Monday, November 01, 2004

அட, மூன்று மாதம் ஓடியே போய்விட்டதே !!

ராஜா, பிரகாஷ் - மூன்று மாதம் விடுமுறை என்றால் பத்திரிகைதான் துவங்கப்போகிறேன் என்று என் மேல் இப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வைத்துவிட்டீர்களே !! அதற்கு முதலில் நன்றி. ஆனால் உங்களை ஏமாற்றமடையச் செய்வதற்கு வருந்துகிறேன். அப்படி எல்லாம் பத்திரிகை தொடங்கும் அளவு இன்னும் தைரியம் (??!!) வரவில்லை.
பின்னே? மூன்று மாதம் அப்படி என்ன செய்வதற்காக விடுப்பு என்கிறீர்களா?

அதையேன் கேட்கிறீர்கள்? ரொம்ப நாட்களாக எனக்குள் ஓர் ஆசை. கதையெழுத வேண்டும் என்று. சொல்லப்போனால் 1972ல் ஜர்னலிஸம் கோர்ஸ் படித்தபோது செய்தி ரிபோர்டிங் தவிர புனைகதையெழுதவும் பயிற்சி இருந்தது. கோர்ஸ் முடிவில் சிறப்பு பாடமாக ரிபோர்ட்டிங் எடுத்துக்கலாமா அல்லது புனைகதையா என்ற கேள்வி எழுந்தபோது என் ஓட்டு பின்னதற்கே விழுந்தது. புனைகதையில் புலமை வந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் தேர்ச்சி பெற்றதாக ஒரு சர்டிபிகேட்டை வாங்கிவிட்டேன். அப்புறம் ஏதோ அவ்வப்போது எப்போதாவது எழுதி ·பெமினா, வுமன்ஸ் இரா (அட நிஜமாதாங்க...!!) என்று அனுப்பி "பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்" சீட்டுகளை வாங்கி சேர்த்துக்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில்தான் இதயம் பேசுகிறது பத்திரிகையில் (1986 என்று ஞாபகம்) ஒரு போட்டி அறிவிப்பு. ஜெயராஜ் வரைந்த ஒரு படத்தைப் போட்டு படத்துகேற்ற ஒரு சிறுகதை எழுத வேண்டும். அப்போது குழந்தைகளுடன் பாலக்காட்டிற்கு ( பெற்றோர்கள் அங்கே இருந்தனர் அப்போது) சென்றிருந்தேன். ஒரு பெண் ஒரு சிறுவனுக்கு தலைவாரிவிடுவதைப் போலிருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் சட்டென்று ஒரு கற்பனை உருவாயிற்று. உடனேயே அதை கதையாக எழுதி போட்டிக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றிவிட்டது. அவ்வளாவுதான். சட்டென்று எழுத ஒரு நல்ல பேப்பர் கூட உடனே அகப்படவில்லை. கையில் அகப்பட்ட கவரைப் பிரித்து (காகிதச் சிக்கனத்தில் காந்திஜி, ராஜாஜி இவர்களின் நேர் வாரிசு நான்தான் என்று நினைப்பு ) அப்படியே ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். அரை மணியில் கதை ரெடி. அப்புறம் நல்ல பேப்பரில் நகலெடுத்து ஒரு 15 பைசா( அப்போல்லாம் அதான் விலை என்று நினைக்கிறேன்) கவரில் வைத்து என் டில்லி விலாசத்துடன் அனுப்பிவிட்டு டில்லிக்கும் போய் சேர்ந்துவிட்டேன்.

அப்புறம் சுத்தமாக மறந்தும் போயாச்சு. கொஞ்ச நாள் கழித்து அம்மாவிடமிருந்து ஒரு கடிதம். " உன் முதல் கதையே முதல் பரிசு கதையாக வெளிவந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று எழுதியிருந்தார். எனக்கு ஒரு வினாடி சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. அப்புறம் மெள்ள உறைத்தது. உடம்பெல்லாம் பாய்ந்த ஒரு சந்தோஷம் இருக்கிறதே.... உங்களில் பலருக்கு இது புரியும்.

முதல் பரிசு முழுசாக ஐம்பது ரூபாய். என் எழுத்து எனக்கு சம்பாதித்து கொடுத்த முதல் வரும்படி. அடுத்த நாள் இதயம் பேசுகிறது பத்த்ரிகையிலிருந்து பரிசுத் தொகைக்கான காசோலையும் பிரசுரமான இதழ் ஒன்றும் தபாலில் வந்தது. அதோடில்லை. கூடவே அன்று தபால் பெட்டியில் நிறைய கடிதங்கள் - டில்லி விலாசம் கொடுக்கப்படிருந்ததால் நிறைய வாசகர்கள் நேரடியாக பாராட்டி எழுதியிருந்தார்கள். அட உன் கதைக்கு ரசிகர் கடிதங்கள் கூட (!!!) வந்துள்ளதே என்று குடும்பத்தில் அன்பான (!!) சீண்டல்கள் வேறு.
அடுத்த கதையெழுதிய அனுபவம் பூடானிலிருந்தபோது. தெரிந்த நேபாள குடும்பத்தில் நடந்த சம்பவத்தை வைத்து எழுதிய கதை - குமுதத்தில் வெளி வந்தது. அதுக்கும் ஜெயராஜ்தான் படம்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எப்படியோ என் எழுத்து வண்டி பாதை மாறிபோய் பத்திரிகையுலகத்தில் திரும்பிவிட்டது. கதை எழுதுவது பக்கமே போகவில்லை. எழுதுவதாவது? செய்தித்துறையில் கவனம் அதிகரிக்க, அதிகரிக்க, கதைகள் படிப்பதே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோய் இன்று சுத்தமாக நின்றுவிட்டது. சமீபத்திய திசைகளில் குறிப்பிட்டுள்ள காணாமற் போனவர்களில் நானும் ஒருத்திதான்.

ஆனாலும் அவ்வப்போது அம்மா கேட்டுக்கொண்டிருப்பார். " நீ எப்போ கதை எழுதப்போகிறாய்" என்று. நானும் இதோ அதோ என்று சொல்லி வந்தேன். அவர் கேட்டது என் மனதிலும் சுழன்று கொண்டுதான் இருந்தது. அவருக்கு கதைகள் படிப்பதில் மிக ஆர்வம். அவருக்கு சம்பந்தமில்லாத கட்டுரைகளில் என் எழுத்து போகிறதே - அவரால் ரசிக்க முடியாமற் போகிறதே என்றும் தோன்றியிருக்கலாம். இதனால் நடுவில் ஒரு முறை சில வருடங்கள் முன்பு அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யவாவது ஒரு புனைகதை எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. அப்போது டில்லியில் இருந்த சமயம். மனதில் ஒரு கதை மேக மூட்டமாக தோன்ற, உடனேயே அம்மாவுக்கு போன் போட்டு " நானும் கதை எழுத முடிவு செய்துவிட்டேன்" என்று ஓர் அறிவிப்பு செய்து விட்டேன்.

அங்கேதான் ஆரம்பித்தது என் சங்கடம். அம்மாவிடம் எழுதிகிறேன் என்று பெரிதாக சொல்லிவிட்டேனே தவிர அது அவ்வளவு எளிதாக இல்லை என்று விரைவிலேயே புரிந்துபோய்விட்டது. சில வருடங்கள் கழிந்து அம்மா போனபின்னரும் என் கதை உருவாகும் அடையாளமேயில்லை. வழக்கமான - பழக்கமான - வேலைகளிலேயே கவனம் போனதே தவிர, ம்ஹ¤ம். நானாவது கதையாவது. எனக்கே நம்பிக்கை போய்விட்டது. ஆனால் அவ்வப்போது என் "கதை எழுதும் ஆர்வம்", நண்பர்களுடன் பேசும்போது வெளிப்படும்.
இந்த சம்யத்தில்தான் என் நண்பர்கள் இருவர் என்னைக் கதை எழுதச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு கட்டி விட்டனர். விதம் விதமாக - கடிந்துகொண்டு, சீண்டலாக, ஆர்வம் பல காட்டி, அவர்கள் போட்ட அஸ்திரங்களில் நானும் ஒருவாறு அசைந்து, இரண்டு வருடம் முன்பு நிஜமாகவே நாவல் ஒன்று எழுதத் தொடங்கி விட்டேன் - இந்த முறை ஒரு உத்வேகத்துடன். அதாவது அப்படி நினைத்தேன். ம்ஹ்ம். என் சோம்பேறி புத்தி எங்கே போகும்? மறுபடி மனம் கொஞ்சம் கொஞ்சமாக கதையிலிருந்து நழுவி "பழைய குருடி..." கதையாகிற்று. அடி மனதில் ஒரு குறுகுறுப்பு மட்டுமே பாக்கி.
என் நண்பர்களுக்கே என் மேல் நம்பிக்கை போய்விட்ட சமயம், மனதில் மறுபடி கதையெழுதும் ஆர்வம் மெல்ல தலைத்தூக்கி பார்த்தது. இந்த முறை ஏமாறக்கூடாது என்று முடிவுகட்டிவிட்டேன்.

அதன் முதல் கட்டம்தான் வலைப்பதிவு பக்கம் காணாமல் போய்விடுவது. மூன்று மாதத்தில் என் நாவல் முடியும் என்று நான் கனவு காணவில்லை. ஆனால் தொடங்கி தேரை ஒரு பக்கமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டேனென்றால் அப்புறம் நகர்த்துவது எளிதாகும் என்பது என் எண்ணம்.

இப்போது ஓரளவு அதில் வெற்றி. தேர் நகர ஆரம்பித்துவிட்டது. போகும் திசையும் தெளிவாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவேன் என்று நம்பிக்கையும் வந்துவிட்டது. ஆனால் ஒரு ரோலர் கோஸ்டரில் போகும் அனுபவம் இது. எனக்கு ரொம்ப புதுசு. கதையெழுது என்று சொன்ன அம்மாவையும், அக்கறையாக என்னைத் தூண்டிய நண்பர்களையும் ( அவர்கள் யார் என்று என் நாவலின் முன்னுரையில் அல்லவா கூற வேண்டும்? - ஆக, முன்னுரைக்கு வந்துவிட்டேன் - நாவல் எழுதி முடித்துவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது ) நினைத்துக் கொள்கிறேன்.

இதன் நடுவில் என் மூன்று மாத 'விடுப்பு' முடிந்துவிட்டதால் இங்கே ஒரு விஸிட்.

வழக்கம்போல் அலைகள் இன்று முதல் வீசும். ஆனால் அவ்வப்போது காணமற்போய்விட்டால், எங்கே போய்விட்டேன் என்று இனி உங்களுக்குப் புரியும்.

4 comments:

Pavithra Srinivasan said...

Ahhaa!! writing a novel - I wish you all the best. May you have a block-buster on your hands:-))). But do pop in here too!

ஜெ. ராம்கி said...

வாங்க...வாங்க. அலை ஓய்ஞ்சு இருந்தா புயல் வரும்னு அர்த்தமாம்! மூணுமாசமா மையம் கொண்டிருந்த புயலை சீக்கிரமா கரைக்கு கொண்டு வந்துடுங்க மேடம்!

Jayaprakash Sampath said...

இன்னும் பெரிய ப்ராஜக்டா இருக்கும்னு நினைச்சேன். ஏமாத்திட்டீங்க .:-). நாவல், நேரடியா புத்தகமா வருதா? எப்போ?

Aruna Srinivasan said...

பவித்ரா, ராம்கி, பிரகாஷ்: மிக்க நன்றி. மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. புத்தகம் இன்னும் எழுதும் கட்டத்தில்தான் இருக்கிறது. வெளி வரும் நேரத்தில் சொல்கிறேன். அப்பாடா... யார் படிப்பார்கள் என்று கவலைப் பட்டேன். குறைந்த பட்சம் 4 வாசகர்கள் கிடைத்துவிட்டார்கள். அது யார் அந்த நான்காவது என்று புரிந்து போயிருக்குமே? :-)