Wednesday, March 09, 2005

நேற்று மார்கெட் போகும்போது அப்படியே சலவை நிலையம் போகும் வேலையும் இருந்தது. அங்கே இருக்கும் பெண் எப்போதும் நான் துணிகளைக் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மௌனமாக கடமையாக - இயந்திரம் போல் செய்வார். நேற்று நான் போகும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை. புது புடவைக் உடுத்திக்கொண்டு முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே "என்ன, Women's Day" என்று கொண்டாட்ட மூடில் இருக்கிறீர்களா என்று பேச்சு கொடுத்தேன். அவரும் சிரித்துக் கொண்டே, கொண்டாட்டம்லாம் சரிதான் ஆனா, நம்மை யாராவது மதிச்சால்தானேங்க கொண்டாட்டம் எல்லாம்," என்று இயல்பாக கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். எனக்கு அவர் ஏதோ சொல்ல நினைப்பதுபோல் பட்டது... அவருடைய எண்ணச் சிதற்கள் கீழே விழும்போதே பிடித்துவிடும் ஆர்வத்தில் "என்ன சொன்னீங்க..."? என்று மறுபடி வினவும்போது அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டார். அந்தக் கடையை அவரும் அவரது கணவருன்தான் நடத்துகிறார்கள். அவரது கணவர் கௌண்டர் பின்னாடி இருந்த அறையில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் பெண் சொல்ல வந்ததை ஏன் முழுங்கினார் என்று புரிந்துவிட்டது. அவர் என்ன சொல்ல வந்தார் என்று உங்களுக்கும் அவர் கோடி காட்டிய ஒரு வரியிலேயே புரிந்திருக்கும்.
பத்மா அரவிந்த், என் நேற்றைய பதிவிற்கு அளித்த தன் பின்னூட்டத்தில், பெண்கள் இன்னல்படும் நிகழ்ச்சிகள் பலவற்றை சுட்டி காட்டி, நான் முன்னே சொல்லியிருந்த "ஆண்கள் மாற்றம்" எல்லாம் பரவாலாக இல்லை; மிகச் சிறிய சதவிகிதம்தான் அபப்டி மாற்றங்கள் நிக்ழந்துள்ளன என்று எழுதியுள்ளார். அவருக்கு என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கருத்தையே இங்கும் முன் வைக்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அநியாயங்கள் இன்னும் பல இடங்களில் நடக்கின்றன என்பதாலேயே கண் முன்னால் தெரியும் நல்ல மாற்றங்களையும் அங்கீகரிக்க வேண்டும் இல்லையா ? சந்திரவதனா குறிப்பிட்டமாதிரி இன்றைய இளம் தலைமுறையில் மாற்றங்கள் இயல்பாகவே தெரிகிறது. மேலே சொன்ன லாண்டிரி பெண் பெண்கள் கணவனிடமிருந்து ஒரு " மதிப்பை", மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிகிறது. அது கிடைக்கவில்லை என்று அவர் உணருகிறார். "காலத்தின் கட்டாயத்தினால்", இன்று அவர் கௌண்டர் முன் நின்று கணவருக்கு இணையாக வேலை செய்தாலும் அவரை, அவர் எண்ணங்களை மதித்து நாலு வார்த்தை பேச ஆள் இல்லை என்று அவருள் ஒரு வருத்தம் தென்பட்டது. நான் மேலே கேட்ட கெள்விக்கு மழுப்பலாக சமாளித்தார். லேடீச் டே என்றால் நாங்க தெரிஞ்ச சினேகிதங்க ஒருவருக்கொருவர் இனிப்பு பகிர்ந்து கொள்வோம். ஆனால் அப்படி ஒன்றும் எனக்கு நிறைய சினேகிதிகளும் இல்லை, " என்றார்.

எனக்கு அவர் குடும்பத்தை தெரியாது. ஆனால் நிச்சயமாக அவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவர் தன் மனைவியை இன்னும் சமமாக பாவிப்பார் என்பது என் ஊகம். மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் மில்லி மீட்டர் அளவாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக மாற்றங்கள் பொதுவாக கலாசாரம், சரித்திர பிண்ணனி, என்று இப்படி பல வேர்களைப் பொறுத்து நிகழ்கிறது. பெண்களை தாழ்வாக நினைக்கும் சமூகப் பார்வை பழைய ஆசிய பழங்குடி மக்களிடமும் ஆப்பிரிக்க பழங்குடியினரிடமும் கிடையாது. அங்கே தாய் முறைதான் வம்சாவளி. ஆனால் ஜப்பானில் இன்னும் பெண்களுக்கு சம உரிமை அரிது. பல அலுவலகங்களில் இன்றும் தேநீர் தயாரித்து கொடுப்பது போன்ற உபசரிப்பு வேலைகள் பெண் சக பெண் ஊழியர்களால் செய்யப் படுகின்றன என்று கேள்விபட்டேன். ( ஜப்பானில் இருக்கும் பதிவாளர்கள் அவர்கள் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ) பொதுவாக குடும்பங்களிலும் நம் பழைய தலைமுறை மாதிரி பெண்களை ஒடுக்கும் நிறைய பழக்கங்கள் உண்டு. ( கெய்ஷா பெண்மணிகள் ஒரு உதாரணம்)

நடுவில் வரும் சில கலாசார தாக்கங்கள் எப்படி ஒரு சமூகத்தின் பார்வையை மாற்றுகின்றன என்பதற்கு ஜப்பானும் ஒரு உதாரணம். ஜப்பானில், பல வருடங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் நாட்டை ஆண்டதாக சரித்திரம் இருந்தாலும் நடுவில் எப்போதோ அரசியல் சாசனத்தில் பெண் வாரிசுகள் அரசியாக முடியாது என்ற ஒரு கட்டுபாடு எப்படியோ இடம் பெற்றுவிட்டது. அதன்படி, இன்று ஜப்பானிய அரசியல் சாசனப்படி, இளவரசர் நருஹிட்டோவின் மகள் ராணியாக ஆள முடியாது. இன்று ஜப்பானின் அரசு குடும்பத்தில் வேறு ஆண் வாரிசுகளே இல்லாத நிலையில் இளவரசர் நருஹிட்டோவிற்கு அடுத்து யார் மகுடம் சூட்டுவது என்ற ஒரு கேள்வி எழும். இதற்கு வழி காண அரச குடும்பத்து பாட்டி ஒருவர் பெண் வாரிசுகள் அரசியாகலாம் என்று அரசியல் சாசனத்தை மாற்றும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஏற்கனவே ஜப்பானின் சரித்திரத்தில் 8 அரசிகள் ஆண்டதை மேற்கோள் காட்டுகிறார்.

ஜப்பானில் மறுமுறை சரித்திரம் எழுதப்படும் என்று நம்புவோம். நம் ஊரில் மேலே சொன்ன சலவை நிலையப் பெண் போன்றவர்கள் உண்மையாகவே தாங்கள் மதிக்கப் படுவதாக என்ணும் நாள் விரைவில் வரும் என்றும் நம்புவோம்.

3 comments:

Vijayakumar said...

நான் ஜப்பானில் இருந்தது கிடையாது.நிறைய ஜப்பானிய படங்கள் பார்த்திருக்கின்றேன். முக்கியமாக பழைய படங்கள். பழைய படங்கள் என்பதால் அன்றைய காலக் கட்டத்தைக் கூட பிரதிபலித்திருக்கலாம். ஆனால் இப்போது எப்படியென்று தெரியவில்லை. தமிழ் மரபை போன்றே வீட்டில் வரும் விருந்தினர்களை பெண்கள் வரவேற்பது போன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். வந்தவர்களுக்கு 'ஷேக்' கொடுத்து உபசரிப்பது முதல் சாப்பாடு பரிமாறும் வரை பெண்கள் தான் தரையில் முட்டிப் போட்டு விழுந்து விழுந்து வணங்கி வந்த விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண் அவளை அடக்கி வைத்திருக்கிறான் என்ற தோற்றம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் கலாச்சாரம் தான் பிரதிபலிக்கிறது. அந்த காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வதென்பதை பெண்கள் பார்த்தால் புரியும்.

சில காட்சிகளை பார்த்த போது ஜப்பானிய பெண்கள் முட்டி காலிட்டு மடங்கி மடங்கி வாழ்கிறார்களே என்றுக் கூட தோன்றும். ஒரு படக்காட்சி எப்படியென்றால், ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டரும் ஒரு விருந்தினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சேவகப் பெண் கையில் டீ கோப்பையுடன் வருகிறாள். கதவு மூடி இருப்பதால் கோப்பைகளை கீழே வைத்துவிட்டு, கதவை திறக்கிறாள். அறையில் இருப்பவர்கள் இவளை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தாலும், முட்டிகாலிட்டு தரையில் விழுந்து வணங்குகிறாள். பிறகு உள்ளே வந்து கதவை சாத்தி விட்டு, திரும்ப முட்டிக்கால் தலைவணங்கள்.

இந்த மாதிரி தலைவணங்கள்கள் ஆண்களும் செய்வார்கள், எப்போதென்றால் தங்களை விட பெரியவர்களை மரியாதைச் செய்யும் நிமித்தமாக.

இங்கே இட்டவை எப்படி உங்களுக்கு உதவுமென தெரியவில்லை. என்னில் ஜப்பானின் கலாச்சாரத்தைப் பற்றி பட்டதை இட்டிருக்கிறேன்.

Dr.N.Kannan said...

அருணா: மேலை, கீழை எல்லாம் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெவ்வேறு விகிதத்தில். கொரியப்பெண்கள் இந்தியப் பெண்களை விட வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண்ணுரிமை (மதிமர்களை மட்டும் வைத்துச் சொல்கிறேன்) பேசும் பெண்கள் அதிகம் என்று தோன்றுகிறது. ஆணுக்குக் கீழ்படிதல் ஒரு சமூக விழுமியம் இங்கு. ஆனால், தொலைக்காட்சிப் பெண்களெல்லாம் ஆண்களை அடித்து உதைக்கத் தயங்குவதே இல்லை :-) போன மாதம் சோல் நகரில் விபசாரத்தடைச் சட்டம் அமுலுக்கு வந்தபோது விலைமகளிர் பெரும் அணியாக போராட்டம் நடத்தினர். இது சுதந்திரமா என்ன என்று தெரியவில்லை. ஆனால் நடக்கிறது. எனக்குத்தெரிந்த ஜப்பானிய மாது சொன்ன ஒரு நிகழ்வு உண்மையிலேயே சுவாரசியமானது. அங்கு ஏன் ஆண்கள் உணவை உறிஞ்சி, உறுஞ்சி சாப்பிடுகிறார்களென்றால் அடுத்த அறையிலிருக்கும் பெண்ணிற்குக் கேட்கவேண்டும் என்பதற்காகவாம். நம்மவூரிலும் உணவு பரிமாறிவிட்டு பெண்கள் முன்னே நிற்பதில்லைதானே. எது பண்பாடு, எது சுதந்திரம். எது இப்போது உடைபடப்போகிறது? :-)

Aruna Srinivasan said...

"....நம்மவூரிலும் உணவு பரிமாறிவிட்டு பெண்கள் முன்னே நிற்பதில்லைதானே. எது பண்பாடு, எது சுதந்திரம். எது இப்போது உடைபடப்போகிறது? :-)...."

கண்ணன், விருந்தினர் ஆண் / பெண் யாராயிருந்தாலும் ஒரே மாதிரியாக உபசரிப்பது பண்பாடு. ஆணுக்கு மட்டும் அப்படி முதுகு வணங்கி, கதவு பின்னால் நின்று உபசரித்தால் அது கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டைதான் உடைக்க வேண்டும் - இது சுதந்திரம். :-)

விஜய், உங்கள் ஜப்பான் பற்றிய கருத்துக்கள் சுவாரசியமாக உள்ளன. நன்றி.