Sunday, June 13, 2004

கண்ணாடி கூரை??

பெண்கள் அதிகமாக பல துறைகளில் இன்னும் பெருமளவு வர முடியாததற்கு (!!!???) ஆங்கிலத்தில் Glass ceiling என்று ஒரு பதம் உபயோகிப்பது வழக்கம் இல்லையா? வீட்டு வேலை மற்றும் ஆபீஸ் வேலை என்று இரட்டைக் குதிரை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் தடைகளையும் கஷ்டங்களையும் மீறி உயர்ந்த பதவிகளில் இருப்பதும் கூடவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் "இந்த மாதிரி வெளியுலகில் பெண்கள் தங்கள் திறமையை நிலை நாட்ட படும் கஷ்டங்கள் பற்றி கட்டுரைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இரண்டு நாள் முன்பு இங்கே இந்த ரீதியில் இன்னொரு கட்டுரை.

எல்லோரும் பெண்களைதான் " வீட்டு வேலை ஆபீஸ் வேலை என்று இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்களே தவிர, யாராவது வீட்டையும் ஆபீஸையும் எப்படி மேனேஜ் பண்ணுகிறீர்கள் என்று ஆண்களிடம் கேட்கிறார்களா என்று இவர் காய்கிறார்.

வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள சரியான ஆள் இல்லாதது பெண்கள் பெரும் பதவிகளில் அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இவர் வேலை இருக்கும் இடத்தில் குழந்தை காப்பகம் மட்டும் போதாது என்று சொல்லி ஒரு புதுவித யோசனை சொகிறார். அதாவது, உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கார், மற்றும் இதர வசதிகளை அலுவலகம் கொடுக்கிறதல்லவா? அதைப் போல இந்த மாதிரி உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு ஆபீஸ் செகரடரி போல வீட்டு செகரடரியும் கொடுக்க வேண்டுமாம். இந்த வீட்டு செகரடரி, வீட்டில் எல்லா வேலைகளும் பார்ப்பாராம் - குழந்தைகளுக்கு நீச்சல் வகுப்புக்கு ( கராத்தே, பாட்டு அல்லது நடனம் என்று ஏதோ) அழைத்துச் செல்வது; தேவைப் படும்போது அவர்களுடன் செஸ் விளையாடுவது அவர்களுக்கு ஹோம் வர்க் சொல்லிக் கொடுப்பது; வீட்டில் வயதானவர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்வது ( சில சமயங்களில் நம் ரசனக்கேற்றவாறு இலக்கியமோ, சினிமாவோ பேசுவது!!) இந்த மாதிரி எல்லா வேலைகளும் செய்வாராம். அதனால் வீட்டைப் பற்றி கவலைப் படாமல் பெண்கள் ஆபீஸ் வேலையில் ஈடுபடலாம் என்பது இந்தக் கட்டுரையின் சாரம்.

இதைப் படித்தவுடன் தோன்றியது: வீட்டு செகரடெரியா? பரவாயில்லை. மனைவி/ தாய்/ அம்மா/ மாமியார்/ பாட்டி அல்லது தூரத்து உறவுகார அம்மா/ என்று பல ரூபங்களில் இந்தியாவில் வீட்டு விஷ்யங்களைக் கவனிக்கதான் ஆள் இருக்கிறார்களே!! என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் படித்த மற்றொரு கட்டுரை. ஆண்கள் நிறைந்த வங்கி உலகில் வெற்றி நடை போடும் ஒரு பெண் பற்றி. இந்தியாவின் முக்கிய கார்பொரேட் பெண்மணி. நைனாலால் கித்வாய் - ஹாங்காங் ஷாங்காய் வங்கியின் (HSBC) யின் தலைமை நிர்வாகி. சமீபத்தில் Fortune பத்திரிகை ஆசியாவில் சக்தி வாய்ந்த 50 பெண்களில் இவரையும் ஒருவராக தேர்வு செய்திருந்தது. Time பத்திரிகை இவரை உலகளவில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் Forbes பத்திரிகை இவரை உலகின் முதன்மை 50 பெண் அதிகாரிகளில் ஒருவராகவும் தேர்வு செய்துள்ளன.

டில்லி Lady Shri Ram கல்லூரியில் காலேஜ் விழாவுக்கு பல நிறுவங்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஆரம்பித்த இவரது திறமை பின்னர் ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் முதல் இந்திஅய்ப் பெண்ணாக ஒளிர்ந்து, 1982ல் ANZ Grindlays வங்கியில் சேர்ந்தவுடன் பிரகாசிக்கப் ஆரம்பித்தது. Morgan Stanley யின் இந்திய நிர்வாகத்திற்கு தலைமையாக இருந்து பல முக்கிய கார்பொரேட் நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்த இவரை HSBC 2002ல் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. இப்படி வர்த்தக உலகில் கொடி கட்டி பறந்தாலும் இவரது எண்ணம் பூமியில் காலூன்றி உள்ளது. பலவித சமூக நல அமைப்புகளில் கிராமபுற பெண்கள் முன்னேற்றம், மற்றும் digital divide பிரச்சனைகளை எப்படி குறைப்பது போன்ற விஷய்ங்களில் ஆலோசகராகவும் உள்ளார்.

நல்லது. இப்போ என்ன இவங்களைப் பற்றி என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. இப்படி பலவிதங்களில் வெற்றிகரமாக இருக்கும் நைனாலால் தன் வெற்றிக்கு ஒரு அடிபப்டை காரணம் தான் வீட்டைப் பற்றி நிம்மதியாக இருக்க முடிவதுதான் என்கிறார். " மற்ற மேலை நாடுகளைவிட இங்கே இந்தியாவில்தான் நமது பெண்களுக்கு சமூக அமைப்பு நிறைய வசதிகளை அளித்துள்ளது. முதலாவதாக பலவிதமான வித்தியாசங்கள் உள்ள வேலை அமைப்புகளில் பெண்களும் ஒரு அங்கம் என்ற புரிந்துணர்வு இங்கே உள்ளதால் பெண்கள் வேலையிடத்தில் எளிதாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, அம்மா, மாமியார், மச்சினர், அக்கா, தங்கை என்று நமது குடும்ப அமைப்பு விஸ்தாராமானது. எப்போ வேண்டுமானாலும் எந்தவிதமான உதவியும் நமக்கு நம் குடும்பத்தினரிடமிருந்து சுவாதீனமாக கிடைக்கும். இதெல்லாம் தவிர இருக்கவே இருக்கு வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆள் என்று. இந்த மாதிரி எல்லாம் வெளி நாட்டில் அபூர்வம்." என்று தன் வெற்றிக்கு தன்னைச் சார்ந்தவர்களை எளிதாக அடையாளம் காட்டும் இவரது சுபாவம் எனக்குப் பிடித்தது.

One Must dream, set goals, do one's best, and not worry about the result. Accolades that have come my way are endorsements that I am on the right course." இது, இவரது வெற்றியின் ரகசியம்.

வெளி நாட்டில் இதேபோல் உலகளவில் வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் பெண்களில் குறிப்பிடத் தகுந்தவர், - Fortune பத்திரிகையி¢ன் உஅலகின் சக்தி வாய்ந்த 50 பெண்மணிகளில் முதன்மை சிலரில் ஒருவர் - Hewlett Packard ன் தலைமை அதிகாரி Carly Fiorina. HP யின் பார்சல் பகுதியில் பில்களைக் கூட்டிக் கழித்துக்கொண்டு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக ஆரம்பித்த கார்லி பியோரினா இன்று எப்படி அந்த நிறுவனத்திற்கே தலைமையதிகாரியாக உயர்ந்தார் என்பதை இங்கே படிக்கலாம். இந்தியாவைவிடவும் அமெரிக்காவில் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதில் நிறைய பெண் என்பதாலேயே நிறைய விமரிசனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் அங்கே உண்டு போலிருக்கிறது.

"love what you do, or don't do it........ it's about finding your soul and following it." என்று சொல்லும் இவருக்கு ஆசான், குரு, பின் புலம் உதவி எல்லாமே இவரது அம்மா. "என் பெற்றோர்கள், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தங்கள் நம்பிக்கையிலும் தங்களுக்கு சரியென்று பட்டதை விடாப்பிடியாக பின்பற்றுவதிலும் அவர்கள் காட்டிய தீவிரம் என்னை வழி நடத்தியது. அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் உயர்வு என்பது ஒரு மனிதனின் உயர்ந்த குணங்களேயாகும்."

3 comments:

Jayaprakash Sampath said...

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த கண்ணாடித் திரை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டுதான் வருகிறது என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக எந்த தடையும் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், விரும்பத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

1900 க்கு முன்பு பெண்களின் நிலைமை என்னவென்று எனக்குத் தெரியாது. புதினங்கள் மூலமாக லேசு பாசாக அறிந்து கொண்டது மட்டும் தான். ஆனால் நூற்றாண்டின் துவக்கத்தில், கல்வி மறுக்கப் பட்டு, ஏழெட்டு வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். சில பத்தாண்டுகள் கழித்து பத்தாவது வரை படிக்க அனுமதிக்கப் பட்டு, ஆட்டம் பாட்டு என்று கற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வயதுக்கு வந்த பின் தான் திருமணம் என்ற மாற்றமும் ஏற்பட்டது. டாக்டர் கல்யாணி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற, அந்த காலத்து விதிமுறைகளை மீறி, உயர்படிப்பு படித்து, அதன் பின் வந்தவர்களுக்கு, ரோல் மாடலாக விளங்கினர்.

அறுபதுகள் , எழுபதுகளில், அதிக அளவில் பெண்கள், வேலைக்கு செல்வது ,அதிலும் குறிப்பாக. மாநில மத்திய அரசாங்க உத்தியோகங்கள். பிகாம், பிஎஸ்ஸி படித்த காலங்கள் போய், பொறியியல் துறைகளிலும், சம அளவில் பெண்கள் படிக்கத் துவங்கினர். வாசல் படிக்கட்டு இறங்கக் கூடாது என்று இருந்த நிலைமை மாறி, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவும், அலுவல் தொடர்பாக, தனியாக விமானம், ஏறி பிற இடங்களுக்குச் சென்று தனியாக தங்கும் சூழ்நிலைகள் எல்லாம் கடந்து, வெளிநாட்டில் படிக்கவும், ஆராய்ச்சி செய்வதுமாக, அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதுமான சூழ்நிலை வந்திருக்கின்றது. மருத்துவம், செவிலியர் துறை, ஆசிரியர் தொழில் என்ற கன்வெஷனல் துறைகள் மட்டுமில்லாமல், அணுஆராய்ச்சி, ராணுவம், விண்வெளித்துறை, ரிமோட் சென்சிங், entrepreneurship, ஜெனெடிக் இஞ்சினியரிங், மென்பொருள்துறை, விளம்பரநிர்வாகம், வங்கிகள் போன்ற ஆண்கள் ராஜ்ஜியம் செய்த இடங்களில் பெண்களும் தென்படத் துவங்கி இருக்கிறார்கள்.

ஜஸ்வத்பாய்பென் என்ற படிப்பறிவில்லாத பெண்ணும், இன்னும் ஆறு பெண்களுக் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, கைக்காசைப் போட்டுத் துவக்கிய ஒரு அப்பளக் கூட்டுறவுக் கம்பெனியின் ( லிஜ்ஜட் பப்பட்) கடந்த வருட டர்னோவர், 3.1 பிலியன் ரூபாய்கள். நட்டத்தில் இருந்த இந்தியன் வங்கியை மீட்டு, திறமையாக நிர்வாகம் செய்து, தற்போது நபார்ட் ( NABARD) இன் தலைமைப் பொறுப்பில் இருக்கிற திருமதி. இரஞ்சனா குமார், டிகிரி முடித்து விட்டு, இந்தியன் வங்கியில் வெறும், ஒரு ப்ரோபேஷனரி அலுவலராக சேர்ந்தவர் என்பது நினைவிருக்கிறதா? வீட்டுக்காரர் இறந்து போன பிறகு, சட்டென்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு உள்ளே வந்த அனு அகா (தெர்மாக்ஸ்)? மனோஹர் சாப்ரியா இறந்து போன பிறகும் , விடாது, விஜய் மல்லயாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் கோமல் & கிரண் சாப்ரியா ( ஷாவாலஸ்) ? இவை இந்திய கார்ப்பரேட் துறையிலே பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறது என்பதற்கான அத்தாட்சி அல்ல. ஆனால், கண்ணோட்டத்திலே மாறுதல் ஏற்பட்டு வருகிறது அதுவும் வேகமான மாறுதல் என்பதற்கான நிரூபணம். மேலை நாடுகளில் கண்ணாடித்திரை, கனமாக இருக்கிறது என்று நினைக்கிறேன் ( அல்லது அப்படித்தான் எனக்குப் புரிந்தது).

பூச்சியத்தை கற்றுக் கொடுத்தோம். தசம எண் முறைகளை கற்றுக் கொடுத்தோம் யோகாவில் இருந்து ஆலு டிக்கி வரை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறோம். do not worry, அந்த ஊர் பெண்களுக்கு கண்ணாடித்திரையை உடைப்பது எப்படி என்றும் கற்றுக் கொடுப்போம்

Badri Seshadri said...

பிரகாஷ்: நாலைஞ்சு எடுத்துக்காட்டு போதாது. அந்த மாதிரி கஷ்டப்பட்டு எடுக்கற எடுத்துக்காட்டே எது rule, எது exception ன்னு காமிச்சிடும்.

Glass ceiling இருக்கு. அமெரிக்காவோ, பிரிட்டனோ, இந்தியாவோ, எல்லா இடத்துலயும் இருக்கு. பாராளுமன்றத்துல இருக்கு. உருப்படியான எதாவது ஒரு அமைச்சகம் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கா? ஏன்? தமிழக முதல்வர் ஜெயலலிதாவோட அமைச்சரவைல பேர் சொல்ற மாதிரி எத்தனை பெண் அமைச்சர்கள்?

ஆனா நீங்க சொல்ற மாதிரி இன்னமும் பல வருடங்கள் ஆகும். இப்ப 10, 12 ஆவது படிப்புல அதிக அளவு தேர்ச்சி பெறது பெண்கள். இது இதற்கடுத்த நிலைல - அதாவது காலேஜ், மேற்படிப்புல இல்ல. படிக்கறதே ரொம்ப கொறஞ்சிடுது. இங்க மாற்றம் ஏற்பட்ட பின்னாடிதான் வேலையில் இருக்கறவங்கள்ள மாற்றம் ஏற்படும். 30-40 வருஷத்துக்கு மேல ஆகலாம்.

Aruna Srinivasan said...

பிரகாஷ்: நான் சொல்ல வந்ததை பத்ரி சொல்லிவிட்டார். அதாவது இப்படி "பெண்' சாதனையாளர்களைப் பட்டியலிடுவதே ஒரு முரண்பாடாகத் தோன்றவில்லை? இவரிவர் இங்கே, என்று ஆண் CEOக்களைப் பட்டியலிடுவதில்லையே? ஆனாலும் ஒருவிதத்தில் நீங்கள் சொவது மிகச் சரி. பிற நாடுகளை விட, இந்தியாவில் எவ்வளவோ விதங்களில் பெண்கள் முன்னேற்றம் அதிகம் எனலாம் - பெண்சிசு வதை, பெண் கல்வியறிவு எண்ணிக்கை குறைச்சல், ஸ்டவ் மரணங்கள், போன்ற சமூகக் கேடுகளின் என்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் பெரும்பாலும் நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையேதும் இல்லை. சொல்லப்போனால் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படுகிற நாடுகளில் வருவதற்கு முன்னாலேயே நம் பெண்களுக்கு ஓட்டு சுதந்திரம் வந்துவிட்டது - அதாவது ஆரம்ப நாளிலிருந்து நாம் வித்தியாசம் பார்த்ட்தில்லை ஓட்டுரிமை விஷயத்தில்- தவிர, நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த அந்தக் காலத்திலேயே நம் பெண் சாதனையாளர்கள் அதிகம்தான்.

இருந்தாலும் பத்ரி சொல்வதுபோல் கண்ணாடிக் கூரை இருக்கதான் செய்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நான் சொல்லியுள்ள முக்கிய கருத்தைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லையே? அந்த ET கட்டுரையில் ஒரு புதிய யோசனை முன் வைக்கப்படுகிறது. அதாவது, நம்ப ஊரிலாகட்டும் வெளியேயாகட்டும்; பெண்கள் பெருமளவு தலைமைப் பதவி அடையாததற்கு - அல்லது அடைய விரும்பாததற்கு ( அந்த Firtune Powerful women 50 கட்டுரையில் கணிசமான சதவிகித பெண்கள் carly Fiorinaவின் நிலையை அடைய விரும்பவில்லை) காரணம் குடும்பம் மற்றும் தனிப்பட வாழ்க்கைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். அதுபோல் அந்த முதன்மை 50 பேர்களிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு பின் பலம் - வீட்டைக் கவனிக்கும் கணவர்கள் !!! இங்கே கொஞ்சம் அழுத்திப் படிக்கவும் - :-) ஏதோ வேலைக்குப் போனோம் சம்பாதித்தோம் என்ற நிலையில் இல்லாமல் ஆண்களுகு நிகராக மேலே ஏற முயலும் பெண்களுக்கு குறைந்த பட்சம் ஆண்களைப் போலவே வீட்டுக் கவலை இல்லாமல் இருக்கும் சமூக சூழ்நிலை வேண்டும். சமூக அங்கீகாரம் மட்டும் வந்தால் போதாது. மனதளவில் குடும்பம் நன்றாக பராமரிக்கப்படுகிறது என்ற உணர்வு இருகும்போதுதான் அனேகம் மெண்கள் வெளியே சாதிக்க முயலுகின்றனர். தனக்கு பெரிய Moral Support ஆக இருக்கும் தன் மாமியார் மற்றும் உறவினர்களை சம்யம் கிடைக்கும்போதெல்லாம் வாழ்த்த ரஞ்சனா கபூர் தயங்குவதில்லை. Infosys chairman ஆக நீயோ நானோதான் இருக்க முடியும்; ஏனென்றால் நம் குடும்பத்துக்கு, நம் குழந்தைகளுக்கு நம்மில் யாராவது ஒருவர் முழுக் கவனம் கொடுக்க முடிய வேண்டும் என்ற Choice வந்தபோது சுதா மூர்த்தி தேர்ந்தெடுத்தது குடும்பத்தை. ( ஒரு பேட்டியில் என்னிடம் குறிப்பிட்டது.)

அதனால்தான் சொன்னேன் - மற்ற நாடுகளைவிடவும் இங்கே பெண்களுக்கு சமூக பக்க பலம் - குடும்ப ஆதரவு அதிகம் - அப்படி இல்லாதவர்களுக்கு அந்த கட்டுரையாளர் சொன்ன யோசனையும் நன்றாகதான் இருக்கிறது என்று :-) ஹ்ம்.... House secretary!!! கேட்க நன்றாக இல்லை ? :-)