Monday, December 29, 2003

இந்த வார செய்திகளில் மனசுக்குப் பிடித்தவை:

முதலில் ஒரு கட்டுரை. - ரமேஷ் ராமனாதனுடையது. டென்னிஸ் ரமேஷோ என்று சட்டென்று தோன்றுகிறது இல்லை? ஆமாம்.. நானும் முதலில் பெயரைப் பார்த்தவுடன் அப்படிதான் நினைத்தேன். ஆனால், அது ரமேஷ் கிருஷ்ணன் இல்லையா :-) இது ரமேஷ் ராமனாதன். டென்னிஸ்காரரின் தாத்தா பெயர் :-) சொந்தக்காரரோ என்னவோ தெரியாது. விஷயம் டென்னிஸ் பற்றியல்ல. இவர் எழுதுவது, சமூக மேம்பாட்டு விஷய்ங்களில் முதலீடு செய்பவர்களைப் பற்றி. ( social entrepreneurs)

ஐ ஐ டி, ஐ ஐ எம், என்று படித்துவிட்டு அமெரிக்காவிலோ வேறு எங்கோ வெளி நாட்டிலோ பணம் சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு இங்கே வந்து குறைந்த வருவாயுள்ள சமூக மேம்ப்பாடுத் திட்டங்களில் அரசாங்கத்துக்குக் கைகொடுக்கும் வகையில் தொழில் செய்பவர்களைப் பற்றி இவர் குறிப்பிடுகிறார். ஆந்திராவில் ஒரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஒரிஸா கிராமங்களில் வேலை பார்க்கும் ஜோ மடியாத் என்கிற கேரளகாரர், கர்னாடகாவில் மலைவாசிகளிடையே வேலை செய்யும் டாக்டர் சுதர்ஷன் மற்றும் விஜய் மஹாஜன், போன்றோர் தன்னுடைய மானசீக ஆசான்கள் என்று குறிப்பிடுகிறார்.

சரி. இவர் என்ன செய்கிறாராம்? சில வருடங்கள் முன்பு, அமெரிக்காவில் சிடி பேங்கில் பெரிய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவரும் இவரது மனைவியும் இந்தியா திரும்ப முடிவு செய்துவிட்டனர். அவர் சொல்கிறார்:

" சமூக நலத்துக்காக உழைக்கும் பலரின் மனோபவம் என்னுள் வியப்பை எழுப்பும். பொதுத் தொண்டு செய்யும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையே இந்த தனி மனிதர்கள் சற்று வித்தியாசமாக தெரிகிறார்களோ? சமூக மேம்பாட்டுத் துறையில் ஈடுபட அப்படி இவர்களை வசீகரிக்கும் விஷ்யங்கள்தான் என்ன என்று கூட நினைப்பேன்.

தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சூழல் பலவிதங்களில் நன்றாகவே இருக்கும். கை நிறைய நல்ல சம்பளம், வேலை செய்ய தேவையான ஊக்கம், மனசுக்குப் பிடித்த தொழில் நிறைவு, ஒரு மதிப்பு என்று பல விஷயங்கள் இருக்கும்.

நானும் சில வருடங்கள் முன்பு வரை - இப்படிபட்ட ஒரு வேலையில்தான் இருந்தேன். ஒரு வெற்றிகரமான பன்னாட்டு வங்கி அதிகாரியாக. என் வேலையில் நான் அயர்ந்து / தளர்ந்து போய்விடவோ அல்லது ஒதுக்கப்படவோ இல்லை. நிறைய பணம் சேர்த்துவிட்டேன். என் வேலையையும் நான் மிக ரசித்தேன். அவ்வப்போது எல்லோருக்கும் தோன்றுவதுபோல் எனக்கும் என் மனைவிக்கும் " இதென்ன? இப்படி செக்குமாடு போல் ஆபீஸ், வீடு என்று உழைக்கிறோமே?" என்று ஏதோ ஒரு மூடில் தோன்றினாலும், வாழ்க்கை நன்றாகதான் ஓடிக்கொண்டிருந்தது.

எங்களது சரியான வெளி நாட்டு இந்தியர் வாழ்க்கை; வார இறுதியில் தவறாமல் நண்பர்களுடன் "இந்தியாவைப் பற்ற்யும் அதன் பிர்ச்சனைகளைப் பற்ற்யும் பேசிவிட்டு - ' இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் - என்கிற ரீதியில்.' முடியும். ஆனால் இத்தனைக்கு அடியிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அடுத்த நாளைப் பற்றி யோசிக்காமல் தொலை தூரத்தில் மனப் பார்வையை ஓட விட்டால், ஏதோ ஒரு வெறுமை தெரிந்தது. அந்த உண்மை முகத்தில் அறைவதுபோல் இருந்தது. ஆனால், ஒரு க்ஷணம்தான். மறுபடி, மறு நாள் காலை 6.45 வண்டியைப் பிடிக்க வேண்டுமே என்ற கவலையே பிரதானமாகிப் போய், தூங்கப் போய்விடும் வாழ்க்கை முறை.

இப்படி அனேகம் பேருக்குத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கை வசதிகள் என்ற ஒரு மாயத்தில் மாட்டிக்கொள்கிறோம். " இன்று இந்தியா திரும்பிபோய்விட்டால், வேலை? வீட்டுக்கு வாடகை யார் கொடுப்பது? இது வேண்டும் அது வேண்டும் என்று சேர்த்து வைத்துள்ளோமே, அதையெல்லாம் மூட்டைக் கட்டி தூக்கிக் கொண்டு போக ஏகப்பட்ட செலவாகுமே? தவிர இன்சூரன்ஸ்?" ஆக, வாழ்க்கையில் உண்மையில் எது முக்கியமோ அதை விட்டுவிட்டு, இப்படி ஆயிரம் சில்லறை கவலைகள் பட்டுக்கொண்டிருப்போம்.

எப்படியோ மனதை ஒரு நிலையில் நிறுத்தி இந்தியா திரும்பிவிடுவது என்று முடிவு கட்டியாயிற்று. திரும்பி வந்து என்ன செய்யப்போகிறோம் என்று கையில் ஒரு திட்டமும் இல்லை. ஏதோ மேக மூட்டமாக எங்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று ஒரு உணர்வுதான் இருந்தது. முதல் ஆறு மாதம் நாடு முழுக்க நிறைய பயணம் செய்தோம். நிறைய பேரை சந்தித்தோம். சமூக நல திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் நிறைய பேரை சந்தித்தோம். நிறைய கற்றுக் கொண்டோம். அப்படி பலத்ரபட்ட மனிதர்களைப் பார்க்க பார்க்கதான் மனதில் வியப்பு கவ்விக்கொண்டது. மேம்பாட்டுத் துறையில் இதற்கு முன் நான் யாரையும் சந்தித்ததில்லை. எப்படி இருக்கும் என்ற சிந்தனையே கிடையாது. எல்லாமே புதுசாக இருந்தது.

கிடு கிடுவென்று கதவுகள் திறப்பதுபோல் நிரைய விஷ்யங்கள் புரிந்தன. அற்புதமான மனிதர்களையும் அவர்களுக்கு பொது நல ஊழியம் செய்வதில் இருக்கும் ஆர்வத்தையும் கண்டு மலைத்து போய்விட்டேன். தாங்கள் செய்யும் வேலையில் உண்மையான ஆர்வம், தாங்கள் ஈடுபட்டுள்ள துறையில் புதுப்புது உத்திகள் நுழைப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் வெளிப்படையான மனப்பான்மை, இபப்டி எத்தனையோ விஷய்ங்களை அவர்களிடம் கவனித்தேன். இவர்கள் ஈடுபட்டுல்ள விஷயங்கள் ஒன்றும் சாதாரணமான விஷய்ங்கள் இல்லை. கல்வி, சுகாதாரம், ஆதிவாசிகள் மேம்பாடு, ஏழைகளுக்கான வங்கிகள், என்று எத்தனையோ துறைகளில், - வேலைக்குப் புறப்பட்டு காரில் ஏறுகிற அவசரத்தில் பங்கு சந்தப் பற்றி கவலைப் பட்டுக்கொண்டு மற்றவற்றை வெறும் செய்திகள் என்று நாம் ஒதுக்கிவிடும் சமாசாரங்கள், - இவற்றில் நிறைய பேர் முழு மனதோடு, மாறுதல் கொண்டு வந்தேயாக வேண்டும் என்ற உறுதியோடு ஈடுபட்டிருந்தனர்.

இபப்டி இவர்களை இதில் ஈடுபட வைப்பது எது என்ற கேள்வி என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

இப்படிபட்ட விஷயங்களில் யாராவது ஏதாவது செய்தே ஆக வேண்டும். அரசாங்கமே எல்லாவற்றையும் செய்யும் / செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகாது. சொல்லப்போனால், சமீப காலமாக அரசு மட்டுமே சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொண்டுவர முடியும் என்ற கருத்தைத் தவிடுபொடியாக்கும் வன்ணம் பல தனிப்பட்ட நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இப்படி சமூகத்தில் ஆக்க பூர்வமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னவோ பலருக்குமிருக்கிரது. ஆனால் மாறுதல்கள் செய்யத் தேவையான சக்தி இல்லாமல் வெறும் எண்ணம் மட்டுமே இருக்கும்போது வேலை இன்னும் கடினம். தனியாக செய்ய முனைவோருக்கு ஆதரவு எளிதில் கிடைக்கது. "இதெல்லாம் சரிப்படுமா?" " நடக்கக் கூடிய காரியமா?" என்ற அவநம்பிக்கையான கேள்விகளுக்கிடையே சாதிக்க முனைவது கடினம்.

ஆனால் எப்படியோ இந்த மாதிரி வித்தியாசமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருளாதார உதவிகள் செய்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

எங்களுக்கு முன்னோடியாக இருக்கும் பலர் செல்லும் பாதையில் பயணம் செய்வது எனக்கும் என் மனைவிக்கும் பிடித்துள்ளது. ஒவ்வொரு தினமும் புதுசாக இருக்கிறது. நாம் வாழும் இந்த உலகம் எத்தனை அற்புதம் என்று தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையின் ஒரிஜனலை இங்கே படிக்கவும். வலைப் பதிவு கிடைக்கவில்லை.

பி. கு:
தான், தனது என்ற வட்டத்திற்கு அப்பால் வெளியே வந்து ஒரு சமூக உணர்வோடு ஆக்கப் பூர்வமான விஷயங்களை செய்பவர்களிடம் எனக்கு அலாதி மதிப்பு உண்டு.

இப்படி பார்க்கும்போது ஆங்கிலத்துக்கு ஈடாக தமிழ் இணையத்தில் சரளமாக கையாளப்படவேண்டும் என்று உழைக்கும், முரசு அஞ்சல் முத்து, ஈ கலப்பை முகுந்தராஜ், சுரதா போன்ற மென் பொருள் வல்லுனர்கள் தவிர, இப்போது வலைப்பூ எழுதும் பழக்கம் தமிழர்களிடையே அடர்ந்து படர வழி செய்துள்ள பத்ரி, மாலன், மதி, காசி, இவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படையிலும் இருப்பது இப்படி ஒரு சமூக உணர்வுதான் இல்லையோ ? அதனால் நான் "ஓ" போடும் பட்டியலில் இவர்களும் உண்டு.

Thursday, December 18, 2003

மின்னஞ்சலில் வந்த கிண்டல் ஜோக்ஸ்களில் ஒன்று.

ஒரு இந்தியர் இறந்த பிறகு நரகத்திற்குப் போனாராம். அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு விதமாக தண்டனைகள் இருந்தன. முதலில் ஜெர்மன் நாட்டு நரகத்தில் எட்டிப் பார்த்த நம்ம ஆள் அங்கே எப்படி தண்டனை என்று விசாரித்தாராம். " இங்கே முதலில் ஒரு மணி நேரம் உங்களை மின்சார நாற்காலியில் உட்கார வைப்பார்கள். பின்னர் ஆணிகள் படுக்கையில் அடுத்த ஒரு மணி நேரம் படுக்க வைப்பார்கள். அதன் பின்னர் ஜெர்மனிய சாத்தான் வந்து உங்களை சாட்டையால் நன்றாக விளாசுவான்." என்று பதில் வந்தது. நம்ம ஆள் இந்த ஜெர்மன் நரகம் வேண்டாம் என்று நகர்ந்து ரஷ்ய நரகத்துப் பக்கம் போய் விசாரித்தார். அங்கும் இதே ரீதியில் பதில் வந்தது. பின்னர் அமெரிக்க, இங்கிலாந்திய நரகங்களிலும் இதே வகைதான்.

கடைசியில் நம்ம நண்பர் இந்திய நரகத்தில் போய் நின்றார். அங்கே பெரிய வரிசை; மனிதர்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தனர். சரி. இங்கே எப்படி தண்டனையாம் என்று விசாரித்தவருக்கு பதில் மற்ற நரகங்களைப் போலவே வந்ததாம். இவருக்கு ஒரே வியப்பு. "பின்னே, எதற்காக இப்படி எல்லோரும் வரிசையாக இங்கேயே வருகிறார்கள் - மற்றவற்றை விட இதில் வித்தியாசம் எதுவும் இல்லையே?" என்று கேட்டார். பதில் வந்தது. "அதுவா? மின்சார நாற்காலி தண்டனை உண்டுதான். ஆனால் மின்சாரம் நின்று போய்விடும்; முள் படுக்கையில் இருந்த எல்லா ஆணிகளையும் யாரோ புண்ணியவான் திருடிக் கொண்டு போய்விட்டான். கடைசியில் உள்ளே வந்து சாட்டையடி கொடுக்க வேண்டிய சாத்தான், வந்து ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே டீ குடிக்க சென்று விடுவான்." !!!

": �: ��� ��� >�׸Ǣ� >���� ��� "���θ� ��ɡ ������ �!����. ���� ��� �!�� "�� ��� ����츢���.

Wednesday, December 17, 2003

சரிவுதான். ஆனாலும் இப்படி அதள பாதாள சரிவா!!

எட்டடிக்கு பத்தடி கூட இருக்க முடியாது. அவ்வளவு சின்ன அறை. அதில் தாறுமாறாக ஒரு படுக்கை. சுவற்றில் பிய்ந்து தொங்கும் "ஓவியத் துணி" (???) கட்டில் மேல் பெட்ஷீட் மற்றும் குப்பையாக துணிகள், பேப்பர்கள். தரையில் ஒரே குப்பை. துணிகள் - அப்படியே ஏறுமாறாக, அழுக்காக. அலமாரி மற்றும் ஒரு பெரிய மரப்பெட்டி திறந்தவாறு. அறையில் ஒரேயரு பொந்து - வெளிச்சம் வர.

இன்னொரு அறை - சமையலறையாம். நாலு கட்டைகளை வைத்து செய்யப்பட்ட மேடை ஒன்று. குப்பைத்தொட்டியைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் ஒரே குப்பை. சாமான்கள் எல்லாம் சிதறி - கன்னாபின்னாவென்று ஒயர்களும் கழிவு நீர் குழாய்களும் இங்குமங்கும் இருக்கின்றன. அழுக்குப் பாத்திரங்கள் நிரம்பிய வாஷ் பேஸின் ஒரு மூலையில். அதிலிருந்து ஒரு ட்யூப். மேடையில் முட்டை வைக்கும் பேப்பர் டிரே. அரிகேன் லைட். டீத்தூள், வடிகட்டி என்று ஏதேதோ சாமான்கள் ஒரு ஒழுங்கில்லாமல். காயலான் கடையிலிருந்து பொருக்கி எடுக்கப்பட்டதுபோல் ஒரு அடுப்பு. அதன்மேல் அதற்கு மேல் பழைய கெட்டில் ஒன்று.

பளிங்கு மாளிகைகளில் சொகுசாக வாழ்க்கை நடத்திய சதாம் உசேன் பிடிபட்டபோது இருந்த இடத்தைப் டிவியில்/ படங்களில் பார்த்தபோது உங்கள் மனதில் எல்லாம் என்ன தோன்றிற்றோ தெரியாது. ஆனால் எனக்குள் எழுந்த கேள்வி என்ன தெரியுமா? ' இப்படி பரிதாபமாக இந்த மனிதர் கடைசியில் வாழ்க்கை நடத்தியுள்ளாரே... ஆமாம். இந்த அழுக்கு வாஷ்பேசின், அழுக்கு துணி மூட்டை, என்று இருக்கிறதே.... இதையெல்லாம் சுத்தம் செய்வது யார்? ( சரியான குடும்பத்தலைவியின் மூளையாச்சே! பின் எப்படி வேலை செய்யும்?) ஒரு வேளை தானே எதையோ சமைத்து சாப்பிட்டு, ( முட்டை அட்டையும் டீ வடிகட்டியும்தான் கதை சொல்கிறதே....!) எப்படியோ சமாளித்திருப்பாரோ? இந்த பொந்துக்குள் ஒளிந்திருக்கும்போது என்ன யோசித்துக்கொண்டிருந்திருப்பான்? சதாம் மனதுள் ஓடிய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? சதாம் வலைப்பூ எழுதும்போதுதான் இதெல்லாம் தெரியும் - புஷ் சதாமை உயிருடன் விட்டுவைத்திருந்தால்.

சரிவுதான். ஆனாலும் இப்படி அதள பாதாள சரிவா!! ஆனால் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?

Tuesday, December 09, 2003

விகடனில் மதன் பதிலில் தஞ்சை கோவில் நிழல் விழாது என்கிற சமாசாரம் கட்டுக்கதை என்று குறிப்பிட்டிருந்தார். பரிமேலழகர் வலைப்பூவில் இதைக் குறிப்பிட்டு இன்னும் எத்தனை தகவல்கள் இதுமாதிரி பொய்க்கப்போகின்றனவோ என்று எழுதியிருந்தார்.

ஆனால் இந்த நிழல் சமாசாரத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படியும் இருக்கலாமோ..?

தஞ்சாவூர் கோவிலின் நிழல் கூட விழாது என்று எங்கள் காலத்தில் - அறுபதுகளில் - கூறப்பட்டபோது, பள்ளியில் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்கள். தஞ்சை பெரிய கோவில் மிகப் பெரியது - பெரிய பிராகாரம். கோபுரமும் மிகப் பெரியது. ஆனால் அவ்வலவு பெரிய கோபுரத்தின் நிழல் கோவிலைவிட்டு வெளியே விழாத அளவு பெரிய பிராகாரம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது கோபுர நிழல் பிராகரத்துக்குள்ளேயேதான் விழுமாம். பிராகாரத்தைத் தாண்டி கோபுர நிழல் வெளியே வந்து விழுகிறதா என்று நேரில் பார்த்தவர்கள் சொன்னால் புண்னியமாகும்.

தஞ்சையிலிருந்து வலைப்பூக்கள் தொடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
எங்கே, இப்போதாவது அலைகளின் எழுத்து புரிகிறதா என்று ஒரு வரி 'பின்னூட்டு' சொல்லுங்கள். நானும் விடாமல் முயன்று வருகிறேன் :-)