Sunday, May 16, 2004

இளைஞர் மண்டேலா!!

2010ம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்த தென்னாப்பிரிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்வு அறிவிப்பு செய்யப்பட்ட அடுத்த வினாடி ஒரே உற்சாக வெள்ளம். அதையொட்டி நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை. அவரும் முகமெல்லாம் மலர்ச்சியாக, " இப்போது நான் 50 வயது இளைஞனைப் போல் உணருகிறேன்" என்று தன் உற்சாகத்தை எல்லொருடனும் பகிர்ந்து கொண்டார்.

என்ன சொல்ல வருகிறேனென்றால், 50 வயதானாலே "வயசாச்சு" என்று சொல்லத் தோன்றும் இந்த காலத்தில் 87 வயதாகும் நெல்சன் மண்டெலா 50 வயது 'இளைஞன் என்று சொன்னது சுவாரசியமாக இருந்தது. அது சரி; அவருடைய 87 வயதுக்கு 50 வயது இளமைதான். இருந்தாலும் வயது ஏற ஏற, 'வயதாகிவிட்டது' என்ற புலம்பல் இல்லாமல் மனதளவில் இளமையாக உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் கொஞ்சம் உற்சாகம் தானே ஒட்டிக்கொள்ளாதா? இதுபோல்தான் என் தந்தைக்கு சென்ற வருடம் ஒரு அறுவை சிகிச்சை செய்யும்படி இருந்தது. பத்து நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மலுக்கு வந்த அவரை தினம் எப்படி இன்று முன்னேற்றம் என்று விசாரிப்பது என் வழக்கம். அப்போதைய உடல் நிலை குறித்து ஏதாவது சொல்வார். ஒரு நாள் சொன்னார். " எல்லாம் இப்போ சரியாக இருக்கு. ஆனால் என்ன.... என் நடைதான் சற்று மெள்ளமாக இருக்கு. பார், தாத்தா மாதிரி நடக்கிறேன்..." !! என்றார். அப்போது அவர் வயது, 87 !!

No comments: