Friday, October 17, 2003

சில வருடங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க பெண் எழுத்தாளர் கணவனுக்கு மனைவி அடங்கிப்போவதுதான்
குடும்ப நல்லுறவுக்கும் அமைதிக்கும் வழி வகுக்கும் என்ற ரீதியில் எழுதிய ஒரு புத்தகம் அமெரிக்கா முழுவதும்
பெருமளவில் விற்பனையாகியதுடன் இல்லாமல் பத்திரிகைகளில் பரபரப்புடன் அலசப்பட்டது. பெண்கள் சமத்துவ விஷயத்தில் மற்ற நாடுகளை விட எப்போதுமே இந்தியா எவ்வளவோ தேவலை என்று எனக்கு தோன்றும்.

அமெரிக்க சமுதாயத்தில் சிந்தனைகள் எப்படியோ என்னவோ... அதை விடுங்கள். ஆனால் ஒரு குடும்பத்தை
உருவாக்குவதில் பெண்களின் பங்கு எவ்வளவுதூரம் மதிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சமீபத்தில்
படித்தேன். இந்தியக் குடும்பம்தான். ஒரு உயரிய பதவி வகிக்கும் பெண் அதிகாரி ஓய்வு எடுக்கும் சமயத்தில் எதேச்சையாக அவரது
மகளே அந்த நிறுவனத்தில் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாய்க்கு பெருமிதம் என்றால் மகளுக்கு
சந்தோஷம் - தாய்க்குபின் மதிப்பு வாய்ந்த அந்த நாற்காலியில் தான் அமர நேர்கிறதே என்று.

பதவியேற்கும் நாளில் மகள் தாய் தன்னையும் தன் சகோதரிகளையும் வளர்த்த நாட்களை நினைவு கூறுகிறார்.
" நாங்கள் வளரும் நாட்களில் அம்மாவுடன் எங்களுக்கு நிறைய கருத்து வித்தியாசங்கள் இருக்கும். ஆனால்
அம்மா என்றுமே எங்களைக் கடிந்து கொண்டதில்லை. எங்கள் கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றாலும்
எங்கள் வழியே போக விட்டுவிடுவார். எங்கள் முடிவுகளின் நிறை குறைகளை நாங்களே அனுபவித்து உணர
வேண்டும் என்பது அவர் கருத்து.எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி அப்படி என்று கட்டுபாடுகளோ அல்லது நீண்ட
போதனைகளோ செய்ய மாட்டார். நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்களைப் புரிந்து கொள்வதில்
ஒரு ஆர்வம் காட்டுவார். அவசரமாக முடிவெடுக்காமல் எந்த சூழ்நிலையையும் அதன் போக்கிலேயே
அமைதியாக சமாளிப்பார். எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் அவரது ஊக்கமும் ஆதரவும் நிச்சயம் இருக்கும்.

உயரிய பதவியில் இருந்ததால் அவருக்கு எப்போதும் நேரப்பஞ்சம். ஆனால் எங்களுடன் தினம் சில மணி நேரமாவது
செலவிடுவார். குறிப்பாக எங்களுக்கு தேர்வு அல்லது ஏதேனும் மனக்குழப்பம் என்று இருக்கும்போது தன்
வேலைகளை ஒதுக்கிவிட்டு கட்டாயம் எங்களுடன் இருந்து உற்சாகப்படுத்துவார். நாங்கள் அவரவரது தினசரி
வேலைகளில் - நீச்சல், பாட்டு, என்று எங்கள் 24 மணி நேரமும் வரிசையாக நிர்ணயிகப்பட்டிருக்கும் - தவறாமல்
ஈடுபடுகிறோமா என்று மென்மையாக கண்காணித்தபடி இருப்பார். பள்ளி விழாக்களில் எங்களை ஊக்குவிக்க
அவர் என்றுமே முதல் வரிசைதான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் ரசிக்கும் எதிலும் எங்களுக்கும்
ஒரு ஈடுபாட்டை உண்டாக்கிவிடுவார். இரவு எழுந்து நட்சத்திரங்களைத் தான் ரசிக்கும்போது எங்களுடன்
அதைப் பகிர்ந்து கொள்வார். தண்�ரில் வெள்ளித் தாம்பாளமாக ஜொலிக்கும் சந்திரனைத் தான் ரசிக்கும்போது
எங்களுக்கும் அந்த ரசனையில் பங்கு இருக்கும்.

இத்தனைக்கும் முகத்தில் ஒரு சுணக்கமோ அல்லது " நான் எவ்வளவு ஒரு நல்ல தாய் பார்.." என்ற
தோரணையோ இல்லாமல்... வெகு நேர்த்தியாக, ஒரு ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் எங்கள் வாழ்க்கையை
அவர் செலுத்தியிருக்கிறார். இன்றும் அவரது பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென்றால், எங்களுடன்
சற்று நேரம் செலவழிக்க வேண்டும்.... அதுதான் பிறந்த நாள் பரிசு என்கிறார்...." என்று மகள் கூறுகிறார்.
அந்தத் தாயோ ஒரே வரியில் "என்று என் மகள்கள் 16 வயதானர்களோ அன்றே அவர்கள் என் சினேகிதிகளாகிவிட்டனர்"
என்று கூறுகிறார்.

ஒரு சமுதாயம் உருவாவதில் பெண்களின் பங்கு சாமான்யமானதல்ல. பாரதி நெட்டுக்காக, பாரதியாரின் வாழ்க்கை சரிதம் ஒன்றை உள்ளிடும்போது அவருக்கு பெண் கல்வி, பெண்கள் சமத்துவம் இவற்றில் இருந்த ஆழமான நம்பிக்கையைப் பற்றி படித்தபோது இது நினைவுக்கு வந்தது.

No comments: