Tuesday, October 21, 2003

தீபாவளி !!!!! தீபாவளி! தீபாவளி ??????

வாசலில் பெல் அடித்தது. கதவைத் திறந்தவுடனேயே டக்கென்று ஒரு கனமான புத்தகத்தை முகத்தின் முன் நீட்டினார் பேப்பர்காரர். நானும் கையில் வாங்கிப் பார்த்தேன். ஒரு பத்திரிகையின் தீபாவளி மலர். நல்ல கனமாக அழகாக இருந்தது. என் கையில் கொடுத்தவுடனே பேப்பர்காரர் நகர ஆரம்பித்தார். மலரைக் கையில் வாங்கியவுடனேயே என் எண்ணம் பல வருடங்கள் பின்னால் போய்விட்டதால் அவர் நகர்ந்ததை உணராமல் அப்படியே ஒரு கணம் அந்த மலரைப் பார்த்தபடி நின்றுவிட்டேன். ஆனால் ஒரு நொடியில் என் நினைவுகளை ஓரம் கட்டிவிட்டு அவரைக் கூப்பிட்டுப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். " இப்போ வேண்டாங்க.. படிக்க எங்கே நேரம் இருக்கிறது".

அவர் சென்றபின் மறுபடி மனம் கடந்த காலத்துக்குத் தாவியது. ஒரு காலத்தில் தீபாவளி மலர் இல்லாமல் தீபாவளி இருந்ததே கிடையாது. அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். வாங்கி வைத்துக்கொண்டு மாதக் கணக்கில் புரட்டிக்கொண்டிருப்பார்.

சிறு வயதில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. புது வருடக் காலண்டர் வாங்கிய உடனேயே தீபாவளி என்றைக்கு என்றுதான் பார்ப்பது வழக்கம். தீபாவளிக்கு ஆடம்பரமாக துணிகள் வாங்கும் வழக்கம் கிடையாது. ஆனால் அது எதுவாக இருந்தாலும் புதுசு போட்டுக் கொள்வது ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்புதான். அதோடு கூட கண்ணாடி வளை, மருதாணி, என்று எல்லாமே சுவாரசியம்தான். தீபாவளியில் எல்லாமே ஒரு வித்தியாசம்தான். அக்கம்பக்கத்தில் போட்டி. யார் வீட்டில் முதலில் எழுந்தது என்று. "ஓ.... நான் மூன்றரை மணிக்கே எழுந்தாச்சு. 4 மணிக்கு குளிச்சு பட்டாசு வெடிச்சாச்சே.." ஏதோ பெரிதாக சாதித்துவிட்ட சந்தோஷம் தொனிக்கும் குரலில்:-)

சூரியன் உதிக்கும் முன்னால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று அம்மா எழுப்பும்போதே அறிவித்துவிடுவார். ரொம்பச் சிறிய வயதில் எனக்கும் அண்ணாவிற்கும் உட்கார்த்தி வைத்து நலங்கு இடுவார். அப்போது அவர் சுருட்டித் தரும் வெத்தலைப் பாக்கை மென்றுகொண்டே தலைக்குக் குளிப்பது ஒரு அனுபவம். ( சாதாரண நாட்களில் வெற்றிலை தர மாட்டார்களே? "நாக்கு தடித்துப் படிப்பே வராது!!!!!)

அப்புறம் சுவாமியை, அம்மா அப்பாவை நமஸ்கரித்துவிட்டுப் புது "டிரெஸ்". உடனேயே வாசலில் நானும் அண்ணாவும் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவோம். ஹைஸ்கூல் ஆரம்பிக்கும்போதுதான் நான் கம்பி மத்தாப்பு, கேப் வெடியிலிருந்து பட்டாசுக்கு promote ஆனேன். அதுவும் ஊசிப் பட்டாசுதான். எனக்கு என்று ஸ்பெஷலாக கம்பி மத்தாப்பு நீளமாக :-)

பட்டாசு ஒரு கோர்ஸ் ஆனவுடன் வீட்டுக்குள் வந்து இனிப்புகள் வினியோகம் - துணி போட்டு அழகாக அம்மா மூடி தரும் தட்டுகளைப் பக்கத்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வது என் வேலை. புது டிரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு நண்பர்களிடம் காண்பிக்க வேண்டாமா? போதாதற்கு மறு நாள் ஸ்கூலுக்கும் எல்லோரும் இதே தீபாவளி உடைதான். அப்பாடா, ஒரு நாள் யூனிபார்ம் கிடையாது.

பின்னர் காலையில் இட்லி ( ஆமாம் அதென்ன வழக்கம்? தீபாவளி அன்று காலையில் இட்லி என்று? ) பாக்கி பட்டாசுகள் - இந்த சமயத்துக்குதான் பாம்பு பட்டாசு, கேப் போன்றவை. யாரிடம் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்று ஒரு குட்டி சர்வே. 'கார்த்திகைக்குக் கொஞ்சம் எடுத்து வையுங்கோ' இது அம்மா.

அப்புறம் கல்லூரி செல்லும் வயதில் தீபாவளிக்கு என் கையால் தயாரிக்கும் வாழ்த்து அட்டைகள் என் நேரத்தை / எண்ணத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. என்ன புது விதமாக டிசைன் செய்யலாம்..யாருக்கு எந்த மாதிரி தயாரிக்கலாம் என்பது போன்றவை முக்கியமாகப் போனது. பக்கத்தில் பெரிய லிஸ்ட் வைத்துக் கொண்டு நாட்கணக்கில் வேலை நடக்கும் :-)

பிறகு நான் குடும்பம் நடத்த ஆரம்பித்தபின், சில மாற்றங்கள். தீபாவளிக்கு என்ன புது உடை என்பதைவிட, என்ன பட்சணம் செய்யலாம் என்பதே முக்கியமாகப் போனது. பெரும்பாலும் பாம்பே, டில்லி அல்லது வெளி நாடு என்று இருந்துவிட்டதால் தீபாவளி சற்று சத்தமில்லாமல்தான் இருக்கும்! தவிர பட்சணம் செய்வதும் என் பொறுப்பாகிவிட்டதே. அதனால், பட்டாசு, புது டிரெஸ் உற்சாகம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இரண்டு நாள் முன்பே நண்பிகளுடன் பேசிக் கொண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமாக செய்வது வழக்கம். ஒரு முறை, சமையலறையில் எல்லா வேலையயும் முடித்துவிட்டு, மறு நாள் கங்கா ஸ்நானத்துக்குப் பின் அணிய வேண்டிய உடைகளை ஸ்வாமி முன்பு அடுக்கி வைத்துவிட்டு, அப்பாடா என்று வெளியில் வேடிக்கை பார்க்க சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தால் அடுப்பில் வைத்திருந்த ஈயச் சொம்பைக் காணவில்லை! ரசம் கொதித்து சுண்டி ஈயம் உருகி ஸ்டவ் அடியிலே ஒரு பந்தாக இருந்தது !!


ஆனால் தீபாவளி இப்போது எவ்வளவு மாறிவிட்டது! டில்லியில் வசிக்கும்போது, அங்கே காலையில் 4 மணிக்கு பட்டாசு சத்தம் கேட்டால் அந்தப் பகுதியில் யாரோ தமிழர் இருக்கிறார் என்று அர்த்தம். சும்மா பேருக்கு கொஞ்சம் வெடித்துவிட்டு, பாக்கி எல்லாம் மற்றவர்களுடன் சேர்ந்து ராத்திரி வெடிக்கலம் என்று என் மகன்கள் நிறுத்திவிடுவார்கள். அதாவது அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது. அதுவும் சற்று பெரியவர்களானவுடன் நின்றுவிட்டது. அப்புறம் ஒரு திடீர் அறிவிப்பு - "அம்மா நான் இந்த வருடத்திலிருந்து பட்டாசு வாங்கமாட்டேன். குழந்தைத் தொழிலாளர்களை வைத்து செய்யும் பட்டாசுத் தொழிலை நான் எதிர்க்கிறேன்".

" சும்மா. ஒரு சாஸ்திரத்துக்கு ஒரேயரு பட்டாசு கொளுத்துடா..."

"நோ. இதென்னம்மா வழக்கம்? நான் நிச்சயமாக வாங்க மாட்டேன்." பிறகு அவன் சொல்வதை நானும் ஏற்றுக்கொண்டேன். பட்டாசு விற்பனையாகாமல் தேங்கிவிட்டால், பல ஏழைக் குழந்தைகள் உணவில்லாமல் இருக்க நேரிடும் என்றாலும், இந்த குழந்தைத் தொழிலாளர் பிரச்ச்னைக்கு இப்படி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்பதை நானும் உணர்ந்தேன்.

இப்படி ஒன்று ஒன்றாக தீபாவளியின் அடையாளங்கள் காணாமற் போயின. இன்று தீபாவளிக்கு என்ன பட்சணம் செய்யலாம் என்பதுபோய், என்ன வாங்கலாம் என்றாகிவிட்டது. புதுசு - அவசியமா என்ன? இப்படி ஒரு கேள்வி. இதில் தீபாவளி மலர்? ஹ்ம்ம். படிக்க நேரம் இல்லை என்பது ஒரு காரணம் - (அந்த நேரத்தில் எழுத வேண்டிய வேலையைக் கவனிக்கலாமே.) ரசனைகளும் மாறிப் போய்விட்டன.

பேப்பர்காரருக்கு வேறு ஒரு வாசகர், வேறு ஒரு குடும்பம் காத்திருப்பார்கள் - கங்கா ஸ்நானம் ஆனவுடன் புதுப் புத்தகத்தை முகர்ந்து பார்த்துவிட்டு படிக்க உட்காருவார்கள்.


1 comment:

Tamil Home Recipes said...

மிகவும் அருமை