Thursday, December 16, 2004

பல மனிதர்கள் என்னுள் ஏதோ ஒரு விதத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் - தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவுகள், நண்பர்கள், பிரபலங்கள், அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் சட்டென்று மனசில் ஆழமாக பதிந்தவர்கள் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. அலைகள் வந்து மோதுவது போல் அவர்கள் பாதிப்பு பல சம்யங்களில் என் எண்ணங்களை மாற்றியிருக்கலாம்; பழகும் / பேசும் விதங்களை மாற்றியிருக்கலாம்; அல்லது தூரத்தே நின்று அவர்களை நான் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால் இதுவரை எந்த மனிதரையும் நான் ஆதர்சமாகக் கொண்டதில்லை - ஜே. கிருஷ்ணமூர்த்தி, காஞ்சியின் பெரிய பெரியவர், மகாத்மா காந்தி, நேருஜி, ரமண மகரிஷி, விவேகானந்தர் என்று என் எண்ணங்களை சீர் அமைத்தவர்கள் வரிசை கூட உண்டு. ஆனால் இவர்கள் யாரையும் நான் வழிபாடு செய்ததில்லை. எந்த ஒரு தனிமனிதரும் என்னுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததில்லை. அவர்கள் வாழ்க்கைகள் / வாக்குகள் மூலமாக பொதுவாக வாழ்வைப் பற்றி அவ்வப்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்ற முறையில் இவர்களிடம் ஒரு மரியாதை உண்டு.


ஆனால் ஒருவரின் முகம் /குரல் மட்டும் எப்போதும் ஆழ்மனசில் எங்கோ நன்றாக பதிந்துவிட்டது. எனக்குப் பாட வராது. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு ஆதர்சப்பிறவி. சாதிக்க இதற்கு மேலொன்றுமில்லை என்ற அளவு புகழ் எய்தினாலும் அது ஏதும் தன்னுதில்லை என்ற பாவனையுடன் கடைசி வரை எளிமையாக வாழ்ந்தவர். தன் இசை ஒன்றே வாழ்வாக, வாழ்க்கையே இசையாக வாழ்ந்தவர். தனக்கும் தன் இசைக்கும் உறுதுணையாக நின்ற கணவரிடமும் தன் குடும்பத்தாரிடமும் அளவில்லாத பிரியத்துடன் வாழ்ந்தவர். இவர் வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரது எளிமை, unassuming சுபாவம், இத்தனைக்கும் இடையில் ஆழமாக தன் இசையில் ஒரு பக்தி, எந்த நிலையிலும் தன் இசையின் தரம் குறையக் கூடாது என்ற உறுதியான உணர்வு, மனசின் எளிமையைப் பிரதிபலிக்கும் அந்தப் புன்சிரிப்பு..... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம் எஸ் சுப்புலஷ்மி மறைந்து மூன்று நாளாகிவிட்டது. நியூயார்க், மேன்ஹாட்டன் என்று சுற்றுலா கிளம்பிக் கொண்டிருக்கும்போது காலையுணவுக்கு உட்காரும் சமயம் என் உறவினர் சொன்னார். "இப்போதுதான் நெட்டில் பேப்பர் பார்த்துவிட்டு வந்தேன்" என்று. சாப்பாடு உள்ளே இரங்கவில்லை. பின்னர் ஊர் சுற்றும்போதும் அவ்வப்போது சட்டென்று ஏதோ சொல்லத்தெரியாத ஒரு இழப்பு மனசில் தாக்கிற்று.
எம் எஸ் வாழ்க்கை சுத்தமாக ரோஜா மலர் பாதையல்ல. எல்லோரையும் போல் சங்கடங்கள், சவால்கள், வேதனைகள் என்று இருந்திருக்கிறது. ( சமீபத்தில் வெளி அந்த அவரது வாழ்க்கை சரித்திர நூல்கள் சிலவற்றை புரட்டுங்கள் புரியும்.) இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அவரது உள்ளுக்குள் இருக்கும் மனிதம், Persona - மிளிர்ந்தது.

முதன் முதலில் பூடானில் அரசரின் அழைப்பின் பேரில் அங்கே கச்சேரி செய்ய வரும்போதுதான் முதன் முதலில் அவரையும் கணவர் சதாசிவத்தையும் சந்தித்தேன். மகள் விஜயா ராஜேந்திரன் உடனிருந்தார். நான் கற்பனை பண்ணியிருந்ததற்கு நேர் மாறாக சிறிய உருவம். முகத்தின் சிரிப்பு மட்டும் பளீரென்று பிரகாசித்தது - மூக்குத்தியின் பிரகாசம் எல்லாம் தெரியவேயில்லை! அன்பாக நாங்கள் ( நானும் சில நண்பர்களும்) கொண்டுபோயிருந்த சாப்பாட்டை ரசித்தவிதம் ( அட, இந்தப் பால் பாயசத்தைப் பாருங்களேன் முந்திரிப் பருப்பு, திராட்சையெல்லாம் போட்டு எவ்வளவு ருசியாக என்று கணவரிடம் சிலாகித்து - அந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே புதைந்து இருக்கும் இக்கணூண்டு பிரதேசத்தில் வாய்க்கு ருசியாக பால் பாயசத்தோடு நம் தமிழ் சாப்பாடு கிடைத்ததே என்று குழந்தை போல் வியந்து), உட்கார்ந்து எங்களுடன் சகஜமாக உறையாடின விதம் எல்லாம் அன்று கனவு போல் இருந்தது.

அதன் பின் பல முறை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் சென்னை வரும்போது - அல்லது - டில்லியில் பத்திரிகைளுக்காக சில பேட்டிகள். ( " பேட்டியா? அதெல்லாம் வேண்டாம்மா. நாம வெறுமே பேசிக்கொண்டிருக்கலாம். உங்களுக்கே ( இந்த"..ங்க" மரியாதையெல்லாம் வேண்டாம் என்றால் கேட்டால்தானே?) ஏதாவது எழுதணும் என்று தோன்றினால் பிறகு எழுதிக் கொள்ளுங்கள் என்று கையிலிருந்து பேனாவையும் நோட்புக்கையும் வாங்கி கீழே வைத்து விட்டார். பேசும்போதும் இயல்பாக தோளில் கைப்போட்டு அன்பாக பேசும் சுபாவம். "இப்பக் கூட கச்சேரி அன்றைக்கு எனக்கு கொஞ்சம் பயமாகதான் இருக்கும்" என்று சொல்லும் அவரது அக்கறை என்னை அசத்தும். விடாமல் தினம் பல மணி நேரம் சாதகம் செய்யும் ஒரு perfectionist. UN ல் பாடும் முன் ஜலதோஷத்தினால் பாதித்த தன் குரலுடன் எப்படி கச்சேரி செய்யப் போகிறோமோ என்ற கவலை மனதை வாட்ட, கச்சேரி ஆரம்பிக்கும் சமயம் கூட குரலே எழும்பாமல் மனசில் ஒரு பிரளயம் சூழ்ந்திருக்க, தான் இருந்த நிலையை அவர் விவரித்தவிதத்தை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். " எல்லோரும் ரெடி. சபையில் அமைதி. தொண்டையைக் கனைச்சுப் பார்க்கிறேன். குரலே எழும்பவில்லை. என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை. மனசில் அப்படியே பெரிய பெரியவாளை ( காஞ்சி) நினைச்சிண்டு கண்ணை மூடிண்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். பாட்டு என் குரலில் இருந்து தானே வர ஆரம்பித்தது. என்னிக்கும் மறக்க முடியாத அனுபவம் அது." என்று பல வருஷங்கள் கழிந்த பின்னரும் மன நெகிழ்ச்சியோடு விவரித்தார்.

அவரிடம் குரல் வளமும் இசையில் ஆர்வமும் இருந்ததை சரியானபடி உலகறியச் செய்த அவருக்கு மிகச் சரியான கணவர் சதாசிவம். வாய்க்கு வாய், "அவருக்குப் பிடிக்கும், "அவர் சொன்னார்" என்ற சொற்கள் பேசும்போது நிறைய இருக்கும்.

கடைசி பல மாதங்களாக அவருக்கு உடலில் பல கோளாறுகள் வந்து சிரமப்படும்போது கேட்க ரொம்ப வருத்தமாக இருந்தது. எத்தனை பேரின் வாழ்க்கையில் தன் இசையால் மலர்ச்சியும் இதமும் தந்த ஒரு ஆத்மா இப்படி சிரமப்படுகிறாரே என்று வேதனையாக இருந்தது. ஒரு வழியாக உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டார் என்றுதான் தோன்றுகிறது.

Greatness Personified. But MS was someone who never realised that or perhaps she consciously avoided getting that fact go into her head !! Either way - she was one person I have constantly admired and have always liked to emulate.

May she be in peace whereever she is.

No comments: