அங்கே வேலை செய்யும் ஒருவர் கூறினார். உயர்ந்த கூரையில் காரைகள் பெயர்ந்து, ஒட்டடைகள் படர்ந்து ஜன்னலில் அருகில் இருக்கும் மரத்தின் வேர் / கிளைகள் உள்ளே எட்டிப் பார்க்க, கண்ணாடி உடைந்த ஜன்னல் ஒன்றில் "சிங்கப்பூர் போஸ்ட்" முத்திரை தாங்கிய சாக்குப் பை ஒன்று பாதி மறைத்திருக்க, ( ஹ்ம்ம்.... இதிலும் ஓசியாக வந்த சாக்குதானா கிடைத்தது?) போஸ்ட் ஆபீஸ் சீர்திருத்தம் எப்போதான் இடம் பெறும் என்ற கவலையைக் கொண்டு வந்தது.

போஸ்ட் ஆபீஸ் நிர்வாகத்தில் நிறைய புதுமைகளைக் கொண்டுவருவது இருக்கட்டும்; இப்போதைக்கு இந்தத் துறை ரூ. 1500 கோடிகள் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

ஒரு போஸ்ட் கார்டுக்கு ஆகும் செலவு 336 பைசாஇதில் வருமானம் - 25 பைசா. நிகர நஷ்டம் 311. அல்லது ஒரு கார்டுக்கு அரசு அளிக்கும் தள்ளுபடி (subsidy) 311 என்றும் வைத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் நஷ்ட அளவைக் குறைக்க பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன - தனியார் துறைக்கு பாதி வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, நிறைய வியாபாரம் இல்லாத போஸ்ட் ஆபீஸ்களை எடுத்துவிட்டு, அடிப்படை ஸ்டாம்பு, கவர் விற்பனைகளை சாதாரண கடைகளில் விற்க அனுமதி அளிப்பது போன்ற திட்டங்கள். பின்னே? தபால் துறையும் ஒரு நாள் காலத்திற்கேற்ப ஜீன்ஸ¤க்கு மாற வேண்டாமா?

5 comments:

Anonymous said...

சரியான தீர்ப்பு !!!!!!

Anonymous said...

நல்லா இருக்குங்க இந்த பதிவு. நீங்க உண்மைய அழகாக சொல்லிட்டீங்க.
-பாலாஜி-பாரி

Anonymous said...

அருணா : நீங்கள் சொல்வது போல வர்த்த நிறுவனங்களுக்கு, இந்திய தபால் துறை தான் குறைந்த காசுக்கு நிறைவான சேவை அளிக்கிறது. இந்தியாவில் இருந்து எந்த மூலைக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றாலும், நாலு ரூபாயில் அனுப்ப முடியும் ( எடை நாற்பது கிராமுக்குள் இருந்தால் ). ஆனால் இதுவே கொரியர் என்றால், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விலை. நாட்டில் உள்ள பல பத்திரிக்கைகள், அஞ்சல் துறை அளிக்கும் சலுகையை வைத்துத்தான், கொஞ்சமாவது லாபகரமாக நடக்கிறது.

பொது மக்களுக்கு கடிதம் எழுதுகிற பழக்கம் அடியோடு குறைந்து போனாலும், வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் பிசினஸ், அஞ்சல் துறை இன்னும் செழிப்பாக உதவியிருக்கிறது. தொழில்ரீதியிலே, நாங்கள், அஞ்சல் துறையின் பிசினஸ் போஸ்ட் என்ற சர்வீசுக்கு ரெகுலராக பிசினஸ் கொடுக்கும் வாடிக்கையாளார்கள். இடம், அரசாங்க வாடை அடித்தாலும், அவர்களின் பேச்சும், சர்வீசும், அரசாரங்கத் துறை மாதிரியே தோன்றவில்லை, ஏதோ ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்குள் உட்கார்ந்திருக்கிற அனுபவத்தைத் தான் தந்தது. அந்த டிவிஷனின் அதிகாரி, சென்ற புத்தாண்டுக்கு, நாலைந்து பொருட்கள் கொண்ட ஒரு கி·ப்ட் பாக்கட்டை, அனுப்பி வைத்து போனிலும் அழைத்து வாழ்த்துச் சொன்னார். இன்னாடா இது, நாம இந்தியாவிலே தான் இருக்கிறோமா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். ( வாடிக்கையாளார்களுக்கு தரச் சொல்லும் டைரி, காலண்டர், போன்ற அன்பளிப்புகளை, அரசு ஊழியர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு பர்சனலாகவே தெரியும், என் உறவினர் ஒரு அரசு ஊழியர்) அரசாசங்கமோ, தனியாரோ, வாடிக்கையாளர் தான் ராஜா என்று புரிந்து கொண்டால், எந்தப் பிரச்சனை வந்தாலும் மீண்டு எழுந்து விடலாம்.

Jayaprakash Sampath said...

the previous post was mine.

Aruna Srinivasan said...

பாலாஜி, பிரகாஷ் மற்றும் அனானி, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.