Tuesday, March 22, 2005

ரொம்ப நாளாக இந்த காப்புரிமை சமாசாரத்தை இந்தியா ஒத்திப் போட்டு வந்தது. உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைபடி, கடந்த ஜனவரி 1 ந் தேதி இதை நாம் நிறைவேற்றியிருக்க வேண்டும். கடந்த பல மாநாடுகளில் இந்தியாவின் மீது இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு கடுப்பு இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக மருந்து உற்பத்தியில் அங்கே உற்பத்தியாகும் மருந்துகளை நாம் இங்கே அபப்டியே உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கு காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து அதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு மருந்தை அப்படியே இங்கே உற்பத்தி செய்யாமல், செய்யும் முறைகளை நமக்கேற்றவாறு சில மாற்றங்கள் செய்து நாம் இங்கே உற்பத்தி செய்தால் அதற்கு original காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. அதாவது ஒரு முடிவான பொருளுக்குதான் காப்புரிமை, அதன் செய்முறைகளுக்கல்ல என்ற வாதத்தின் அடிப்படையில் பல வெளிநாட்டு மருந்துகள் இங்கே உற்பத்தி செய்யப்பட்டு சகாயமான விலைக்கு கிடைத்து வந்தது. இந்த Pharma சமாசாரம் ஒரு பகுதிதான். இன்னும் இதில் எவ்வளவோ சாதக / பாதகங்கள் உள்ளன.

இப்போதுதான் டிவியில் ஓடும் செய்திக் குறிப்பைப் பார்த்துவிட்டு வருகிறேன். ஹார்ட்வேரில் பதிக்கப்பட்ட மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாதாம். Embedded software. எனக்குப் புரிந்த அளவில் இது இந்திய மென்பொருள் துறையை மிகவும் பாதிக்கும் என்று தோன்றுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே நாம் பெரும்பாலும் இந்த embedded software செய்வதில்தாம் வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது செல்போன்களில், டிவி, போட்டோ என்று உலகத்தையே அடக்கி உற்பத்தி செய்யும் நிலையில் இதற்கு தேவையான மென்பொருள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள்தாம் முதல் நிலையில் உள்ளன. இது மாதிரி இன்னும் எத்தனையோ சரக்குகளின் "குடலுக்குள்ளே" பொதிந்திருப்பது இந்திய நிறுவனங்களின் மென்பொருட்கள்.

மூன்றாவதாக விவசாய சம்பந்தமான காப்புரிமைகள். இதுவும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயம். இப்போதே வந்தனா சிவாவின் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்துவிட்டது :-)

தற்போது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள - முதலில் எதிர்த்த இடதுசாரிகள் ஓரளவு இப்போது ஏற்றுகொண்ட - இந்த மசோதாவில் என்ன இருக்கிறது என்பதை இனிதான் சற்று கண்ணில் பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும்.

கூடிய விரைவில் வருகிறேன் - எனக்கு புரிந்த அளவு விஷய்ங்களுடன். மற்ற பதிவுகளும் இதைப் பற்றி அலச தயாராக இருந்தால் கலந்து கொள்கிறேன்.

2 comments:

Narain Rajagopalan said...

மிக முக்கியமான பதிவிது. ஏற்கனவே என் பதிவிலிட்டிருந்ததிற்கு எதிர்வினையாக, கணேசன் மருந்துகள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவினை தந்திருந்தார். ஆனாலும், நமக்கு மாற்று வழிகள் இருப்பது போல் தோன்றுகிறது. இது ஒரு யூகம்தான், மற்றபடி பூரணமான விஷயஞானமில்லை. வந்தனா சிவா மட்டுமல்ல, எனக்கு நிறைய குரல்கள் கேட்கிறது (அருந்ததி ராய், பால் சக்கரியா, மேதா பட்கர், நம்மாழ்வார், முனைவர் சுவாமிநாதன் :-))

Embedded software இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பங்களுரில் கடைப்பரப்ப மிக முக்கிய காரணம் இவ்வகையான மென்பொருள் உற்பத்திதான். ஆனாலும், இந்தியாவின் தலையான மென்பொருள் நிறுவனங்கள், software customisation & maintenance மூலமாகதான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆக, பாதிப்பு கொஞ்சமாக தான் இருக்குமென்பது என் எண்ணம். ஏனெனில் நானறிந்தவரை 2000 பிறகு, நிறைய மென்பொருள் நிறுவனங்கள் ஒருவிதமான ஹைபிரிட் அணுகுமுறையை கையாளுகின்றன. அமெரிக்க சிலிகன் வேலியில் நிறுவனத்தினை பதிவு செய்துவிட்டு, தயாரிக்கும் பொருட்களின் காப்புரிமையை அங்கேயே வாங்கிவிடுகிறார்கள். மொத்த தயாரிப்பும், மென்பொருள் வடிவமைப்பும் இந்தியாவில் நடக்கிறது. இந்திய நிறுவனங்களாயிருந்தாலும், அவை முழுக்க முழுக்க சட்டரீதியாக அமெரிக்க நிறுவனங்கள் ;-)

ஏற்கனவே மான்சாண்டா விதைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்து இப்போது தான் கொஞ்சமாய் அடங்கியிருக்கின்றன. பார்ப்போம் இப்போது என்ன நடக்கிறதென்று.

Voice on Wings said...

//ஹார்ட்வேரில் பதிக்கப்பட்ட மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாதாம். Embedded software. எனக்குப் புரிந்த அளவில் இது இந்திய மென்பொருள் துறையை மிகவும் பாதிக்கும் என்று தோன்றுகிறது.//

எனக்குத் தெரிந்த வரையில் இக்கூற்றில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. கருவிகளில் பதிக்கப்படும் செயலிகளை (embedded software) Wipro, Sasken போன்ற பல நிறுவனங்கள் காப்புரிமையுடன் தயாரித்து வருவதாகவே தெரிகிறது.

Pharma விஷயத்தில் கொஞ்சம் சிக்கல்தான். 97% வரை பாதிப்பில்லையென்றாலும், மிஞ்சிய 3%க்குள் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தும் அடக்கம். இது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்க்குமே ஏற்பட்ட பின்னடைவுதான். ஏனென்றால், மலிவு விலையில் இந்திய மருந்துகளை வாங்கி வந்த இந்த நாடுகள், இனி விலையுயர்ந்த மேலை நாடுகளின் மருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை. Cold capitalism takes precedence over humanitarian considerations!