Wednesday, October 29, 2003

திருமதி சுனந்தாவின்(வேதாந்த இன்ஸ்டிடூடின் ஸ்தாபகரும் கீதை லெக்சர்களில் பெயர் பெற்றவருமான - குறிப்பாக corporate வட்டாரங்களில்- ஸ்வாமி A. பார்த்தசாரதியின் மகள்) ஆன்மீக உரை நான்கு நாட்களுக்கு சென்னை, "இமேஜ்" ஆடிட்டோரியத்தில் இருந்தது. அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தபோது அவர் அழுத்தமாகவும், தெளிவாகவும் பேசிய விதம் பிடித்திருந்தது. டிவியிலும், சானல் உலா வரும்போது சில சமயம் அகப்பட்டிருக்கிறார். தவிர, வீட்டுப்பக்கத்தில்தானே, போய்க் கேட்டுவிட்டு வரலாம் என்று போனேன். பேச ஆரம்பித்த சில வினாடிகளிலேயே ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

Are You Happy?

எத்தனை எளிதான கேள்வி? ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கையின் குழப்பங்களும், தெளிவுகளும், அர்த்தமும் அனர்த்தமும் எல்லாமே அடங்கியுள்ளது என்று எனக்குத் தோன்றிற்று.

என் எண்ணம் இருக்கட்டும். அவர் என்ன சொல்கிறாரென்றால் - (அடைப்பில் இருப்பவை என் கமெண்ட்ஸ் :-)

"நாம் சந்தோஷமாக இல்லையென்றால், அதன் காரணம் என்னவென்று அலசிப்பார்த்தால் அதன் அடிவேர் நம் எண்ணங்களில்தாம் இருக்கிறது என்று புரியும். மனதில் நிறைவு இல்லாதற்கு காரணம் நம் அபிலாஷைகள் நிறைவேறாமல் இருப்பதேயாகும். சரி ஒன்று ஒன்றாக அபிலாஷைகள் நிறைவேற ஆரம்பித்தால் ( - ஐஸ்கிரீம் சாப்பிடுவதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதியாகும் வரை - ஆமாம், நான் ஏன் இந்திய ஜனாதிபதியாகும் வரை என்று குறிப்பிடவில்லை? - இந்தக் கேள்வியை அப்புறம் கவனிப்போம்!! ) பின்னர் நாம் சந்தோஷமாக இருப்பதாக சொல்வோமா?

"சரி. நான் சந்தோஷமாகதான் இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் விரும்பியதெல்லாம் கிடைத்துள்ளது, (அல்லது கிடைக்கும்படி வாழ்க்கையை அமைத்துள்ளேன் - இது சிலர் பதிலாக இருக்கலாம்) என்கிறீர்களா? நல்லது. ஆனால் உங்கள் சந்தோஷத்துக்கு காரணமான ஏதாவது ஒன்றில் குழப்பம் / ஏமாற்றம் இருந்தாலும் உங்கள் சந்தோஷத்தில் குறை இருக்குமே? அமைதியாக ஏற்றுக்கொள்வீர்களா? ( அப்படி இருந்தால் இப்படி லெக்சர் கேட்க வந்தே இருக்கமாட்டேனே - இதுவும் சிலர் பதிலாக இருக்கலாம்)

".....மனதில் குறையிருக்கும் இல்லையா?... இதற்குத் தீர்வு - 'இது வேண்டும்' 'அது வேண்டும்' என்ற ஏக்கங்கள் இல்லாமல் வாழக் கற்றுகொள்ளவேண்டும். ( அட கடவுளே, இங்கேயும் ஒரு 'வேண்டும்' வந்துவிட்டதே.) ஆனால் வாழ்வில் அபிலாஷைகள் இல்லாமல் இருக்க முடியாது; ஆசை என்ற உந்துதல்களும், முன்னேற்றங்களும் வாழ்க்கையில் இருக்க வேண்டியதுதான். ஆனால் நம் அபிலாஷைகளினால் வரும் மன உளைச்சல்களையும், தற்காலிகமான சந்தோஷங்களையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையில் தாமரை இலைத் தண்ணீராக இருக்கப் பழக வேண்டும்."

ம்..ம்.. சுனந்தாஜி என்னவோ நான்கு நாள் பேசி முடித்துவிட்டார். எத்தனை முறை எவ்வளவு பேர் திருப்பித் திருப்பி இந்த 'தாமரை இலைத் தண்ணீர் ' பக்குவம் பற்றி பேசினாலும் அதெப்படி நம் மனதில் மட்டும் பிடிபட மாட்டேங்கிறதே! அதுசரி, அந்த ஆடிட்டோரியத்தில் 1000 பேர் இருந்திருக்கலாம் - பெரிய பெரிய நிறுவனங்களின் CEO க்கள் வேறு நிறைய தென்பட்டனர். Are you happy என்ற சுனந்தாவின் ஆரம்ப கேள்விக்கு எவ்வளவு பேர் "YES" என்று அழுத்தமாக பதிலளித்திருப்பார்கள்?!!!




No comments: