Monday, March 07, 2005

கைதட்டலோ / அழுகிய தக்காளியோ........ :-)

வலைப் பதிவுகளைத் தொடர்ந்து இந்த 22 மாதங்களாக கவனித்து வருபவள் என்ற முறையில் சில அடிப்படை என்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
சென்ற வாரம் கண்ணன் எழுதியிருந்தார் - மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதினாலும் யார் படிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை; பின்னூட்டங்கள் வருவதில்லை என்று எழுதியிருந்தார். அவ்வளவுதான்; ஊதிய தணல் நெருப்பாய் எரிவதுபோல் மட மடவென்று அந்த பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பின்னூட்டம் வந்து சேர்ந்தது. பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, நாம் எழுதுவதை சிலர் - பல சம்யம் பலர் - படிக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. மீனா சொன்னதுபோல் பின்னூட்டம் விடாமல் இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கருத்து பெட்டி காலியாக இருக்கே என்று மனம் சோர்ந்துவிடாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே அல்லது, கருமமே கண்ணாயினார் என்பதுபோல் நம் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் எழுதி விண்வெளியில் நமது குடிலில் போட்டுவிட வேண்டும். கண்காட்சி மாதிரி ஸ்டால் போட்டச்சு என்றால் அதை அழகுறவும் ஆரோக்கியமானதுமாக வைத்துக் கொள்வது நம் வேலை. அதனால் இடையில் அவ்வப்போது தொய்ந்து போகாமல் எழுதுவது முக்கியம். என்ன எழுதுவது, எது, எப்படி, ஏன் என்பனவெல்லாம் தானே இயல்பாக வரும். இன்று சிக்கல் பதிவில், தமிழ்ப்பாம்புவின் ஒரு நோக்கு ( observation) சுவாரசியமாக இருந்தது. பல பதிவுகளின் தலைப்பில் பதிவாளர்களுக்கு தங்களைப் பற்றி தாங்களே சொல்லிக்கொள்வதிலிருக்கும் தயக்கம் வெளிப்படுவதாகவும், இது தமிழர்களுக்கே உரித்தான ஒரு இயல்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
என் நோக்கில் நம்முடைய இன்னொரு இயல்பான செயல் சட்டென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதுதான். உலகின் பல மூலைகளில் இருந்தாலும் முன் பின் பார்த்தறியாமல் இருந்தாலும் ஒரு சினேக பாவம் பல பதிவுகளில் / பின்னூட்டங்களில் இழையூடுகிறது. சீண்டல்களும், நகைச்சுவையும் பதிவுகளுக்கு சுவாரசியம் கூட்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது சில சமயம் அளவு மீறி குழந்தைத் தனமாக ஆகிவிடாமலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுதலும் தமிழர்கள் குணம். பதிவுகளும் இதை ஓரளவு பிரதிபலிக்கின்றன. இங்கும் எழுதும்போது சுய கட்டுப்பாடு ஓரளவு இருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகத்தில் எள்ளி நகையாடுதலோ பிறரை புண்படுத்தும் வகையிலோ இருப்பதை தவிர்க்கலாமே. அப்போது பூக்களின் வாசம் இன்னும் மேன்மையாக இருக்கும்.

திசைகளின் வாரந்தோறும் பூ வாசம் என்று அந்தந்த வாரத்து பூக்களிலிருந்து சிலவற்றை மாதிரிக்கு காட்டும் பணி வேறு இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இது இன்னும் நிறைய பேரை வலை பதிய தூண்டும் என்று நினைக்கிறேன். இதனால் வரும் நாளில் பதிவுகள் அருவியாக பெருகி விழும்போது, ஒருவருக்கொருவர் மற்ற பதிவுகளைப் படித்து ரசித்து நம் எழுத்துக்கும் மெருகூட்டுவது வலைப் பதிவுகளின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும்.
பதிவுகளை பலவாறு வகைப் படுத்தலாம். சொந்த அபிப்பிராயங்கள் - எல்லாத் துறையிலும் ; பயனுள்ள செய்திகள் / கற்றுக் கொள்ளத்தக்கவை; அனுபவம் பகிர்தல்; மற்றும் நகைச்சுவை அல்லது just fun and entertainment. இந்த நான்கு பெரிய வகையினுள் பல கிளைகளும் உண்டு - அரசியல், சினிமா, வாழ்க்கை, கலாசாரம், நாட்டு நடப்பு, சமூக இயல், பாஷன், அலங்காரம், உணவு, என்று எத்தனையோ வகை. பல புதிய பதிவுகளில் இப்படி நிறைய வித்தியாசமான அம்சங்களைக் காண்கிறேன். ஒரு missing விஷயம் பாஷன், அலங்காரம், உடை போன்ற life style சமாசாரங்கள். தமிழர்களுக்கு இவற்றில் ஆர்வம் கொஞ்சம் கம்மியோ?? பாண்டிபஜாரையும் உஸ்மான் ரோடையும் வலம் வந்தால் அப்படி தெரியவில்லையே ? :-)

சில பதிவுகளில் என்ன எழுதுவது என்ற ஒரு குழப்பம் காணபப்டுகிறது. எதையோ எழுத வேண்டும் என்று பக்கத்தை நிரப்பாமல், தான் என்ன சொல்ல விரும்புகிறோம் என்று மனசுக்குள் தெளிவாக்கிக் கொண்டு பிறகு எழுதினால் எழுத்தில் ஒரு கூர்மை இருக்கும். அதேபோல் என்ன எழுதுவது என்று விஷயத்துக்கும் ரொம்ப யோசிக்க வேண்டாம். தினம் நாம் எதிர்படும் - கண்ட, கேட்ட, அறிந்துகொண்ட விஷயங்களையே எளிமையாக சுவாரசியமாக எழுதலாம். ஆனால் எந்த விஷய்மானாலும் அதில் ஒரு பிடிப்போடு கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு எழுதினால் அதில் ஆழம் இருக்கும். எழுதும்போதே உங்களை ஒரு வாசகராக நினைத்துக் கொள்வது ஒரு நல்ல உத்தி. குஷ்வந் சிங் அடிக்கடி சொல்லுவார். " நான் எதைப் படிக்க விரும்புகிறேனோ அதைத் தான் எழுதுவேன்." என்று. அதேபோல் எழுதும் விதத்தில் craft க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நெடு நாள் விவாதம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் ஒரு விஷயம்/ செய்தி பகிர்தல் இருக்கா என்பதும் எழுதும் விதத்தில் படிப்பவர்களோடு ஒரு இணைப்பு அல்லது தொடர்பு ( RELATE) ஏற்படுத்த முடிகிறதா என்று பார்ப்பேன். craft எனக்கு அவ்வளவு முக்கியமாக படாது - நல்ல craft ஆக இருந்து படிப்பவர்களிடம் அது ஒரு தொடர்பு ஏற்படுத்தவில்லையென்றால் அந்த CRAFT வியர்த்தமே. அதுபோல் எழுதும்போதே யாருடன் பேசுகிறீர்கள், யார் படிப்பார்கள் என்று மனசில் ஒரு பிம்பம் வைத்துக் கொண்டு "பேசுங்கள்". பின்னூட்டம் வருவது மட்டுமே ஒரு பதிவுக்கு முக்கியம் அல்ல. அதேபோல், என்ன மாதிரி எழுதினால் பின்னூட்டம் வரும் என்று நினைத்துக் கொண்டு எதையோ தொடர்பில்லாமல், ஆழமில்லாமல் எழுதுவதும் உசிதமல்ல - என் பார்வையில்.

என் பதிவுகளில் மேலே கூறியவற்றை முழுவதுமாக பின்பற்றுகிறேனா என்பது படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் அச்சு ஊடகத்தில் எழுதும்போது நான் பின்பற்றும் அதே சுய விதிகளைதான் பதிவுகளிலும் பின்பற்ற முயலுகிறேன். ஒரு வித்தியாசம் - பதிவுகள், மேடை நாடகம் மாதிரி. உடனுக்குடன் கைதட்டலோ / அழுகிய தக்காளியோ கிடைத்துவிடும். இதர ஊடகங்களில் சற்று நிதானமாகவே உணர முடியும் :-)

6 comments:

Thangamani said...

கைத்தட்டல் :)

Anonymous said...

உங்களுக்கு இது கிடையாது, நிச்சயம் (இப்போதைக்காவது) இதுதான். :-)

இராதாகிருஷ்ணன் said...

//கண்காட்சி மாதிரி ஸ்டால் போட்டச்சு என்றால் அதை அழகுறவும் ஆரோக்கியமானதுமாக வைத்துக் கொள்வது நம் வேலை.//
ஜோரா...சத்தம் கேட்டதுங்களா? :)

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

கைத்தட்டல் :) கைத்தட்டல் :) கைத்தட்டல் :) கைத்தட்டல் :)

Aruna Srinivasan said...

பதிவை ஏற்றிவிட்டு தூங்கப் போய்விட்டேன். காலையில் வந்து பார்த்தால், அடேங்கப்பா..... கைதட்டல் சத்தம் நல்லாவே கேட்குதே..... தங்கமணி, கிருபா, ராதாகிருஷ்ணன், ஜெயந்தி, மூர்த்தி, மிக்க நன்றி.... கைதட்டல் ஓசை வரும்போது மேடையில் முதுகை வளைத்து, கைகூப்பி நன்றி கூறுவாங்களே... அதையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். :-)

மாலன் said...

பின்னூட்டம் பற்றிப் பின்னிட்டீங்க. பதிவுகளைப் பற்றிய இந்தப் பதிவுக்கு நான் என் பதிவில் ஒரு பதிவு பதிந்திருக்கிறேன். பதிந்துவிட்டு, மன்னிக்கவும், படித்துவிட்டு, ஒரு பின்னூட்டம் தாங்க