Thursday, June 17, 2004

Tim Berners - Lee

இந்த மனுஷரை நினைத்தால் ஏனோ பகவத் கீதையின் சாரம்தான் நினைவுக்கு வருகிறது. கடமையைச் செய். பலனை எதிர்பாராதே !

இன்று உலகமே இவர் கண்டுபிடித்த - உருவாக்கிய அமைப்பின் மீதுதான் மிகவும் சார்ந்து இருக்கிறது. 10 வருடம் முன்பு ஓர் பரிசோதனைச் சாலையில் இவர் ஆரம்பித்த அமைப்பு இன்று உலகெங்கும் பரவி அது இல்லாமல் செயல்பாடே இல்லாமல் உலகம் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லும் அளவு வளர்ந்துள்ளது. இந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்னாலும் நிறைய தொழில் நுட்ப பரிசோதனைகளும் சோதனையோட்டங்களும் நிகழ்ந்திருந்தாலும் ஒரு குடையாக இது இப்படி உருவெடுத்தது பத்து வருடம் முன்புதான்.

இப்படிபட்ட ஒரு மனிதர் இன்று வரை பணத்திற்காக ஆசைப்படவில்லை. தன் உருவாக்கத்தின் மூலம் பணம் சம்பாதிக்க கருதவில்லை. பரவலாக மனித குலம் பயனடைய வேண்டும் என்பதே இவரை இயக்கியுள்ளது. எதிலும் ஒரு சொந்த லாபம் அலல்து வணிக நோக்குடன் - குறைந்த பட்சம் புகழ் பதவி என்ற நோக்கோடு செயல்படும் இன்றைய உலகில் இவர் இன்னும் ஒரு பல்கலைகழக மூலை ஒன்றிலிருந்துதான் செயல்படுகிறார். மனித சரித்திரத்தில் - தொழில் நுட்ப வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட இவருக்கு இன்று ஒரு வழியாக கௌரவம் கிடைத்துள்ளது.

இத்தனை நேரம் இவருக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டாமோ? பரவாயில்லை; வேறு முக்கிய விருது கிடைத்துள்ளது. " நூற்றாண்டின் மிகச் சிறந்த தொழில் நுட்ப" விருது கிடைத்துள்ளது தொகை - 1 மில்லியன் யூரோ - ( 1.2 மில்லியன் டாலர்.) பின்லாந்தில் நேற்று நூற்றாண்டின் தொழில் நுட்ப மாநாட்டில் வழங்கப்பட்டது.

ஆனால் வணிக நோக்குடன் நான் எதையும் உருவாக்கவிலை என்று நம் ஆள் அடக்கி வாசிக்கிறார். இப்போ சொல்லுங்கள் - நான் சொன்னது சரிதானே? பகவத் கீதையின் சாரம்??? ஆனால் யோசித்துப் பார்த்தால் உலகின் மிகப் பெரிய சாதனைகள் பல இந்த அடிப்படையில்தான் நிகழ்ந்துள்ளன என்று தோன்றுகிறது. அதாவது புகழையும் பணத்தையும் எதிர்பார்த்து சாதனைகள் நிகழவில்லை. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் "இதைச் சாதிக்க வேண்டும்" என்று ஒரு இலக்கை நோக்கி உலக நிகழ்வுகள் நடந்திருக்கவில்லை. தன்னிச்சையாக உள்ளூர ஏற்படும் ஓர் ஆர்வத்திலும் / உந்துதல்களே பல நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. புகழும் / பணமும் - பின்னர் தானாகவே வந்து ஒட்டிகொண்டவை - by products.

ஆனாலும் நாம் எதையோ தேடி / ஆசைப்பட்டு ஓடிக்கொண்டு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லையே!!!

பி.கு: அதெல்லாம் சரி. மேலே நான் எந்த உலக அமைப்பை பற்றி பேசுகிறேன் என்று தெரியாதவர்கள் கைத்தூக்குங்கள் ? :-)

7 comments:

Anonymous said...

நல்ல பதிவு அருணா. டிம் பெர்னர்ஸ் லீ போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அவருக்கு இந்த விருதும் பொருளும் கிடைத்தது மிகவும் பொருத்தம்.

-செல்வராஜ்.

Anonymous said...

ஒரு நிமிஷம் இருங்க, இந்த html கோப்பைச் சேமித்துவிட்டு வருகிறேன்.

ஆங்க். என்ன அமைப்பு அது? தெரியலையே? இதோ கையைத்தூக்கிடறேன். Wait 2 see. யார் இந்த மனிதர்? Highly Technical Man, Lovable? ;-)

க்ருபா
http://www4.brinkster.com/shankarkrupa/blog

Aruna Srinivasan said...

சரி. குறைந்த பட்சம் ஒருவர் கையைத் தூக்கியாச்சு. அந்த அமைப்பு என்ன என்று சொல்லிவிட வேண்டியதுதான். சொன்னவுடனே ... ஸ்.. அடடா.. நினைச்சேன் என்று சொல்லப்போகிறீர்கள்.

World Wide Web Consortium - இப்போ நிம்மதியாச்சா?

செல்வராஜ், www பேரைச் சொல்லி சஸ்பென்ஸை உடைக்காமல், ஆனால் அதே சமயம் டிம் பெர்னர்ஸ் லீயயும் பாராட்டிய சாமர்த்தியத்தை ரசித்தேன் :-)

Pavithra said...

Tim Berners-Li deserves this and much more.:-)

க்ருபா said...

ஆஹா! World Wide Web Consortiumஐதான் சுருக்கமா W3C (three Ws and one C)ன்னு சொல்வோம். அதை நிறைய பேர் W2Cன்னும் சொல்வாங்க தப்புத்தப்பா. அதுக்குதான் Wait 2 see (W2C)ன்னு சூசகமா சொன்னேன். அப்பறம், "யார் இந்த மனிதர், Highly Technical Man, Lovable? ;-)" அப்டீன்னு கேட்டேனே, இதுக்கும் முதல் எழுத்துக்கள் மட்டும் சேர்த்தா வரும் விடை HTML. :-)

சும்மா, டமாசு. :-)

க்ருபா

Aruna Srinivasan said...

ஹ்ம்ம்... ஒரே அசடு வழிகிறது. எங்க போய் என் முகத்தை இப்போ ஒளித்துக் கொள்ளலாம்? இந்த காலத்து "பசங்கள்" எல்லாம் படு Smart ன்னு எனக்கு தெரிய வேண்டாமோ!! :-) நான் ஒரு சரியான....??!! :-) அதுசரி கிருபா.. இனிமேல் "கையைத் தூக்குங்கள்" என்று நான் சொன்னால் விலாவாரியா எனக்குப் - எனக்கும் - புரிகிற மாதிரி எழுதி விடுங்கள்.

பி.கு: ஆனாக்கூட அந்த Wait 2 see ன்னு படிச்சப்போ எங்கேயோ என்னமோ மாதிரி இருந்தது. சரி ஏதோ எழுதியிருக்கீங்கன்னு விட்டுட்டேன். ( எப்படி என் சமாளிப்பு ? :-)

அது சரி பவித்ரா; நீங்க ஏதும் பூடகமா சொல்லலியே??!

Pavithra said...

'poodagam?" I'm already in awe over Lee's achievements.:-))