Wednesday, April 28, 2004

வக்கீல் தொழிலா ? அரசியல் தொழிலா?

அப்பாடி.. ஒரு வழியாக வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வருண் காந்தி ஒரு தீர்வு கொடுத்துவிட்டார்.

NDTVயில் நாளரு தலைவர் என்று பல தலைவர்களை அவர்கள் தொகுதியில் பிரசாரம் செய்வதை நாள் முழுவதும் தொடர்ந்து அவரைப் பேட்டி காணும் நிகழ்ச்சியான Follow the Leader என்ற நிகழ்ச்சியில் நேற்று வருண் காந்தியை, பர்கா தத் பேட்டி கண்டார். " நீங்களும் அரசியலில் நுழைந்துவிட்டீர்கள். இது எதைக் காட்டுகிறது?" (கேள்வி, கிட்டதட்ட இந்த அர்த்தத்தில்) என்று கேட்டார். சப்பாத்தியை விண்டு பக்கத்தில் குழம்பில் தோய்த்து சாப்பிட்டுக்கொண்டே வருண் அதற்கு பதில் சொன்னார்.

" முதலில் நான் ஒரு professional lawyer. படித்தது வக்கீல் தொழிலுக்கு. இரண்டாவதாக, நான் இன்று என் தாயின் மகனாக, ஒரு காந்தியாக நுழைந்துள்ளேன் எனலாம். மூன்றாவதாக, நான் இன்று ஒரு வேலையில்லாமல் இருக்கிறேன் என்பதையும் காட்டுகிறது. - It shows my status of unemployment."

இப்போது புரிகிறதா? வேலையில்லாதவ்ர்கள் என்ன செய்ய வேண்டும் என்று? சரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? is politics a profession? or a vocation/ a calling of higher ideals ? - இரண்டுக்கும் இன்று மயிரிழை வித்தியாசம்தான் (???) ஆனால் எங்கே அந்த வித்தியாசக்கோட்டை இழுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஜனாதிபதி திரு அப்துல் கலாமை முதன் முதலில் நான் பேட்டி கண்டபோது ( அப்போது அவர் பாரத ரத்னா விருது வாங்கியிருந்த சமயம் - Department of Defence Research & Development ன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். " போனிலேயே பேசலாமே, என்று எளிமையாக சொல்லிவிட்டு தான் இயற்றிய ஒரு கவிதையுடன் பேட்டியை ஆரம்பித்தார் ! ) சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ( அதன் பிறகு அவருடைய இந்த வார்த்தைகள் புத்தகங்களிலும், பேச்சுக்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன) " சுதந்திரப் போரின்போது நம் தலைவர்களை ஒரு பொது குறிக்கோள் ஊக்குவித்து வந்தது. எல்லோருக்கும் ஒரே பொது சிந்தன. எல்லோருடைய கவனமும் அதிலேயே இருந்தது. ஆனால் அதன் பின் நம்முடைய சிந்தனையில் அந்த மாதிரி எந்த பொதுவான காரணமும் இல்லாமல் போய்விட்டது. இன்று அப்படி ஒரு பொது குறிக்கோள் - 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற குறிக்கோள் - மறுபடியும் நம் மனங்களில் கனன்று கொண்டு இருக்க வேண்டும்." என்றார்.

இன்று என் ஆதங்கமெல்லாம், அப்படி ஒரு பொது குறிக்கோள் நம் அரசியலில் என்றாவது நுழைய வாய்ப்பு இருக்கிறதா? இளைஞர்கள் அரசியலை ஒரு "வேலை வாய்ப்பாக" அல்லது "தொழிலாகவே பார்க்கட்டும். பாதகமில்லை. அந்தக் காலம் போல் தேசத் தொண்டாக / மக்களுக்கு சேவை, போன்ற அகராதியில் ( மட்டுமே?) இருக்கும் வார்த்தையெல்லாம் வேண்டாம். ஆனால் செய்யும் தொழிலே தெய்வம் என்ற நோக்கும் கொஞ்சம் இருக்கட்டுமே? நேர்மையும் கண்ணியமும் அதில் கொஞ்சம் வரலாமே? என்ன? அதிகமாகவா கேட்கிறோம்?

இதை எழுதும்போதே என் உள்ளே ஒரு அசரீரி - திருவாளர் அரசியல்வாதி: "ரொம்ப சரி. இந்த வேலையையும் நாங்கள் மற்ற வேலைகளைப் போல்தானே செய்கிறோம்? ஒரு கட்சி எங்களுக்கு ஆதாயமாக இல்லாவிட்டால் இன்னொரு கட்சிக்கு உடனே மாறிவிடுகிறோமே? அட, இதைத்தானே இன்றைய தொழில் நுட்ப இளைஞர்களும் செய்கிறார்கள்? எப்படி காலத்டுக்கு ஏற்றபடி எங்கள் "தொழிலை" செய்கிறோம் இல்லையா?

அடக்கடவுளே! இதற்கென்ன பதில்?

Monday, April 26, 2004

ஜோசியம் பாக்கலியோ, ஜோசியம்..... :-)

காங்கிரஸ் கூட்டணி ஓகேதான். ஆனால் அதில் சோனியா பிரதமராக வருவது மட்டும் கொஞ்சம் இடிக்கிறதே என்று நினைப்பவர்களா நீங்கள்? உங்களைப் போன்றவர்களுக்காகவே ஒரு ஜோசியம் - காங்கிரஸ் பலமாக ஆனாலும் ஆகலாம்; ஆனால் சோனியா பிரதமராக வரவே மாட்டாராம் ! ( எதிரணிக் கட்சியினர் போடுகிற எதிர்ப்பு சத்தத்தில் சோனியா பிரதமர் ஆவதற்கு ஆசைப்படுவாரா என்பதே என்னைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்குறிதான் - ஆனால் எதிர்கட்சியினர் எதிர்பார்ப்பும் அதுதானே ? எறும்பூர, கல்லும் தேயாதோ? )

ராகுல் காந்தி பிரதமராவது இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துதானாம். ஆனால் அவரது உயிருக்கு அபாயம் இருக்கிறதாம். ( ஹ¤ம்...... அதென்ன சாபமோ தெரியலை..... காங்கிரஸில் யாராவது இளைஞர்கள் சற்று மக்களிடம் பிரபலமடைகிறார்போல் ஆனால் போதும், ஆபத்து வந்துவிடுகிறதே... ராஜீவ் காந்தியை விடுங்கள்... அப்புறம் கடந்த சில வருடங்களில் விபத்துக்களில் மறைந்த ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா, என்று சில உதாரணங்களும் இருக்கே? )

சரி இந்த தேர்தல் ஜோசியத்தில் பிரியாங்கா? ம் ஹ¤ம். அவரைப் பற்றி பேச்சே காணோம். பொதுவாக பல பெண்கள் செய்வதுபோல் குடும்பம் மற்றும் குழந்தைகள்தான் இப்போதைக்கு அவருக்கு முக்கியம் என்று தோன்றுகிறது. இருக்கட்டும். ஆர அமர அரசியலுக்கு வந்தால் போதும் - இப்போ என்ன அவசரம் ? !

வாஜ் பாய்தான் மறுபடி பிரதமர் என்கிறார்கள் இந்த ஜோசியர்கள். ஆனால் இரண்டு வருடங்களுக்குதானாம். - பாக்கி மூன்று வருடங்கள்??? அத்வானிஜியா? ம்..ஹ¤ம். அப்படியுமில்லையாம். ஒரு வேளை நடுவில் இடைக்கால தேர்தலும் வரலாமாம். ( சரியாப் போச்சு :-( மறுபடி பலகோடிகள் செலவா? நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுத்தே நம்ம கஜானா காலியாகிவிடும் போலிருக்கே! )

சரி இந்த ஜோசியம் எல்லாம் நடக்கும் என்று என்ன நம்பிக்கை? அட, நடக்கும் என்று யார் சொன்னார்கள்? தேர்தல் சர்க்கஸில் இன்னும் ஓர் காட்சி - அவ்வளவுதான்.

Monday, April 12, 2004

அமெரிக்காவில் சுபிட்சம் திரும்புகிறது?

அமெரிக்காவில் வேலையில்லாதோருக்காக அளிக்கப்படும் மான்யத்தொகைக்கு வரும் விண்ணப்பங்கள் குறைந்து விட்டனவாம். கடந்த மூன்று வருடங்களை ஒப்பிட்டால் சமீபத்தில் இப்படி மான்யத்தொகைக்கு விண்ணப்ப்பிப்பவர்கள் மிகக் குறைந்தது, அமெரிக்க வேலை வாய்ப்பு வட்டாரங்களில் ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. பின்னே வேறு என்ன வேணும்? அவங்க வேலைகளை நாம் எடுத்துக்கொண்டுவிட்டோம் என்று இனியாவது பழி போடாமல் - Outsourcing என்று சாக்கு சொல்லி நம் - இந்தியாவின் - தலையை உருட்டாமல் இருந்தால் போதும்.

Friday, April 09, 2004

தேர்தலோ தேர்தல்......

கருத்துக்கணிப்புகளை ஒரு காலத்தில் எதிர்த்தவள் நான். தேர்தல் ஆணையம் சொல்லும் அதே காரணத்துக்காக - வாக்களிக்கும் முன் வாக்காளர்களிடம் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நானும் நம்பினேன். கருத்து சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால் பொது நன்மை என்று வரும்போது வாக்களிப்புகள் பாரபட்சமாக இருந்துவிட இந்த கணிப்புகள் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

தவிர, கணிப்புகளில் எடுத்துக்கொள்ளப்படும் சாம்பிள் வாக்காளர்கள் உண்மையில் வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்களார்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். இந்த தேர்தல் கணிப்பு சமாசாரம் இந்தியாவில் என்றல்ல; பிற நாடுகளிலும் கூட ஒரு புதிராகவே இருந்து வருகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி. உண்மையில் சாவடிக்குச் சென்று வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம். நம் நாட்டில் சுமாராக 670 மில்லியன் வாக்காளர்கள் என்று சொல்கிறார்கள். இதில் வாக்களைப்பவர்கள் சதவிகிதம் ஏறத்தாழ - 60 % என்று வைத்துக்கொண்டால் அமெரிக்காவில் 30 % மட்டுமே ! " நான் இந்தத் தொழில் ஆரம்பித்த காலத்தில் ( 1984) 65 சதவிகிதமாக இருந்தது இன்று முப்பதாக குறைந்துவிட்டது என்று அங்கலாய்க்கிறார் அமெரிக்க தேர்தல் கணிப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் John Zogby. (ஆதாரம் : அமெரிக்க தூதரகத்தின் வெளியீடான Elections 2004"என்ற புத்தகம்.)

Psephology என்பது அறிவியல் பூர்வமான கணிப்பு முறை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய வாக்காளர்களின் சரியான எண்ணப்போக்குகளைக் கண்டுபிடிப்பதில் சில செயல்முறை சங்கடங்கள் உள்ளன. உதாரணமாக மதில் மேல் பூனையாக உள்ளவர்கள்; மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று சொல்பவர்கள் என்று பட்டியல் இடலாம். இந்த குறைகளுக்கு எல்லாம் இடம் வைத்துதான் கணிப்புகள் நடக்கின்றன. இருந்தாலும் வாக்காளர்களின் இறுதி முடிவுகள் பொதுவாக கணிப்பார்களை ஆச்சரியப்படுத்தும் விதத்திலேயே இருக்கின்றன.

இந்தக் காரணங்களாலும் கணிப்புகள் வாக்காளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்திருந்ததாலும் கணிப்புகள் வெளியிடப்படுவது பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. ஆனால் இப்போது கடந்த சில தேர்தல் முடிவுகளை கவனித்ததில் என் அபிப்பிராயத்தை மாற்றிகொள்கிறேன்.

காரணம் 1: கருத்துக்கணிப்புகள் எந்தவிதத்திலும் வாக்காளார்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் பல கணிப்புகளை அவர்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாங்கள் சொன்ன கணிப்பே சரி என்று அவரவர் சொல்ல ஆரம்பிப்பார்கள்; அல்லது இரண்டுக்கு ஒன்று தவறாக கணிப்பது சகஜம்தான் என்ற தோரணையில் விளக்கம் வரும்.
ஆக மொத்தத்தில், கணிப்புகள் எப்படியிருந்தாலும் வாக்காளர்கள் தங்களுக்குள் என்ன முடிவு செய்கிறார்களோ அது அவர்களுக்குதான் வெளிச்சம்.

காரணம் 2 : இந்த தேர்தல் கணிப்புகள், அலசல்கள் மக்களின் மனதைச் சரியாக உணர வைக்கிறதோ இல்லையோ, கட்சிகள் தங்கள் குறை நிறைகளை எடை போட உதவுகின்றன. கணிப்புகள் கடந்த காலத்தில் ஏன் தவறாயின அல்லது சரியாக இருந்தன என்று அலசுவது கட்சிகளுக்கு ஆக்கபூர்வமான சிந்தனைகளை அளிக்கலாம்.

காரணம் 3: அட; பலர் கையில் கொறிக்க வைத்துக்கொண்டு சுவாரசியமாக டிவியில் பார்க்க உட்கார்ந்துவிடுவார்களே! Pure Entertainmnet value at the cost of a few crores to the Indian exchequer. அதுதான் ஆயிரம் கோடியில் ஒரு திருவிழா என்று மாலன் சொல்லுகிறாரே :-)

அதுசரி; 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கிட்டு சமாசாரம் எல்லாம் இந்த பார்லிமெண்ட்டிலாவது கவனிக்கப்படுமா? தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விஷயம் போகிற போக்கில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் எவ்வளவு தூரம் இதில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறிதான். கட்சிகளுக்குள்ளேயே பெண்களுக்கு நிறைய இடம் கொடுக்கவில்லையே? தமிழ் நாட்டில், திமுக போட்டியிடும் 15 இடங்களில் மூன்று சீட்தான் பெண்களுக்கு கொடுத்துள்ளது. அதிமுக - 33 இடங்களில் 2 - பிஜேபி 7 இடங்களில் ஒன்றே ஒன்றுதான் காங்கிரஸ் - 10 இடங்களில் ஒன்றே ஒன்று. பார்லிமெண்டில் இவர்கள் என்ன செய்கிறார்களென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருந்தாலும் பொதுவாகவே பெண்களுக்கு அரசியல் ஈடுபாடு குறைச்சலோ? சிங்கப்பூரில் இருந்தபோது சிங்கப்பூர் பெண்கள் ஏன் அரசியலில் அதிகமில்லை என்று எழுதிய என்
பழைய கட்டுரை ஒன்று இங்கே படியுங்கள்.
" குடும்பத்தை முதலில் கவனித்துவிட்டு பின்னர்தான் நாடும் அரசியலும் கவனத்தில் வருகின்றன பெண்களுக்கு - அதாவது அவர்களுக்கு சுமார் 40 வயதானபின். ஆண்களோ முப்பதுகளிலேயே அரசியலில் நுழைந்து விடுகின்றனர்." என்று ஒரு சிங்கப்பூர் பார்லிமெண்ட் ( முன்னாள்?) உறுப்பினர் கூறியுள்ளார். "..இன்று வேண்டுமானால் பெண் முதல்வர் என்பது இங்கே கற்பனைக்கெட்டாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இன்னும் 10 வருடங்கள் கழித்தும் இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி சரியாக 8 வருடம் ஆகிறது. இன்று அங்கே பெண்கள் அரசியலில் ஈடுபாடு காண்பிக்கிறார்களா என்று அங்கிருப்பவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.

Monday, April 05, 2004

மறுபதிவும் கூட்டுப்பதிவும்

" கூட்டுப் பதிவு " சமாசாரம் மறுபடி கலந்துரையாடலுக்கு - விவாதம் என்று சொல்ல மாட்டேனே ! :-) - வந்துள்ளது.

இந்த வார வலைப்பூ ஆசிரியர் சுந்தரவடிவேலு தொடங்கி வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் பத்ரியும் பின்னர் வலைப்பூ பற்றி, "அலைகளில்" என் விளக்க பதிவிலும் இந்த கூட்டுப் பதிவு சமாசாரம் அலசப்பட்டுள்ளது.

இதில் ஒரு சுவாரசிய்மான co-incidence ; சுந்தரவடிவேலு மறுபடியும் இன்று ஆரம்பித்து வைத்துள்ள இதே சமயத்தில் ஹிந்துவில் NetSpeak எழுதும் ஜே. முரளியும் இன்று தன் தொடரில் கிட்டதட்ட இதே விஷயத்தைத்தான் அலசுகிறார். மறுபதிவு என்கிற புதிய வழக்கம் எப்படி பல ஆயிர வலைப்பதிவுகளிலிருந்து நமக்கு தேவையானதை மட்டும் பிரித்து பொறுக்கிக்கொள்வது என்று விளக்குகிறார்.

தங்கமணி வலைப்பூவில் சொல்லியிருப்பதுபோல் இந்த மறுபதிவு வழக்கம், பலவித அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்கள் நாலாபக்கங்களிலும் பலருக்கும் போய்ச்சேர வழி செய்யும். இந்த மறுபதிவு என்பது ஒரு வடிகட்டி சமாசாரம் - சுந்தரவடிவேலு சொல்லியிருப்பதுபோல் "......ஆட்டுக்கிடையில் புளுக்கைக் கணக்கு...." அல்லது சினிமா, மற்றும் தேவையில்லாத வம்பு என்று ஏதேதோ விஷ்யங்கள் எல்லாம் மொத்தமாக குவிந்து கிடக்கும் வலைப்பதிவு குவியலை ஒரு சல்லடையில் போட்டு சலித்த கணக்கில் நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொல்ள இந்த மறுபதிவு முறை உதவி செய்யும்.

எப்படி?

தங்கமணி குறிப்பிட்டாற்போல் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த கூட்டுப் பதிவு இருக்கிறது என்று வையுங்கள். உதாரணமாக விளம்பரத் துறை. இந்த விளம்பரத் துறை கூட்டுப் பதிவில் இந்தத் துறையில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவார்கள். அதோடில்லாமல், இந்தத் துறை பற்றி அவ்வப்போது பதிவாகும் அனைத்து பதிவுகளுக்கும் இங்கே ஒரு லிஸ்ட் இருக்கும். பதிவுகளின் ஆரம்ப வரியின் சுட்டியும் கொடுக்கப்ப்ட்டிருக்கும். லிஸ்டை வரிசையாகப் படித்து நமக்கு வேண்டியதை மட்டும் சொடுக்கினால் போதும். இப்படி செய்யும்போது நமக்கு சுவாரசியமுள்ள விஷயங்கள் நம் கண்களில் படாமல் விட்டுப் போகாமலும் இருக்கும் -( நமக்குப் பிடித்த விஷயங்களுக்காக அத்தனை பதிவுகளையும் தேட யாருக்கு பொறுமை உள்ளது?) - அதே சமயம், நாம் எழுதும் விஷயங்கள் குறிவைத்தாற்போல் இந்த விஷயத்தில் நாட்டம் உள்ளவர்களை சென்றடையும்.

எல்லாம் சரிதான். ஆனால் Newsfeed, Rss Feed, atom feed தவிர இன்னும் ஏதேதொ தொழில் நுட்ப சமாசாரங்கள் சுத்தமாக புரிவதில்லையே. இந்த மறுபதிவு "கட்டிட" வேலைகளைப் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். தொழில் நுட்ப வல்லுனர்கள் யாராவது கட்டிடங்கள் எல்லாம் வகையாக நிர்மாணித்து அமைத்து வைத்தால் விஷயதானம் செய்யவும் எனக்கு வேண்டியதை சுலபமாக எடுத்துக்கொண்டு மேயவும் நான் தயார் !! :-)

50 வருட சாதனையை 5 வருட சாதனையாக்குவது எப்படி ?

50 வருடங்களாக இல்லாத வளர்ச்சி ஐந்தே வருடங்களில் வந்துவிட்டதாக சொல்வது மகா பொய் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் சாம் பிட்ரோடா ( நினைவிருக்கிறதா? இன்று மூலை முடுக்குகளில் கிராமங்களில் எல்லாம் இருக்கும் தொலைபெசி பூத்துகளின் "தந்தை" ) நம்முடைய தேசத்தின் ஆரம்ப காலத்தில் வளர்ச்சிக்கு அடிகோலிட்ட தலைவர்களையும், அவர்கள் நிர்மாணித்த - இன்று உலகுக்கு பல அறிவு ஜீவிகளை அளித்துக்கொண்டிருக்கும் - அருமையான உயர் தொழில்கல்விக்கூடங்களையும், கடந்த பல வருடங்களாக நிகழ்ந்துவரும் பசுமைப் புரட்சியையும், பால் வளமையையும் எப்படி மறக்க முடியும்? - என்று NDA அரசுக்கு முன்னால் ஏற்பட்ட பல சாதனைகளைப் பட்டியல் போடுகிறார். அன்று விதைத்த விதைகளின் விளைவுகளைத்தானே இன்று அறுவடை செய்கிறோம்? ஆனால் இன்று விதைக்கப்படும் விதைகளின் விளைவு பத்து ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்குமோ என்று இவர் கவலைப் படுகிறார்.

ஹிந்துவில் வந்துள்ள இந்த செய்தியில் இருந்த சாம் கார்ட்டூன் - தலைமேல் தொலைபேசி டயல் ஒளிவட்டம் போட்டுக்கொண்டு - சுவாரசியமாக இருந்தது. பேசாமல் எதிர்கட்சிகள் NDAவின் இந்தியா ஒளிர்கிறது பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க இவரைத் தங்கள் பிரசாரத்திற்கு அனுப்பலாம்.