Saturday, July 10, 2004

சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட்.

சொந்த வேலையாக டில்லிக்கு சென்றுவிட்டதால் அலைகளில் சென்ற சில நாட்களாக பதிவு செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றி கூட இன்னும் கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் மேலெழுந்தவாரியாக ஒரு பறவைப் பார்வைப் பார்த்ததில் மனதில் சந்தோஷம்தான் நிரம்புகிறது. நிஜமாகவே கண்ணில் விளக்கெண்னெய் விட்டுக்கொண்டு சிதம்பரம் உழைத்திருக்கிறார். இதுவரை யாருக்கும் தோன்றியிராத வழிகளில் திட்டம் போட்டுள்ளார். அரசு வருவாயை அதிகரிக்க அந்த பங்குச் சந்தை பரிமாற்ற வரி ( tax on securities transactions) Brilliant Idea. ஆனால் பங்குச் சந்தைகாரர்களுக்குதான் படு கடுப்பு.

அதுபோல் Education Cess 2 % சூப்பர் ஐடியா. வரி செலுத்தும்போதும் ஒரு நல்ல காரணத்துக்காக கொடுக்கிறோம் என்று திருப்தியும் இருக்கும். ஆனால் இதில் எனக்கு ஓரிரண்டு கவலை இருக்கு. ஒன்று, இதன் மூலம் இந்த வருடம் மட்டும் - பாக்கி இருக்கும் 8 மாதங்களில் - 2500 கோடி ரூபாய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த வருடங்களில் முழு வருட வருவாய் 4500 அல்லது 5000 கோடிகளைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். என் கவலை என்னவென்றால் இப்படி வசூலிக்கப்படும் பணம் சரியாக தேவையான திட்டங்களில் - தேவையுள்ள இடங்களுக்கு சென்றடைய வேண்டுமே என்பதுதான். இந்தப் பணத்திற்கு தனியாக கணக்கு இல்லாத நிலையில், இது மொத்தமாக இதர வளர்ச்சி திட்டங்களுக்கு என்று ஒதுக்கபட்டுள்ள ரூபாய் 10000 கோடிக் கணக்கில் சேர்ந்துவிடும். அதிலிருந்து பின்னர் கல்வி சம்பந்தமான திட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படும். இப்படியில்லாமல் இந்த கல்விக்கென்று வசூலிக்கப்படும் வரிப் பணம் கல்வித் துறைக்கு மட்டுமே முழுவதும் செலவழிக்கப்பட்டால் - செலவழிக்கப்படும்படி சரியாக திட்டங்கள் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இன்று தனியார் பள்ளிகள்தாம் அரசு பள்ளிகளைவிட தரமான கல்வியைத் தருகின்றன என்று ஒரு கருத்து இருக்கிறது. அது ஓரளவு உண்மையும் கூட. அதே சமயம், உயர் கல்வி விஷ்யத்தில் நிலைத் தலைகீழ். ஐ ஐ டி, REC, அண்ணா பல்கலைக் கழகம், டில்லியில் AIIMS மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என்று அரசு கல்வி நிலையங்கள்தாம் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. அரசு பள்ளிகளும் இந்தத் தரத்தைத் தொடும் அளவு கவனமாக பணம் உபயோகிக்கப்பட வேண்டும். நமது பள்ளிகளில் ஆரம்ப நிலையில் பல குழந்தைகள் சேர்ந்தாலும், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அண்டை நாடுகளைவிட இந்தியாவில் அதிக சதவிகிதம் என்று UNESCO ஆராய்ச்சி கூறியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இல்லையென்பது மட்டுமல்ல; பயமுறுத்தி பள்ளி என்றாலே விலகி ஓடும் வண்ணமும் பல பள்ளிச் சூழல்கள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்களின் சொல்லிக்கொடுக்கும் தரத்தை அதிகரிக்கலாம்; கல்வியார்வத்தைத் தூண்டும் சாதனங்களை வழிமுறைகளைப் பின்பற்றலாம்; பல பள்ளிகள் மரத்தைட்யிலும் கூடாரங்களிலும் உள்ளன. நல்ல சுகாதாரமான கட்டிடங்களை எழுப்பலாம்; கணினி, மற்றும் நவீன பரிசோதனை சாலைகள் தவிர, குடிதண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம். இதற்கெல்லாம் இந்தக் கல்வி வரிப் பணம் உபயோகிக்கப்படவேண்டும்.

பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் Foreign Direct Investment அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம். சிறு சேமிப்பாளர்களுக்க்கு / மூத்த குடிமகன்கள் சேமிப்புக்கு அபாயம் இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில் கணினி விலை இன்னும் குறைய ஆரம்பித்துவிடும். பொதுவாக சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட். முக்கியமான விஷயம், இந்த பட்ஜெட்டில் அதிகமாக Roll Back இருக்காது என்று நினைக்கிறேன். எ·கு -Steel சுங்க வரி விஷயம் மட்டும் மறு பரிசீலனைக்கு வரலாம்.

4 comments:

Jayaprakash Sampath said...

Badri : securities transaction tax பற்றி, ஒரு retail investor என்கிற முறையிலே உங்கள் கருத்துக்கள் என்ன?
அருணா ஸ்ரீனிவாசன், இதை ஒரு பிரில்லியண்ட் ஐடியா என்று வர்ணித்திருக்கிறார்.மேலோட்டமாகப் பார்த்தால், முதலீட்டாளர்களை இந்த வரிச்சுமையினால் நட்டப்படத்தான் போகிறார்கள் என்று தான் எனக்குப் படுகிறது. பங்கு விற்பனை மூலம் வரும் லாபத்தில் வரி கட்டுவது ஏற்கனவே இருக்கின்ற போது, ( tax on capital gains) , இது சிறு மற்றும் உதிரி முதலீட்டாளர்களுக்கு அதிகமாக சுமைதான். பங்கு மார்க்கெட் பரிவர்த்தனைகளில் 75-80 விழுக்காடு, டெலிவரி எடுக்காமல் நடக்கின்றவைதான். வாய் வார்த்தையாக வாங்கி விற்றால் கூட அதற்கு 0.15% வரி கட்டவேண்டும் என்று சொன்னால், இதை நம்பி இருக்கின்றவர்கள் பலருடைய கதி என்ன? ஒருக்கால், ஸ்பெகுலேஷனைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இதை, ப.சி அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறாரா? ஸ்பெகுலேஷன் கட்டுப்படுத்தப்பட்டால், பங்குச்சந்தை மீதான அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? வரவிருக்கும் புதிய ஐபிஓக்களுக்கு ( குறிப்பாக TCS), இதனால் ஏதாவது பாதிப்பு இருக்குமா? roll back க்கு வாய்ப்பு இருக்கிறதா? ( சில விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறது என்று செய்தி படித்தேன். ஆனால், முழுதுமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை). இதைப் பற்றி நேரம் கிடைக்கும் போது விளக்கமாக எழுதினால், ரொம்ப உதவியாக இருக்கும்.

Jayaprakash Sampath said...

Aruna, I had something to say on the 'securities transaction tax'. I just posted a comment reating to this, in badri's blog. Instead of giving its link, by mistake, i re-posted the entire comment here. sorry

Badri Seshadri said...

என் பதிவில் இதைப்பற்றி எழுதுவேன். இப்பொழுதைக்கு - டர்னோவர் வரி சரியானதாகத்தான் தோன்றுகிறது. அருணா: இதனால் "பங்குச் சந்தைகாரர்களுக்குதான் படு கடுப்பு" என்பதைவிட டிரேடர்களுக்கு "படு கடுப்பு" என்று சொல்லலாம். என்னைப் போன்ற ரீடெயில் முதலீட்டாளர்களுக்கும், FII, FI க்களுக்கும் இதனால் கஷ்டம் ஏதும் கிடையாது. இப்பொழுது 0.85% கமிஷன் கொடுக்கிறோம். அத்துடன் இன்னமும் 0.15% சேர்ந்து வரியாகப் போகும். அதுவும் ஷேர்களை வாங்கும்போதுதான் இந்த வரி. விற்கும்போது கிடையாது. (ஆனால் வாங்கும்போதும், விற்கும்போதும் தரகர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.) முக்கியமாக லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி கிடையாது, ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி குறைந்துள்ளது. FIIக்கள் இந்த வரியை வரவேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக எக்சேஞ்சே வரியை வசூலித்து அரசிடம் கொடுத்து விடும். அதனால் வருமான வரி அதிகாரிகள் FIIக்களின் கணக்குப் புத்தகங்களை நோண்ட வேண்டி வராது. மேலும் பல சிறு மூலதனக் காரர்கள் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கட்டாமல் இருந்து வந்தனர். இனி அப்படி முடியாது - நேரிடையாக டிரான்சாக்ஷன் நடக்கும் போதே அரசுக்கு வரி வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு டிரான்சாக்ஷனுக்கும் வரி உண்டு - முன்னது போல மொத்தமாக கேபிடல் கெயின்ஸ் லாபம் இருந்தால்தான் என்று கிடையாது.

இதில் என்ன குறைபாடுகள்?
1. டர்னோவர் டாக்ஸ் 0.15% இருக்க வேண்டுமா, குறைவாக இருந்திருக்கலாமே? பலர் 0.05% அல்லது 0.1% தான் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஒரேயடியாக 0.15% என்றதும் பலருக்குக் கோபம். இதில் எனக்கு அவ்வளவாக வருத்தம் இல்லை.

2. எக்சேஞ்சில் நடக்கும் எல்லா வர்த்தகத்துக்கும் ஒரேயடியாக இந்த 0.15% இருக்கும் என்பது. அதாவது பங்குகள், கடன் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள், ஆப்ஷன்ஸ், ஃபியூச்சர்ஸ் என்று எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம் சரியானதல்ல. இந்தக் கூற்றில் நியாயம் இருக்கிறது. பங்குகளுக்கு விதிக்கப்படுவதைவிட குறைவான சதவிகிதம்தான் கடன் பத்திரங்கள் மீது இருந்திருக்க வேண்டும். (இங்கு மார்ஜின் குறைவு). அதைவிடக் குறைவானதுதான் ஃபியூச்சர்ஸ் டிரான்சாக்ஷனுக்கு இருக்க வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் வரும் நாட்களில் மாற்றிக் கொள்ள முடியும்.

3. ஒவ்வொரு நாளும் பல ஸ்பெகுலேடிவ் வர்த்தகங்கள் செய்யும் டிரேடர்கள்தான் மிகவும் கோபத்தில் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு 'buy' டிரான்சாக்ஷனுக்கும் வரி கொடுக்க வேண்டும். லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியைக் குறைத்ததால் டிரேடர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. அவர்கள் வருமானமே நாளொன்றுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் மார்ஜின்தான். அதிலும் கொஞ்சத்தை சிதம்பரம் பிடுங்கிக் கொள்கிறாரே என்ற எரிச்சல். சிதம்பரம் 0.1% க்கு வரியை விதித்திருக்கலாம்...

ஆனால் எல்லாரையும் மகிழ்ச்சிப் படுத்த முடியாது.

ஜெ. ராம்கி said...

கம்ப்யூட்டர்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்பதே அதனுடன் சேர்ந்த ஹார்ட்வேர் பொருட்களுக்கும் அளிப்பதுதானே. அது வேறு, இது வேறு என்கிறார்களே.. உண்மையா?