Friday, March 11, 2005

டில்லியில் இருந்த சமயம் அது. ஒரு பேட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். பேட்டி காண வேண்டியவர் ஒரு ஓவியர். வங்காளப் பெண். அவரைப் பற்றி பின்புலன் விஷயங்கள் சேகரிக்கும்போது அறிந்து கொண்ட ஒரு விஷயம் மனதில் கொஞ்சம் நெருடிக் கொண்டிருந்தது. ஒரு மாதிரி விலாசம் தேடி அவர் வீட்டுக்கு சரியான நேரத்திற்கு சென்று விட்டேன். ஆனால் வாசலில் இருந்த கேட்டைத் திறக்குமுன் மனசுக்குள் ஒரு சின்ன கலக்கம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். அமைதியாக எல்லா வீடுகள் மாதிரிதான் இருந்தது. திறந்து உள்ளே போய் காலிங்க் பெல்லை அமுக்கியதும் கதவைத் திறந்தது அவரேதான். பார்க்கவும் சாதாரணமாகதான் ஒரு சூரிதார் அணிந்திருந்தார். வேறு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. அறையை சுற்றி நோட்டம் விட்டேன். ஒரு ஓவியர் வீடு என்று தெரிந்தது. கலை வண்ணம் மிக்க அலங்காரம். மற்றபடி நான் கேள்விபட்ட சமாசாரத்திற்கான அடையாளம் ஏதுமில்லை.

சற்று யோசித்தவாறே அமர்ந்தவளிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் வேலையாள். பேட்டிக்கு சுருதி சேர்க்கும் வண்ணம் ஏதேதோ சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தவள், சட்டென்று வாய் தவறி மனதில் தொங்கிக் கொண்டு, தொண்டைக் குழியில் மாட்டிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேவிட்டேன்.

" நீங்கள் ஒரு சூன்யக்காரி என்று கேள்விபட்டேனே...."

கட கடவென்று சிரித்தார் அவர். " கரெக்ட்.. ஓ, அதனால்தான் கொஞ்சம் தயங்கினாற்போல் இருக்கிறீர்களா? சூன்யக்காரி என்றால், துடைப்பத்தின் மேல் ஏறி வருவேன் என்று எதிர்பார்த்தீர்களா?" என்று சிரித்து என்னுடன் இயல்பாக உரையாடத் தொடங்கியவுடன் என் உதறல் கொஞ்சம் நின்றது. நாற்காலியில் நன்றாக உட்கார்ந்து கொண்டு ஓவியம் பற்றிய பேட்டியைத் தொடங்கினேன். (சூன்யக் கலை பற்றி அப்புறம்..)

இப்ஸிதா ராய். ஓவியர். இந்தியாவின் முதல் 21ம் நூற்றாண்டு மாடர்ன் சூன்யக்காரி. தொழில் முறையில் சூன்யக் கலையில் படித்து தேர்ந்தவர். இந்தக் கலையைப் பற்றி Beloved Witch, Sacred Evil போன்ற புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சென்ற வாரம் எகனாமிக் டைம்ஸ் பத்த்ரிகையின் ஒரு துணை பதிப்பில், நடிகை சரிதா சூன்யக்காரியாக நடிக்கப்போவதாக செய்தி வெளி வந்திருந்தது. அந்தப் படம் இந்த இப்சிதா ராயின் Sacred Ecil என்கிற புத்தகத்தில் வரும் ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையா க வைத்து எடுக்கப்படுகிறது. தான் எப்படி இந்த துறைக்கு வந்தார், சூன்யக் கலையின் சிறப்புகள் என்று தன் அனுபவங்களையும் தான் ஈடுபட்ட சில குறிப்பிட்ட சூன்ய நிகழ்ச்சிகளையும் புத்தகமாக எழுதியுள்ளார். டில்லியில் அப்போது சூன்ய வகுப்புகளும் எடுத்து வந்தார். - 1994 ம் வருடம் என்று நினைக்கிறேன்.

அவரிடம் பேசினதெல்லாம் இப்போது அவ்வளவாக நினைவில்லை. அந்த பேட்டி வெளியான அந்த பழைய இதழும் இப்போது என்னிடம் காணவில்லை. ( மாயமாய் மறைந்ததோ??!!!)

ஆனால் வெகு நாட்களுக்குப் பிறகு இவர் பெயரைப் பத்த்ரிகையில் படித்ததும் எனக்கு அவரை சந்திக்க சென்ற அந்த நாள் நினைவிற்கு வந்துவிட்டது. அவர் கூறிய சில விஷயங்கள் - என் நினைவிலிருந்து தோண்ட முடிந்தவரை :-)

" சூன்யம் என்பது ஒரு சிறப்பான கலை. இந்த வித்தையின் வெற்றி, அடிப்படையில் பஞ்ச பூதங்களின் சக்தியை ஆக்கபூர்வமாக ஒருமுனைப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் பல வியாதிகளையும் குணபப்டுத்த முடியும். அடிப்படையில் இது ஒரு அறிவு சம்பந்தமான துறை. எவரையும் துன்புறுத்த வேண்டும் என்று யாரும் இதை உருவாக்கவில்லை." இந்த ரீதியில் இருந்தது அவர் பேசியது.
கிட்டதட்ட இந்த பேட்டிக்காக இவரை சந்தித்த அடுத்த சில நாட்களில் இன்னொரு வேலை வந்தது. சேஜோ சிங் என்ற பெண் witch hunt என்ற பெயரில் இந்திய கிராமங்களில் "வேண்டாத" பெண்கள் துன்புறுத்துவது பற்றி ஒரு டாகுமெண்டரி படம் எடுத்திருந்தார். இந்தப் படத்தையும் பார்த்து இவரையும் பேட்டி காணும் வேலை.

பீஹார், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இன்றும் சூன்யக்காரிகள் என்று பெயர் சூட்டபட்டு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று இந்தப் படம் விரிவாக விளக்கியது. சூன்யக் காரிகள் என்று அழைக்கப்பட்டு ஊர் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இருக்கும் மூன்று பெண்களின் பேட்டிகளும், இந்த சூன்யக்காரிகளை "குணமாக்கும்" ( நம்ம ஊர் பேய் விரட்டுதல்???) பூசாரி ஒருவரின் பேட்டியும் இதில் இருந்தது. ஒரு பெண்ணின் கணவர் விட்டுச் சென்ற நிலம் அவர் பெயரில் இருப்பதை அபகரிக்க நினைக்கும் உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணிற்கு சூன்யக்காரி பட்டம் கட்டி "தண்டிக்கப்படுகிறார்." இப்படி பழி சுமத்தபப்ட்ட பெண்ணிற்கு யாராவது ஆதரவாக பேசினல் அவர்களும் தண்டிக்கபப்டுவார்கள். சில சம்யம் குடும்பமே "சூன்யக் குடும்பம்" என்று தண்டிக்கப்படுமாம். இவர்களிடமிருந்து தண்டனையாக அதிகமாக பணம் செலுத்த வைப்பது, அவர்களால் முடியாவிட்டால் ஊரிலிருந்து தள்ளி வைப்பது, அடித்து துன்புறுத்துவது என்று இவர்கள் படும் இன்னல்கள் பல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், வறுமை அதிகமாகும்போதெல்லாம் இப்படி சூன்யகாரி வேட்டையும் அதிகமாகிறதாம். தாங்கள் படும் கஷ்டங்களுக்கு யார் மேல் பழி போடலாம் என்று தேடுவது மனித இயல்பு. இதன் அடிப்படையில்தான் இந்த சூன்யக்காரிகள் வேட்டை நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து, படமும் எடுத்த சேஜோ சிங் கூறினார். சில சம்யம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் காணாதது மாதிரி பஞ்சாயத்தும் போலீசும் இருக்கின்றன என்றார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நகர்புறங்களில் ஒரு மாதிரி என்றால் கிராமப்புறங்களில் இன்னொரு வகை.

இந்தப் படம் எடுக்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இன்று நிலைமை எப்படி இருக்கிறது? அந்த சேஜோ சிங்கையும், இப்சிதா ராயையும் மறுபடி கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இளம் தலைமுறை செய்தியாளர்கள் யாராவது ரெடியா?

8 comments:

Dr.N.Kannan said...

இது பற்றி இன்னும் கூடச் சொல்லுங்களேன். இப்போதுதான் முதல் முறை சூன்யம் பற்றி பாசிடிவ்வ்வாகக் கேட்கிறேன். ஹேரி பாட்டர் படங்கள் சூன்ய வித்தை பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை தோற்றுவித்து வருகிறது. ஆனால் ஏன் இந்த சூன்யக்காரர்கள் எப்போதும் இந்தியான ஜோன்ஸில் வரும் ஓம் பூரி மாதிரியே பயங்கரமாகக் காட்டப்படுகின்றனர். இக்கேள்வியை நிச்சயம் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

அன்புள்ள அருணா,

இங்கே எங்க ஊரிலே( கிறைஸ்ட்சர்ச், நியூஸி)கூட ஒரு 'சூனிய படிப்பு' சொல்லித்தர்ற
இடம் இருக்கு. வெளியே அறிவிப்புப்பலகையை மட்டுமே பார்த்திருக்கேன். ஒரு சூன்யக்காரி,
துடைப்பக்கட்டையிலே ஏறி வர்றதுபோல படம் இருக்கும்!

உங்க வாரம் நல்லாப் போகுது!!! வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
துளசி.

Aruna Srinivasan said...

கண்ணன்,

எனக்கு ஞாபகம் இருக்கும்வரையில் அவர் கூறிய விளக்கம், பொதுவாக Human pshychology தான் காரணம். ஆரம்ப காலத்தில் மனித மனத்திற்கு / எண்ணங்களுக்கு இருக்கும் சக்தி பற்றி அறியாமை. நம் மூளைக்கு அப்பாற்பட்ட சங்கதியென்றால் அதற்கு ஒரு அமானுஷ்ய வடிவம் - நல்லது, தீயது என்று - கொடுப்பது மனித இயல்பு. பஞ்ச பூதங்களை வணங்கும் வழக்கம் பரவலாக உலகில் எல்லா ஆதிப் பழங்குடியினரிடமும் இருந்தது. - ஒழுங்கமைக்கபப்ட்ட மதங்கள் பிறக்கும் முன்னரே. பின்னர் மதங்கள் என்று குழுக்கள் உருவாகினபோது பழங்குடி மகக்ள் வழிபட்ட நம்பிக்கைகள் எல்லாம் தீயன என்று பட்டம் சூட்டபப்ட்டது. சூன்யக்காரிகள் தீயவர்கள் என்று ஒரு வடிவம் கொடுக்கபப்ட்டது இந்தக் கால கட்டத்தில்தான் இருக்க வேண்டும். அதுபோல் சூன்யக் காரன் ஏன் இல்லை? ஏன் சூன்யக்காரி என்று பெண்கள் இப்படி பட்டம் பெற்றனர் என்பதற்கும், இபப்டி ஒரு பட்டம் கட்டி சில பெண்களைக் கொடூரமானவர்கள் என்று சித்தரிப்பதற்கும் பெண்களுக்கு எதிரான ஒரு மனோபாவம் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க, ஆதிகாலத்தில் - மதங்கள் வேர் பிடிப்பதற்கு முன்னால் மக்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள் இவையெல்லாம் பரவலாக ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்றன. அடிபப்டையில் பயமும் நன்றியுணர்ச்சியும் தான் வழிபாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் நிறைய இருக்கிறது. ஒரு நாள் சாவகாசமாக எழுத வேண்டும் :-)

இதன் நடுவில், சூன்யக் கலையின் சரித்திரம், இது எப்படி இன்று மறு அவதாரம் எடுத்துள்ளது என்பதற்கு இந்த தளத்திற்கு சென்று பாருங்கள். இணையத்தைக் குடைந்தீர்களானால் எக்கச்சக்கமாக மாடர்ன் wicca பற்றி கிடைக்கும்.

http://www.freewebs.com/indianwitch/index.htm

http://www.geocities.com/Athens/2962/media/smh11_12_96.html

துளசி,

துடைப்பமும் சூன்யக்காரியும் எப்படி / ஏன் தொடர்பு கொண்டார்கள் என்பது இன்னமும் சரியாக தெரியவில்லை. ஆனால் ஒரு ஊகம் - துடைப்பம் என்பது சுத்தம் செய்ய ஒரு சாதனம். தீயதை அல்லது எதையோ விரட்டுவது என்பது இவர்கள் தொழில் ஆதலால், துடைப்ப "வாகனத்தை" ஒரு அடையாளமாக கொண்டிருக்கலாம். :-) கண்ணனுக்கு எழுதியுள்ள அந்த தளங்களையும் சற்று பாருங்கள்.

நாலாவது கண் said...

அக்கா,

//இளம் தலைமுறை செய்தியாளர்கள் யாராவது ரெடியா?//

இந்த கேள்வியை என்னைப் பார்த்து அல்லது என்னை நினைத்தும் வீசியிருக்கக்கூடும் என்று நம்புகிறேன். உண்மை என்னவோ! ஆனால் இதுபோல வித்தியாசமான பேட்டிகளை எடுக்க எந்த பத்திரிகையாளனும் விரும்புவான் என்றாலும், - நான் நினைப்பது ஒரு துறையின் வித்தகர்களை பேட்டி காணச் செல்லும்முன் போதுமான homework பண்ணிக்கொண்டு செல்லவிட்டால் அந்தப் பயணம் கசப்பாக முடியலாம் என்பதுதான்.

நம்புகிறீர்களோ, இல்லையோ... சூனியக்காரிகள் துடைப்ப வாகனத்தின் மீது வருவார்கள் என்பதே எனக்கு செய்தியாகத்தான் இருக்கிறது. அதனால் எனது குடும்பம் எதோ ஈ வே ரா. பெரியாருக்கு அடுத்து, பகுத்தறிவு சொன்ன குடும்பம் என்று சொல்லிக் கொள்வதாக நினைத்துவிட வேண்டாம்.

படிப்பின் (புத்தகம், செய்தித்தாள் இரண்டும்தான்) முக்கியத்துவம் அறியாத கிராமப் பின்னணியில் இருந்து வந்து, கல்லூரி காலம்வரை விருப்பத் தேர்வு என்று எதுவும் இல்லாமலே, கிடைத்ததை படித்து வளர்ந்து... தேடல் என்பதை பிற்காலத்தில் தொடங்கி என்னிடம் 'சூனியக்காரிகள்' யாரும் இதுவரை சிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. முதலில் நான் சூனியக்காரிகள் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அதைத்தாண்டி எனது விருப்பத் தேர்வு என்பது வேறுதுறைகளில் இருப்பதால் அத்தகைய ஒரு வாய்ப்பு எதையாவது தாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்போது அதிக வேகத்துடன் உங்களுடன் பாய்ந்து வருவேன். இப்போது ''இல்லை''.

'இல்லை' என்பதை ஒருவார்த்தையில் சொல்லியிருக்கலாமே, என்றுதானே சொல்கிறீர்கள். நியாயம்தான். சில நேரங்கள் இப்படி அமைந்துவிடுகின்றன.

- சந்திரன்

Kasi Arumugam said...

சந்திரன்://படிப்பின் (புத்தகம், செய்தித்தாள் இரண்டும்தான்) முக்கியத்துவம் அறியாத கிராமப் பின்னணியில் இருந்து வந்து, கல்லூரி காலம்வரை விருப்பத் தேர்வு என்று எதுவும் இல்லாமலே, கிடைத்ததை படித்து வளர்ந்து...//

ஆஹா... நல்லாச் சொன்னீங்க.

இந்த மேற்குலக சூனியக்காரிகளின் அதிகாரப்பூர்வ வாகனம் ஒட்டடைக்குச்சி. இன்னும் அவர்களின் உடை, வண்ணம், உணவு என்று எல்லாத்துக்குமே ஒரு ஸ்டீரியோடைப் அடையாளம் இந்த ஊர் 5 வயசுக் குழந்தைகளைக் கேட்டாலே சொல்லுமளவுக்கு கார்ட்டூன்களிலும் புத்தக்கங்களிலும் வருகிறது. அதனால் நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

எனக்கும் இதன் மேல் இம்மியளவும் நம்பிக்கையில்லையாதலால் அதிகம் ஆர்வம் இல்லை. இங்கே என் மகள் பாலர்பள்ளியிலேயே இதெல்லாம் சொல்லிக்கொ(கெ)டுத்துவிட்டார்கள்

Aruna Srinivasan said...

அட, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் சந்திரன்.... டேக் இட் ஈஸி :-) காசி, அது துடைப்பமா, ஒட்டடைக்குச்சியா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம் போலிருக்கே !! உங்கள் மகளிடமிருந்து புத்தகத்தை வாங்கி இன்னொரு முறை பாருங்க. நின்றவாறே பெருக்கும் துடைப்பம் அது. படத்தைப் பார்த்தால் நம்ம ஊர் ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்கும். துளசி, நீங்க என்ன சொல்றீங்க? :-)

Kasi Arumugam said...

அருணா,

கப்பென்று பிடித்துவிட்டீர்கள். அது குச்சியில் கட்டப்பட்ட துடைப்பம், எளிதில் நெகிழும் துடைப்பங்களையேபார்த்த கண்ணுக்கு அது ஒட்டடைக்குச்சியாய்த தெரிந்தது.
சந்திரன்
இந்தப் படம்
பாருங்க.

Chandravathanaa said...

சூன்யக்கலை பற்றிய வேறொரு பார்வை இதைப் படித்ததன் மூலம் கிடைத்தது.
சூன்யக்காரி என்ற அழுத்தத்துடனான பதத்தைப் பற்றி நான் என்றைக்குமே பெரிதாகச் சிந்தித்ததில்லை. ஆனாலும் பெண்களை சாடுவதற்கு என்று சும்மாவே ஏற்படுத்தப் பட்ட சொல் என்பது போன்றதான ஒரு பிரமை இச் சொல் பற்றி என்னுள் இருந்தது.

அருணா உங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாக இருந்தன.