Wednesday, April 28, 2004

வக்கீல் தொழிலா ? அரசியல் தொழிலா?

அப்பாடி.. ஒரு வழியாக வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வருண் காந்தி ஒரு தீர்வு கொடுத்துவிட்டார்.

NDTVயில் நாளரு தலைவர் என்று பல தலைவர்களை அவர்கள் தொகுதியில் பிரசாரம் செய்வதை நாள் முழுவதும் தொடர்ந்து அவரைப் பேட்டி காணும் நிகழ்ச்சியான Follow the Leader என்ற நிகழ்ச்சியில் நேற்று வருண் காந்தியை, பர்கா தத் பேட்டி கண்டார். " நீங்களும் அரசியலில் நுழைந்துவிட்டீர்கள். இது எதைக் காட்டுகிறது?" (கேள்வி, கிட்டதட்ட இந்த அர்த்தத்தில்) என்று கேட்டார். சப்பாத்தியை விண்டு பக்கத்தில் குழம்பில் தோய்த்து சாப்பிட்டுக்கொண்டே வருண் அதற்கு பதில் சொன்னார்.

" முதலில் நான் ஒரு professional lawyer. படித்தது வக்கீல் தொழிலுக்கு. இரண்டாவதாக, நான் இன்று என் தாயின் மகனாக, ஒரு காந்தியாக நுழைந்துள்ளேன் எனலாம். மூன்றாவதாக, நான் இன்று ஒரு வேலையில்லாமல் இருக்கிறேன் என்பதையும் காட்டுகிறது. - It shows my status of unemployment."

இப்போது புரிகிறதா? வேலையில்லாதவ்ர்கள் என்ன செய்ய வேண்டும் என்று? சரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? is politics a profession? or a vocation/ a calling of higher ideals ? - இரண்டுக்கும் இன்று மயிரிழை வித்தியாசம்தான் (???) ஆனால் எங்கே அந்த வித்தியாசக்கோட்டை இழுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஜனாதிபதி திரு அப்துல் கலாமை முதன் முதலில் நான் பேட்டி கண்டபோது ( அப்போது அவர் பாரத ரத்னா விருது வாங்கியிருந்த சமயம் - Department of Defence Research & Development ன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். " போனிலேயே பேசலாமே, என்று எளிமையாக சொல்லிவிட்டு தான் இயற்றிய ஒரு கவிதையுடன் பேட்டியை ஆரம்பித்தார் ! ) சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ( அதன் பிறகு அவருடைய இந்த வார்த்தைகள் புத்தகங்களிலும், பேச்சுக்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன) " சுதந்திரப் போரின்போது நம் தலைவர்களை ஒரு பொது குறிக்கோள் ஊக்குவித்து வந்தது. எல்லோருக்கும் ஒரே பொது சிந்தன. எல்லோருடைய கவனமும் அதிலேயே இருந்தது. ஆனால் அதன் பின் நம்முடைய சிந்தனையில் அந்த மாதிரி எந்த பொதுவான காரணமும் இல்லாமல் போய்விட்டது. இன்று அப்படி ஒரு பொது குறிக்கோள் - 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற குறிக்கோள் - மறுபடியும் நம் மனங்களில் கனன்று கொண்டு இருக்க வேண்டும்." என்றார்.

இன்று என் ஆதங்கமெல்லாம், அப்படி ஒரு பொது குறிக்கோள் நம் அரசியலில் என்றாவது நுழைய வாய்ப்பு இருக்கிறதா? இளைஞர்கள் அரசியலை ஒரு "வேலை வாய்ப்பாக" அல்லது "தொழிலாகவே பார்க்கட்டும். பாதகமில்லை. அந்தக் காலம் போல் தேசத் தொண்டாக / மக்களுக்கு சேவை, போன்ற அகராதியில் ( மட்டுமே?) இருக்கும் வார்த்தையெல்லாம் வேண்டாம். ஆனால் செய்யும் தொழிலே தெய்வம் என்ற நோக்கும் கொஞ்சம் இருக்கட்டுமே? நேர்மையும் கண்ணியமும் அதில் கொஞ்சம் வரலாமே? என்ன? அதிகமாகவா கேட்கிறோம்?

இதை எழுதும்போதே என் உள்ளே ஒரு அசரீரி - திருவாளர் அரசியல்வாதி: "ரொம்ப சரி. இந்த வேலையையும் நாங்கள் மற்ற வேலைகளைப் போல்தானே செய்கிறோம்? ஒரு கட்சி எங்களுக்கு ஆதாயமாக இல்லாவிட்டால் இன்னொரு கட்சிக்கு உடனே மாறிவிடுகிறோமே? அட, இதைத்தானே இன்றைய தொழில் நுட்ப இளைஞர்களும் செய்கிறார்கள்? எப்படி காலத்டுக்கு ஏற்றபடி எங்கள் "தொழிலை" செய்கிறோம் இல்லையா?

அடக்கடவுளே! இதற்கென்ன பதில்?

No comments: