Sunday, February 06, 2005

எல்லோரும் சேர்ந்து மூச்சு பிடித்துக் கொண்டு பலமாக இழுத்தார்கள். ஹ்ம்ம்.... நகர்ந்தால்தானே? மேலிருந்து ஒருவர் ஏதோ சைகை காண்பித்தார். எல்லோரும் நின்றார்கள்;

மறுபடி ஒரு சைகை. ஹ்ம்ம்.... எல்லோரும் இழுத்தார்கள்....ம்ஹ¤ம்.. நகருவதாக தெரியவில்லை. மறுபடி நின்றது.

இன்னொரு ஒரு பெரிய தம் பிடித்து இழு..இழு...இழுத்தார்கள். ஒரு இஞ்ச் நகர்ந்திருக்கும்; மறுபடி நின்றாகிவிட்டது. அடுத்த சைகையில் இன்னும் பலமாக...இழு..இழூ.. நகரு..நகரு.... பெண்கள், முடியாதவர்கள் நகந்து ஓரமா நில்லுங்க... எல்லோரும் ஓடி வரும்போது அடிபடுவீர்கள்...... இன்னும் கொஞ்சம் ..ஹ்ம்ம்.. இழுங்க.....சட்டென்று நகர ஆரம்பித்துவிட்டது. ஹோவென்று எல்லோரும் கையைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். மறுபடி ஒரு பெரிய சைகை, எல்லோரும் கூடி இழுக்க........

............தேர் நகர்ந்தது.

ஊர் கூடி தேர் இழுப்பது என்பார்களே.. அது என்ன என்று இன்று அனுபவித்தேன். எப்போதோ சிறு வயதில் கிராமத்தில் தேர் விழாவிற்கு போனதாக ஞாபகம். பின்னர் ரொம்ப நாள் கழித்து சென்ற வருடம் தான்தோன்றி மலையில் தேர் புறப்படத் தயாராக இருந்தபோது மேலே ஏறிச் சென்று சுவாமியை சேவித்தோம்.

இன்னிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர். கோவிலை முழுவதும் சென்ற வருடம் புனருத்தாரணம் செய்திருந்தார்கள். தேர் மட்டும் பழசாக இருப்பானேன்? ஒரு வருடத்திற்குள் தேரையும் புதுப்பித்து இன்று புறப்பாடும் ஆகிவிட்டது. பலவித நிறங்களில் கைவேலை செய்த துணித் தோரணங்கள், அலங்காரச் சிலைகள், மரவேலைப்பாடுகள்ளென்று அமர்க்களமாக இருந்தது தேர்.

காலை ஏழுமணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். ரொம்ப தாமதம் இல்லாமல் 7.20க்கு பூஜையெல்லாம் முடித்து நகர்த்த ஆரம்பித்தார்கள். தேர் சக்கரங்கள் முன் நான்கு மரப்பலகைகள் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருந்தன. முட்டு கொடுத்து ஏற்றுவதற்கு என்று ஊகித்துக் கொண்டேன். இரும்பு வடம் நீளமாக தரையில் கிடந்ததை மேலிருந்து அர்ச்சகர் சைகை செய்ததும் தூக்கி எடுத்து வைத்துக் கொண்டார்கள். நான் சும்மா பேருக்குத் தொட்டுப் பார்த்துவிட்டு வந்து ஓரமாக நின்றுகொண்டுவிட்டேன். கும்பல் அலைமோதியது. முதல் முதல் வடத்தை தூக்கி நகர்த்த ஆரம்பித்தவுடன் உடனே தேர், பஸ் மாதிரி நகர்ந்து விடுமாக்கும் என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை எல்லோரும் கோஷமிட்டுக் கொண்டு இழுத்தும் இஞ்ச் கூட நகராதபோதுதான் தேரின் அளவையும், கனத்தையும் அனுமானம் செய்ய முடிந்தது. இத்தனைக்கும் இந்த புதுப்பித்த தேர் பழைய தேரைவிட சற்று சின்னதாக அமைத்திருப்பதாக பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த காலத்தில் இன்னும் பலசாலிகளாக இருந்திருப்பார்கள். இழுத்தவுடன் தேர் நகர்ந்திருக்கும். ஆனால் இன்றைய தலைமுறை fast food தலைமுறையாயிற்றே....:-)

ஆனால் ஆரம்பம்தான் இப்படி. தேர் சற்று நகர்ந்து மரப்பல்கைகளைத் தாண்டியவுடன் momentum ( தமிழில் என்ன சொல்வது ??!!) பிடிக்க ஆரம்பித்து வேகமாக எல்லோரும் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.

அவ்வளவுதான். தோரணங்கள் அழகாக அசைந்தாட, ஒயிலாக தேரில் பார்த்தசாரதி வீதி வலம் வர ஆரம்பித்தார். சுமாராக ஒரு மணி நேரத்திற்கும் ஆயிற்று திரும்ப தேர் நிலையில் வந்து நிற்க.

இன்று கும்பலில் என்னை யோசிக்க வைத்த ஒரு விஷயம். நிறைய இளம் முகங்களைக் கண்டேன். "ஏன் அம்மா, அப்பா வரவில்லையா" என்று யாரோ ஒருவர் ஒரு இளைஞரிடம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. இவர் பதில். " இல்லே.. இவ்வளவு கார்த்தாலே எழுந்து கிளம்ப முடியாது அவர்களால்..." !!! கோவில் = வயதானவர்கள் ??!!

வாகன ஓட்டுனர் சிலையைப் பார்த்தால் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டிய பார்த்தசாரதி மாதிரிதான் இருந்தது. அப்படியானல் உள்ளே இருந்த மூர்த்தி யாராக இருக்கும். விசாரித்து பின்னர் எழுதுகிறேன். இல்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

5 comments:

துளசி கோபால் said...

அன்புள்ள அருணா,



// தேர் சற்று நகர்ந்து மரப்பல்கைகளைத் தாண்டியவுடன் momentum
( தமிழில் என்ன சொல்வது ??!!) //

அந்தக் கணமேன்னு சொல்லலாமா?

நல்ல பதிவு! பாசாதீ நம்ம ஃபேவரைட் சாமி!

புதுத் தேரா? ரொம்ப அழகா வர்ணனை செய்திருக்கின்றீர்கள்!

இதுதான் ஊர்கூடி தேர் இழுக்கறது!

என்றும் அன்புடன்,
துளசி!

பினாத்தல் சுரேஷ் said...

நான் படித்த காலத்தில் Momentum = உந்தம் என பாட புத்தகத்தில் இருந்ததாக ஞாபகம்.

தேரோ, காரோ - முதல் இயக்கத்திற்கு (Initial Movement) அதிக சக்தி தேவைப்படும். (சைக்கிளில் டபுள்ஸ் போகும்போது பின்னால் ஏறுபவர் வண்டி ஓடும்போது ஏறினால் கஷ்டம் குறைவாகத் தெரிவதை உணர்ந்திருப்பீர்கள்)

dondu(#11168674346665545885) said...

என்னிடம் இருக்கும் கலைச்சொல்லகராதியில் momentum உந்தம் மற்றும் திணிவுவேகம் என்றுக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அருங்கலைச்சொல் அகரமுதலி, ஆங்கிலம் - தமிழ்), தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் வெளியீடு).
அன்புடன்,
டோண்டு ராகவன்

Aruna Srinivasan said...

மிக்க நன்றி துளசி, டோண்டு ராகவன், சுரேஷ். "உந்தம்" சரியாகதான் இருக்கு. ஆனால் பேச்சு வழக்கில் ஒரு வேளை இப்படி சொன்னால் நன்றாக இருக்குமோ - "வேகம் பிடிக்கிறது?" நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சுரேஷ், அதையேன் கேட்கிறீங்க? சிறு வயதில் - இரண்டாம், ஐந்தாம் வகுப்புகளில் அப்பாவின் உதவியாளர் ஸ்கூலுக்கு சைக்கிளில் கூட்டிப்போகும்போதுதான் சைக்கிள் சீட்டைத் தொட்டிருக்கிறேனே தவிர, மற்றபடி சுத்தமாக சைக்கிள் விடத் தெரியாது. சைக்கிளில் போனதே இல்லை; டபுள்ஸ்? சான்ஸே இல்லை. அது என்னவோ சைக்கிள், மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்ட பயம் ( ஒரு முறை சைக்கிள் மோதி கீழே விழுந்ததாலேயோ என்னவோ !) இதற்கு பயந்தே முதலிலேயே ஸ்கூட்டரைவிட கார் ரொம்ப ஆபத்தில்லாதது என்று நேரே நாலு சக்கரத்துக்கு தாவிவிட்டேன் ! நாலு சக்கரமும் தரையில் நல்லா பதிந்து இருக்கு இல்லே.... பாலன்ஸ் பிரச்சனை இல்லையே என்று !! இதில் என்ன வெட்கம் என்றால், என் அம்மா அவருடைய காலத்தில் பிரமாதமாக சைக்கிள் ஓட்டுவாராம். ஹ்ம்ம். புலிக்கு ஒரு பூனை...

Anonymous said...

yes yes if you a ride two wheeler you may be scared, but when you a ride a four wheeler others will give way
as they are scared, ha ha ha